Published:Updated:

மண்புழு மன்னாரு !

மாத்தி யோசி

##~##

காஞ்சிபுரத்துல இருக்கற பெரியக் கோயில்கள்ல ஒண்ணு, ஏகாம்பரநாதர் கோயில். ஏக்கர் கணக்குல விரிஞ்சு கிடக்கிற, இந்தக் கோயிலோட சிறப்பு என்ன தெரியுமா? மாமரம்தாங்க. அதாவது, ஏகம் ஆம்ரம் = ஏகாம்பரம். ஏகம்ன்னா... ஒண்ணு, ஆம்ரம்னா... மாமரம்னு பொருள். இந்தக் கோயில்ல இருக்கற மா மரத்துல... கசப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்புனு நாலு விதமான மாம்பழம் காய்க்கறதுண்டு. இந்த மரத்துக்கு ஆயிரக்கணக்கான வயசுயிருக்கும்னு விஞ்ஞானிங்க சொல்றாங்க. அப்படினா... ஒரு காலத்துல... இந்தப் பகுதி முழுக்கவே மாந்தோப்பா இருந்திருக்கணும். அதனாலதான், மாமரத்தை சிறப்பு செய்றதுக்காக ஒரு கோயிலையே கட்டிக் கொண்டாடுறாங்க.

ப்படி ஒவ்வொரு கோயில்லயும், ஒரு மரம் தல விருட்சமா இருக்கும். அரிய வகையான மரங்கள காப்பாத்தறதுக்கு 'மரக் காப்பகம்' மாதிரியும் கோயில்களைப் பயன்படுத்தியிருக்காங்க.

'தண்ணீர் பிரச்னைக்கு சொட்டுநீர் போட்டேன், இப்போ, தண்ணீர் பாய முடியாத அளவுக்கு, பைப்புல உப்பு அடைச்சு நிக்குதுனு...’ அடிக்கடி பலரும் சொல்றதுண்டு. இதுக்கு எளிய தீர்வு... 'இ.எம்.'னு சொல்லப்படுற திறமி நுண்ணுயிரிதான். இதை தண்ணியில கலந்துவிட்டா, பைப்புல அடைச்சிருக்கற உப்பையெல்லாம் இந்த நுண்ணியிரியிங்க கரைச்சி எடுத்துடும். அப்புறம் தண்ணி, சுலபமா பாயும். இ.எம். கிடைக்காதபட்சத்துல, ஜீவாமிர்தம், அமுதக் கரைசல், பஞ்சகவ்யா... இதுல ஏதாவது ஒண்ணையும்கூட வடிகட்டி பயன்படுத்தலாம்.

மண்புழு மன்னாரு !

ண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணுனு ஆசைக்கு பெருநெல்லி செடி வளர்க்கறவங்களுக்கு முக்கியமான சேதி... நெல்லி, அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிர். அதனால, ஒரே செடியா நட்டா, காய் புடிக்காது. ரெண்டு மூணு செடி இருந்தாதான், மகரந்தச் சேர்க்கை உருவாகி, காய்க்கும். ஒரே ரகத்தைத் தேர்வு செய்யாம, ரெண்டு மூணு ரகத்தை கலந்து வைக்கறது, காய்ப்புத் தன்மையை அதிகப்படுத்தும்.

பெங்களூரா மாமரத்தைப் பார்த்தாலே, சிலருக்கு கோவம், கோவமா வரும். ஏன்னா, இந்த ரக மரம், அதிகமா காய்க்கும். ஆனா, இதோட பழம் ரொம்ப சல்லிசான விலைக்குத்தான் போகும். சமயத்துல வாங்கக் கூட ஆள் இருக்காது. ஒரே நேரத்துல எல்லா ரக மாம்பழமும், சந்தையில நிக்குறதும் ஒரு காரணம். மத்த பழங்களோட சுவைக்கு முன்ன பெங்களூரா கொஞ்சம் கம்மிதான்கிறதால, இது கடைசி இடத்துக்குப் போயிடும். அதேசமயம் காய்களுக்கு... எப்பவுமே தேவை அதிகமா இருக்கும். அதனால, காயா இருக்கும்போதே, வித்துட்டா... நல்ல லாபம் பார்க்கலாம்.

ந்தக் காலத்துல... வாழை இலை, முறுக்கன் இலை போட்டுத்தான் விருந்தாளிகளை உபசரிப்பாங்க. வாழை அதிகம் விளையுற பகுதியில, வாழை இலை, மற்ற பகுதிகள்ல முறுக்கன் இலை பயன்படுத்தறது வழக்கம். கோயில்கள்ல சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்னு பிரசாதம் கொடுக்கறதுக்கும் இந்த இலைகளைப் பயன்படுத்துவாங்க. இதுக்குக் காரணம், இந்த இலைகள்ல இருக்கற அரிய, மருத்துவ குணமும்தான். சுடச்சுட சாப்பிடறப்ப, இலைகள்ல உள்ள மருத்துவத் தன்மையும் சாப்பிடறவங்களுக்கு இடம் மாறுமாம். ஆனா, இப்பல்லாம் நாகரிகம்ங்கற பேர்ல, இலைகளைத் தவிர்க்க ஆரம்பிச்சாதால, இதையெல்லாம் நாம இழந்துட்டே இருக்கோம்!

'முறுக்கன் இலை விருந்து, உடலை முறுக்கும்’னு சொல்லி வெச்சுருக்காங்க. இந்த இலையோட மகத்துவம், அதுல சாப்பிட்டவங்களுக்குத்தான் தெரியும். முறுக்கன் மரத்துக்கு... புரசு, பலாசம்னு வேற பேருங்களும் உண்டு. இந்த இலையில சாப்பிட்டா, கல்வி அறிவு பெருகும்னு நம்பிக்கை இருக்கு. இலையில இருக்கற அரிய வகை பொருள் ஒண்ணு, நம்ம ஞாபக சக்தியை அதிகப்படுத்துமாம். அதைத்தான், இப்படி சூசகமா சொல்லியிருக்காங்க. வீட்டுக்கு, ரெண்டு முறுக்கன் மரம் இருந்தா, உடம்பு நல்லா இருக்கும், பிளாஸ்டிக் டம்ளர், தட்டுனு செலவழிக்கற பணமும் மிச்சமாகும்!

கொடுக்காபுளி (கொருக்காபுளி, கோணப் புளியாங்கா) மரத்தைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இந்த மரத்துக் காயைச் சாப்பிடாத, கிராமப்புற பசங்களே இருக்கமாட்டங்க. செடி முழுக்க முள் இருக்கும். இதோட இலை, கால்நடைகளுக்கு அருமையான பசுந்தீவனம். இந்த கொடுக்காபுளி பழத்துல கால்சியம் சத்து நிறைய இருக்கு. உயிர்வேலிக்கு, கொடுக்காபுளி அற்புதமான மரம். இந்த இலையை, கஷாயம் வெச்சு... சளி, இருமல், தொண்டை வலிக்குக் குடிச்சா, நிவாரணம் கிடைக்கும். வெட்டுக்காயம் பட்டா, இந்த இலையை மை போல அரைச்சு தடவினா... சீக்கிரமா ஆறிடும்.  காய், காய்ச்சி, கிளி மூக்கு நிறத்துல, சிகப்பா பழுக்கும். இந்தப் பழத்தை திங்க, சுற்று வட்டார பறவைங்க எல்லாம், இந்த மரத்துலத்தான் இருக்கும். நம்ம வாண்டுங்களும் மரத்தை, சுத்தி, சுத்தி வரும். ஆனா, இப்போ காலம் மாறிப் போச்சு. பொறந்தக் குழந்தைகூட டி.வி., கம்ப்யூட்டர்னுல தவம் கிடக்குதுங்க.

அடுத்த கட்டுரைக்கு