Published:Updated:

தென்னைக்கு நடுவே, தேக்கு... சரியா... தவறா...?!

அனுபவ விவசாயிகளின் அற்புத அலசல்! ஆர். குமரேசன் படங்கள்: வீ. சக்தி.அருணகிரி

பிரீமியம் ஸ்டோரி
##~##

''தென்னைக்கு நடுவே பலவிதமான ஊடுபயிர்களைச் செய்யலாம். ஆனால், மரங்களை வளர்க்கும்போது எலித்தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் எனது தோப்பில் அதிகளவு மகசூல் இழப்பு ஏற்பட்டது. இதை மற்ற விவசாயிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்''

இப்படியரு வேண்டுகோளுடன் நம்மைத் தொடர்பு கொண்டார், தேனி மாவட்டம், உத்தமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் ரமணன். இவர், உத்தமப்பாளையம், 'ஹாஜி ஹெளதியா கருத்த ராவுத்தர் கல்லூரி’யின் பொருளாதாரத் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர். கூடவே... விவசாயத்தை, விடாமல் செய்து வருகிறார்.

அம்மாப்பட்டியில் இருக்கிறது ரமணனின் தென்னந்தோப்பு. மழை நேரத்து மாலைவேளையன்றில் அங்கே அவரைச் சந்தித்தபோது, தோப்பில் ஓரமாக இருந்த தென்னை மரங்களுக்கு அருகே அதிகளவில் குரும்பைகள் கொட்டிக் கிடந்ததைச் சுட்டிக்காட்டியவராகப் பேச்சை ஆரம்பித்தவர்,

''மொத்தம் 15 ஏக்கர் பூமி. இதுல இருக்கற தென்னை மரங்களுக்கு 30 வயசாகுது. மரத்துக்கு மரம் 25 அடி இடைவெளி இருக்கு. முழுக்க சொட்டுநீர்ப் பாசனம்தான். பக்கத்துலயும் தென்னந்தோப்புதான் இருக்கு. அந்தத் தோப்பு ஓரத்துல இருக்கற தென்னைக்கும், எங்க தோப்புல ஓரமா இருக்கற தென்னைக்கும் இடையில 30 அடி இடைவெளி இருக்கு. நடுவுல வரப்பும் இருக்கு. அந்த வரப்புல 15 வருஷத்துக்கு முன்ன எங்கப்பா தேக்கு மரங்களை நட்டு வெச்சாரு. அதுவும் நல்லா ஊக்கமா வளந்தது. தேக்கு மரங்களோட கிளைகள் தென்னைமட்டையோட உரசற அளவுக்கு வளந்துடுச்சு.

தென்னைக்கு நடுவே, தேக்கு... சரியா... தவறா...?!

இந்த நிலையில, தேக்கை ஒட்டியிருந்த தென்னை மரங்கள்ல இருந்து அதிகமா குரும்பை கொட்ட ஆரம்பிச்சுச்சு. அதனால, சரியான விளைச்சலும் இல்லை. பக்கத்து தோப்புல வரப்போரமா இருந்த தென்னை மரங்களுக்கும் இதே பிரச்னை. அதேசமயம்... தோப்புக்குள்ள இருக்கற மத்த மரங்கள்ல இந்த அளவுக்குக் குரும்பை கொட்டல. மகசூலும் நல்லா இருந்தது. நண்பர் ஒருத்தரை அழைச்சுட்டு வந்து காட்டி, காரணம் கேட்டேன். அவர்தான், 'இது முழுக்க எலியோட வேலை. தென்னையில எலி கஷ்டப்பட்டுதான் ஏறணும். ஆனா, தேக்குல எலி, அணில்லாம் சுலபமா ஏறிடும். அப்படியே தென்னைக்குத் தாவி சாப்பிடுறதாலதான் குரும்பை கொட்டுது’னு சொன்னார். உடனே, அந்த தேக்கு மரங்களை வெட்டி எடுத்துட்டேன். அதுக்குப்பிறகு குரும்பை கொட்டுறது நின்னுடுச்சு.

அதனால, தென்னைக்குப் பக்கத்துல தேக்கு மாதிரியான மரங்கள் இருந்தா... எலி சுலபமா ஏறிடுதுங்கிறது என் அனுபவத்துல பாத்த உண்மை. இதை மத்த விவசாயிகளும் தெரிஞ்சுகிட்டா நல்லதுனு நினைச்சேன். அதனாலதான் 'பசுமை விகடனை’க் கூப்பிட்டேன்'' என்று சொன்னார், ரமணன்.

எலிகளைக் கட்டுப்படுத்த வழி இருக்கு !

ரமணன் சொன்ன விஷயத்தை, தென்னந் தோப்புக்குள் அதிகளவு மரங்களை வளர்த்து வரும் காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணியிடம் சொன்னோம்.

தென்னைக்கு நடுவே, தேக்கு... சரியா... தவறா...?!

''தென்னைக்கு இடையில் தேக்கு மரம் வளர்ப்பதால், எலித்தொல்லை ஏற்பட்டு குரும்பை கொட்டுவதாகச் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. எலியைப் போல, இரவு நேரங்களில் தென்னையில் ஏறி இளம் காய்களை ஓட்டை போட்டு தண்ணீரை குடித்துச் செல்லும் மர நாய்களும் இருக்கின்றன. அதனுடைய வேலையாகக்கூட இருக்கலாம். இந்த மர நாய்களைக் கட்டுப்படுத்த சில பகுதிகளில் தென்னையின் அடிப்பகுதியில் வெள்ளை அல்லது கறுப்பு வண்ணத்தைப் பூசி வைத்தால், போதும். அதேபோல எலித் தொல்லையைக் கட்டுப்படுத்த தற்போது பத்து ரூபாய்க்கு தரமான எலிக்கொல்லி 'கேக்’குகள் கடைகளில் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்தி எலிகளை அழிக்கலாம். அதற்காக, மற்ற மரங்களை வெட்ட வேண்டியதில்லை. குரும்பை உதிர்வதற்குச் சொல்லப்படும் பல காரணங்களில், தேக்கு போன்ற மரங்களும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர, அதுதான் முக்கிய காரணம் என்பது சரியல்ல'' என்கிறார், மாசிலாமணி.

தென்னையை விட உயரமான பயிர் வேண்டாம் !

இவரைப் போலவே தென்னைக்குள் அதிகளவு மரங்களை வளர்த்து வருபவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த மது. ராமகிருஷ்ணன். அவரிடம் இதே விஷயத்தைக் கேட்டபோது... ''தென்னைக்கு அருகில் தேக்கு மரத்தை சாகுபடி செய்யும்போது இரண்டுக்கும் சரியான அளவில் பாசனமும், பக்குவமும் செய்ய வேண்டும். தென்னைக்கான தண்ணீரை தேக்கோ... அல்லது தேக்கின் தண்ணீரை தென்னையோ எடுத்துக்கொண்டாலும், குரும்பை கொட்டும். தென்னையில் ஊடுபயிர் செய்யும் போது தென்னையைவிட உயரம் குறைவான பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது இதைப் போன்ற பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

தென்னைக்கு அதிக சூரிய ஒளி தேவை. எனவே, தென்னந்தோப்பில் பாக்கு, வாழை, கோகோ, வெணிலா போன்ற 50% சூரிய ஒளி தேவைப்படும் பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும். தேக்கு மரமானது, தென்னையை போலவே 100% சூரிய ஒளி தேவைப்படும் பயிர். அதனால் இரண்டில் ஒன்றின் வளர்ச்சி கண்டிப்பாக தடைபடும். அதில்லாமல் தென்னையை உரசும்படி தேக்கோ மற்ற மரங்களோ இருக்கும்போது, காற்றோட்டக் குறைவால் மகரந்தச் சேர்க்கையும் தடை படும். அதனாலும், மகசூல் குறைய வாய்ப்புகள் உள்ளன. ரமணன் தேக்கு மரங்களை வெட்டிய பிறகு காற்றோட்டம் சீராகி மகரந்தச் சேர்க்கையும் சீராகியிருக்கலாம்'' என சில கூடுதல் விவரங்களைச் சொன்னார், மது. ராமகிருஷ்ணன்.

தொடர்புக்கு,
பேரா. ரமணன், செல்போன்: 98948-37007
மாசிலாமணி, செல்போன்: 94436-38545
மது. ராமகிருஷ்ணன், செல்போன்: 94424-16543

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு