Published:Updated:

கோவணாண்டி

புதிய துணைவேந்தருக்கு கோவணாண்டி கோரிக்கை!

கோவணாண்டி

புதிய துணைவேந்தருக்கு கோவணாண்டி கோரிக்கை!

Published:Updated:

முறையீடு

##~##

உலகப் புகழ்பெற்ற தமிழ்நாடு, வேளாண் பல்கலைக்கழகத்துக்கு... புது ராசாவா (துணை வேந்தர்) பட்டாபிஷேகம் சூட்டியிருக்கற 'விவசாய விஞ்ஞானி' கே.ராமசாமி அய்யாவுக்கு... மனசு நெறைஞ்ச வாழ்த்துக்களோட... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோட வணக்கத்தைச் சொல்லிக்கறான்... கோவணாண்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'யாருடா இந்த கோவணாண்டி... நமக்கு வாழ்த்துச் சொல்லுற அளவுக்கு பெரிய இவனா?'னு எல்லாரும் செய்ற மாதிரி... நீங்களும் என்னோட இந்தக் கடுதாசியைப் படிச்சுட்டு, கிழிச்சுடாம... கொஞ்சம் நிதானமா மனசுல ஏத்திக்கோங்க... புண்ணியமா போகும்!

அய்யா, நீங்க மேல குந்திக்கிட்டு விவசாயிகள, விவசாயத்த பார்க்கறவங்க. நானு, மண்ணைக் கிளறி விவசாயத்தப் பார்க்கறவன். நீங்க குளுகுளு அறையில குந்திக்கிட்டு சொல்லுறத, வயக்காட்டு மொட்டை வெயிலுல நின்னுக்கிட்டு செய்யறவன் நான். சுருக்கமா சொன்னா... நீங்க சொல்றவங்க, நாங்க செய்றவங்க. சொல்லும்... செயலும் ஒண்ணா இருக்கறதுதானே நல்லது.

'ஸ்ஸப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே'னு மடிச்சு வெச்சுடாதீங்க ராசா. பரிதாபத்துக்குரிய கோவணாண்டிகள கொஞ்சம் மனசுல நினைச்சுக்கிட்டீங்கனா... கண்ணு தொறக்கும்!

கோவணாண்டி

அய்யா... பல்கலைக்கழகம் முந்தி மாதிரி இல்லீங்க. என்னாட்டம் ஏழை, பாழைங்க எட்டிக்கூட பாக்கமுடியாத அளவுக்கு விவசாயிகளுக்கும், அங்க உள்ள விஞ்ஞானிகளுக்கும் இடையில பெரிய பள்ளம் விழுந்து போச்சுங்க. ஆலோசனை கேட்டு வர்ற விவசாயிகளுக்கு ஆரத்தி எடுக்காதக் குறையா, உபசரிச்சு, விளக்கம் கொடுத்து... தரமான விதைகள கொடுத்து அனுப்பின காலமெல்லாம் போயே... போச்சுங்க. சாதனைகள் படைச்ச விஞ்ஞானிகள் சுணங்கிக் கெடக்குறாங்க.

எப்ப மான்சான்டோ பார்வை பட்டுச்சோ... அப்பவே பல்கலைக்கழகம் பாழா போச்சுங்க. முந்திஎல்லாம் மாசமாசம் உழவர் விவாதக் குழுவை கூட்டி, புது ரகங்கள், செயல்பாடுகளைப் பத்தி ஆலோசனை செய்வாங்க. விஞ்ஞானிகளும், விவசாயிகளும் உக்காந்து பேசுவாங்க. ஆனா, அஞ்சு வருஷமா அதைக் கூட்டுறதே இல்லீங்க.

எழுபது, எம்பதுல நம்மூரு விஞ்ஞானிங்க கண்டுபிடிச்ச பருத்திய மாசிப் பட்டத்துல போட்டா... சும்மா தும்பைப் பூவாட்டம் வெடிச்சு நிக்குமுங்க. ஏக்கருக்கு பதினைஞ்சு, இருவது குவிண்டாலுக்குக் குறையாம விளைஞ்சு குவிஞ்சுடுங்க. அப்பவே குவிண்டால் மூவாயிரம் ரூபாய்க்கு மேல விலை போச்சுங்க. ஆனா, அதை மேம்படுத்தற வேலையைச் செய்யாம... கண்ட கம்பெனிக்காரனும் கொடுக்குற விதையைத் தூக்கிக் கொடுக்கற வேலைதான் இப்ப நடக்குது. இதுக்கு எதுக்காக விஞ்ஞானிக? கடைக்காரங்களே போதுமே!

மானாவாரி நாட்டுப் பருத்திக எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டு, பி.டி. பருத்தியைப் பரப்பற, வேலைக்காரங்களா விஞ்ஞானிகள மாத்திப்புட்டாங்க, இப்ப நீங்க உக்காந்துருக்கற இடத்துல முந்துன காலங்கள்ல உக்காந்திருந்த ராசாக்கள்.

எத்தனை முறை விதைச்சாலும் முளைக்குற தகுதியுள்ளதைத்தானுங்களே விதைனு சொல்லணும். ஆனா, ஒரு தடவைக்கு மேல முளைக்காததை எப்படி 'வீரிய விதை'னு சொல்றாங்கனு புரியல. மலட்டு விதைக்குப் பேருதான் வீரிய விதைங்களா? அதை விதைச்சா... பருத்தி வெடிக்கறதுக்கு பதிலா, விவசாயிக வாழ்க்கைதான் வெடிக்குது. கொத்துக் கொத்தா தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப் போறாங்க சம்சாரிக. இதுதாங்க நிஜமான 'தேசிய அவமானம்'. ஆனா, நம்ம 'மௌனகுரு' மனமோகன் சிங், வழக்கம்போல இதைப் பத்தியும் வாய் தெறக்கறதே இல்லீங்க.

'நம்ம நாட்டுக்கு பி.டி. வேண்டாம்'னு நாடாளுமன்ற நிலைக்குழு ஆராய்ச்சி பண்ணி அறிக்கை கொடுத்த பிறகும், அதைக் கையில எடுத்துக்கிட்டு சட்டுபுட்டுனு ஒரு முடிவெடுக்க மனசு வரலீங்க... விஞ்ஞானிங்கற பேருல வெளிநாட்டுக்காரனுங்களுக்கு சேவகம் பண்ற துரோகிங்களுக்கு! 'படிச்சவன் பாட்ட கெடுத்தான்'னு சொலவடை சொல்ற மாதிரி மெத்தப் படிச்ச மேதாவிங்க ஒண்ணா சேர்ந்து... எங்க பொழப்பைப் பொசுக்குறாங்க. என்ன செய்றதுனு தெரியாம தவிச்சுகிட்டு இருக்கற நிலையில ராசாவா வந்துருக்கீங்க.

அதேவேகத்துல 'மண்ணுக்கேத்த மகசூல் செஞ்சு, வறண்ட பூமியிலும் வளத்தைப் பெருக்கி, விவசாயிகள் வாழ்வை உயர்த்தி... நகரத்தை நோக்கி நகருவதை தடுக்கப் போறேன்'னு நீங்க சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும்... மயிலிறகால வருடினது கணக்கா மனசு குளுந்துப் போச்சுங்க.

ஆனா, அந்த மான்சான்டோ ஏஜென்ட்டுங்க உங்க மனசை மாத்திடுவாங்களோனுதான் பயமாயிருக்கு. காரணம், ஏற்கெனவே இப்படி பல  பேரு மான்சான்டோ 'குளிப்பாட்டல்'ல கவுந்து கிடக்கறதுதான். அதனால, நீங்க நினைச்சதை எல்லாம் சட்டுபுட்டுனு நிறைவேத்தி முடிங்க. மொதல் வேலையா... பி.டி. விதைகளுக்கு கருமாதி பண்ணிட்டு, நம்ம விஞ்ஞானிகள தட்டிக் கொடுத்து பழையபடி நம்ம மண்ணுக்கு ஏத்த விதைகள கண்டறியச் சொல்லுங்க. முடங்கிக் கிடக்கற பாரம்பரிய விதைகளுக்கு மறுபடியும் உசுரு கொடுக்கச் சொல்லுங்க.

கண்டகண்ட கம்பெனிக்காரனுக்கும் சேவகம் பண்ணச் சொன்னதால... மனசொடிஞ்சு போன நம்ம விஞ்ஞானிங்கள்லாம்... கையைக் கட்டிக்கிட்டு நொந்து கிடக்கறாங்க. அவங்களையெல்லாம் கூப்பிட்டு பேசி, பல்கலைக்கழகத்துக்கும், விவசாயிகளுக்கும் இடையே விழுந்து கெடக்குற பள்ளத்தை நிரப்பி, பாலமா இருக்கற மாதிரி அவங்கள மாத்துங்க.

கம்பெனிக்காரனுக்காக வேலை பாக்காம, கலப்பைக்காரனுக்காக வேலை பார்க்கற மாதிரி திருப்பிவிடுங்க. இல்லைனா... பல்கலைக்கழகத்துக்கும், விவசாயிகளுக்கும் இடையில இருக்கற பள்ளம்... என்னிக்குமே நிரப்ப முடியாத பாதாளமா மாறிடும் ஜாக்கிரதை.

இப்படிக்கு,
கோவணாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism