Published:Updated:

பலன் பெருக்கும் பழக்கரைசல்..!

என். சுவாமிநாதன் ,படங்கள்: ரா. ராம்குமார்

தயாரிப்பு

 ##~##

ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள், கடைகளில் கிடைக்கும் தயார் நிலையில் உள்ள இடுபொருட்களை மட்டும்தான் பயிர்களுக்குக் கொடுப்பார்கள். ஆனால், இயற்கை வழி விவசாயம் செய்பவர்கள் அதிக தேடலில் ஈடுபட்டு, பண்ணையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே புதிது, புதிதாக இடுபொருட்களைத் தயாரித்து செலவைக் குறைப்பதோடு, லாபகரமான மகசூலையும் எடுத்து வருகிறார்கள்! அப்படிப்பட்ட விவசாயிகளில் ஒருவரான கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமாரை சந்திப்போமா!

நாகர்கோவில்\திருநெல்வேலி சாலையில் மூன்றாவது கிலோமீட்டரில் உள்ள வெள்ளமடம் என்ற ஊரிலிருந்து கிழக்கு திசையில் ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது செண்பகராமன்புதூர். விளைநிலங்களை, செங்கல் சூளைகள் விழுங்கி வரும் இப்பகுதியில், இயற்கை விவசாயம் செய்து வருகிறார் செல்வக்குமார்.

பழக்கரைசல் மட்டுமே போதும் !

தோட்டத்து வேலைகளில் இருந்தவரைச் சந்தித்தபோது உற்சாகமாய் பேசத் துவங்கினார். ''எங்க சுத்துவட்டாரத்திலேயே ரசாயனம் இல்லாம இயற்கை விவசாயம் செய்றது நான் மட்டும்தான். ஒரு தடவை எங்க பகுதியில பெஞ்ச கனமழைக்கு ரசாயன வயலில் இருந்த நெல் பயிர் எதுவுமே தாக்கு பிடிக்கல. ஆனா, இயற்கையில் விளைஞ்ச என்னோட நெல் பயிர், விடாத மழையிலும் போராடி ஜெயிச்சுடுச்சு...'' என குழந்தையின் குதூகலத்துடன் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட செல்வக்குமார், தொடர்ந்தார்.

பலன் பெருக்கும் பழக்கரைசல்..!

''ரெண்டு ஏக்கர்ல விவசாயம் செய்றேன். அரை ஏக்கர்ல நாட்டுச் சம்பா, ஒரு ஏக்கர்ல நிலக்கடலை, அரை ஏக்கர்ல ஏத்தன் வாழை அதுக்கு ஊடுபயிரா ரோஜானு முழுக்க முழுக்க இயற்கை முறையில விவசாயம் பண்றேன். மொத்தமா ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து

4 டன் தொழுவுரத்தை அடியுரமா போடுவேன். நெல்லுக்கு மட்டும் 35, 75-ம் நாட்கள்ல

50 கிலோ மண்புழு உரத்தைப் போடுவேன். மத்தபடி நிலக்கடலை, ரோஜா, வாழை...னு எதுக்குமே எந்த இடுபொருட்களையும் போடுறதில்லை. வெறும் பழக்கரைசலை மட்டும்தான் தெளிக்கிறேன்.

பழக்கரைசலுக்கு பப்பாளியும் பனம்பழமும் !

பலன் பெருக்கும் பழக்கரைசல்..!

நாலு வருஷமா பழக்கரைசலைத் பயன்படுத்திட்டு இருக்கேன். 5 அடி நீளம், 5 அடி ஆழம், 4 அடி அகலத்துல ஒரு மண்புழு உரம் தயாரிக்கிற தொட்டி இருந்துச்சு. இப்ப மண்புழு உரத்தையெல்லாம் கைவிட்டாச்சு. ஆனா, பழக்கரைசலுக்கு அந்தத் தொட்டிதான் இப்ப கைகொடுக்குது.

தோட்டத்துல அங்கங்க பப்பாளி மரங்களும், பனை மரங்களும் நிக்குது. கீழ விழுற பப்பாளிப் பழங்களை வெச்சுதான் ஆரம்பத்துல பழக்கரைசல் தயாரிச்சு பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். இப்ப, பனம் பழங்களையும்  பயன்படுத்துறேன். இந்தப் பழக்கரைசலைப் பயன்படுத்த ஆரம்பிச்ச பிறகு... பூச்சி, நோய் தாக்குதல் சுத்தமா இல்லை. பூச்சி, நோய் தாக்குதல் இல்லைனாலே... மகசூல் கூடத்தானே செய்யும்'' என்றபடியே புன்னகையைப் படரவிட்ட செல்வக்குமார், பழக்கரைசல் தயாரிப்பு பற்றி, பாடம் எடுத்தார்.

6 மாதங்கள் வைத்திருக்கலாம் !

15 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேனில், 10 பப்பாளி பழங்களை போட்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இரண்டு நாளில் அது நன்றாக அழுகி நுண்ணியிரிகள் பெருகிவிடும். மூன்றாம் நாள் காலையில் கேனைத் திறந்து அதில் ஒரு குடம் மாட்டுச் சிறுநீரை விட்டு மூடி வைக்க வேண்டும். அதே நாள் மாலையில் கேனைத் திறந்து கையளவு வேப்பிலையைப் போட்டு மூடி வைக்க வேண்டும். இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக அழுகிவிடும்.

மூன்று நாளைக்கு ஒரு முறை இதை நன்றாகக் கலக்கி வந்தால், 30-ம் நாளில் பப்பாளிப் பழக்கரைசல் தயாராகி விடும். 100 லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் வேப்பெண்ணெய், ஒரு லிட்டர் பப்பாளிப் பழக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிப்பான் மூலமாகத் தெளிக்கலாம். இது ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு. இதை தயாரித்து ஆறு மாதங்கள் வரை வைத்திருந்துப் பயன்படுத்தலாம்.

அடுத்து பனம்பழக் கரைசலைப் பற்றிப் பார்ப்போம்.

பலன் பெருக்கும் பழக்கரைசல்..!

பப்பாளிக் கரைசலைவிட, பனம்பழக் கரைசல் அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பதால், இதனுடன் அதிகளவு தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லிட்டர் பனம்பழக் கரைசல் தேவைப்படும். கேன் அல்லது தொட்டியில் 10 பனம் பழங்களைப் போட்டு, அதனுடன் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து, தொட்டியின் மேல் பகுதியை பனை ஓலையால் மூடி விட வேண்டும். 4-ம் நாளில் அது நன்கு ஊறி அழுக ஆரம்பிக்கும். 5-ம் நாள் இரண்டு குடம் மாட்டுச் சிறுநீரை இந்தக் கலவையில் ஊற்றி கலக்கி விடவேண்டும்.

7-ம் நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்தக் கலவையை நன்றாகக் கலக்கி வர வேண்டும். 21-ம் நாளில் நுண்ணுயிரிகள் அதிகளவில் உருவாகி நுரைக்க ஆரம்பித்து விடும். அதற்கு மேல் இதைப் பயன்படுத்தலாம். 150 லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் வேப்பெண்ணெய், ஒரு லிட்டர் பனம்பழக் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம். இதை

6 மாதங்களுக்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்தலாம். இக்கரைசலில் நாட்கள் கூடக்கூட வீரியம் அதிகரிக்கிறது''

செலவில்லாத வேளாண்மை !

தயாரிப்பு முறைகளைச் சொன்ன செல்வக்குமார் நிறைவாக, ''நெல்லுக்கு 40-ம் நாள் ஒரு தடவையும், கதிர் பூட்டு வர்றதுக்கு 10 நாளைக்கு முன்னாடியும் பழக்கரைசலைக் கொடுக்கணும். நிலக்கடலைக்கு 60-ம் நாள் மட்டும் கொடுத்தா போதும். ரோஜாவுக்கு 20 நாளைக்கு ஒரு முறை கொடுக்கணும். வாழைக்கு ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் தெளிக்கணும். இதைத் தவிர வேற எதுவும் தேவைஇல்லை.

பனம்பழக் கரைசல்ல இயற்கையாகவே நைட்ரஜன் சத்து அதிகமாக இருக்கறதால, நல்ல விளைச்சல் கிடைக்குது. அதோட, பயிர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரிக்குது. எனக்கு எல்லா பயிர்கள்லயும் இதால அதிக மகசூல் கிடைச்சுட்டுருக்கு. இது என்னோட அனுபவத்துல பார்த்த விஷயம்'' என்று விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, செல்வக்குமார்,
செல்போன்: 94864-72459.

அடுத்த கட்டுரைக்கு