Published:Updated:

மொட்டை மாடியில் பட்டுப்புழு வளர்ப்பு !

மொட்டை மாடியில் பட்டுப்புழு வளர்ப்பு !

 நீங்கள் கேட்டவை
புறா பாண்டி

''பட்டுப்புழு வளர்ப்புக்குக் குறைந்தபட்சம் எவ்வளவு இடம் தேவை? மொட்டை மாடியில் அதை வளர்க்க முடியுமா?''

ஆர். ஜெகதீஸ்பாபு, சென்னை.

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் பா.சத்தியமூர்த்தி பதில் சொல்கிறார்.

மொட்டை மாடியில் பட்டுப்புழு வளர்ப்பு !
மொட்டை மாடியில் பட்டுப்புழு வளர்ப்பு !
##~##

''வீட்டு மொட்டை மாடியாக இருந்தாலும் சரி, குடிசையாக இருந்தாலும் சரி... நல்ல காற்றோட்டமுள்ள இடமாக அது இருந்தால்... தாராளமாக பட்டுப்புழுக்களை வளர்க்கலாம். எதிரெதிராக ஜன்னல்களை அமைத்து காற்றோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பட்டுப்புழுக்களின் உணவான மல்பெரி இலைகளைப் பயிரிட குறைந்தபட்சம் அரை ஏக்கராவது வடிகால் வசதி கொண்ட நிலம் வேண்டும். அப்போதுதான் லாபகரமாக இத்தொழிலை செய்ய முடியும். நடவு செய்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இலைகளை அறுவடை செய்து புழுக்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலைகளை பால் மாடுகளுக்கும் தீவனமாகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது பாலின் அளவு கூடும். அதேசமயம், புழுக்களின் கழிவுகள் படிந்த மல்பெரி இலையை மாடு தின்றால், கழிச்சல் ஏற்படும். எனவே, தீவனம் கொடுக்கும்போது கவனம் தேவை.

பட்டுப்புழு வளர்ப்புக்கு அரசு மானியமும் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் சொந்த நிலத்தில் மல்பெரி பயிரிட்டால், 4,125 ரூபாய் மானியமும், சொட்டு நீர்ப்பாசனத்துக்காக 15,000 ரூபாய் மானியமும் கிடைக்கும். தவிர, பட்டுப்புழு வளர்க்கும் கட்டடத்துக்கும் மானியம் உண்டு. 1,000 சதுர அடி வரை உள்ள கட்டடத்துக்கு 25,000 ரூபாயும், 1,500 சதுரடி வரை உள்ள கட்டடத்துக்கு 50,000 ரூபாயும், அதற்கு மேல் இருந்தால் 75,000 ரூபாயும் மானியமாகக் கிடைக்கிறது.

பட்டுப்புழு வளர்ப்பு அருமையானத் தொழில். இதை முறையாகக் கற்றுக் கொண்டால், நல்ல லாபம் பெறலாம். விவசாயத்துடன் கூடிய உபதொழிலாகவும் செய்யலாம். பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பப் பயிற்சிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.''

தொடர்புக்கு: உதவி இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, 8/52, பாலசுந்தரம் சாலை, கோவை-641 018. தொலைபேசி: 0422-2246948. அலைபேசி: 99527-27157.

''பதிமுகம் என்று ஒரு வகை மரம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதன் பயன்கள் என்ன... தமிழ்நாட்டில் வளர்க்க முடியுமா?''

க. செல்வகுமார், செங்குந்தபுரம்.

மரம் வளர்ப்பில் முன்னோடியாக இருக்கும் 'மரம்’ கருணாநிதி பதில் சொல்கிறார்.

''இது மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மரம். கேரள மாநிலத்தில் பதிமுகம் மரம் இல்லாத வீட்டைப் பார்ப்பது அரிது. வீட்டுக்கு ஐந்து மரங்கள் வரைகூட வளர்ப்பார்கள். இதில் கொருக்காப்புளி மரத்தைப் போல முள் இருப்பதால், வேலி ஓரமாக வளர்ப்பார்கள். அம்மாநில மக்கள் சீரகம், வெட்டி வேர் உள்ளிட்ட பல வகை மூலிகைகளோடு பதிமுகத்தின் பட்டை, கட்டைகளை  கலந்து ஊற வைத்த நீரைத்தான் பெரும்பாலும் அருந்துவார்கள். ஆகையால்தான் பதிமுகம் வீடுகள் தோறும் வளர்க்கப்படுகின்றன. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திலும்கூட பதிமுகம் மரத்தின் கட்டை பகுதி  பயன்படுத்தப்படுகின்றன. பலவிதமான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு என்பதுதான் இதற்கு காரணம். பிராந்தி, விஸ்கி... போன்ற மதுபானங்கள், இனிப்பு வகைகள், கேக், குளிர்பானம் போன்றவற்றுக்கு இயற்கை நிறமூட்ட பதிமுகம் பயன்படுகிறது. இதன் மகத்துவத்தை வெளிநாட்டினர் அறிந்து இருப்பதால், வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மொட்டை மாடியில் பட்டுப்புழு வளர்ப்பு !
மொட்டை மாடியில் பட்டுப்புழு வளர்ப்பு !

நடவு செய்து ஏழு முதல் பத்து ஆண்டுகளில் மரத்தை வெட்டிப் பயன்படுத்தலாம். இது வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. தமிழ்நாட்டில் இதை பெரியளவில் யாரும் பயிர் செய்யவில்லை. பாலக்காட்டில் இருக்கும் 'தி பார்மிங் டிரஸ்ட் ஆப் இந்தியா’ என்ற அமைப்பு, பதிமுகம் சாகுபடியை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பாலக்காடு பகுதியில் பதிமுகத்தை வளர்க்கும் விவசாயிகள் நிறைய உள்ளனர். ஒரு ஏக்கரில் பயிர் செய்தால், பத்து ஆண்டுகளில் பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.''

தொடர்புக்கு: The farming Trust Of India,329, Marutha Road, Palakkad, Kerala-678007. Ph: 0491- 2572246

''பொங்கல் கரும்பு என்று சொல்லப்படும் கரும்பு ரகத்தில் சாறு அதிகமாக வந்தாலும், அதை ஏன் சர்க்கரை தயாரிக்க ஆலைகளில் பயன்படுத்துவதில்லை?''

கே. காந்திமதி, திருச்சி.

கரும்பு விஞ்ஞானி டாக்டர்.அரு.சோலையப்பன் பதில் சொல்கிறார்.

மொட்டை மாடியில் பட்டுப்புழு வளர்ப்பு !

''பனிக்கரும்பு, ரஸ்தாளிக்கரும்பு, செங்கரும்பு... என்று பொங்கல் கரும்புக்குப் பல பெயர்கள் உண்டு. பாரம்பர்ய ரகமான இந்தக் கரும்பு ரகம், பனிக் காலமான மார்கழியில் அறுவடை செய்யப்படுவதால் 'பனிக்கரும்பு' என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. நடுப்பட்டமான பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடவு செய்தால், பொங்கல் சமயத்தில் அறுவடை செய்யலாம். பொங்கல் கரும்பில் நார்களின் அடர்த்தி குறைவாக இருக்கும். அதனால், கடித்து உண்பதற்கும் எளிதாக இருக்கும். ஆனால், இது ஆலையில் சரியாக அரைபடாமல் வழுக்கிக் கொண்டு விடும். அதோடு கணுக்களின் இடைவெளியும் குறைவாக இருப்பதால் இயந்திரத்தின் வேகமும் தடைபடும். அதனால்தான், கடித்து ருசிக்க இந்த ரகத்தையும், ஆலையில் ஆட்டி வெல்லம், சர்க்கரை போன்றவற்றைத் தயாரிக்க வேறு ரகத்தையும் பிரித்துப் பயிரிடும் முறையை ஏற்படுத்தியுள்ளனர்.''

''பால் கறக்கும் மாடுகளுக்குக் கொம்பைச் சீவி விட்டால், பாலின் அளவு குறைந்து விடும் என்கிறார்கள். இது உண்மையா?''

எம்.பொன்னர், வீரமலைப்பாளையம்.

ஓய்வுபெற்ற கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர், டாக்டர்.ஏ.ஆர். ஜெகத் நாராயணன் பதில் சொல்கிறார்.

மொட்டை மாடியில் பட்டுப்புழு வளர்ப்பு !

''பால் மாடு வளர்ப்பவர்கள் மத்தியில் கொம்பு சீவினால் பால் கொடுக்காது என்ற நம்பிக்கை உள்ளது. அறிவியல் ரீதியாக இது உறுதி செய்யப்படவில்லை. மாறாக கொம்பு சீவி விடுவதாலும், சுட்டுவிடுவதாலும் மாடுகளுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதை என் பணி காலத்தில் பார்த்திருக்கிறேன். வழக்கமாக எருதுகளுக்கு கொம்புப் புற்றுநோய் ஏற்படும். சிலசமயம் அறுவை சிகிச்சை செய்தால்தான் புற்றுநோய் குணமாகும். இல்லையென்றால், காலம் முழுக்க கொம்பு புற்றுநோயால் மாடு அவதிப்படும். இதைத் தவிர்க்க கன்று போட்டவுடன் இளங்கன்றுகளின் கொம்புகளை சுட்டுவிட வேண்டும். இப்படி செய்வதால், எதிர்காலத்தில் கொம்புப் புற்றுநோய் வருவதைத் தடுக்க முடியும்.

சில கறவை மாடுகள் முட்டும் குணம் கொண்டதாக இருக்கும். பெண்கள், வயதானவர்கள் பால் கறக்க அச்சப்படுவார்கள். இதைத் தவிர்க்க கொம்பை சுட்டுவிட்டால் பயப்படாமல் பால் கறக்கலாம். கொம்பு சுட வேண்டும் என்று கால்நடை மருத்துவரிடம் சொன்னால் போதும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வார். சந்தையில் கொம்பு இல்லாத மாட்டுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.''

தொடர்புக்கு:அலைபேசி: 99442-69950.

''அகத்தி, சூபாபுல், குதிரைமசால்... போன்றத் தீவன விதைகள் எங்கு கிடைக்கும்?''

வி. கணேசன், பெருமாளகரம்.

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் அகத்தி, சூபாபுல், குதிரை மசால்... போன்ற கால்நடைத் தீவன விதைகள் கிடைக்கின்றன.

தொடர்புக்கு: இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266345, 266244.

படங்கள் : என்.விவேக், தி.விஜய்,
மு.நியாஸ் அகமது

 விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை'

பசுமை விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2

என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு
இ-மெயில் மூலமும்  PVQA (space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம். 

அடுத்த கட்டுரைக்கு