பிரீமியம் ஸ்டோரி

 திருந்திய நெல் சாகுபடிப் பயிற்சி...

##~##

திருவள்ளூர் மாவட்ட நீர்வடிப்பகுதி முகமை சார்பாக, சோழாவரம் வட்டம், ஜெகநாதபுரம் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடிப் பயிற்சி முகாம், அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்றது. அப்போது பேசிய நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணை இயக்குநர் ஜெயச்சந்திரன், ''வயல்பள்ளி என்கிற பயிற்சி முகமையின் கீழ், ஆண்டுக்கு மூன்று முறை வேளாண்மை, தோட்டக்கலை, மீன் வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளுக்காக ஆத்மா (ATMA-Agricultural Technology Management Agency) என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இது 90% மத்திய அரசின் உதவியுடனும், 10% மாநில அரசின் உதவியுடனும் செயல்படுத்தப்படுகிறது.

வேளாண்மையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு கிராமத்திலும் 25 விவசாயிகளை ஒன்றிணைத்து, நாற்றங்கால் நடவு முதல் அறுவடை வரை 6 பருவ முறைகளாகப் பிரித்து மகசூலை உயர்த்தக் கூடிய வழிகளைச் சொல்லித் தருகிறோம். நன்மை செய்யக்கூடிய மற்றும் தீமை செய்யக்கூடிய பூச்சிகளின் வகைகளைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறோம். இயந்திரத்தின் மூலம் நடவு செய்வதால், விதைநெல்லின் தேவையும் குறைகிறது'' என்று சொன்னார்.

நாட்டு நடப்பு

சோழாவரம் வட்டத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி, ''இந்த சாகுபடி முறையால், நீரின் தேவை 30% அளவுக்குக் குறைகிறது. அதிக இடைவெளியில் நடவு செய்வதால், பூச்சிகள் மற்றும் நோய்களின் பாதிப்பும் குறைந்து, நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது'' என்கிற விஷயத்தைக் குறிப்பாக எடுத்து வைத்தார்.

-க. பிரபாகரன், படங்கள்: வீ. ஆனந்தஜோதி

மண்வளம் காக்க... ஒரேவழி!

ஈரோடு மாவட்டம், பவானியில் 'சங்கமம் உழவர் கூட்டமைப்பு’ என்கிற பெயரில் இயற்கை விவசாயிகள் கூட்டாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பு சார்பில், அக்டோபர் 10 அன்று பவானி, லட்சுமி நகரில், 'வாழை மற்றும் மஞ்சள் சாகுபடி கருத்தரங்கம்’ நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சண்முகம், ''மண்வளத்தைக் காக்க ஒரே வழி... இயற்கை விவசாயம்தான். காளிங்கராயன் என்கிற வாய்க்கால், தொழில்நுட்பங்கள் பெருகும் காலத்துக்கு முன்பே அமைக்கப்பட்ட ஒரு பிரமாண்டம். அப்படிப்பட்ட தொலைநோக்குத் திட்டம் உருவான மண்ணில், அதே சிந்தனையோடு மண் வளத்தைக் காக்க புறப்பட்டிருக்கும் சங்கமம் அமைப்பை மற்ற விவசாயிகளும் கவனிக்க வேண்டும்'' என்று பாராட்டு தெரிவித்தார்.

பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் முகமது யாசின், பயிர்களுக்கு சவால் விடும் 'சுடுமல்லி’ என்கிற களைச்செடியை அழிக்கும் நுட்பங்களைப் பற்றி பேசினார். அந்த மையத்தின் உதவிப்பேராசிரியர் சித்ரா, தோட்டக்கலைத் துறையின் பிரபு உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

நாட்டு நடப்பு

பின்குறிப்பு: 'கீழ் பவானி கால்வாய், மேட்டூர் வலதுகரை கால்வாய் ஆகியவை வறண்டு போன நிலையில், மாவட்டம் முழுமைக்கும் நிலத்தடி நீரும் வறண்டு விட்டது. எனவே, ஈரோடு மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நூறு சதவிகித மானியத்தில் சோலார் உபகரணங்கள் வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன.

-எஸ். ராஜாசெல்லம். படங்கள்: க. ரமேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு