Published:Updated:

மஞ்சளுக்கு மரியாதை...

விவசாயிகளே செய்த விலை நிர்ணயம்..! ஜி. பழனிச்சாமி, படங்கள்: க. ரமேஷ்

மஞ்சளுக்கு மரியாதை...

விவசாயிகளே செய்த விலை நிர்ணயம்..! ஜி. பழனிச்சாமி, படங்கள்: க. ரமேஷ்

Published:Updated:

அறிவிப்பு

##~##

உலகில் உற்பத்தியாகும் எல்லா பொருள்களுக்கும் உற்பத்தி செய்பவனே விலை நிர்ணயம் செய்கிறான். ஆனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்யும் உரிமை அவனிடம் இல்லை. இடைத்தரகர்களும் வியாபாரிகளும் நிர்ணயம் செய்வதுதான் இங்கே தொடர்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'விவசாயிகளிடம் ஒரு கிலோ முருங்கைக்காயை 5 ரூபாய், 6 ரூபாய் என வாங்கி... கிலோ 40 ரூபாய்க்கு விற்கிறார்கள், வியாபாரிகள். நுகர்வோருக்கும் விவசாயிக்கும் இடையில் இருக்கும் இத்தகைய விலை முரண்பாட்டைக் களைந்து, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யவேண்டும்' என்று நீண்டகாலமாகவே 'உரிமைப்போர்' இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தப் போர் அடுத்தக் கட்டத்தை அடையும் வகையில்... இந்தியாவிலேயே முதல்முறையாக தங்களின் உற்பத்திப் பொருளுக்கு தாங்களே விலையை நிர்ணயம் செய்துள்ளனர், மஞ்சள் விவசாயிகள்!

இதற்காகவே, அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பாக, மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்யும் மாநாட்டை ஆகஸ்ட் 25-ம் தேதி ஈரோடு நகரில் கூட்டினர் விவசாயிகள். மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் டாக்டர். சரண்தாஸ் மகந்த், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள்... என பலரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில், மஞ்சள் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். கொடுமுடி தொடங்கி, ஈரோடு வரை வாகனப் பேரணியும் நடத்தப்பட்டது.

மஞ்சளுக்கு மரியாதை...

இணை அமைச்சர் சரண்தாஸ் மகந்த் பேசும்போது, ''மஞ்சள் விவசாயிகள், 'குவிண்டாலுக்கு 9 ஆயிரம் ரூபாய் விலை கிடைத்தால்தான் கட்டுபடியாகும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். 25 வேளாண் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல, மஞ்சளுக்கும் நிர்ணயம் செய்யப்படும். மேலும், ஈரோட்டில் 'வாசனைத் திரவியப் பூங்கா’ ஒன்று அமையவுள்ளது. அதன் மூலம் மஞ்சளை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்யும் தொழில்கள் அமையும்'' என்று விவசாயிகளை மகிழச் செய்தார்.

நிறைவாகப் பேசிய அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் தெய்வசிகாமணி, ''மண்டி அதிபர்களிடம் மஞ்சள் விவசாயிகள் மண்டியிடும் நிலை இனி தொடரக்கூடாது. நாம் உற்பத்தி செய்யும் பொருளுக்கு நாமே விலை நிர்ணயம் செய்யவேண்டும். அதன் அடிப்படையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கூட்டத்தில், மஞ்சளுக்கான விலையை அறிவிக்கிறோம். இன்று முதல் ஒரு குவிண்டால் மஞ்சளை

9 ஆயிரம் ரூபாய்க்குத்தான் விவசாயிகள் விற்பனை செய்வார்கள். அதற்குக் குறைவான விலைக்கு விற்பனை செய்ய மாட்டார்கள்'' என்கிற அறிவிப்பை பலத்தக் கரவொலிகளுக்கிடையே வெளியிட்டார்.

மஞ்சளுக்கு மரியாதை...

இந்த விஷயம் மஞ்சள் வியாபாரிகளிடையே கொதிப்பை உண்டுபண்ணத் தவறவில்லை என்பது... மாநாடு நடந்த இரண்டாம் நாளே வெளிப்பட்டது. மஞ்சள் கமிஷன் மண்டி வியாபாரிகள், ஒரு குவிண்டால் மஞ்சள் 7 ஆயிரத்து 500 ரூபாய் என்கிற ரீதியில் விலை வைத்து ஏலம் நடத்திக் கொண்டிருக்க... நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு சென்று, '9 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக ஏலம் விடக்கூடாது' என்று சொல்லி தடுத்து நிறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள்... 'பாதுகாப்பு வேண்டும்’ என்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய... மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியர் தலைமையில், விவசாயிகள், வியாபாரிகள், அதிகாரிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் முடிவில், விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி, 'ஏலத்தில் வைக்கப்படும் விவசாயிகளின் மஞ்சள் குவியல் மீது, சம்பந்தபட்ட விவசாயியின் புகைப்பட அடையாள அட்டை, விற்க விரும்பும் விலை மற்றும் செல்போன் எண் ஆகிய மூன்றும் அடங்கிய அட்டையை வைக்க வேண்டும். ஏலம் நடத்துவது, மைக்கில் அறிவிப்பு செய்வது, பணப் பட்டுவாடா மூன்றையும் வேளாண் கூட்டுறவு அலுவலர்களே மேற்கொள்ள வேண்டும்’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், '9,000 ரூபாய்' என விவசாயிகள் விலை நிர்ணயம் செய்திருக்க... அந்த விலைக்கு ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. 'விலை போகாவிட்டாலும் பரவாயில்லை' என்று சில விவசாயிகள் தங்களுடைய மஞ்சளை விற்பனை செய்யவில்லை. அதேசமயம்... பல்வேறு காரணங்களுக்காக பணத்தேவையோடு மஞ்சளைத் தூக்கிக் கொண்டு வந்திருந்த விவசாயிகள் பலரும் குவிண்டால் 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கே விற்பனை செய்துவிட்டு புறப்பட்டனர்.

தர்மசங்கடமான இத்தகையச் சூழல்தான்... இடைத்தரகர்களின் காட்டில் பணமழையைப் பொழிய வைத்துக் கொண்டிருக்கிறது! 'விவசாயிகள் நிர்ணயிக்கும் விலைக்குத்தான் விற்பனை செய்யப்பட வேண்டும்' என்று அரசாங்கமே அறிவிக்கும்நாள்தான்... இந்த தர்மசங்கடத்துக்கு விடைகொடுக்கும் நாளாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism