Published:Updated:

கோகோ பாக்கு வாழை திப்பிலி மிளகு...

தென்னைக்கு நடுவே லாப அணிவகுப்பு !என்.சுவாமிநாதன் படங்கள் : ரா.ராம்குமார்

##~##

'பருவநிலை மாற்றங்கள், கட்டுப்படியான விலையின்மை, தண்ணீர் பற்றாக்குறை... என விவசாயத்துக்குப் பல்வேறு இடையூறுகள் இருக்கும்நிலையில்... பிரதான பயிரோடு, ஊடுபயிர்களையும் கூட்டணி சேர்த்தால், பிரதான பயிர் கைவிட்டாலும், ஊடுபயிர் மூலமாக வருமானத்தைப் பார்த்துவிட முடியும்'

பலகாலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த சூட்சமத்தை... இயற்கை விவசாய வல்லுநர்களும், விவசாய விற்பன்னர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். இதை வரிபிறழாமல் கடைபிடிப்பதன் மூலமாக, குறிப்பிடத்தக்க அளவிலான லாபத்தை ஈட்டிவரும் விவசாயிகளில் ஒருவர்... கன்னியாகுமரி மாவட்டம், வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமணி.

நாகர்கோவிலில் இருந்து குருந்தன்கோடு செல்லும் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வேம்பனூர். அங்கு முழுக்க இயற்கை வழியில் நெல், தென்னை... ஊடுபயிராக கோகோ, வாழை, பாக்கு, திப்பிலி, மிளகு என கலப்புப்பயிர்களை சாகுபடி செய்து அசத்தி வருகிறார், சிறுமணி. மாவட்ட கோகோ விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர், விளைவீடு வட்டார நெல் விவசாயிகள் குழுத் தலைவர், பெரும்செல்வவிளை பகுதி பாசனசபை செயலாளர்... எனப் பல பொறுப்புகளிலும் இருக்கும் சிறுமணி, தன் தோட்டப் பராமரிப்புப் பணிகளில் தீவிரமாக இருக்க... நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், உற்சாகமாகப் பேசத் துவங்கினார்.

கோகோ பாக்கு வாழை திப்பிலி மிளகு...

''பள்ளிக்கூடத்துல படிக்கறப்பவே மண்வெட்டியைப் புடிக்க ஆரம்பிச்சுட்டேன். தினமும் காலையில ஏதாவது தோட்ட வேலையைச் செஞ்சுட்டுதான் பள்ளிக்கூடத்துக்கே போவேன். படிப்பு முடிச்சதும் அரசாங்கப் பள்ளிக்கூடத்துல வாத்தியார் வேலை கிடைச்சுது. ஆனாலும், விவசாயத்தை விடல. ரிட்டையர்டு ஆனதுக்கப்பறம் முழு நேர விவசாயியா மாறிட்டேன். ஆரம்பத்துல இருந்தே இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருந்தேன். இடையில ரசாயனத்துக்கு மாறினேன். அப்பதான் அதனால விளையுற தீமைகளை நேரடியா தெரிஞ்சுக்கிட்டேன். குறிப்பா, பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சு அதிகமா நோய்கள் தாக்க ஆரம்பிச்சது. உரத்தோட சேர்த்து, மருந்துகளையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டியதா இருந்துச்சு. அதுக்கப்பறம் திரும்பவும் இயற்கைக்கு மாறிட்டேன்.

இப்போ எட்டு வருஷமா , என்னோட எட்டு ஏக்கர் முழுக்க இயற்கை விவசாயம்தான். ஒரு ஏக்கர்ல அம்பை பதினாறு ரக நெல் இருக்கு. ஆறு ஏக்கர்ல தென்னை இருக்கு. தென்னைக்கு ஊடுபயிரா மிளகு போட்டிருக்கேன். தனியா இரண்டு ஏக்கர்ல தென்னை, வாழை, கோகோ, பாக்கு, திப்பிலினு ஊடுபயிர் போட்டிருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த சிறுமணி, ஊடுபயிர் சாகுபடி பற்றிய தொழில்நுட்பங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

இயற்கை முறையில் நோய் தாக்காது !

'30 அடி இடைவெளி விட்டு நடவு செய்தால், ஏக்கருக்கு 75 தென்னை மரங்கள் வரை நடலாம். இந்த இடைவெளியில் ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். எட்டு அடி இடைவெளியில் கோகோவை நடவு செய்ய வேண்டும். அதற்கு இடையில் உள்ள இடைவெளியில் நாட்டு ரக வாழையை நடவு செய்ய வேண்டும். தோப்பு ஓரங்களில் நான்கு அடி இடைவெளியில் பாக்கு மரங்களை நடவு செய்யலாம். அனைத்துப் பயிர்களுக்கும் சேர்த்து வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு தென்னை மரத்தைச் சுற்றிலும் மூன்று அடி அகலம், அரை அடி ஆழத்துக்குக் குழிபறித்து அதனுள் மட்கிய இலைதழைகள், கோகோ கழிவுகள், தென்னைக் கழிவுகள் மற்றும் வாழைக் கழிவுகளை இட்டு 75 கிலோ அளவுக்கு தொழுவுரம் போட்டு, மண்ணால் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இயற்கை வழி வேளாண்மையில் நோய் தாக்குதல் குறைவாகத்தான் இருக்கும். எப்போதாவது இலை கருகல் நோய் தாக்கினால்... மரத்தின் தூரில் இருந்து மூன்று அடி தள்ளி, அரை அடி ஆழத்தில் குழி பறித்து, அதில் வேம்பு, நொச்சி, எருக்கு, ஆடாதொடை ஆகிய தாவரங்களின் இலைகளோடு, தொழுவுரத்தைக் கலந்து போட்டு, மண்ணைப் போட்டு மூடி விட்டால் நோய் கட்டுப்படும்.

கோகோ பாக்கு வாழை திப்பிலி மிளகு...

கூன்வண்டுக்கு வேப்பங்கொட்டைப் பொடி !

இளம் தென்னைகளை காண்டாமிருக வண்டுகள் தாக்க வாய்ப்புகள் உண்டு. இவ்வண்டுகள் குருத்தைத் துளைத்து சாப்பிட்டு விடும். வண்டு துளைத்த பகுதிகளில் சிவப்பு கூன்வண்டு, முட்டை போட்டு குஞ்சு பொரித்து தங்கிவிடும். கூன்வண்டு தாக்கிய மூன்றே மாதங்களில் மரம் பட்டுப் போய் விடும். வேப்பங்கொட்டையைப் பொடி செய்து, இரண்டு கையளவு தூவி விட்டால், இவ்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

கோகோ... அறுவடைக்குப் பிறகு கவனம் !

கோகோவுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 10 கிலோ தொழுவுரம் இட்டு வரவேண்டும். இது, நடவு செய்த 3-ம் ஆண்டில் அறுவடைக்கு வரும்.

பலன் தர ஆரம்பித்த பிறகு, மாதம் ஒரு முறை கவாத்து செய்து அந்த இலைகளையே கோகோ பயிர்களுக்கு மூடாக்காகப் போடலாம். இப்பயிரைப் பெரும்பாலும் எந்த நோயும் தாக்குவதில்லை. பத்து நாளுக்கு ஒரு முறை கோகோ பழங்களைப் பறிக்கலாம். பறித்தவற்றை பத்து நாட்கள் வரை தனியாக ஒரு இடத்தில் குவித்து வைக்க வேண்டும்.

இப்படிச் செய்தால், பழம் நன்கு பழுத்து விடும். பிறகு ஒவ்வொரு பழத்தையும் குச்சியால் அடித்து உடைத்து, உள்ளிருக்கும் விதைகளைச் சேகரித்து, மூங்கில் கூடையில் ஆறு நாட்கள் வரை வைக்க வேண்டும். 3 மற்றும் 5-ம் நாட்களில் இதைக் கிளறி விட வேண்டும். 7-ம் நாளுக்கு மேல் இந்த விதைகளை வெயிலில் காயப்போட வேண்டும். 5 நாட்கள் காய்ந்த பிறகு விற்பனை செய்யலாம்.

நாட்டு வாழைக்குச் சுண்ணாம்பு !

நாட்டு வாழை நடவு செய்த 2-ம் மாதத்தில் வாழையின் அடிப்பகுதியைச் சுற்றி, பத்து கிலோ தொழுவுரம் இட்டு மண்ணால் மூட வேண்டும். 4-ம் மாதத்தில் வேம்பு, நொச்சி, எருக்கு ஆகிய இலைகளோடு... பத்து கிலோ தொழுவுரம், 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சேர்த்து இடவேண்டும்.

6-ம் மாதத்தில் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைப் பொடித்து அதனுடன் 10 கிலோ தொழுவுரத்தையும் போட்டு மண் அணைக்க வேண்டும். சராசரியாக, ஒரு வாழை மரத்துக்கு உரச் செலவு 60 ரூபாய் வரை ஆகும். வாழை 7-ம் மாதத்தில் குலை தள்ளும். 12-ம் மாதத்தில் அறுவடை செய்யலாம்.

வாழையை இலைக்கருகல் நோய் தாக்கினால்... வேம்பு, நொச்சி, எருக்கு ஆகிய இலைகளை இடித்து, சாறு எடுத்துக் கொண்டு 100 மில்லி சாறுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து மரத்தின் இலைகளில் தெளித்தால், நோய் கட்டுப்படும். கூன் வண்டு தாக்கினால், மொத்தத் தண்டிலும் ஒரு கையளவு சுண்ணாம்புத்தூளைத் தூவி விட வேண்டும். வண்டுத் தாக்குதல் தென்படாவிட்டாலும், வாரத்துக்கு ஒரு முறை தண்டில் சுண்ணாம்புத் தூளைத் தூவி வந்தால், கூன் வண்டு எட்டிக் கூடப் பார்க்காது.

பாடில்லாத பாக்கு !

பாக்கு மரத்துக்குத் தனியாக மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. இவற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்தையும் சுற்றி இரண்டு அடி அகலம், அரை அடி ஆழத்துக்கு குழி பறித்து 5 கிலோ அளவுக்கு தொழுவுரம் போட்டு வந்தாலே போதுமானது. நடவு செய்த 5-ம் வருடத்தில் இருந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பாக்கு அறுவடை செய்யலாம்.'

செழிக்க வைத்த ஊடுபயிர்கள் !

சாகுபடித் தொழில்நுட்பங்களைச் சொல்லி முடித்த சிறுமணி தொடர்ந்தார். ''தோட்டத்தில் மிச்ச மீதி இருக்குற இடங்கள்ல எல்லாம் மிளகையும், திப்பிலியையும் விதைச்சு விட்டிருக்கேன். அதெல்லாம் இப்பதான் மகசூலுக்கு வர ஆரம்பிச்சுருக்கு. தேங்காய் விலை அதலபாதாளத்துல இருக்கற இந்தச் சூழல்லயும் என்னால இவ்வளவு செழிப்பா இருக்க முடியுதுனா... அதுக்குக் காரணம், இந்த ஊடுபயிர்கள்தான்.

ஆரம்பத்துல, 'ஊடுபயிர் வெள்ளாமை செஞ்சா, தென்னையில மகசூல் குறையும்’னு எல்லாரும் சொன்னாங்க. அதனாலதான் ரெண்டு ஏக்கர்ல மட்டும் ஊடுபயிர் போட்டேன். ஆனா, இப்போ தனியா இருக்கற மரங்களைவிட ஊடுபயிர் சாகுபடி செய்யுற மரங்கள்லதான் அதிக விளைச்சல் இருக்கு.

ரெண்டு ஏக்கர்ல 150 தென்னை மரங்க நிக்குது. ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை காய் பறிப்போம். ஒரு பறிப்புக்குக் குறைஞ்சபட்சம் 2 ஆயிரத்து 500 காய்க்குக் குறையாம கிடைக்கும். வருஷத்துக்கு மொத்தம் 15 ஆயிரம் காய்கள் கிடைச்சுடும். இப்ப காய்க்கு சராசரியா 5 ரூபாய் அளவுக்குத்தான் விலை கிடைக்குது. தென்னை மூலமா, வருசத்துக்கு 70 ஆயிரம் ரூபாய்ல இருந்து, ஒரு லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்கும்.

கோகோ பாக்கு வாழை திப்பிலி மிளகு...

மொத்தம் 450 கோகோ இருக்கு. பத்து நாளைக்கு ஒரு தடவை 25 கிலோ அளவுக்கு, கோகோ விதை கிடைக்கும். கேட்பரீஸ் சாக்லேட் கம்பெனிக்காரங்க தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க. ஒரு கிலோவுக்கு 130 ரூபாய் விலை கொடுக்குறாங்க. சீசன் நேரத்துல கூடுதல் விலையும் கிடைக்கும். இது மூலமா, வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய்ல இருந்து ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

மொத்தம் 100 வாழை இருக்கு. ஒரு குலை 100 ரூபாய்ல இருந்து 150 ரூபாய் வரைக்கும் விலை போகும். நாகர்கோவில் அப்டா சந்தையில் இருக்குற வியாபாரிங்க நேரடியாவே வந்து வாங்கிக்கிறாங்க. 100 வாழை மூலமா சராசரியா வருஷத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

மொத்தம் 100 பாக்கு மரங்கள் நிக்குது. குமரி மாவட்டத்துல ஆகஸ்ட் மாசத்துல இருந்து, மார்ச் மாசம் வரைக்கும் பாக்குல நல்ல மகசூல் கிடைக்கும். 15 நாளைக்கு ஒரு முறை 600 பாக்குல இருந்து, 800 பாக்கு கிடைக்கும். உள்ளூர் கடைகளிலேயே ஒரு பாக்கு 50 காசுனு விலை வெச்சு கொடுத்துட்டு இருக்கேன்'' என்ற சிறுமணி நிறைவாக,

''எப்படிப் பாத்தாலும் எல்லாத்தையும் சேர்த்து ரெண்டு ஏக்கர்ல இருந்தே வருஷத்துக்குக் குறைஞ்சது 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சுடும். செலவு அம்பதாயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம். கண்டிப்பா தென்னை மட்டும் வெச்சுருந்தா இந்த லாபம் கிடைக்காது'' என்றார், உறுதியாக.

தொடர்புக்கு,
சிறுமணி, செல்போன்: 94425-30483
சுப்ரமணியன், செல்போன்: 97509-66448

முன்கூட்டியே வருமானம் தரும் ஊடுபயிர் !

தென்னைக்கு இடையில் வாழை, பாக்கு, கிளரிசீடியா, கோகோ என சாகுபடி செய்து வருகிறார், தஞ்சாவூர் மாவட்டம், கடுவெளி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான சுப்ரமணியன்.

'தென்னைக்கு இடையே ஊடுபயிர் சாகுபடி பண்றதால, ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்தாசை பண்ணி, எல்லாமே வளமா வளர்ந்து நிக்குது. இதனால் ஏற்படக்கூடிய பலவிதமான பலன்களைக் கண்கூடா பார்க்க முடியுது. குறைவான தண்ணீர், குறைவான செலவு, களைக்கட்டுப்பாடு, பூச்சி-நோய் தாக்குதல் இல்லாத ஆரோக்கியம், அபரிமிதமான வளர்ச்சினு ஏகப்பட்ட பலன்களைப் பட்டியலிடலாம். நடவு செஞ்சு ரெண்டரை வருஷந்தான் ஆகுது. இப்பவே காடு மாறி ஆகிடுச்சு'' என மகிழ்ச்சி பொங்குகிறார் சுப்ரமணியன்.

கோகோ பாக்கு வாழை திப்பிலி மிளகு...

தொடர்ந்தவர், ''இது வண்டலும் மணலும் கலந்த பூமி. மொத்தம் 19 ஏக்கர் இருக்கு. 12 ஏக்கர்ல சவுக்கும், 5 ஏக்கர்ல வாழையும் பயிர் பண்ணியிருக்கோம். மீதியுள்ள ரெண்டு ஏக்கர்லதான் தென்னை, வாழை, கிளரிசீடியா, பாக்கு, கோகோ எல்லாம் கலந்து பயிர் செஞ்சுருக்கோம். ஜீரோ பட்ஜெட் முறையில ஜீவாமிர்தம் மட்டும் கொடுத்தே இந்தளவுக்குச் செழிப்பா உருவாக்கியிருக்கோம்.

36 அடி இடைவெளியில நெட்டை ரக தென்னை இருக்கு. 4 நெட்டைக்கு நடுவுல ஒரு நெட்டை-குட்டை ரக தென்னை இருக்கு. இதனால் நெட்டை ரக வரிசைக்கும், நெட்டை-குட்டை ரக வரிசைக்கும் இடையே 18 அடி இடைவெளி கிடைச்சுடுது. இந்த இரண்டு வரிசையில் உள்ள மரங்களும் நேருக்கு நேர் சந்திச்சுக்காது. மட்டைகள் உரசாமல் இருக்கவும், சூரிய ஒளி எல்லா மரங்களுக்கும் கிடைக்குறதுக்காகவும்தான் இந்த மாதிரி கலந்து நடவு பண்ணியிருக்கோம். தென்னைக்கு இடையில நாலரை அடி இடைவெளியில வாழை, கிளரிசிடியா, பாக்கு, கோகோனு வரிசை வரிசையா நடவு பண்ணியிருக்கோம்.  

கோகோ பாக்கு வாழை திப்பிலி மிளகு...

இரண்டு ஏக்கர்லயும் மொத்தமா சேர்த்து, 150 தென்னை மரங்கள், 850 வாழை மரங்கள், 850 கிளரிசீடியா மரங்கள், 850 பாக்கு மரங்கள், 850 கோகோ செடிகள் இருக்கு. தென்னைக்கு முதல் இரண்டு வருசத்துக்குத் தேவையான நிழலை ஊடுபயிர்களே கொடுத்துடும். வாழை தன்னோட தண்டு, வேர்ப்பகுதியில தண்ணீரை சேமிச்சு வச்சு தென்னைக்குத் தருது. கிளரிசீடியா, காத்துல இருக்குற நைட்ரஜனை சேகரிச்சுக் கொடுக்கறதோட, ஏகப்பட்ட இலைகளை உதிர்த்து மண்ணை வளமாக்குது. அதனால, மண் எப்பவும் ஈரப்பதமாவே இருக்குது. கோடைக்காலத்துல கூட 25 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணி பாய்ச்சுறோம்.

செலவு குறையுது... வளம் கூடுது !

தென்னை, வாழை, பாக்கு மரங்கள்ல இருந்து விழக்கூடிய மட்டைகள், கிளரிசீடியா இலைகள், கோகோ இலைகள்னு அவ்வளவையும் அங்கங்க பரவலா போட்டுடுவோம். ஒவ்வொரு முறை பாசனம் பண்றப்போவும் ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஜீவாமிர்தத்தை தண்ணியில கலந்துடுவோம். தோட்டம் முழுக்க ஏகப்பட்ட மண்புழுக்கள் பெருகி மண் 'பொலபொல’னு இருக்கு. அதனால வாழைக்கு மண்ணைக் கொத்தி விட வேண்டிய அவசியமே இல்லாமப் போயிடுச்சு. இந்த வாழை மூணாவது போகம். ஆனாலும், முதல் போகத்துல இருந்த தார் போலவே நல்லா தரமா, திரட்சியா இருக்கு. பழமும் நல்ல சுவையா இருக்கு. இந்தப் பழம் ஒரு வாரம் கூட கெட்டுப்போகாது. மரம், உறுதியா இருக்கறதால சூறாவளிக் காத்து அடிச்சப்பகூட பெரியளவுல பாதிப்பு வரல'' என்ற சுப்ரமணியன் நிறைவாக,

'தென்னை நடவு செஞ்சவுடனே 850 செடி முருங்கையை நட்டோம். அது மூலமா 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. மகசூல் முடிஞ்சதும் அதை அப்படியே நிலத்துக்கு உரமாக்கிட்டோம். செடி முருங்கை இருந்த இடத்துலதான் இப்போ கோகோ இருக்கு. வாழையில ரெண்டு மகசூல் எடுத்தாச்சு. பிரதானப் பயிரான தென்னை, மகசூலுக்கு வர்றதுக்கு முன்னயே ஊடுபயிர் மூலமா வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு' என்றார், சந்தோஷமாக.

-கு. ராமகிருஷ்ணன். படங்கள்: கே. குணசீலன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு