Published:Updated:

கிரானைட் கொள்ளை...

பாழாகிப்போன 75 ஆயிரம் ஏக்கர்கள்... பரிதவித்துப் புலம்பும் விவசாயிகள் !இரா. முத்துநாகு, படங்கள்: பா. காளிமுத்து

கிரானைட் கொள்ளை...

பாழாகிப்போன 75 ஆயிரம் ஏக்கர்கள்... பரிதவித்துப் புலம்பும் விவசாயிகள் !இரா. முத்துநாகு, படங்கள்: பா. காளிமுத்து

Published:Updated:

 பிரச்னை

##~##

தோண்டத் தோண்ட புதுப்புது வகையில் பூதங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன, மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகள் விவகாரத்தில். பல கொலைகள், பல ஆயிரம் கோடி அளவில் கொள்ளை... என பரபரப்புத் தகவல்களால் தலை சுற்றிக் கிடக்கிறார்கள், தமிழக மக்கள். இதையெல்லாம் தாண்டிய பேரிழப்பு... கண்மூடித்தனமாக விவசாய நிலங்களும், நீராதாரங்களும் சூறையாடப்பட்டிருப்பதுதான்! மேலூர் பகுதியில் மட்டுமே... நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஆயிரக்கணக்கான வரத்துக் கால்வாய்கள் என கிரானைட் கொள்ளையர்கள் கபளீகரம் செய்ததன் விளைவாக, ஏறத்தாழ 75 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நஞ்சை நிலங்கள் நாசமாகியிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல ஆண்டுகால கொள்ளை !

இதைப்பற்றி கவலை பொங்கப் பேசும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க'த்தின் மூத்த வழக்கறிஞர் மேலூர் ஜெயராமன், ''இந்த கிரானைட் கொள்ளை காரணமாக அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம். இதை கிரானைட் கொள்ளையர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதன் மூலம் அரசு ஈடு செய்துவிட முடியும். ஆனால், இந்தக் குவாரிகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு அரசு என்ன செய்யப்போகிறது... பொன் விளையும் பூமி, இன்று புழுதிக் காடாக மாறிக்கிடப்பதை எப்படி சரி செய்து தரப்போகிறது..?'' என்று கேள்விகளாக அடுக்கியவர்,

கிரானைட் கொள்ளை...

''இந்தக் கொள்ளையர்கள் ஒரே இரவில் வானத்தில் இருந்து குதித்து கொள்ளையடித்து விடவில்லை. பல ஆண்டு காலமாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள்... என அதிகார வர்க்கத்தின் ஆசியோடுதானே கொள்ளையடித்தார்கள். ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியிருந்தால், விவசாயிகளாவது நிம்மதியாகப் பிழைத்திருப்பார்கள். இப்போது அதிலும் மண் விழுந்து விட்டது. நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிய மேலூர் தாலூகா சுடுகாடாக மாறி விட்டது. தற்போதைய கணக்குப்படி சுமார் 75 ஆயிரம் ஏக்கர் நிலம் பாழாகி விட்டது. இதை மீட்கவே முடியாது'' என்று ஆதங்கம் பொங்கச் சொன்னார்.

அழிக்கப்பட்ட பசுமைச் சமவெளி !

மதுரை, யானைமலை தொடங்கி... சிவகங்கை மாவட்ட எல்லை வரை மிகவும் செழிப்பான பகுதி. பாதையின் இரண்டு பக்கமும் பசுமை பாய்விரித்தது போல் நெல் வயல்கள் இருக்கும். வேளாண்மைத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வுக்காக தென் தமிழகம் வந்தால், அவர்களை மேலூர் பகுதிக்குத்தான் அழைத்து வந்து காட்டுவார்கள். அப்படிப்பட்ட பெருமைமிக்க மிகப்பெரிய பசுமைச் சமவெளியை அழித்து விட்டார்கள். முல்லை-பெரியாறு பாசனத்தின் மதுரை மாவட்ட கடைமடை பகுதி மேலூர் தாலூகாதான். வைகை பாசன கால்வாயில் உபரியாகக் கிடைக்கும் தண்ணீரும், பெரியாறு கால்வாயில் சேர்வதால், ஆண்டுக்கு ஒரு போகம் தப்பாமல் விளையும். முல்லை-பெரியாறு பாசனத்தை நம்பி சின்னதும் பெரிதுமாக 48 கண்மாய்கள் இருக்கின்றன. இதன் மொத்த ஆயக்கட்டு 43 ஆயிரம் ஏக்கர்.

கிரானைட் கொள்ளை...

கிரானைட் கொள்ளையரின் குறுக்குவழி !

இதைப்பற்றி ஆவேசத்துடன் பேசும் ஜெயராமன், ''இந்த நிலங்களை, கற்களை அடுக்கி வைப்பதற்காக கிரானைட் நிறுவனங்கள் விலைக்குக் கேட்க... அவற்றைத் தர மறுத்தனர், விவசாயிகள். அதனால்... 'எரியறத நிறுத்தினா கொதிக்கறது அடங்கும்' என்கிற கதையாக, குறுக்கு வழியில் யோசித்த கிரானைட் அதிபர்கள், நிலங்களுக்கு தண்ணீர் வரும் பாசன வாய்க்கால்கள், கண்மாய்கள், குளங்களை ஆக்கிரமித்து அங்கு கற்களை குவிக்கத் தொடங்கினார்கள். பொதுவாக ஒரு கண்மாய் நிரம்பியதும், அடுத்த கண்மாய்க்கு தண்ணீர் போகும் அமைப்பில்தான் இங்குள்ள 48 கண்மாய்களும் இணைக்கப்பட்டுள்ளன. அந்தக் கண்மாய்கள், வரத்து வாய்க்கால்களில் கற்களை வைத்து அடைத்து விட்டதால்... நெல்லும் கரும்பும் விளைந்த பூமி தரிசாக மாறிவிட்டது.

ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் கொண்டு வர பொதுப்பணித்துறையிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வேறு வழிஇல்லாமல், குவாரி உரிமையாளர்களுக்கே நிலங்களை விற்றுவிட்டனர். பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான  பி.ஆர்.பி நிறுவனமும் இதேபாணியில் இடையப்பட்டி, மட்டாங்கிபட்டி பகுதியின் பாசன கண்மாயான சி.சி கண்மாயை முழுமையாக ஆக்கிரமித்து கிரானைட் கற்களை அடுக்கி வைத்தது. சி.சி. கண்மாயின் ஆயக்கட்டுதாரர் என்ற முறையில் நான் வழக்கு தொடுத்தேன். ஆக்கிரமிப்பை அகற்றச் சொன்ன நீதிமன்றம், 'பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு இன்னமும் அகற்றப்படாவிட்டாலும், மேலூர் பகுதியில் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக, பல பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமலே உள்ளன.

சலாம்போட்ட பொதுப்பணித்துறை !

கிரானைட் கொள்ளை...

1996-ம் ஆண்டு முதல் ஆளும் அரசுகளை முழுமையாக சுவீகாரம் செய்துகொண்ட பி.ஆர்.பி நிறுவனம், மருதூர், இடையப்பட்டி, திருவாதூர், சூரக்குடி, பதினெட்டாம்குடி, திருக்காணை, வெள்ளரிப்பட்டி, தெற்குத்தெரு, கீழவளவு, கீழூர், ஆமூர் ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள அனைத்து கண்மாய்களையும் ஆக்கிரமித்து கிரானைட் குடோன்களாகப் பயன்படுத்தியது. இதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பி.ஆர்.பி. நிறுவனத்தின் 'உத்தரவு’ப்படி பெரியாறு வரத்து கால்வாய்களில் பாசனத்துக்காக திறந்து விடப்படும் நீரின் அளவையே அதிகாரிகள் படிப்படியாக குறைத்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை எதிர்த்து கலெக்டரிடம் மனு கொடுத்தவர்களை, பி.ஆர்.பி-யின் குண்டர்படை பலமாக கவனிக்கும். பலர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதனால் கிரானைட் அதிபர்களை எதிர்த்துப் போராடும் திறனை மக்கள் இழந்து விட்டார்கள்'' என்ற ஜெயராமன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

பாதிக்கப்பட்ட 143 கண்மாய்கள் !

கீழையூரிலிருந்து வடக்கு வளையப்பட்டி அருகில் உள்ள நல்லிகண்மாய், புதுக்குளம் கண்மாய்கள் முழுக்க பி.ஆர்.பி நிறுவனத்தின் கிரானைட் கற்கள் ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்துக் கொண்டே வந்த நம்மிடம், ''இந்தப் பகுதியில் இருக்கிற 72 கண்மாய்களில் 42 கண்மாய்களை பி.ஆர்.பி நிறுவனம் ஆக்கிரமிச்சுருக்கு. கொஞ்ச நஞ்சம் வர்ற தண்ணியையும் தெக்க திருப்பி விட்டுட்டாங்க. அதுனால, அங்க தண்ணி பெருகி ஆயிரக்கணக்கான ஏக்கர் சதுப்பு நிலமா மாறிடுச்சு. பிறகு, அந்த நிலத்தை மொத்தமா அவங்களே வாங்கிட்டாங்க. எங்க கணக்குப்படி திருவாதவூரிலிருந்து கீழையூர்வரைக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை பி.ஆர்.பி வாங்கிட்டார். வாங்கின நிலம் எல்லாமே பொன்னு விளையுற பூமி. அதுல வெள்ளாமை செய்யாம, குவாரியில் இருக்கிற கரும்பாறை மண்ணையும் கல்லையும் கொண்டாந்து போட்டு நிலத்தை மேடாக்கி மேவுறாங்க.

கிரானைட் கொள்ளை...

தெற்குத்தெரு கண்மாய் மறுகால் தண்ணீர், அடுத்த கண்மாய்க்கு வரும். அந்த கண்மாய் நிரம்பி அடுத்த கண்மாய்க்கு போகும் இப்படி சங்கிலித் தொடர்ச்சியா கொட்டாம்பட்டி வரைக்கும் 143 கண்மாய்கள் நிரம்பும்.

கிரானைட் கொள்ளை...

பி.ஆர்.பி நிறுவன எல்லைக்குள்ள 26 கண்மாய்கள் சிக்கிடுச்சு. அதனால எல்லா கண்மாய்களுக்குமான வரத்து அடைபட்டுப் போச்சு. அஞ்சு வருஷமா மீனாட்சிபுரத்துக்கு கிழக்க கண்மாய் சாகுபடியும் போச்சு, கிணத்து விவசாயமும் போச்சு'’ என்று புலம்பித் தீர்த்தார், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி அய்யனார்.

வழக்குகள், கைதுகள், சொத்துக்கள் பறிமுதல்... என்றெல்லாம் இப்போது காட்டப்படும் வேகம்... பல ஆண்டுகளுக்கு முன்பே காட்டப்பட்டிருந்தால்... விவசாயிகளுக்கு இத்தனை இழப்பு ஏற்பட்டிருக்காது. எனவே, இந்த விஷயத்தில் இதுநாள் வரை தமிழகத்தில் ஆண்ட (ஆள்கிற) அத்தனை அரசுகளுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவையே! இந்தக் குற்றங்களுக்குத் துணைபோன அமைச்சர்கள், அதிகாரிகள் என்று அத்தனை பேரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிப்பது மட்டுமே, எதிர்காலத்தில் இத்தகையக் கொடுமைகள் நடக்காமல் தடுக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். ஆனால், அதைச் செய்வதற்கு இந்த அரசு முன்வரும் என்று எதிர்பார்ப்பது... கேழ்வரகில் நெய்வடியும் கதைதான். குறைந்தபட்சம்... பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடாவது கிடைக்க, விவசாயிகள் போராடியே தீரவேண்டும்!

எச்சரிக்கை கொடுக்கும் காகங்கள் !

காகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு குறித்துப் பேசும் வனவியல் பேராசியர் அரவரசன், ''மேலூர் பகுதிகளில் காகங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தே காணப்படுகிறது என்கிறார்கள். இதற்குக் காரணமே இந்தக் குவாரிகள்தான். காகங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, அண்டங்காக்கை. இது மிகவும் கரிய நிறத்தில் இருக்கும். மற்றொன்று, நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரண காகம். மனிதர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே வாழும் இதன் கழுத்து, சாம்பல் நிறத்தில் இருக்கும்.

அண்டங்காக்கை, பெரும்பாலும் காடுகளில் வாழும் இதற்கு ராவன் என்கிற பெயரும் உண்டு. சில பகுதிகளில் இந்த வகை காகம் மனிதர்கள் வாழும் இடத்திலும் வாழும். ஆனால், சாதாரண காகம், காற்றில் ஆக்சிஜன் குறைவாக உள்ள இடங்களில் இருக்காது. இதனால்தான் மலைப்பிரதேசங்களில் காகங்களைப் பார்க்க முடிவதில்லை. வெடிபொருட்கள் பயன்படுத்தப்படும் இடங்களிலும் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். குவாரிகளில் அதிக அளவுக்கு வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால்தான் காகங்கள் இடம் மாறியிருக்கின்றன. ஆகக்கூடி, மனிதர்களும் வாழத் தகுதியில்லாத இடமாக மேலூர் பகுதி மாறி வருகிறது'' என்று எச்சரிக்கை மணி அடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism