Published:Updated:

சமவெளியிலும் சபாஷ் போடும் சாத்துக்குடி !

முத்தான முயற்சி...சித்தான வருமானம்...!காசி.வேம்பையன் படங்கள் : பா.கந்தகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

''வேலையாட்கள் தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு, இயற்கைச் சீற்றங்கள்... எனச் சுற்றியடிக்கும் பல பிரச்னைகளால் விவசாயத்தை விட்டு விலக நினைப்பவர்களுக்குக் கண்டிப்பாக சாத்துக்குடி சாகுபடி கைக் கொடுக்கும்'' என்று உறுதியாகச் சொல்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், நார்த்தாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன்.

கொத்துக்கொத்தாக காய்த்துத் தொங்கிய சாத்துக்குடி மரங்களுக்கு இடையில், வேலை செய்து கொண்டிருந்த கமலநாதனைச் சந்தித்தோம். ''தாத்தா, அப்பானு எல்லாருக்கும் விவசாயம்தான் பூர்வீகத் தொழில். நானும் காலேஜ் படிக்குறப்பவே விவசாயத்தையும் கவனிக்க ஆரம்பிச்சேன். எம்.ஏ, எம்.எட். முடிச்சுட்டு, 32 வருஷமா வாத்தியாரா வேலை பார்த்து, இப்போ ரிட்டையர்டு ஆகிட்டேன்.

மொத்தம் 17 ஏக்கர் நிலமிருக்கு. 5 ஏக்கர்ல நெல்; 5 ஏக்கர்ல மணிலா; 3 ஏக்கர்ல கரும்பு; 2 ஏக்கர்ல சப்போட்டானு இருக்கு. 1 ஏக்கர் 20 சென்ட்ல சாத்துக்குடி சாகுபடி இருக்கு. மீதி 80 சென்ட் நிலத்தை கோழி வளர்ப்புக்கும் அசோலா வளர்ப்புக்கும் பயன்படுத்துறேன்.

சமவெளியிலும் சபாஷ் போடும் சாத்துக்குடி !

ஆரம்பத்துல அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்கும்போது, ரசாயன உரங்களைத்தான் போடுவோம். அப்ப அதிக மகசூல் கிடைச்சாலும், போகப் போக குறைஞ்சுடுச்சு. அதுக்குப்பிறகு பழையபடி மாட்டு எரு, ஆட்டு எருவையும் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அதோட... அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் மாதிரியான இயற்கை உயிரி உரங்களையும் போட ஆரம்பிச்சதும் மகசூல் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகியிடுச்சு'' என்று முன்னுரை கொடுத்த கமலநாதன், சாத்துக்குடி சாகுபடி பற்றி தொடர்ந்தார்.

''சாத்துக்குடி, குளிர்ச்சியான இடங்கள்ல மட்டும்தான் வரும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். கங்கம்பட்டு, அரிதாரிமங்கலம் பகுதியில சாத்துக்குடியை சாகுபடி செய்திருந்தாங்க. அப்ப, நம்ம மண்ணுக்கும் வரும்னு முடிவு செஞ்சு, 95-ம் வருஷம் 1 ஏக்கர் 20 சென்ட் நிலத்துல மொத்தம் 120 செடிகளை நட்டேன். இதுவும் இயற்கை முறை சாகுபடிதான். வேலையில இருந்ததால, சரியா கவனிக்க முடியாமப் போனதுல 40 மரம் பட்டுப்போச்சு. மீதி 80 மரங்களை நல்லா பராமரிக்க ஆரம்பிச்சேன்.  

அந்த சமயத்துல 'பசுமை விகடன்’ல 'ஜீரோ பட்ஜெட்’ கட்டுரைகளைப் படிக்க ஆரம்பிச்சதுல அதுல ஈர்ப்பு வந்துச்சு. திருவண்ணாமலையில நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டு, பாலேக்கர் சொன்ன முறையில... நாலு சாத்துக்குடி மரங்களுக்கு இடையில ஒரு வரிசையில சப்போட்டாவும், ஒரு வரிசையில நெல்லியும் மாத்தி மாத்தி நடவு செஞ்சேன். நெல்லி போன வருஷத்துல இருந்து காய்க்குது. சப்போட்டா இன்னும் காய்ப்புக்கு வரலை'' என்ற கமலநாதன் வாத்தியார், சாத்துக்குடி சாகுபடி செய்யும் முறைகளைப் பாடமாகவேச் சொல்ல ஆரம்பித்தார்.

சமவெளியிலும் சபாஷ் போடும் சாத்துக்குடி !

செம்மண் ஏற்றது !

'சாத்துக்குடி சாகுபடி செய்ய, தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் செம்மண் கலந்த சரலைமண் நிலங்கள் ஏற்றவை. மழைக் காலங்களான ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் நடவு செய்யலாம். இந்தப் பருவத்தில் நடவு செய்தால், நாற்று பழுது இல்லாமல் சிறப்பாக முளைக்கும். சாத்துக்குடி ஒட்டுச்செடிகள் பெங்களூரு, ஆந்திரா எல்லைகளிலும், தமிழ்நாட்டில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களிலும் கிடைக்கும்.

காய்க்கும் வரை சொட்டு நீர் !

20 அடிக்கு 20 அடி இடைவெளியில் 2 அடி நீள, அகல, ஆழத்தில் குழி எடுத்து 15 நாட்கள் ஆறப்போட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றைக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். நாற்றின் ஒட்டுப்பகுதி தரைக்கு மேல் அரையடி உயரத்தில் இருப்பது போல, நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க... நீளமானக் குச்சியை ஊன்றி செடியுடன் இணைத்துக் கட்ட வேண்டும். மரம் காய்ப்புக்கு வரும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சொட்டுநீர்ப் பாசனமும், அதற்குமேல் நேரடியான முறையில் குழாய் பாசனமும் செய்ய வேண்டும். மரத்தில் இடைஞ்சலாக இருக்கும் கிளைகளை, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வெட்டி எடுக்க வேண்டும்.

ஒரு டன் எரு, 300 கிலோ மண்புழு உரம், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவை தலா 20 கிலோ இவற்றை ஒன்றாகக் கலந்து, ஆண்டுக்கு ஒரு முறை மழைக்காலத்துக்கு முன்பாகக் கொடுக்க வேண்டும். ஐந்து வயது மரங்களுக்கு 3 அடி இடைவெளியிலும், அதற்கு மேல் வயதுள்ள மரங்களுக்கு 5 அடி இடைவெளியிலும் இரண்டு அடி அகலத்துக்கு வட்டப்பாத்தி எடுத்து மேற்கண்ட கலவையில் ஒவ்வொரு மரத்துக்கும் 10 கிலோ அளவுக்கு வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாசனத் தண்ணீரோடு 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் எறும்புகள் !

10 வயதான சாத்துக்குடி மரங்களுக்கு, இடையில் ஒரு சப்போட்டா அல்லது நெல்லி என ஊடுபயிர் சாகுபடியும் செய்யலாம். நான்கு மரங்களுக்கு இடையில் இதை நடவு செய்யவேண்டும். இதன் மூலம் இடைவெளிப் பகுதியிலும் வருமானம் பார்க்கலாம். செடிகள் வளரும் வரை மட்டும், செடிகளைச் சுற்றியுள்ள களைகளை அகற்ற வேண்டும்.

சமவெளியிலும் சபாஷ் போடும் சாத்துக்குடி !

மரத்தில் சிகப்பு எறும்புகள் இருப்பதால்... வண்ணத்துப்பூச்சித் தாக்குதலைத் தவிர வேறு விதமான பூச்சிகள் தாக்குவதில்லை (வண்ணத்துப் பூச்சிகளுக்கும் இவர் பூச்சிக்கொல்லி தெளிப்பதில்லை).

மரத்துக்கு 250 கிலோ !

செடி நடவு செய்த 5-ம் ஆண்டில் பூவெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். 7-ம் ஆண்டில் மரத்துக்கு 100 கிலோ அளவிலும், 10-ம் ஆண்டு முதல் 200 முதல் 250 கிலோ அளவிலும் சாத்துக்குடிப் பழங்கள் கிடைக்கும். பொதுவாக சாத்துக்குடியில் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பூ எடுத்து, ஏப்ரல்-மே மாதங்களில் இடைப்பருவ மகசூலும்; ஜூன்-ஜூலை மாதங்களில் பூ எடுத்து, செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் முழுமகசூலும் கிடைக்கும்'

சாகுபடிப் பாடம் முடித்த கமலநாதன் நிறைவாக, வருமானம் பற்றி பேச ஆரம்பித்தார். ''சாத்துக்குடியில், இடைப்பருவ மகசூல்ல சராசரியா 2 டன் அளவுக்கு காய் கிடைக்கும். பருவத்தில் 6 டன் அளவுக்கு காய் கிடைக்கும். ஒரு கிலோ 15 ரூபாய்ல இருந்து 25 ரூபாய் வரைக்கும் விக்கிது. சராசரியா ஒரு கிலோ 20 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே... மொத்தம் 8 டன்னுக்கும் சேத்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும்.

வருஷத்துக்கு 2 டன் நெல்லி கிடைக்குது. அது மூலமா 15 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. ரெண்டுலயும் சேர்த்து வருஷத்துக்கு மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். செலவு 35 ஆயிரம் ரூபாய் போக, ஒரு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று சந்தோஷமாகச் சொல்லி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, கமலநாதன், செல்போன்: 98945-36616.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு