Published:Updated:

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோமா ?!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோமா ?!

பிரீமியம் ஸ்டோரி

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

##~##

''உணவுப் பாதுகாப்புதான், மிகப்பெரிய சவால். அதேபோல, பருவநிலை மாற்றங்களும் இதில், முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகையச் சூழலில், பல்லுயிர்ப் பெருக்கம் என்பது, நம் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். எனவே, வனவளத்தையும், மரபுவழிப் பயிர்களையும் பாதுகாப்போம்'' என்று ஆந்திர மாநிலம், ஐதராபாத் நகரில் நடைபெற்ற சர்வதேச பல்லுயிர்ப் பாதுகாப்பு மாநாட்டில் பேசியிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். கூடவே ''பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்புக்காக, 275 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது'' என்றும் அறிவித்திருக்கிறார்.

நாட்டில் பல்வேறு விஷயங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை ஒப்பிடும்போது, இந்தத் தொகை, பக்கத்து வீட்டுக்காரன் கல்யாணத்தில் வேண்டா, வெறுப்பாக மொய் எழுதுவது போலத்தான் இருக்கிறது.

ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் 33% வனவளம் இருந்தது. இது, உலக அளவில் ஒரு நிலப்பரப்பில் இருக்க வேண்டிய காடுகளின் நிர்ணயிக்கப்பட்ட அளவு. இன்று இது, 22% என்கிற அளவுக்கும் கீழே சென்றுவிட்டது. இத்தகையக் கொடுஞ்சூழலில்கூட, நிலைமையின் ஆபத்தை புண்ணியவான்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. போர்த்தளவாடங்கள், தேவையற்றக் கட்டுமானப் பணிகள், கேளிக்கைகள் என்று பலவற்றுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில், ஒரு சதவிகிதம்கூட இந்தப் பல்லுயிர்ப் பெருக்கத்துக்குத் தரப்படவில்லை. மாறாக, பல்லுயிர்களைப் பரலோகம் அனுப்பும் வேலைதான் தொடர்கிறது.

நாடாளுமன்றத்தில் திருக்குறளை அவ்வப்போது மேற்கோள் காட்டுவதால், எந்தப் பயனுமில்லை. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்....’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் சொல்லி வைத்திருக்கும் அதிஅற்புதமான வார்த்தைகளைப் புரிந்து கொண்டு, அவற்றுக்கு உயிர் கொடுப்பதில்தான் இருக்கிறது... பல்லுயிர்ப் பெருக்கம்!

நேசத்துடன்,
ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு