Published:Updated:

வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்...

மரங்களோடு கூட்டணி போடும் கரும்பு! காசி. வேம்பையன் , படங்கள்: பா. கந்தகுமார்

 ##~##

ஒருகாலத்தில், பச்சைக் கம்பளம் விரித்தது போல பயிர்கள் காட்சி அளித்த நிலங்களில் எல்லாம்... இன்று விலையின்மை... விளைச்சலின்மை...  என பலவிதமானப் பிரச்னைகள்தான் அதிகமாக முளைத்துக் கிடக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க நினைப்பவர்களின் ஒரே தேர்வு... மரப்பயிர்கள்! இப்படி மாறிவிட்டால், 'பிரச்னை தீர்ந்தது' என்று நின்றுவிடாமல், அதிலும் சிலபல வித்தைகளைக் கையாண்டு... லாபம் பார்க்கும் விஞ்ஞானி விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்... திருவண்ணாமலை மாவட்டம், சேந்தமங்கலம், ராஜமாணிக்கம் போல. இவர், மரங்களுக்கிடையில் கரும்பை ஊடுபயிராகப் பயிரிட்டு நல்ல வருமானம் பார்த்து வருகிறார்!

திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில், பதினைந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது பெரியகுளம். இங்கிருந்து இடதுபுறம் திரும்பி, ஐந்து கிலோ மீட்டர் பயணித்தால்... சேந்தமங்கலம். மாலை வேளையன்றில் அங்கு சென்றபோது, வறண்டு கிடக்கும் பூமியில் வானம் பார்த்து நிற்கும் மரங்களுக்கும், அவற்றுடன் கொஞ்சிப் பேசும் கரும்புகளுக்கும் இடையில் நின்றபடி நம்மை வரவேற்றார் ராஜமாணிக்கம்!

வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்...

''சொந்த ஊர், இதே மாவட்டத்துல இருக்கற சிட்டம்பட்டு. எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சுட்டு, கிருஷ்ணகிரியில ரெண்டு வருஷம் 'கிராம சேவக்’ பயிற்சி எடுத்துக்கிட்டு, அரசாங்க வேலையில சேர்ந்தேன். அடுத்தடுத்து கிடைச்ச பதவி உயர்வுல வட்டார வளர்ச்சி அலுவலரா இருந்து 2004-ம் வருஷம் 'ரிட்டையர்டு’ ஆனேன். அதுக்குப் பிறகு, நாலு வருஷம் 'வளர்கல்வி இயக்க'த்துல தற்காலிகமா வேலை பார்த்தேன். அந்த வேலை பாத்துகிட்டே சேந்தமங்கலத்துல மாமனார் சீதனமா கொடுத்த 5 ஏக்கர், 40 சென்ட் நிலத்துல விவசாயத்தை ஆரம்பிச்சேன்.

இது மானாவாரி பூமி. வருஷத்துக்கு ஒரு தடவை கடலை மட்டும் போட்டு எடுப்போம். நாலு வருஷத்துக்கு முன்ன அதுல போர் போட்டு, 2 ஏக்கர்ல பி.எல்.ஆர்.-1 ரக பலாவுல 300 செடிகளை நட்டு விட்டேன். வறட்சி தாங்காம 150 செடிகள் பட்டுப்போச்சு. அப்பறம், கிணறு வெட்டி சைடு போர் போட்டதுல ஓரளவுக்கு தண்ணி கிடைச்சது. ரெண்டு வருஷத்துக்கு முன்ன ஒரு ஏக்கர்ல நெல்லியை வெச்சுட்டு... ரெண்டு ஏக்கர்ல... 450 குமிழ்; 190 மலைவேம்பு;  வீட்டுத் தேவைக்காக ஓரப்பகுதியில 12 சப்போட்டா; 5 எலுமிச்சை; 2 மா, 25 வாழைனு வெச்சேன். வறட்சி தாங்காம 100 குமிழும், 40 மலைவேம்பும் பட்டுப்போச்சு. மீதி செடிகள் வளர்ந்துடுச்சு. அப்பப்போ நெல் சாகுபடியும் பண்ணுவேன். பசுமை விகடனைப் பார்த்து, இயற்கை முறையில ஒரு ஏக்கர்ல கோ.ஆர்.ஹெச்.-4 ரக நெல்லை சாகுபடி செஞ்சேன். அதுல 37 மூட்டை (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சது.

வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்...

மரக்கன்னுகளுக்கு இடையில நிறைய இடம் சும்மா இருந்ததால... மரவள்ளி, முலாம்பழம்னு இயற்கை முறையில சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். எல்லாம் நல்லா வந்தது. அதுக்கு அடுத்து... சோதனை முயற்சியா மரங்களுக்கு இடையில  ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கரும்பை நட்டேன். வேலைக்கு சரியா ஆட்கள் கிடைக்காததால... இயற்கை விவசாயம் செய்ய முடியல. கரும்புக்கு ரசாயன உரம்தான் போட்டேன். சர்க்கரை ஆலை மூலமா 'சிறுகமணி-8’ங்கிற கரும்பு ரகத்தைத்தான் பயிர் செஞ்சேன். முதல் தடவை ஏழு மாசத்து கரணையா அறுவடை செஞ்சி, ஆலைக்குக் கொடுத்தேன். அதுல ஏக்கருக்கு 50 டன் மகசூல் கிடைச்சுது. அடுத்து, ஐந்து மாசத்துல திரும்பவும் கரணையா வெட்டி ஆலைக்குக் கொடுத்தேன். அதுல ஏக்கருக்கு 30 டன் அளவுக்குக் கிடைச்சது. இப்போ ஏழு மாசம் வளந்த கரும்பு இருக்குது. இன்னும் நாலு மாசத்துல கரணைகளா வெட்டி ஆலைக்கு அனுப்பிடலாம்'' என்று முன்னுரை கொடுத்த ராஜமாணிக்கம், மரம் கரும்பு சாகுபடி செய்யும் வித்தையைச் சொல்ல ஆரம்பித்தார்.

18 அடிக்கு ஒரு பலா!

'மர சாகுபடி செய்ய... களைகள் நீங்கும் அளவுக்கு உழவு செய்து கொள்ள வேண்டும். பி.எல்.ஆர்.-1 ரக பலா செடிகளுக்கு 18 அடி இடைவெளி தேவை. ஒன்றரை கன அடியில் குழி எடுத்து, நட வேண்டும். குமிழ் மற்றும் மலைவேம்புக் கன்றுகளுக்கு 10 அடி இடைவெளி தேவை. ஒரு கன அடியில் குழி எடுத்து நடவேண்டும். குழிகள் எடுத்த பிறகு, 20 நாட்கள் ஆறப்போட்டு... ஒவ்வொரு குழியிலும் அரை கூடை எரு, ஒரு கூடை செம்மண் (இவருடைய நிலத்தின் மண், இருமண் பாங்காக இருப்பதால்... செம்மண் பயன்படுத்தியுள்ளார்) மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியை நிரப்பி... பலா செடிகளின் ஒட்டுப்பகுதி, குழியிலிருந்து அரையடிக்கு மேல் இருப்பது போன்றும், மற்ற செடிகளை சாதாரணமாகவும் நடவு செய்ய வேண்டும். 15 நாட்கள் வரை ஒரு நாள் விட்டு, ஒரு நாள் வீதம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்குமேல், மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து பாய்ச்சினால் போதுமானது.

வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்...

இடைவெளி... கவனம்!

பலா மரங்களில் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலும்; குமிழ் மற்றும் மலைவேம்பு மரங்களில் ஒரு ஆண்டு வரையிலும்... முலாம் பழம், காய்கறிகள், சிறுதானியங்கள்... என ஏதாவது பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். அதற்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு கரும்பு சாகுபடி செய்யலாம். மரங்களுக்கிடையில் களை நீங்கும் அளவுக்கு உழவு செய்த பிறகு, ஏக்கருக்கு 15 டன் எரு என்கிற கணக்கில் இறைத்து, உழவு செய்ய வேண்டும். பலா மரங்களுக்கு இடையில் ஆறு அடி இடைவெளியில், முக்கால் அடி அளவில் பார் ஓட்டி, மண் அணைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, ஒரு டன் பயோ-கம்போஸ்ட் (சர்க்கரை ஆலைக் கழிவில் தயாரித்தது),

50 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 120 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 250 கிலோ சூப்பர்-பாஸ்பேட் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, பாரில் அடியுரமாக இட்டு... இருபருக் கரணைகளை, அரையடிக்கு ஒன்று வீதம் ஒரு பாரின் இரண்டு பக்கமும் நடவு செய்ய வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் கரணைகள் தேவைப்படும். சாதரணமாக கரும்பு சாகுபடி செய்யும்போது, ஏக்கருக்கு 20 ஆயிரம் கரணைகள் தேவைப்படும்.

10 அடி இடையில் குமிழ், மலைவேம்பு!

குமிழ் மற்றும் மலைவேம்புச் செடிகளை 10 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இந்த மரங்களுக்கு இடையில் ஐந்தடி இடைவெளியில் முக்கால் அடி பார் ஓட்டி மண் அணைக்க  வேண்டும். பலா மரங்களுக்கு இடையில் இட்ட அதே அளவுக்கு அடியுரம் கொடுத்து, பாரின் மையத்தில் ஒருபருக் கரணைகளை அரையடிக்கு ஒன்று வீதம் நடவு செய்ய வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் விதைக் கரணைகள் தேவைப்படும். விதைக்கும் முன்பாக, கரணைகளை 100 லிட்டர் தண்ணீருக்கு, 5 கிலோ சாணம், 200 மில்லி பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகியவை கலந்த கரைசலில் விதைநேர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.  

வாரம் ஒரு முறை உரம்!

நடவு செய்த 15-ம் நாளுக்கு மேல் முளைப்பு எடுக்கத் தொடங்கும். அந்த சமயத்தில் 50 சென்டி மீட்டருக்கு ஓரிடத்தில் சொட்டுவது போல, சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வேண்டும். தினம் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் பாசனம் செய்தால், போதுமானது. 15-ம் நாள் முதல், வாரம் ஒரு முறை வீதம் ஏழு மாதம் வரையும், பரிந்துரைக்கும் அளவுக்கு உரம் இட வேண்டும்.

பூச்சிக்கு இனக்கவர்ச்சிப் பொறி!

40 மற்றும் 70-ம் நாட்களில் களை எடுத்து மண் அணைத்துவிட வேண்டும். 150-ம் நாளில், மேல் பகுதியில் இருந்து 7 தோகைகளை விட்டுவிட்டு, மீதி தோகைகளை உறித்து மூடாக்குப் போட வேண்டும். இதன் மூலம் குருத்துப்பூச்சித் தாக்குதல் குறைவாகவும், கரும்பு வளர்ச்சி நன்றாகவும் இருக்கும்.

வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்...

150-ம் நாளில் இருந்து, ஒரு ஏக்கருக்கு 5 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து, தாய் அந்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். கவர்ச்சி திரவம் அடங்கிய 'டியூபை’ 25 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை, ஏக்கருக்கு 24 அட்டைகள் என்கிற கணக்கில் 'ட்ரைக்கோகிரமா’ ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குருத்துப்பூச்சி, இடைக்கணுப் புழு, மாவுப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதலைக் குறைக்கலாம்.

பலா, ஐந்தாம் ஆண்டில் காய்க்கத் துவங்கும். ஏழாம் ஆண்டு முதல் முழு மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு மரத்தில் இருந்தும் சராசரியாக 50 பழங்கள் வீதம் கிடைக்கும். குமிழ் மற்றும் மலைவேம்பு மரங்களை ஏழு முதல் 10 ஆண்டுகளில் வெட்டி விற்பனை செய்யலாம். கரும்பை முதல் ஆண்டு 11 மாதத்திலும், மறுதாம்புக் கரும்புகளை 10 மாதங்களிலும் வெட்டலாம்.'

ஒரு ஏக்கரில் 1,20,000 ரூபாய்!

சாகுபடிப் பாடம் முடித்த ராஜமாணிக்கம், ''பலா முழு காய்ப்புக்கு வந்ததும், ஒரு மரத்துல இருந்து சராசரியா 50 பழம் வரைக்கும் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல இருக்கற 100 மரங்கள் மூலமா 5 ஆயிரம் பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 50 ரூபாய்னு விற்பனை செய்தாலே... 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். ஒரு லட்ச ரூபாய் செலவுனு வெச்சுக்கிட்டாலும்... பலா மூலமாவே ஒவ்வொரு வருஷமும் ஏக்கருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் லாபமா கிடைக்கும்.

குமிழ், மலைவேம்பு மரங்களை ஒரு மரம் 2 ஆயிரம் ரூபாய்னு வித்தாலும்... 430 மரங்களுக்கு 8 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல 1 லட்சத்து,

60 ஆயிரம் ரூபாய் செலவுனு வெச்சுக்கிட்டாலும்...

7 லட்ச ரூபாய் லாபம். ஒரு ஏக்கருக்கு சராசரியாக 60 டன் கரும்பு கிடைக்கும். டன் 2 ஆயிரம் ரூபாய்னு கொடுத்தாலே... 1 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல பாதி செலவுனு வெச்சுக்கிட்டாலும்... ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் லாபம்தான். மரங்கள் மூலம் கிடைக்கும் மகசூல் போனஸ்தான்'' என்று சந்தோஷமாக விடை கொடுத்தார்!

 தொடர்புக்கு,

ராஜமாணிக்கம்,
செல்போன்: 94438-14217.
கலியபெருமாள்,
செல்போன்: 93447-09631.
சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையம்,
தொலைபேசி: 0431-2614217.

இயற்கைக் கரும்பு... இனிப்பான வருமானம்!

வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்...

ரசாயன உரத்துக்கு மாற்று வழி சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள். இவர், இயற்கை முறையில் தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்து வருகிறார். இவரைப் பற்றி 10.10.11 இதழில், 'ஏக்கருக்கு 60 டன் அசத்தலான இயற்கைக் கரும்பு!’ என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளோம்.  

''கரும்பு நடவு செய்த 20-ம் நாளிலிருந்து, பத்து நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை சொட்டுநீருடன் கலந்து விட வேண்டும். 70-ம் நாளில் 500 கிலோ மண்புழு உரத்தைப் பிரித்து, ஒவ்வொரு கரும்புக்கும் ஒரு கை அளவுக்கு வைக்க வேண்டும். தொடர்ந்து 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி பரப்பி, கரும்பைச் சுற்றி மண் அணைத்து விட வேண்டும். இருபது நாட்களுக்கு ஒரு முறை, மீன் அமிலம் (100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் மீன் அமிலம்), பஞ்சகவ்யா (100 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யா), முட்டைக் கரைசல் (100 லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் முட்டைக் கரைசல்) என சுழற்சி முறையில், மாற்றி மாற்றி வயல் முழுவதும் தெளித்து வர வேண்டும். 150-ம் நாளில் ஒரு டன் மண்புழு உரத்தை நிலத்தில் பரப்பி, கரும்புத் தோகைகளை உரித்து, மூடாக்கு இட வேண்டும். இது மட்கி உரமாவதோடு, மறுதழைவுக்காக விடும்போது களைகளையும் கட்டுப்படுத்தும். பூச்சிகள் தென்பட்டால் மட்டும், 100 லிட்டர் தண்ணீருக்கு 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கலாம். இவற்றைக் கடைப்பிடித்தாலே, ஏக்கருக்கு 60 டன் இனிப்பான மகசூல் நிச்சயம்'' என்கிறார், கலியபெருமாள்.

களர் நிலத்துக்கும் ஏற்றது!

வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்...

சிறுகமணி-8 கரும்பு ரகத்தைப் பற்றி, சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் (பொறுப்பு) மற்றும் பேராசிரியர் பன்னீர்செல்வம் பேசும்போது, ''தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சிறுகமணி-8 என்ற கரும்பு ரகத்தை 2012-ம் ஆண்டு வெளியிட்டது. இந்த ரகம், 20 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை வறட்சி நிலவினாலும் தாங்கக்கூடியது. அதேபோல அதிக தண்ணீரையும் தாங்கி நிற்கக்கூடியது. களர் மண்ணிலும் வளரும். செவ்வழுகல் நோய் தாக்குதலைத் தாங்கி வளரும். நடுப்பட்டம் (பிப்ரவரி- மார்ச்) மற்றும் பின்பட்டம் (ஏப்ரல்- மே) ஆகிய இரண்டு பருவங்களில் நடவு செய்ய ஏற்றது. இந்தக் கரும்பு சாயாது. அதனால், இயந்திரம் மூலம் களை எடுப்பு மற்றும் அறுவடை செய்யலாம். மறுதாம்புப் பயிரில் அதிகமான மகசூலைக் கொடுக்கும். இந்த ரகத்தில் 12.8 சதவீதம் சர்க்கரை கட்டுமானம் உள்ளது. ஏக்கருக்கு சராசரியாக 60 டன் அளவுக்கு மகசூல் கொடுக்கும்'' என்று சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு