Published:Updated:

வாழ்க மரம்... வளர்க பணம் !

வாழ்க மரம்... வளர்க பணம் !

வாழ்க மரம்... வளர்க பணம் !

'வாரும் வள்ளுவரே
மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால், அவ்வளவு மட்டமா?
வணக்கம், ஒளவையே
நீட்டோலை வாசியான் யார் என்றீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால், அத்தனை இழிவா?
பக்கத்தில் யாரது பாரதிதானே?
பாஞ்சாலி மீட்காத  பாமரரை என்ன வென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்!
மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா?
மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
பூமியின் ஆச்சர்யகுறி!
பிறந்தோம்...
தொட்டில், மரத்தின் உபயம்,
நடந்தோம்...

வாழ்க மரம்... வளர்க பணம் !

நடைவண்டி, மரத்தின் உபயம்,
எழுதினோம்...
பென்சில்- பலகை, மரத்தின் உபயம்,
மணந்தோம்...
மாலை-சந்தனம், மரத்தின் உபயம்,
கலந்தோம்...
கட்டில் என்பது மரத்தின் உபயம்,
துயின்றோம்...
தலையணை பஞ்சு, மரத்தின் உபயம்,
நடந்தோம்...
பாதுகை ரப்பர், மரத்தின் உபயம்,
இறந்தோம்...
சவப்பெட்டி, பாடை, மரத்தின் உபயம்,
எரிந்தோம்...
சுடலை விறகு, மரத்தின் உபயம்,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,
மனிதா மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா... ஒவ்வொரு மரமும் போதி மரம்!!

-வைரமுத்து

வனவளம்தான், பூமியையும்... அதில் வாழும் உயிர்களையும் வளமாக வாழ வைக்கக்கூடியது. மழைநீரும், ஊற்றுநீரும் மலைகளின்மீது வழிந்தோடும்போது, அங்குள்ள காடுகள் அந்த நீரை பஞ்சு போல உறிஞ்சி வைத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றும், அப்படி வெளியேறும் நீர், ஆற்றில் கலந்து காட்டையும் நாட்டையும் வளப்படுத்தும்!

வாழ்க மரம்... வளர்க பணம் !

மனிதர்கள், விலங்குகள், பறவைகள், நெடிய மரங்கள், புல் பூண்டுகள், மூலிகைகள் இன்னும் பல்லாயிரம் உயிரினங்களின் உறைவிடமாக இருப்பவை காடுகளே! அவற்றின் அருமை தெரியாமல் கண்மூடித்தனமாக அழித்து, இயற்கைச் சமநிலையை சாகடித்து, இஷ்டம் போல் இயற்கையை இம்சை செய்ததன் விளைவை, 'புவிவெப்பம் அதிகரிப்பு' (குளோபல் வாமிங்) என்பதாக தற்போதுதான் உணரத் தொடங்கியுள்ளான் மனிதன்.

இதிலிருந்து தப்பிக்க மரம் வளர்ப்பதுதான் தலைசிறந்த வழி என உலக நாடுகள் உரக்கச் சொல்லத் தொடங்கியுள்ளன. அங்கிங்கெனாதபடி... எங்கெங்கும் மரம் வளர்ப்பது ஒன்றுதான் சிறந்த வழி. குறைந்தபட்சம் ஆளுக்கு ஒரு மரம் வளர்த்தால் கூட, நூறு கோடிக்கும் அதிகமான மரங்களை வளர்த்துவிட முடியுமே!

இந்த பூமிபந்துக்கு விருந்தினர்களாக வந்து சேர்ந்தவர்கள்தான் நாம் என்பதை மறந்துவிடக்கூடாது. நாளைக்கும் பூமி இருக்கும்... நாம்? இன்றுவரை எப்படி சுகமாக பூமியின் அற்புதங்களை, ஆச்சரியங்களை அனுபவித்தோமோ... அதை அப்படியே நாளை வரவிருக்கும் விருந்தினர்களும் அனுபவிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது நமது கடமையல்லவா!

மரங்களை வளர்ப்பது, இத்தகைய சமூகக் கடமைக்காகத்தான் என்பதைக்கூட விட்டுத் தள்ளுங்கள்! இன்றையச் சூழலில் வருமானத்துக்கான அற்புதமான ஒரு வழி என்பதை மனதில் ஏற்றுங்கள்!

இன்றைக்கு பல்வேறு பிரச்னைகளால் இக்கட்டில் சிக்கி தவிக்கிறது விவசாயம்; அதன் காரணமாகவே அதை விட்டு விலக நினைக்கிறார்கள் விவசாயிகள். இவர்களுக்கு நம்பிக்கை தரும் மாற்று வழி, ரியல் எஸ்டேட் எனப்படும் நிலவிற்பனைதான்.

'கிடைத்த காசுக்கு விற்றுவிட்டு வங்கியில் போட்டு வைத்தால், வட்டியை வாங்கியே சாப்பிடலாம்' என்பதும் உண்மைதான். ஆனால், இதைவிட அதிக அளவில் காசு காய்த்துக் கொட்டுவதற்கும் வழி இருக்கும்போது, அதை ஏன் நாம் கையில் எடுக்கக் கூடாது? முதிர்ந்த மரங்களை வெட்டி விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை... ரியல்எஸ்டேட் வட்டிக் கணக்குகளை எல்லாம் வெட்டித் தள்ளும் உச்சபட்ச கணக்கு! அதுமட்டுமா... மரம் வெளியிடும் காற்றும்கூட இன்று 'கார்பன் டிரேடிங்’ என்ற பெயரில் வியாபாரமாகிவிட்டது.

உங்கள் மரங்களிலிருக்கும் பழங்களைத் தேடி வந்து தங்கும் பறவைகள் தரும் பலன் தெரியும்தானே! விவசாயத்துக்கு வில்லனாக இருக்கும் புழு, பூச்சிகளைப் பிடித்து தின்பதுடன், எச்சங்களை மண்ணுக்கு உரமாக இட்டும் செல்லும் பறவைகளுக்கு இணையாக யாருண்டு? இதைத்தான், 'மாடு இல்லாத விவசாயமும், மரம் இல்லாத தோட்டமும் பாழ்’ என்றது நம் முன்னோர்களின் அனுபவ அறிவு.

சரி, விஷயத்துக்கு வருவோம்... விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் என்ற பெயரில் தரிசாகப் போட்டு வைப்பதைவிட, மரங்களை நட்டு வளருங்கள். அதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் தமிழ்நாடு அரசின் வனவிரிவாக்கத் துறை செய்து கொடுக்கிறது.

வரப்பு, வாய்க்கால், மேடு, பள்ளம், மானாவாரி என ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற மர வகைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றை பற்றியும் தொடர்ந்து விரிவாக பார்ப்போம். இதுமட்டுமா... பயன் பெற்ற விவசாயிகளின் அனுபவங்கள், மரங்களின் மதிப்பு சொல்லும் வியாபாரிகளின் தேவைகள், 'கார்பன் டிரேடிங்' எனும் சந்தைக்குள் நுழையும் வழிமுறைகள் என்று அத்தனையையும் அலசுவோம்... தொடர்ந்து இணைந்திருங்கள்!

இரா. ராஜசேகரன்

இரா. ராஜசேகரனைப் பற்றி...

 

இரா. ராஜசேகரன்... பி.எஸ்.சி, பி.எட்., வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.

காரைக்குடி அழகப்பா பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்த ராஜசேகரன், பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார். அதையடுத்து, கோயம்புத்துர் வனச்சரக கல்லூரியில் வனச்சரகர் பயிற்சி பெற்றார். தற்போது மதுரை, வனவிரிவாக்க அலுவலராக பணியாற்றி வருகிறார்.

வன மேலாண்மையில் தன்னுடைய சிறப்பான பணிகளுக்காக, 2010-11 ம் ஆண்டின் முதலமைச்சர் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐம்பது ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நன்மைகளை நமக்குச் செய்கிறது!

அது தரும் உணவுப் பொருட்களின் மதிப்பு ரூ 10 லட்சம்!

அது வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ. 5.30 லட்சம்!

அது தடுத்து நிறுத்தும் மண் அரிப்பின் மதிப்பு ரூ. 6.40 லட்சம்!

அது சுத்தப்படுத்தும் காற்று மாசுக்கான மதிப்பு ரூ. 10.30 லட்சம்!

அடுத்த கட்டுரைக்கு