Published:Updated:

சூரியசக்தி + காற்றாலை + பயோ கேஸ்!

முதலீடு ஒரே தடவை... லாபமோ, ஆண்டுக் கணக்கில்! படங்கள்: தி. விஜய் ஜி. பழனிச்சாமி

 மின்சக்தி

##~##

தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவின் பெரும்பாலான பகுதியும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, மின்வெட்டு... என மண்டை காய்ந்து கிடக்கிறது. இதற்கு நடுவே... ''24 மணி நேரமும் மின்வெட்டே கிடையாது. டி.வி., ஃபிரிட்ஜ், ஃபேன், ஏ.சி., கிரைண்டர், மிக்ஸி, போர்வெல் மோட்டார்... எல்லாம் ஓடுது, வீடு முழுக்க எப்பவும் லைட் எரியுது. ஆனா, கரன்ட் பில்லே கட்டுறதில்லை. கேஸ் தட்டுப்பாடுங்கறதே கிடையாது. தினமும் நாங்க சமைக்கிறோம். ஆனா, எங்க வீட்டுக்கான கேஸுக்கு... செலவே இல்லை...''

-இப்படி குஷி பொங்கப் பேசும் பிரபுவைப் பார்க்கப் பார்க்க பொறாமையாகத்தான் இருக்கிறது. கோயம்புத்தூர், சாய்பாபா காலனியில்தான் இருக்கிறது பிரபுவின் வீடு. மொட்டை மாடியிலேயே காற்றாலை மற்றும் சூரியத்தகடுகள் அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்வதோடு, உயிரி எரிவாயுவையும் உற்பத்தி செய்து வருகிறார் பிரபு!

மொட்டை மாடி மின் உற்பத்தி நிலையத்தைக் காட்டியபடியே உற்சாகமாகப் பேசிய பிரபு, ''பரம்பரையா நெய் வியாபாரம்தாங்க நம்ம தொழிலு. வீடும் கடையும் பக்கமா இருக்கு. நெய் காய்ச்ச, 'டின்’ல அடைக்க, பாக்கெட் போடனு முழுக்க கரன்ட்டை நம்பித்தான் தொழில். ஆனா, 'கரன்ட் கட்’ காரணமா ரொம்பவே சிரமப்பட்டுட்டோம். ஜெனரேட்டர், இன்வெர்ட்டர்னு வாங்கிப் போட்டும் சமாளிக்க முடியல. செலவுதான் அதிகமாச்சுது.

சூரியசக்தி + காற்றாலை + பயோ கேஸ்!

இப்படிப்பட்டச் சூழல்லதான்... சோலார், வின்ட் மில் எல்லாம் இந்தப் பகுதியில அறிமுகம் ஆச்சு. அதைப் போய் பார்த்தப்போ... அற்புதமான விஷயமா இருந்தாலும், கோடிக்கணக்குல முதலீடு செய்ய வேண்டியிருந்துச்சு. அதில்லாம, வின்ட் மில் கரன்ட்டை மின்சார வாரியத்துக்குத்தான் விக்கணும். நாம பயன்படுத்த முடியாது. அந்தளவுக்கு முதலீடு போடவும் வசதியில்லை. ஆனா, இதையெல்லாம் அப்படியே விட்டுடவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்ப தீவிரமா யோசிச்சுட்டு, 'மோட்டார் ஃபேக்டரி’ நடத்தற என்னோட தம்பி ஸ்ரீதர்கிட்ட பேசினேன். ரெண்டு பேரும் சேர்ந்து, 'மினி வின்ட் மில்’ இயந்திரங்களைத் தயாரிச்சுட்டோம். 40 அடி உயரத்துல மூணு அடி இறக்கைகள் இருக்குற மாதிரி சின்னதா ரெண்டு வின்ட் மில்லை செஞ்சு, மாடியில பொருத்திட்டோம். சூரிய சக்தி மின்சாரத்தையும் தயாரிக்கலாம்னு, சோலார் பேனல்களையும் அமைச்சுட்டோம். ரெண்டும் சேர்ந்து 3,000 வாட் (3 கிலோ வாட்) உற்பத்தித் திறன் கொண்டது. இதிலிருந்து, தினமும் 10 முதல் 15 யூனிட் வரைக்கும் கரன்ட் கிடைக்குது.

சேமிச்சு வெச்சு பயன்படுத்துறதுக்கு... பேட்டரிகள், இன்வர்ட்டர் மாதிரியான உபகரணங்களையும் அமைச்சு, கரன்ட் உற்பத்தி செஞ்சு பயன்படுத்துறோம்.

சூரியசக்தி + காற்றாலை + பயோ கேஸ்!

24 மணிநேரமும் தடையில்லாம கரன்ட்  கிடைக்குது. இப்போ, மூணு வருஷம் ஆகப்போகுது. முன்ன 3 ஆயிரம் ரூபாய் கரன்ட் பில் கட்டுவோம். இப்ப, வெறும் 40 ரூபாய் மட்டும்தான் கட்டுறோம். இதில் சந்தோஷம்னாலும்... ஆரம்பக் கட்டச் செலவுகள் ரொம்ப அதிகம்தான். 1,000 வாட் உற்பத்தி செய்ற வின்ட் மில் அமைக்கறதுக்கான செலவு... 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்;

2,000 வாட் உற்பத்திக்கான சோலார் பேனல் அமைக்கறதுக்கான செலவு... 1 லட்சத்து

50 ஆயிரம் ரூபாய்னு... மொத்தம் 3 லட்ச ரூபாய் செலவயிடுச்சு. இந்த இயந்திரங்கள் 25 வருஷம் வரைக்கும்கூட ரிப்பேர் வராது. சோலார் பேனல்கள்ல கீறல் விழுந்துடாம கவனமா பாத்துக்கணும் அவ்வளவுதான்'' என்ற பிரபு, நிறைவாக,

சூரியசக்தி + காற்றாலை + பயோ கேஸ்!

'காய்கறிக் கழிவுகள் மூலமா பயோ-கேஸ் உற்பத்தி செஞ்சுதான் சமைக்கிறோம். அதனால வருஷத்துக்கு 12 சிலிண்டர் செலவு மிச்சம். அதேமாதிரி, பேட்டரியில ஓடுற 'இ-பைக்’ பயன்படுத்துறதால, வருஷத்துக்கு 200 லிட்டர் பெட்ரோல் செலவும் மிச்சம். ஆரம்பக் கட்ட செலவைப் பத்தி யோசிக்காம... முதலீடு செஞ்சுட்டா, வருஷம் முழுக்க நிம்மதியா இருக்கலாம் இல்லையா!'' என்று விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,பிரபு,
செல்போன்: 89254-00170.

மின் உற்பத்திக்கு... வேளாண் ஆற்றல் காடுகள் !

சூரியசக்தி + காற்றாலை + பயோ கேஸ்!

மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பிரபுவுக்கு வழங்கியவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயிராற்றல் துறை பேராசிரியர், டாக்டர். வெங்கடாசலம். அவரிடம் பேசியபோது, ''இப்போதைய நிலைமையில மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கறதுக்காக நிறைய ஆராய்ச்சிகள் நடந்துக்கிட்டிருக்கு. குறிப்பா... கோழி எரு, சாணம் ஆகிய கழிவுகளை வெச்சு விவசாயிகள் மின்சாரம் தயாரிக்க நிறைய வழிகள் இருக்கு.

அதேபோல, தரிசு நிலங்கள்ல 'வேளாண் ஆற்றல் காடு’களை உருவாக்கியும் ஆயிரக்காணக்கான மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மலைவேம்பு, சவுக்கு, சீமைக் கருவேல்... மாதிரியான மரங்களை நிறைய வளர்த்து, அவற்றை வெட்டி எரிச்சு, வெப்ப எரிவாயு உற்பத்தி செய்யலாம். அது மூலமா மின்சாரம் தயாரிக்கலாம். இதைத்தான் 'வேளாண் ஆற்றல் காடு'னு சொல்றோம். மறுதழைவுத் தீவனப் பயிர்களைப் பயன்படுத்தி பயோகேஸ் உற்பத்தி செய்ய முடியும். வெளி நாடுகள்ல மக்காச்சோளத் தட்டையை எரிச்சும் மின்சாரம் தயாரிக்கறாங்க.

நாலு பேர் கொண்ட குடும்பத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவுல சோலார் பிளாண்ட் அமைச்சு, வீட்டுக்குத் தேவையான கரன்ட்டை தயாரிச்சுக்க முடியும். இன்னிக்கு சூழ்நிலையில சோலார் பிளாண்ட் அமைக்கறது, மினி விண்ட் மில் அமைக்கறது எல்லாமே அதிக செலவாகுற விஷயங்களாத்தான் இருக்கு. எல்லாரும் இதை சுலபமா அமைக்கறது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். தொடர் ஆராய்ச்சிகள் மூலமா ஆரம்பக் கட்டச் செலவையும், உற்பத்திச் செலவையும் குறைச்சு மின்சாரம் தயாரிக்கிற வழிமுறைகளைக் கண்டுபிடிச்சுட்டா... மின்சார உற்பத்தியில தன்னிறைவு அடைஞ்சுட முடியும்'' என்றார் நம்பிக்கையோடு.

தொடர்புக்கு, உயிராற்றல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். தொலைபேசி: 0422-6611276.

அடுத்த கட்டுரைக்கு