Published:Updated:

கடன்படா வேளாண்மைக்கு கலப்புப் பயிர் சாகுபடி..!

ஓவியம்: ஹரன்

கடன்படா வேளாண்மைக்கு கலப்புப் பயிர் சாகுபடி..!

ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

##~##

''சாயந்தரம் கைப் பிடித்து... சாமத்தில் கருத்தரித்து... விடியும்போது தாயையும் பிள்ளையையும் பிரிச்சு விட்டாச்சு. அது என்ன?'' என்று கிராமத்துப் பெண் போட்ட விடுகதையைக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். அதற்கான பதில் என்ன தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாயங்காலம் மாட்டு மடியில் கைப் பிடித்து பால் கறப்போம். பாலைக் காய்ச்சி உறை மோர் கலப்போம். அது நள்ளிரவில் தயிராகிப் போய்விடும் அல்லவா. திரும்பவும், காலையில் தயிரைக் கடையும்போது மோரும் வெண்ணெயும் பிரிந்து விடும். இதுதான் அந்த விடுகதைக்கு அர்த்தம்!

ஓர் இரவுக்குள் பாலை வெண்ணெய், மோர் என்று மாற்றியது யார்? அதுதான் பூவா தாவர இனத்தின் ஒரு கூறாகிய பூஞ்சை வகை உயிரினங்கள். இவைதான், நீராகாரத்தை சுவை மிக்கதாக மாற்றுகின்றன. தோசை மாவைப் புளிக்க வைக்கின்றன. மற்ற உயிரினங்களின் உடல்களில் புகுந்து உடல் இயக்கத்தைச் செழுமைப்படுத்தவும் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும் செய்கின்றன. இந்த உயிரினங்கள் செடிகளின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

செடி, கொடி, மரங்கள் ஓர் அறிவு உள்ளவை என்று பார்த்தோம். இவை, தங்களுடைய தேவைக்காக உணவைத் தயார் செய்து கொள்கின்றன. இந்த வேலைக்குப் பெயர் ஒளிச்சேர்க்கை. ஐசக் நியூட்டன் கண்டு சொன்ன விதிகளில், ஆற்றல் பற்றிய விதியும் ஒன்று. ஆற்றல் ஆக்கப்படுவதும் இல்லை. அழிக்கப்படுவதும் இல்லை. அது உருமாற்றம் அடைகிறது. சூரியனிலிருந்து புறப்படும்போது ஆற்றல் வெப்ப வடிவத்தில் உள்ளது. விண்வெளியில் பயணிக்கும்போது... ஒளி வடிவமாக மாறுகிறது. மனிதர்களின் மீது படும்போது மீண்டும் வெப்ப வடிவமாக மாறுகிறது. ஆனால், பச்சை இலைகள் மீது படும்போது, சர்க்கரையாக மாற்றப்படுகிறது. இதுவே செடிகளில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை எனும் அற்புத நிகழ்வு.

ஒளிச்சேர்க்கையின்போது வேரின் வழியாக நீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது. காற்றிலிருந்து கரி எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவற்றின் கூட்டுத் தயாரிப்பாக சூரிய ஒளி சர்க்கரையாக மாற்றப்படுகிறது. இப்படி உணவு தயாரிக்கும் சமையல் கூடமாக பச்சை இலை செயல்படுகிறது. இலையிலுள்ள பசுமையை 'குளோரோஃபில்’ என்கிறோம். இந்த குளோரோஃபில் உற்பத்தியில் நைட்ரஜன் என்ற காற்று முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உள்வாங்கி வெளிவிடும் சுவாசக் காற்றில், 78% நைட்ரஜன் உள்ளது.

கடன்படா வேளாண்மைக்கு கலப்புப் பயிர் சாகுபடி..!

இந்தக் காற்றை, அமோனியாவாக மாற்றி, யூரியா தயாரிக்கப்படுகிறது. இந்த யூரியாவைக் கலந்து டி.ஏ.பி. தயாரிக்கப்படுகிறது. யூரியாவில் 46% நைட்ரஜன் உள்ளது. இத்தகைய யூரியாவைக் கடனுக்கு வாங்கிப் பயன்படுத்தும் உழவர்கள்தான்... கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேளாண் கல்லூரியில் கற்றுத் தரப்படும் பாடத்தில் யூரியா, சல்பேட், நைட்ரேட் போன்றவை 'உப்பு’ என்றுதான் அழைக்கப்படுகின்றன. விவசாயிகளிடம் இது 'உரம்’ என்று கற்பிக்கப்படுகிறது.  

'நாம் வாழும் பூமிப் பந்து, நைட்ரஜன் கடலில்தான் மிதக்கிறது’ என்கிறார், ஒரு ரஷ்ய விஞ்ஞானி.

'வேரைச் சுற்றித்தான் நைட்ரஜன் இருக்கிறதே... நீ எதற்கு அங்கே நைட்ரஜனைக் கொட்டுகிறாய்?’ எனக் கேட்கிறார், ஒரு அமெரிக்க விஞ்ஞானி.

நமது உழவர் சமூகம் ஒரு விடுகதையைச் சொல்லி வருகிறது. 'கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய்க்கும். அது என்ன?’ இந்த விடுகதைக்கு எந்த ஒரு உழவர் குடும்பத்து மக்களும் உடனடியாக 'வேர்க்கடலை' என்று பதில் உரைப்பார்கள். பேருந்தில் அமர்ந்திருக்கும்போது ஒருவர் 'வேர்க்கடலை, வேர்க்கடலை' என்று கூவி விற்கிறார். பேருந்தில் அமர்ந்திருப்போரும், 'வேர்க்கடலை' என்றே அழைத்து, அவரிடம் கடலை வாங்குகிறார்கள்.

கடன்படா வேளாண்மைக்கு கலப்புப் பயிர் சாகுபடி..!

ஆனால், மெய்யாக அது வேரில் காய்க்கவில்லை. பூ கருவுற்ற பிறகு, சூலகம் கம்பி போல் நீண்டு வளைந்து மண்ணுள் புகுந்து, கடலையாக முதிர்ச்சியடைகிறது. இப்பொழுது விடுகதையை மீண்டும் ஒருமுறை பாருங்கள்... பூ நாமறிய மலர்கிறது.

பூவிலிருந்து வரும் காய் நம் கண்ணில் இருந்து மறைகிறது. கடலைச் செடியினுடைய வேரில் உருண்டை உருண்டையாக குமிழ்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் குமிழ்கள்... செடிக்கு நைட்ரஜனை வழங்குகின்றன. இந்தக் காற்றை, செடியின் வேரை அண்டி வாழும் ஒரு பூஞ்சணம் வழங்குகிறது.

இதுபோன்ற செடிகளின் வேரை அண்டி வாழ்ந்து, செடிகளுக்கு நைட்ரஜனை ஈர்த்து வழங்குவதற்கு பன்னிரண்டாயிரம் செடி, கொடி, மரங்கள் உள்ளன. இவற்றில் நாம் வளர்க்கும் தாவரங்களும் உண்டு. தானே வளர்ந்து மலரும் தாவரங்களும் உண்டு. அகத்தி, அவரை, துவரை, மொச்சை, பயறு, உளுந்து, தட்டை, கொள்ளு, கடலை, செம்பை, குதிரைமசால், வேலிமசால், முயல்மசால், கொழுஞ்சி, அவுரி, தக்கைப் பூண்டு, சணப்பு, நரிப்பயறு போன்றவை இதில் அடங்கும்.

இவை பக்கத்தில் உள்ள தானியப் பயிர்களுக்கும் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கும் உதவி புரிகின்றன. இதனை உணர்ந்திருந்த நமது மூதாதையர்... கலப்புப் பயிர் சாகுபடி, பயிர் சுழற்சி முறைகளைக் கையாண்டு, கடன் படா வேளாண்மையைக் கடைபிடித்து வந்தார்கள். இதுவே இயற்கை வழி வேளாண்மை.

-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism