Published:Updated:

முழுமையான இயற்கை விவசாயத்தை முன்னெடுப்போம்..!

பூரிக்க வைக்கும் புதிய துணைவேந்தர் ஜி. பழனிச்சாமி,படங்கள்: தி. விஜய்

முழுமையான இயற்கை விவசாயத்தை முன்னெடுப்போம்..!

பூரிக்க வைக்கும் புதிய துணைவேந்தர் ஜி. பழனிச்சாமி,படங்கள்: தி. விஜய்

Published:Updated:
##~##

''தொடர் ஆராய்ச்சிகள் மூலம், வரும் காலத்தில் முழு இயற்கை வேளாண்மையை முன்னெடுத்துச் செல்லும் திட்டமும் எங்களிடம் உள்ளது'' என்று பதவி ஏற்ற சூட்டோடு நல் வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர்.கே. ராமசாமி!

ஆகஸ்ட் 30-ம் தேதியன்று கோயம்புத்தூரிலிருக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் முதல்முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராமசாமி... இயற்கை விவசாயம், மரபணுமாற்று விதைகள், சுற்றுச்சூழல் கேடுகள் என பலதரப்பட்ட கேள்விகளும் பாய்ந்துவர, அனைத்துக்கும் பொறுப்பாக பதிலளித்துப் பேசினார். 'பசுமை விகடன்' சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம், நிறுத்தி நிதானமாக தன் பதில்களைப் பதிவு செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வேளாண் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மரபணு தொடர்பான ஆராய்ச்சிகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தனியார் நிறுவனங்களின் நிதிஉதவியுடன் தொடர்ந்து நடைபெறும். குறிப்பாக, மரபணு மாற்றுத் தொடர்பான கல்வி, தொழில்நுட்பம் ஆகியவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். எனவே, அவை தொடர்ந்து கற்றுத்தரப்படும். அதேநேரத்தில், மரபணு மாற்று விதைகளை வயல்வெளியில் சோதனை செய்வது, அந்த விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது போன்ற செயல்பாடுகளில் பல்கலைக்கழகம் நிச்சயமாக இறங்காது.

முழுமையான இயற்கை விவசாயத்தை முன்னெடுப்போம்..!

இன்றைக்கு இயற்கை விவசாயம் பற்றி உலகம் முழுக்கவே பேசப்படுகிறது. இந்த விஷயத்தில் பல்கலைக்கழகத்தின் நிலையை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். பல்கலைக்கழகம் என்றைக்குமே இயற்கை விவசாயத்துக்கு எதிரி அல்ல. இயற்கை விவசாயத்தின் மூலமே தமிழகம் முழுக்க விவசாயம் நடக்கும் வகையிலான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்திருக்கிறோம்'' என்ற ராமசாமி, தொடர்ந்தார்.

''விளைபொருள்களுக்கு, விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வழிவகை ஏற்படுத்தித் தருவது, உற்பத்தி அதிகரிக்கும் நேரத்தில் விளைபொருள் அழுகி வீணாவதைத் தடுத்தல், ஏற்றுமதி வாய்ப்புகளுக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குதல் போன்ற திட்டங்களை வேளாண் வணிகத்துறை கண்காணிப்பில் விவசாயிகள் கூட்டமைப்புகள் மூலமாகவே செயல்படுத்த இருக்கிறோம்.

நம்நாட்டிலுள்ள 42% இளைஞர்கள் கிராமங்களில் இல்லை. நகரமயமாக்கல் அவர்களைப் புலம்பெயர வைத்து விட்டது. குறிப்பாக, கிழக்கு மாவட்டங்களில் புலம் பெயர்வு அதிகம். காரணம் மாற்று விவசாயத்தை நோக்கி அவர்கள் செல்லவில்லை. சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரம் நீண்டுகிடக்கும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள நிலங்களை மேம்படுத்தி... அந்தப் பகுதிகளுக்கு ஏற்ற சரியான விவசாய முறைகளை உருவாக்கும் விவசாயத் திட்டம் ஒன்றை திட்டக்குழு வடிவமைத்துள்ளது.

அதன்படி, அப்பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்களை இணைத்து முழு நீர்ப்பாசனம் பெறும் வகையில் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதில் பல்கலைகழகத்தின் பங்களிப்பு பெருமளவில் இருக்கும். விவசாய வளர்ச்சிக்காக 700 இளம் விஞ்ஞானிகளை பல்கலைக்கழகம் உருவாக்க உள்ளது. மேலும், வேளாண்கல்வி, விரிவாக்கம், மற்றும் வேளாண் வணிகம் ஆகியவற்றை மேம்படுத்த முழுமுயற்சிகளை மேற்கொள்வோம்'' என்று உறுதியான குரலில் சொன்னார் துணைவேந்தர்.

பதவி ஏற்ற கையோடு, சம்பிரதாயத்துக்குச் சொன்ன வார்த்தைகளாக இல்லாமல், இதையெல்லாம் சாதித்துக் காட்டி, விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்து, அவர்களுடைய மனதில் நிரந்தர இடத்தைப் பிடிக்க துணைவேந்தருக்கு வாழ்த்துக்கள்!

வரலாறு...

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, நிலையூர் கிராமத்தின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், ராமசாமி. சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழத்தில் வேளாண்மை மூதறிவியல் பட்டமும், பெல்ஜியம் நாட்டின் லூவன் கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைகழகத்தில் மரபணு நகலியல் பட்டமும் பெற்றவர்.

1970-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தவர், துறைத் தலைவர், இயக்குநர் பதவிகளில் இருந்திருக்கிறார். கோயம்புத்தூரிலிருக்கும் கற்பகம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றி இருக்கும் இவர், இதுவரை 7 புத்தகங்கள், 23 கையேடுகள், 120 ஆராய்ச்சி வெளியீடுகள் என வெளியிட்டிருக்கிறார்.

18 விருதுகளையும், இரு பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism