Published:Updated:

அசோலா எனும் அமுதம்... அனைவருக்கும் வேணும்...

பள்ளி மாணவர்களின் பலே பிரசாரம்! சு.ராம்குமார்

பிரீமியம் ஸ்டோரி

 இயற்கை

##~##

சிவகங்கை மாவட்ட சுற்று வட்டாரத்தில் நடக்கும் எந்த அறிவியல் கண்காட்சியாக இருந்தாலும்... அதில், 'அசோலா’ எனும் 'உயிரி உரப் பாசி’ கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அதை, காட்சிக்கு வைப்பவர்கள், காரைக்குடியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள். இப்பள்ளியில் படிக்கும் அனைவருமே அசோலா மற்றும் அதன் பயன்பாடு பற்றிய விவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு மாணவர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வைத்திருப்பவர், பள்ளியின் அறிவியல் ஆசிரியர், செந்தில்குமார். இந்த மாணவர்களைக் கொண்டே சுற்று வட்டார விவசாயிகளுக்கும் அசோலாவைப் பரப்பி வருகிறார், இவர்.

''மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் வந்து சேர்ந்திருப்பதற்கும்... பூமி வளம் குன்றிக் கொண்டே இருப்பதற்கும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதுதான் காரணம். ரசாயனங்களின் தீமைகளைக் கண்கூடாகப் பார்த்தும், அவற்றைப் பயன்படுத்துவது மட்டும் குறைந்தபாடில்லை. அடுத்தத் தலைமுறையாவது விஷத்தைக் கைவிட்டு... பூமியைக் காப்பாற்றும் விஷயத்தைக் கையில் எடுக்கட்டும் என்றுதான் மாணவர்களுக்கு இயற்கை உரங்கள் பற்றியும் அசோலா பற்றியும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.

அசோலா எனும் அமுதம்... அனைவருக்கும் வேணும்...

வகுப்பில் ஒரு நாள் மாணவர்களிடம் இயற்கை உரங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது... பெரும்பாலான மாணவர்கள் உயிர் உரங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அதனால்தான், பள்ளியிலேயே அசோலாவை வளர்க்க ஆரம்பித்தேன். அதைப்பற்றி மாணவர்களுக்குத் தெளிவான புரிதலை ஏற்படுத்தி, அவர்களைக் கொண்டே தேசிய அறிவியல் மாநாட்டில் அசோலா பற்றிய ப்ராஜெக்டையும் சமர்ப்பிக்க வைத்தேன். அதைப் பலரும் பாராட்டினர்'' என்று பெருமையோடு பேசும் செந்தில்குமார், தொடர்ந்தார்.

''அசோலா அருமையான இயற்கை உரம். இது இந்தோனேஷியாவில் இருந்துதான் வந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. 'கொசுபரனிச்செடி’, 'பச்சைப்போர்வை’, 'தண்ணீர் பட்டு’... எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு நம் முன்னோர்கள் உயிர் உரமாகப் பயன்படுத்தியதுதான் அசோலா. ஆனால், காலப்போக்கில் அது வழக்கொழிந்து விட்டது.

நெல் வயலில், பயன்படுத்தும்போது காற்றில் இருந்து நைட்ரஜனை உறிஞ்சி, நெல்லுக்கு இது கொடுத்து விடுகிறது. அதனால், யூரியாவை இட வேண்டிய அவசியமே இருக்காது. இது நிறைய விவசாயிகளுக்குக்கூட தெரிவதில்லை. அதனால், மாணவர்களை வைத்தே விவசாயிகளுக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

அசோலா எனும் அமுதம்... அனைவருக்கும் வேணும்...

நாற்றங்கால் அமைக்கும்போதே 4 சென்ட் நிலத்தில் அசோலா வளர்ப்பையும் தொடங்கி விட்டால்,

அசோலா எனும் அமுதம்... அனைவருக்கும் வேணும்...

20 நாட்களில் ஒரு ஏக்கருக்குத் தேவையான அசோலா கிடைத்து விடும். இதனால், பெருமளவு உரச் செலவை மிச்சப்படுத்த முடியும். வயலில் களைகளையும் கட்டுப்படுத்த முடியும்'' என்ற செந்தில்குமார்,

'எங்கள் மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளி மாணவர்களுக்கும் இதைப்பற்றி எங்கள் மாணவர்கள் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். சுற்று வட்டாரத்தில் நடக்கும் அனைத்துக் கண்காட்சிகளுக்கும் அசோலாவைக் கொண்டு போய் விடுவோம். எங்களுக்குப் பரிசு முக்கியமல்ல. இந்த அமிர்தத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். கேட்டு வரும் விவசாயிகளுக்கு எங்கள் பள்ளியின் சார்பாக இலவசமாகவே அசோலாவைக் கொடுத்து வளர்ப்பு முறைகளையும் சொல்லிக் கொடுத்து வருகிறோம். தேவையானவர்கள் எங்களை தொடர்புகொள்ளலாம்'' என்று அனைவருக்கும் அழைப்பு வைத்தார்!

தொடர்புக்கு,
செந்தில்குமார்,
செல்போன்: 99946-65901

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு