Published:Updated:

இந்திய விவசாயிகளை வாழ வைக்குமா அந்நிய முதலீடு..?

உண்மைகளை உரசுகிறார், தேவேந்திர சர்மா... என். சுவாமிநாதன் ,ஓவியம்: ஹரன்

சந்திப்பு

##~##

'அந்நிய முதலீடு இந்தியாவில் அனுமதிக்கப்பட்டால்... விவசாயிகளின் வீட்டில் தங்க மழை பொழியும்; அவர்கள் தோட்டத்திலிருக்கும் மரங்களில் பணம் காய்த்துத் தொங்கும் குடிசையிலிருக்கும் விவசாயிகள் எல்லாம், அரண்மனைகளில் வசிக்கத் துவங்குவார்கள்...'

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? கிட்டத்தட்ட இந்த அளவுக்குத்தான் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. சில்லரை வர்த்தகத்தில், அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் முடிவை எடுத்துவிட்ட பிரதமர் மன்மோகன் சிங்... தான் மட்டுமல்லாமல், தன்னுடைய மந்திரி பிரதானிகள் மூலமாகவும்... 'விவசாயிகளின் வாழ்க்கை சிறக்கும்' என்றே தொடர்ந்து பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ''மொத்தமும் மாயை... விவசாயிகளின் வாழ்க்கை, இப்போதிருப்பதைவிட, இன்னும் பாதாளம் நோக்கி பாயும்'' என்று எச்சரிக்கிறார், டெல்லியைச் சேர்ந்த உணவு மற்றும் வேளாண்மை நிபுணர் டாக்டர். தேவேந்திர சர்மா.

'மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு' சார்பில் உணவு உத்தரவாதம் பற்றி நடத்தப்பட்ட ஒரு நாள் கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு வந்திருந்தார் சர்மா. அந்த நிகழ்வின்போது கிடைத்த இடைவெளியில், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நம்மிடம் விலாவாரியாக எடுத்து வைத்தார் சர்மா.

இந்திய விவசாயிகளை வாழ வைக்குமா அந்நிய முதலீடு..?

''சில்லரை வர்த்தகத்தில் 'வால்மார்ட்’ போன்ற மிகப்பெரிய நிறுவனங்களை அனுமதிக்கும்போது, அவர்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வார்கள். அதனால், இடைத்தரகர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டு, நுகர்வோர் தரும் பணத்தில் பெரும்பங்கு விவசாயிகளுக்குப் போய்ச் சேரும் என்றெல்லாம் அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. உண்மையில் இவ்விஷயத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால்... வால்மார்ட்டே ஓர் இடைத்தரகர்தான் என்பது புரியும்.

தரக் கட்டுப்பாட்டாளர்கள், தர நிர்ணயம் செய்பவர்கள், பக்குவப்படுத்துபவர்கள், சிப்பம் கட்டுபவர்கள் என சந்தை செயல்பாட்டுக்காரர்கள் பலரையும் கடந்துதான், நுகர்வோர் கைக்கு வருகின்றன அறுவடை செய்த விளைபொருட்கள். இதில், ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் தனது பங்குக்குரிய லாபத்தைப் பெற்றுக்கொள்ளும். இப்போது இருக்கும் இடைத்தரகர்களும் இதே நடைமுறையைத்தான் கடைபிடித்து வருகின்றனர். வால்மார்ட் நிறுவனமும் இதையேதான் கடைபிடிக்கும். அப்படியிருக்க... விவசாயிக்கு மட்டும் எங்கிருந்து கூடுதலான தொகை வந்து சேரும்.

அமெரிக்காவில், ஆரம்ப காலங்களில் நுகர்வோர் தரும் பணத்தில் 70 சதவிகிதத்தைப் பெற்று வந்த விவசாயிகள், தற்போது வெறும் நான்கு சதவிகிதத்தை மட்டுமே பெற்று வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு அமெரிக்க விவசாயிகள், அரசு தரும் மானியத்தை மட்டுமே நம்பி உள்ளனர். வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், அமெரிக்க விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுத்திருந்தால்... அரசின் மானியத்துக்கு அவசியம் இருக்காதே.

அதேபோல், 'சில்லரை முதலீட்டில் ஒப்பந்த முறை விவசாயம் கடைபிடிக்கப்படும் என்றும், அதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்’ என்றும், அரசு ஒரு வாதத்தை முன் வைக்கிறது. அதுவும் முற்றிலும் தவறான ஒன்று. இந்திய விவசாயிகளுக்கு லாபம் கொடுக்க வால்மார்ட் ஒன்றும் தர்ம மடம் அல்ல. அது ஒரு வியாபார நிறுவனம். ஒப்பந்தமுறை சூத்திரத்தால், வால்மார்ட்டுக்குத்தான் லாபம். தங்களுக்குத் தேவையானவற்றை குறிப்பிடும் அளவில்தான் பயிர் செய்ய வேண்டும் என்று விவசாயிகளைக் கட்டுப்படுத்தவும் வாய்ப்புகள் உண்டு.

இந்திய விவசாயிகளை வாழ வைக்குமா அந்நிய முதலீடு..?

அமெரிக்காவைப்போல, ஐரோப்பிய நாடுகளும் விவசாயிகளுக்குத் தாராளமாக மானியம் வழங்கி வரும் நிலையிலும், அங்கு தினசரி ஒரு விவசாயியாவது விவசாயத்தை விட்டு வெளியேறுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

'இந்தியாவில் அறுவடைக்குப் பிறகு பின்பற்றப்படும் தொழில்நுட்பங்கள் முறையாக செயல்படுத்தப் படவில்லை என்றும் முறையான சேமிப்பு வசதி இல்லாததால்... ஆண்டுக்கு

32 சதவிகித விளைபொருள்கள் அழுகி வீணாகின்றன’ என்றும் சொல்லி வரும் மத்திய அரசு, 'இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஈடுபட அனுமதிக்கும்போது இதையெல்லாம் தடுத்துவிட முடியும்’ என்றும் சொல்கிறது. 'அதாவது அந்நிய நிறுவனங்கள் தங்களின் முதலீட்டில்

50 சதவிகிதத்தை சேமிப்புக் கிடங்குகள் போன்ற வசதிகளுக்காக முதலீடு செய்ய வேண்டும்’ என நிபந்தனை விதித்துள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால், நம் நாட்டில் அப்படிப்பட்ட நடைமுறைகள் எல்லாம் கடைபிடிக்கப்படுவதே கிடையாது'' என்ற தேவேந்திர சர்மா, தொடர்ந்து வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களையும் சொன்னார்.

''இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தின் அளவு சுமார் 400 பில்லியன் டாலர். ஏறத்தாழ 1 கோடியே 20 லட்சம் பேர் சில்லரை வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அதனைச் சார்ந்து 4 கோடி பேர் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வால்மார்ட் நிறுவனத்தில் ஆண்டு வர்த்தக அளவு சுமார் 420 பில்லியன் டாலர். அவர்களால் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் சுமார்

21 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் வால்மார்ட்டால் வேலை வாய்ப்பு பெருகும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது? இருக்கும் வேலைக்கும் வேட்டு வைத்து விடுவார்கள்.

ஆரம்பத்தில், 'விலை மலிவு’ என்ற ஒரு மாய வலையை விரித்து, அதன் பிறகு, 'அவர்கள் வைத்ததுதான் விலை’ என்ற சூழலை உருவாக்கி விடுவார்கள். இதற்கு அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஏறிகிடக்கும் விலை நிலவரமே சாட்சி. இதில் காகிதப்பூ நாடகத்தை நடத்துகிறது, மத்திய அரசு. அதாவது, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மாநில அரசு நினைத்தால் மட்டுமே, சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அந்நிய நிறுவனங்களை, தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க முடியும் என்று பகட்டு வேலை காட்டுகிறது. மத்திய அரசின் அனுமதி பெற்ற ஒரு நிறுவனத்தை... மாநில அரசு எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அந்நிய முதலீட்டை உருவாக்கும் பொருட்டு 'இருபால் அந்நிய முதலீடு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்’ ஒன்று உலகளாவிய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் கையெழுத்திட்டுள்ள எழுபது நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 'உள்நாட்டு முதலீட்டாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்களோ... அதேப்போல் அந்நிய முதலீட்டாளர்களும் நடத்தப்பட வேண்டும்’ என்பதுதான் அதில் முக்கியமான நிபந்தனையே..! இப்படியுள்ள நிலையில் மாநில அரசுக்கு இதில் என்ன அதிகாரம் கொடுக்கப் போகிறார்கள்?'' என்று கேள்விகளை எழுப்பிய தேவேந்திர சர்மா, நிறைவாக,

''இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய அதேநாளில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடுமையான எதிர்ப்பின் காரணமாக வால்மார்ட் நிறுவனத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் இந்திய அரசு இதற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது வேதனையான விஷயம்'' என்கிற உண்மையையும் உடைத்தார்!

இதையெல்லாம் கேட்டுத் திருந்திவிடுமா என்ன மன்மோகன் சிங் அரசு?

அடுத்த கட்டுரைக்கு