Published:Updated:

ஜி.டி. நாயுடு...

தமிழகம் கண்டுகொள்ளாமல் விட்ட விந்தை விஞ்ஞானி... ஓவியம்: ஹரன்

பிரீமியம் ஸ்டோரி

வரலாறு

##~##

ஜி.டி. நாயுடு பேச ஆரம்பித்தார். ''இந்தியா பெரிய விவசாய நாடு. இங்கு விவசாயம் பின்தங்கியுள்ளது. விஞ்ஞானிகளாக ஆகப்போகும் நீங்கள் தொண்டாற்ற நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதோ... என் முன்னே உட்கார்ந்து இருக்கிறானே... பாண்டுரங்கன். இவனைப்போல் இருக்காதீர்கள். இவன், வேளாண் கல்லூரியில் படித்த காலத்தில், கோடை விடுமுறையில் என்னிடம் மோட்டார் தொழில் பற்றி கற்றுக் கொள்ள வந்தான்.

'நீதான் வேளாண் கல்லூரியில் படிக்கிறாயே உனக்கு மோட்டார் தொழில் பற்றிய கல்வி எதற்கு? இது இன்னொருவனுக்குக் கிடைக்கிற வாய்ப்பைத் தடுத்ததாக ஆகாதா?’ என்று நான் இடங்கொடுக்க மறுத்தேன். இவன் உடனே, தொகுதி எம்.பி-யை அழைத்துக் கொண்டு வந்தான். 'இனி நான் வேளாண் படிப்பை விட்டுவிடப் போகிறேன். மோட்டார் தொழிலில்தான் முற்றிலுமாக இறங்கப் போகிறேன்’ என்று சொல்லி என்னிடம் எப்படியோ பயிற்சியில் சேர்ந்து விட்டான். ஆனால், இப்போது வேளாண் பட்டதாரியாக மாறி வேளாண் கல்லூரியில் வந்து அமர்ந்திருக்கிறான். இதுபோல அடுத்தவரது வாய்ப்பைப் பறிப்பதாக உங்கள் வாழ்க்கை அமைந்து விடக்கூடாது'' என்று நாயுடு பேசியதும், பலரது பார்வை... அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவாக்கத்துறைத் தலைவர் பாண்டுரங்கன் பக்கம் திரும்ப... அவர் அசடு வழிந்தார்.  

ஜி.டி. நாயுடு...

தொடர்ந்து பேசிய ஜி.டி. நாயுடு, ''விஞ்ஞானியாக வேண்டுமானால், விஞ்ஞான மனப்பான்மை நமக்குத் தேவை. நம் நாட்டில் ஏராளமானப் பொருட்கள் உள்ளன. அவற்றின் பயன்பாடுகளை நாம் அறிந்திருக்கவில்லை. இதோ என்னுடன் வந்திருக்கிற ஜெர்மன்காரனைப் பாருங்கள். இவனோடு சேர்ந்து சுற்றுவதில் சங்கடம் உள்ளது. இவனுக்கு நமது கருவேல மரத்து விதையை அனுப்பித்தான் நான் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த கருவேல மரம் ஏராளமாக நிற்கின்றன. கருவேல மரம் இல்லாத இடமாகப் பார்த்து இவனை அழைத்துக் கொண்டு வருகிறேன். 'இவ்வளவு மலிவாகக் கிடைக்கிற இந்த விதையை நமக்குக் கொடுத்து நாயுடு

ஜி.டி. நாயுடு...

நிறைய சம்பாதிக்கிறானே’ என்று வெள்ளையன் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக கருவேல மரம் இல்லாத இடமாக அழைத்து வருகிறேன்'' என்று விகடமாகப் பேசியதில் கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது.

ஜி.டி நாயுடு, தான் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர் என்பதற்கு, ஓர் எடுத்துக்காட்டை முன் வைத்தார். அவர், பலமுறை வெளிநாடு சென்று வந்திருக்கிறார். அப்படி ஒரு முறை சென்று வந்த பொழுது, மேஜையறையில், ஒரு கைத் துப்பாக்கி இருந்திருக்கிறது. அதை சோதித்துப் பார்க்க எண்ணியவர், வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த ஒவ்வொரு வாழை மரத்தையும் துப்பாக்கியால் சுட்டு துளையிட்டு இருக்கிறார். பிறகு, ஒரு மரத்தின் துளையில் ரசாயன உரம்; ஒரு மரத்தின் துளையில் ரம்பத் தூள்; ஒரு மரத்தின் துளையில் களிமண்; ஒரு மரத்தின் துளையில் மாட்டுச் சாணம் என வைத்து, அனைத்து மரங்களின் துளைகளையும் அடைத்திருக்கிறார். அதன் பிறகு மரங்களின் வளர்ச்சியை கண்காணித்து வந்திருக்கிறார். ஆனால், மரங்களின் வளர்ச்சி பற்றிய முடிவை அவர் யாரிடமும் சொல்லவில்லை.''விஞ்ஞானிகள், கேட்டு அறிபவர்களாக இருக்கக் கூடாது; சோதித்து அறிபவர்களாக இருக்க வேண்டும்'' என்பதுதான் அந்த விஞ்ஞானி ஜி.டி நாயுடுவின் கருத்து.

மனிதர்களுடைய புரதத் தேவையைப் பெருமளவில் நிறைவு செய்யும் துவரை, இந்தியாவில் மிக முக்கியமான உணவு. இது, பெரும்பாலும் மானாவாரியாகத்தான் விளைவிக்கப்படுகிறது. அதனால், மழை தப்பும் காலங்களில் விளைச்சல் சரிந்துவிடும். அப்போது துவரை இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலை உயர்ந்து விடும். அதை யோசித்துப் பார்த்த ஜி.டி நாயுடு, ஒரு துவரை மரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். 'செடியாக இருந்தால்தானே மழையை எதிர்பார்த்து விதைக்க வேண்டும். அதை மரமாக்கி விட்டால், மழையில்லா விட்டால் விளைச்சல் குறையும், மற்றபடி மரம் அழியாது’ என்பது நாயுடுவின் கருத்து. பல உழவர்களது நிலங்களில் வரப்பு ஓரங்களில் 'ஜி.டி. நாயுடு துவரை’ குடியேறியிருந்தது.

எங்கள் கல்லூரி மாணவர்கள் கல்விச்சுற்றுலா போயிருந்தபோது, கோவையில் ஜி.டி.நாயுடு விடுதியில் தங்குகிற வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொழில்கூடத்தின் வளாகம் முழுவதும் தூய்மை பராமரிக்கப்பட்டது. பல இடங்களிலும் சுவர்களில் பல அறிவிப்புகள் 'பளிச்’ என தென்பட்டன.

'குப்பைத் தொட்டி தவிர, தரையில் குப்பையைப் போடுபவர்கள் ஒரு வாரம் முழுவதும் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும்’ என்பது ஓர் அறிவிப்பு.

அடுத்த அறிவிப்பு 'பி.ஏ. படிப்புக்கு நான்காண்டு காலம் எதற்காக? இளமையைப் பறிகொடுத்து, பெற்றோர் பணத்தைச் செலவழித்து, கல்லூரி செல்பவனுக்கு விடுமுறை எதற்காக? நான்காண்டு படிப்பை என்னால் பதினெட்டு மாதங்களில் கற்றுக் கொடுக்க முடியும்’ என்பது. 'எல்லோருக்கும் கல்வி’ என்று அடிக்கடி பேசுபவர்கள் இந்தக் கருத்தை கவனிக்கத் தவறியது இந்தியாவின் துயரம் மிகுந்த அத்தியாயம் ஆகும்.

ஜி.டி. நாயுடு...

பெற்றோர்களுக்கான ஓர் அறிவிப்பும் இருந்தது. 'இந்த நாட்டில் இளைஞர்களைக் கெடுப்பவை... சினிமா, பத்திரிகைகள், அரசியல், பெற்றோர்கள் ஆகிய நான்கும்தான்’ குழந்தை பிறப்பதற்கு முன்னரே அயல்நாட்டுக்கு அனுப்ப கனவு காணும் பெற்றோர்களுக்கானது இந்த வாசகம்.

தொழில்கூடத்தின் எந்த மூலைக்குப் போய் திரும்பினாலும், மூன்றடி நீளம் ஒன்றறை அடி அகலம் உள்ள ஒரு அட்டை தென்படும். அதன் மேல் பகுதியில் ஒரு தேய்ந்து போன செருப்பு கட்டப்பட்டிருக்கும். செருப்பின் கீழேயுள்ள வசனம் இது. 'அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாது போனால், இருபத்தைந்து ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’ இது பார்ப்போரின் மனதில் ஒரு ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. ஒழுக்கம், கட்டுப்பாடு பற்றியெல்லாம் பேசுபவர்கள், இக்கருத்தாக்கத்தை சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.

அந்த விடுதியின் சமையலறையில் உரையாடியபோது, ஓர் உண்மை வெளிப்பட்டது. சமையல் கூடத்தில் வேலை செய்பவர்களை வேலையில் சேர்க்கும்பொழுது எடை பார்த்து குறித்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து எடை பார்ப்பார்களாம். எப்பொழுதாவது ஒருவரின் எடை கூடினால், அவரை உடனே வீட்டுக்கு அனுப்பி விடுவார்களாம். ஜி.டி. நாயுடுவின் மூளை இப்பொழுது ஓரளவு புரிந்திருக்கும் என்று கருதுகிறேன். ஜி.டி. நாயுடுவின் மூளையை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டதுதான் உண்மை.

-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு