Published:Updated:

மாத்தி யோசி

மண்புழு மன்னாரு !ஓவியம்: ஹரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஊடுபயிர், அடுக்குப்பயிர்... சாகுபடி நுட்பமெல்லாம்... நம்ம நாட்டுல ஆயிரமாயிரம் வருஷமா இருக்குதுங்க.

'சூழ மேதி இறங்குந் துறையிற்
சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும் பலாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க'னு

'குற்றால குறவஞ்சி' பாட்டுல அழகா சொல்லி வெச்சுருக்கார் திரிகூடராசப்ப கவிராயர். அதாவது, தென்னை மரத்துல இருந்து இளநீர், பலா மரத்து மேல விழ... பலா பழம், கீழ இருக்க வாழையில் விழ..... வாழை, அதுக்குக் கீழ இருந்த பயிர் மேலே விழுதுனு சொல்றார். ஆக, ஒரு இடத்துலயே... பல வகையான பயிர் செய்யற நுட்பம், ஆண்டாண்டுகாலமா இருக்கு. சொல்லப் போனா... இயற்கையோட ஏற்பாடே ஊடுபயிர்தான். ஒண்ண ஒண்ணு சார்ந்துதான் எல்லா பயிருங்களுமே விளையணும்... ஜீவராசிங்களும் வாழணும்!

ஒரு பயிர் கைவிட்டாலும், இன்னொரு பயிர் காப்பாத்தும்ங்கிறதுதான், ஊடுபயிர் சாகுபடியோட தத்துவம். ஆனா, இப்போ. எங்க பாத்தாலும் ஒத்தைப் பயிர் சாகுபடிதான் பரவிக் கெடக்குது.

அந்தக் காலத்துல... கம்பு பயிர் செய்யும்போது, கம்பு மட்டும் போட மாட்டாங்க. கூடவே, துவரை, எள், தட்டைப்பயறுனு கலந்து விதைப்பாங்க. இது வருமானத்துக்கு மட்டுமில்லீங்க. மண்ணோட வளத்தைக் கூட்டவும் உதவி செய்யும். அதாவது, துவரை, தட்டைப்பயறு... மாதிரியான பயறு வகைப் பயிருங்க... காத்துல இருக்குற தழைச்சத்தை இழுத்து, மண்ணை வளப்படுத்தும். இதனால, கம்பும் ஜோரா விளையும், ஊடுபயிர் விளைச்சலும்... கூடுதல் வருமானமா கிடைக்கும்.

மாத்தி யோசி

கரும்பு சாகுபடி செய்றதுக்கு நிலத்துல... கட்டாயம், உளுந்து, தட்டைப்பயறு விதைச்சி விடலாம். கரும்பு நடவு செய்யும்போதே, விதைச்சி விட்டா, அடுத்த மூணு மாசத்துல... விளைச்சல் வந்து சேர்ந்துடும். கரும்புக்கு பாய்ச்சின நீரூம், உரமும்... ஊடுபயிருக்கும் சேர்ந்துடும். அடுத்த ஆறு மாச சாகுபடிச் செலவுக்கு, ஊடுபயிர் வருமானம் கை கொடுக்கும்.

மரப்பயிர்தான், லாபகரமானதுங்கிற... விஷயம், எல்லா திசையிலயும் பரவிக்கிட்டு இருக்கு. மரக்கன்னு மட்டும் வெச்சா போதும்னு... சிலர் நினைக்கறாங்க. கொஞ்சம் இப்படியும் யோசிங்க. மரக்கன்னு வெச்சஉடனே, இடைப்பட்ட இடத்துல... நிலக்கடலை, கம்பு, சோளம்... விதைச்சுடலாம்.

இப்படி விதைக்கறதுல பல நன்மை உண்டு. முதலாவது, களைகள் மட்டுப்படும். ரெண்டாவது, பயறுவகைப் பயிருங்க... இலவசமா யூரியாவை (காத்துல இருக்கிற தழைச்சத்துதான்) கிரகிச்சுக் கொடுக்கும். மூணாவது, இந்த வருமானத்தை வெச்சி, மரப்பயிர் சாகுபடிச் செலவை ஈடு கட்டலாம். நாலாவது, இந்த ஊடுபயிர்களோட தழைங்க, அற்புதமான கால்நடைத் தீவனமா உதவும். அஞ்சாவது... ஆறாவது....னு சொல்லிக்கிட்டே போகலாம். மூணு வருஷம் வரைக்கும் இபபடி லாபம் பார்க்கலாமுங்க.

தென்னை சாகுபடி செய்யும்போது, கூடவே, பாக்கு மரத்தையும் நட்டு வைங்க. பாக்கும், தென்னையும் அண்ணன், தம்பி மாதிரி.

சில பகுதியில... தென்னந்தோப்பை கால்பந்தாட்ட மைதானம் மாதிரி, சுத்த, பத்தமா வெச்சுருப்பாங்க. ஆனா, இது சரியில்லாத பராமரிப்புனுதான் சொல்லணும். தென்னை மரத்தைத், தவிர, காலியாயிருக்கற இடத்துல... மகோகனி, வேங்கைனு விதவிதமா வளர்க்கலாம். தென்னை மரத்தடியில குறைவாதான் சூரிய ஒளி இருக்கும். இதனால இந்த மரங்கள்ல்லாம், சூரிய ஒளியைத் தேடி, வேகமா, நேரா... வளரும். சாதாரணமா வளர்ற மரத்தைக் காட்டிலும், இப்படி ஊடுபயிரா வளர்க்கற மரம்... உயரமா வளர்ந்து லாபம் கொடுக்கும்.

ஒவ்வொரு பயிருக்கும்.... கூட்டாளிங்க கூட்டம் இருக்கு. இந்தக் கூட்டாளி... யாருனு தெரிஞ்சா... உங்க காட்டுலயும் லாப மழை பொழியும். மாந்தோப்புல... வெங்காயம், தக்காளி, பப்பாளி, கொய்யா மற்றும் காலிஃப்ளவர் போடலாம்.

வாழைத் தோப்புல... கருணைக்கிழங்கு, வெள்ளரி, செவந்திப் பூ, கத்திரி மற்றும் மிளகாய் போடலாம்.

பலா தோப்புல... கத்திரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பயறு வகைகள் விதைக்கலாம்.

கொய்யா தோப்புல... தட்டப் பயறு, பட்டாணி, பீன்ஸ் மற்றும் பயறு வகைகள் பயிரிடலாம்.

சப்போட்டா தோட்டத்துல... தட்டப்பயறு, துவரை மற்றும் கொத்தவரை... சாகுபடி செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு