Published:Updated:

ஏக்கருக்கு 42 மூட்டை நெல்...

லாபம் கூட்டும் எளிய தொழில்நுட்பங்கள் ! கு. ராமகிருஷ்ணன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 தொழில்நுட்பம்

##~##

''எந்தக் காரியமாக இருந்தாலும், முறையாகத் திட்டமிட்டாலே பாதி வெற்றியை அடைந்து விடலாம்'' என்பார்கள். இதற்கு விவசாயமும் விதி விலக்கல்ல என்பதை நடைமுறையில் காட்டிக் கொண்டிருக்கிறார் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலூகா, வடக்குப்பட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை. இயற்கை விவசாயத்தோடு, தனித்துவமான சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு... அதிகப் பலன்களை அடைந்து வருகிறார்.

தேடிச்சென்ற நம்மிடம் ஆர்வம் பொங்க பேச ஆரம்பித்த சின்னதுரை, ''எங்களுக்கு மொத்தம் 8 ஏக்கர் நிலம் இருக்கு. முழுக்க களிமண் பூமி. 4 ஏக்கர்ல நெல், 2 ஏக்கர்ல பருத்தி, 1 ஏக்கர்ல தீவனப்புல்லும் அதுல ஊடுபயிரா வெண்டையும் இருக்கு.

33 சென்ட்ல நிரந்தர நாற்றங்கால் அமைச்சுருக்கோம். மீதியுள்ள இடத்துல மாட்டுக் கொட்டகை, மாடுகள் உலாவுறதுக்கான இடம், மோட்டார் கொட்டகை எல்லாம் இருக்கு.

மழைநீர்ச் சேமிப்பு !

முன்ன இந்தப் பகுதியில குறைவான ஆழத்துலயே நிலத்தடி நீர் கிடைச்சதால...

ஏக்கருக்கு 42 மூட்டை நெல்...

4 இஞ்ச் குழாயை இறக்கி, சாதாரண மேல்நிலை மோட்டார் பயன்படுத்திக்கிட்டு இருந்தோம். இப்ப நிலத்தடி நீர் அதிக ஆழத்துக்குப் போயிடுச்சு. அதனால 8 இஞ்ச் குழாயை இறக்கி, நீர் மூழ்கி மோட்டார் போட்டிருக்கோம். ஆனாலும், பழைய போர்வெல்லை மண்ணைப் போட்டு மூடாம அதுல மழைத்தண்ணி போற மாதிரி ஏற்பாடு செஞ்சுட்டேன். அதனால, எங்க நிலத்துக்குள்ள விழுற மழைநீர் வீணாகாம, மண்ணுக்குள்ளயே போய் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திடுது.

மாடு கட்டும் இடத்தில் மணல் !

எங்ககிட்ட 19 மாடுகள் இருக்கு. பெரும்பாலான நேரங்கள், கொட்டகைக்கு வெளியிலதான், மாடுகளைக் கட்டி போடுவோம். அந்த இடத்துல மணலைப் பரப்பி விட்டிருக்கோம். மணல்ல விழற சாணியை ரொம்ப சுலபமா அள்ளிட முடியும். அதோட மணல் இருக்கறதால மாடு கட்டுற இடத்துல ஈரம் கோர்க்கறதில்லை. அதனால ஈ, கொசு தொல்லையெல்லாம் இல்லை.

இப்ப பயன்பாட்டுல இருக்குற போர்வெல்லுல தண்ணி கொட்டுற இடத்துல ஒரு குழி எடுத்து சிமெண்ட் உருளையைப் பதிச்சிஇருக்கேன். தினமும் இதுல சாணத்தை கொட்டி விட்டுடுவேன். தண்ணி பாயுறப்பவே சாணியும் கரைஞ்சு பயிர்களுக்குப் போயிடும்'' என்று சற்று இடைவெளி தந்தவர், தொடர்ந்தார்.

நாற்றங்கால்... நாற்றுக்கு மட்டுமே !

''நான் 4 ஏக்கர்ல நெல் சாகுபடி பண்றேன். ஒற்றை நாற்று முறையில நெல் சாகுபடி செய்றதுக்கு நாலு ஏக்கருக்கு 12 சென்ட்ல இருந்து 16 சென்ட் வரைக்கும் நாற்றங்கால் அமைச்சாலே போதுமானது. ஆனா, நாங்க, 33 சென்ட் இடத்தை நாற்றங்காலுக்காவே ஒதுக்கிட்டோம். இதுல முக்கியமான ஒரு தொழில்நுட்பம் ஒளிஞ்சிருக்கு. நாற்றங்கால்ல நாத்து பறிச்ச பிறகு, அந்த இடத்தை அப்படியே விட்டுடுவோம். நாத்து உற்பத்தி இல்லாத காலங்கள்ல, ராத்திரியில மாடுகளை இதுலதான் கட்டிப் போடுவோம். கொஞ்சம்கூட ரசாயனம் கலக்காத பசுந்தீவனத்தைச் சாப்பிடுற மாடுகளோட சத்தானக் கழிவுகள், இந்த மண்ணை நல்லா வளமாக்கிடுது. அதனால, நாற்றங்கால் மண் நல்ல கருமையாவும், வெண்ணெய் மாதிரி இளகியும் இருக்கும். உயிர்ச்சத்துக்கள் அதிகமா நிறைஞ்சு இருக்கற இந்த மண்ணுல உற்பத்தியாகுற நாத்தெல்லாம் நல்ல வளமா இருக்கும்.

ஏக்கருக்கு 42 மூட்டை நெல்...

இலை, தழை மூலம் இயற்கை ஊட்டம் !

விதைப்புக்கு 40 நாட்களுக்கு முன்னயே நாற்றங்காலை தயார் பண்ண ஆரம்பிச்சுடுவோம். சேத்துழவு செஞ்சு, வேம்பு, எருக்கன், நுனா, பீக்கலாத்தி, நொச்சி, நெய்வேலி காட்டாமணக்கு இலைகளை குச்சிகளோடு உடைச்சுக்கிட்டு வந்து தினமும் போடுவோம். நாலு நாட்களுக்கு ஒரு தடவை சாணம் கலந்த தண்ணீரைப் பாய்ச்சுவோம். இந்த இலைகள் கொஞ்சம் கொஞ்சமா மக்கிட்டே வரும். விதைப்புக்கு ஒரு வாரம் இருக்குறப்போ, இலைகளைப் போடுறதை நிறுத்திட்டு... நாற்றங்காலை சமப்படுத்தி, பார் பிடிப்போம். பிறகு, விதைநெல்லைத் தூவி விட்டுடுவோம். அதுல இருந்து நல்ல திடகாத்திரமான நாத்துகள் உருவாகிடும்.

நாற்றுகளை குச்சியால் அடிக்கக் கூடாது !

நடவுக்கு முன்ன நாத்தை பறிச்சு அதை கயிறால அழுத்திக் கட்டி சேறை நீக்குறதுக்குக் குச்சியால அடிப்பாங்க. இது தப்பான நடைமுறை. கயிறால கட்டும்போது நாத்து வளைஞ்சுக்கும். அதனால பலவீனமாயிடும். திரும்ப அது நிமிருறதுக்கே ஒரு வாரம் பத்து நாள் பிடிச்சுடும்.

குச்சியில அடிக்கும்போது வேர் அறுந்துபோகவும், நிறைய வாய்ப்பிருக்கு. நாங்க, அன்னகுண்டாவுல தண்ணி நிரப்பி, அதுல நாத்துக்களைக் கழுவி... அன்னகுண்டாவுலயே நடவு வயலுக்கு எடுத்துட்டுப் போவோம். இந்த மாதிரி செஞ்சுட்டா... கண்டிப்பா நல்ல விளைச்சல் கிடைக்கும்.

என்னோட நெல் பயிர்கள்ல கொஞ்சம் கூட நோய், பூச்சித்தாக்குதல் இருக்காது. இயற்கைச் சீற்றங்கள்ல இருந்தும் தன்னை தற்காத்துக்குது. வேப்பம்பிண்ணாக்கை மட்டும் சாணத்துல கலந்து உரமாகக் கொடுப்போம். களைகளை மண்ணுல அழுத்தி விடுவோம். வேற எந்தப் பராமரிப்பும் கிடையாது'' என்ற சின்னதுரை,

''எனக்கு ஏக்கருக்கு 42 மூட்டையில இருந்து 50 மூட்டை (60 கிலோ மூட்டை) வரைக்கும் நெல் மகசூல் கிடைக்குது'' என்று சொல்லி நம்மை வியக்க வைத்ததோடு...

''இதெல்லாமே எல்லாரும் எளிதா கடைபிடிக்கக்கூடிய விஷயங்கள்தான். கொஞ்சம் சிந்திச்சு செயல்பட்டா... கண்டிப்பா விவசாயத்துல வெற்றிதான்'' என்று சொல்லி சந்தோஷமாக விடை கொடுத்தார்.

சினை மாடு விற்பனையில் சிறப்பான லாபம் !

 சின்னதுரை மாடுகள் வளர்த்தாலும் பால் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. அது பற்றிப் பேசிய சின்னதுரை, ''ஒரு ஏக்கர்ல இருக்குற கோ-4 தீவனப்புல்லுக்கு இடையில ஊடுபயிரா வெண்டை போட்டிருக்கோம். தீவனப்புல்லோட சேத்து வெண்டையையும் மாடுகளுக்கு உணவா கொடுக்குறோம். இதை மாடுகள் நல்லா விரும்பிச் சாப்பிடுது. இப்படி இயற்கையில விளையுற தீவனங்களைச் சாப்பிடுறதால, மாடுகள் நல்லா தெளிவா, ஆரோக்கியமா இருக்கு. அதோட, சரியானப் பருவத்துல சினை புடிச்சுடுது. நல்ல சத்தானக் கழிவுகளும் கிடைக்குது. மாடுகளுக்குக் கொடுத்தது போக, மீதியுள்ள வெண்டையை, கிலோ ரூ.20 வீதம் விற்பனை செய்றோம். தினமும், சராசரியா 20 கிலோ வெண்டை கிடைக்கும்.

ஏக்கருக்கு 42 மூட்டை நெல்...

பால் மூலமா வருமானத்தை நான் எதிர்பார்க்கறதில்ல. இங்க உள்ள மாடுகள்ல ஒண்ணு மட்டும் உம்பளாச்சேரி நாட்டுப்பசு. இது தினமும் 5 லிட்டர் பால் கொடுக்குது. இதை எங்க வீட்டுத் தேவைக்கு வெச்சுக்குவோம். மீதியுள்ள எல்லாமே கலப்பின மாடுகள்தான். ஒரு வயசுல கன்னுக்குட்டியை வாங்கி வளர்த்து சினைபிடிக்க வெச்சு ஒன்பது மாச சினையா இருக்குறப்போ வித்துடுவேன். அஞ்சாயிரம் ரூபாய்க்கு வாங்குற கன்னை இப்படி விக்கும்போது முப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் விக்க முடியும். இந்த மாதிரி வருஷத்துக்கு நாலு மாடுகளை வித்துடுவேன். இப்போ கையில 3 காளை, 9 கன்னுக்குட்டி, 6 சினை மாடுகள் இருக்கு. இப்படி மாடுகளை விற்கறது மூலமா ஒரு கணிசமான வருமானம் கிடைச்சுட்டே இருக்குது'' என்று சொன்னார்.

தொடர்புக்கு,சின்னதுரை, செல்போன்: 99521-00021.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு