Published:Updated:

அரை ஏக்கரில், 1,200 கட்டு... பங்கம் இல்லா வருமானம்...

சிலிர்க்குது சின்னமனூர் செங்கரும்பு..! ஜி. பிரபு ,படங்கள்: வீ. சக்திஅருணகிரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

பொங்கல் பண்டிகை வந்தாலே, அனைவருக்கும் நினைவுக்கு வருவது, கரும்புதான். தமிழ்நாட்டில் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் கரும்புக்கு, அதன் சுவையால் தனி மவுசு உண்டு. வெளிநாடு வாழ் தமிழர்கள் பொங்கல் கொண்டாடுவதற்காக, மேலூர் பகுதியிலிருந்து கரும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கடுத்தாற்போல, வியாபாரிகள் குறி வைப்பது... தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் விளையும் கரும்புகளைத்தான்!

இப்பகுதியில் மிகக்குறைந்த பரப்பிலேயே கரும்பு சாகுபடி செய்யப்பட்டாலும், அவற்றுக்கு கிராக்கி அதிகம்! கார்த்திகை மாத இறுதியிலேயே இப்பகுதியில் குவியும் வியாபாரிகள், தோட்டங்களில் கரும்பைப் பார்வையிட்டு விலைபேசி, முன்பணம் கொடுத்துவிடுகிறார்கள். இந்த வகையில் தற்போது, பெரும்பாலானோருக்கு... ஒரு கட்டுக்கு (10 கரும்புகள்) 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விலை பேசப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், நாகராஜன் என்பவர் விளைவித்திருக்கும் கரும்பு, மட்டும் 165 ரூபாய்க்கு விலை பேசப்பட்டிருக்கிறது. இந்த விஷயம், அப்பகுதி விவசாயிகளால் ஆச்சரியமாகப் பேசப்பட, நாகராஜனைத் தேடிச் சென்றோம்.

கரும்புக் காட்டுக்குள் உரித்து கட்டி வைக்கப்பட்டிருந்த தோகைகளை அதி சுறுசுறுப்புடன் வெளியே இழுத்து வந்து போட்டுக் கொண்டிருந்தவரிடம்,  நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வேலையாட்களுக்கு சில பணிகளை ஒதுக்கிவிட்டு வந்து நம்முன் அமர்ந்தார்.

அரை ஏக்கரில், 1,200 கட்டு... பங்கம் இல்லா வருமானம்...

''சின்னமனூர்தான் எனக்குச் சொந்த ஊர். பதினஞ்சு வயசுலயே விவசாய வேலைக்கு வந்துட்டேன். இப்போ

52 வயசாகுது. சொந்தமா எங்களுக்கு நிலமெல்லாம் கிடையாது. ஆனா, வருஷந்தவறாம குத்தகைக்குப் பிடிச்சு விவசாயம் செய்றேன். கிட்டத்தட்ட 35 வருஷமா வருஷத்துக்கு ஒரு போகம் நெல் போட்டுக்கிட்டிருக்கேன். 20 வருஷமா கரும்பு சாகுபடி பண்ணிக்கிட்டிருக்கேன். இந்த போகத்துக்கு 70 சென்ட் குத்தகைக்குப் பிடிச்சுருந்தேன். அதுல 50 சென்ட்ல பொங்கல் கரும்பு (பின்னி பீச்சி ரகம்) போட்டிருக்கேன். மீதி இடத்துல அடுத்த போகம் விதைக்கரணைக்காக கரும்பு போட்டிருக்கேன். ஆடி மாசம் தேவையான அளவுக்கு விதைக்கரும்பை விதைச்சுட்டோம்னா... அதை எடுத்து சித்திரை மாசத்துல நடவு செஞ்சுக்கலாம். தை மாசம் பொங்கல் சமயத்துல அறுவடைக்குத் தயாராகிடும்.

அரை ஏக்கரில், 1,200 கட்டு... பங்கம் இல்லா வருமானம்...

முல்லை-பெரியாறு வாய்க்கால் தண்ணிலதான் இந்தப்பகுதியில விவசாயம்.  இந்தப்பகுதி மண் எப்பவும் நல்லா ஈரப்பதமா இருக்கறதால... கரும்பு நல்லா விளைஞ்சு வருது. விவசாயத்தை நான் சரியா பண்ணனும்னு நினைப்பேன். நாள் தவறாம தோட்டத்துக்கு வந்துடுவேன். களை எடுக்குறது, தோகை உரிக்கிறது, உரம் வைக்கறதுனு ஒவ்வொரு வேலையையும் சரியான நேரத்துல செஞ்சுடுவேன். நோய், பூச்சி கண்டா... டக்குனு மருந்தை வாங்கி அடிச்சுடுவேன். பயிருக்குனு பாக்கும்போது காசை சிக்கனப்படுத்தணும்னு யோசிக்க மாட்டேன். அதனாலதான் என்னோட பயிரும் நல்லா விளைஞ்சு எனக்கு வருமானத்தைக் கொடுக்குது'' என்ற நாகராஜன், அரை ஏக்கர் (50 சென்ட்) நிலத்தில் கரும்பு சாகுபடி செய்யும் முறையை சொல்ல ஆரம்பித்தார்.

8,500 கரணைகள் !

அரை ஏக்கரில், 1,200 கட்டு... பங்கம் இல்லா வருமானம்...

'பொங்கல் கரும்புக்கு சித்திரை மாதத் தொடக்கம் விதைப்புக்கு ஏற்றப் பருவம். நான்கைந்து முறை நிலத்தை நன்றாக உழுது, ஒன்றரை அடி இடைவெளியில் (வாய்க்கால்) முக்கால் அடி உயரம், ஓரடி அகலத்தில் நீளமான பாத்திகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் ஓரடி இடைவெளியில், சிறிய குழி பறித்து, குழிக்கு இரண்டு விதைக் கரணைகள் என்ற விகிதத்தில் நடவு செய்ய வேண்டும். அரை ஏக்கருக்கு 8,500 கரணைகள் வரை தேவைப்படும் (ஒரு கட்டு கரும்பில் 60 விதைக் கரணைகள் கிடைக்கும்). நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்சி தொடர்ந்து, பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு வர வேண்டும். மண்ணின் ஈரம் காயாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

5 உரம்... 2 களை... 6 தோகைக் கழிப்பு !

அரை ஏக்கரில், 1,200 கட்டு... பங்கம் இல்லா வருமானம்...

நடவு செய்து ஒரு மாதத்துக்குப் பிறகு, 100 கிலோ ஃபாக்டம்பாஸ், 100 கிலோ யூரியா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வயல் முழுவதும் இடவேண்டும். இதே போல ஒரு மாத இடைவெளியில் தொடர்ந்து நான்கு முறை கொடுக்க வேண்டும். 50-ம் நாள் களை எடுத்து மண் அணைத்துவிட வேண்டும். தொடர்ந்து களைகள் மண்டுவதைப் பொறுத்து, அவற்றை அகற்றவேண்டும். விதைத்த 3-ம் மாதத்தில் கரும்பின் கீழ்புறமுள்ள தோகைகளை உரித்து விட வேண்டும். இதேபோல அறுவடை வரை தொடர்ந்து மாதம் ஒரு முறை தோகை உரித்துவிட வேண்டும்.

அரை ஏக்கரில், 1,200 கட்டு... பங்கம் இல்லா வருமானம்...

மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் தாக்கும். காய்ஞ்ச சருகு, மொட்டை நோய் ஆகிய நோய்களும்... கத்தாழைப் பூச்சியும்தான் அதிகமாக பொங்கல் கரும்பில் காணப்படும். பூச்சிகள் தாக்கினால், அதற்குரிய பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டும். ஆவணி மாதத்துக்குப் பிறகு மேல் மழை கிடைத்து வந்தால்... பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குவதில்லை. 5 முறை உரம், 2 முறை களையெடுப்பு, 6 முறை தோகை உரிப்பு ஆகியவைதான் கரும்புக்கு செய்ய வேண்டிய பராமரிப்பு. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கரும்பு அறுவடைக்குத் தயாராகி விடும்.'

50 சென்ட்... 60 ஆயிரம் லாபம் !

சாகுபடிப் பாடம் முடித்த நாகராஜன், நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றிப் பேசினார். ''இப்பவே வியாபாரிங்க வந்து பாத்துட்டு, கட்டுக்கு 165 ரூபாய்னு விலை பேசியிருக்காங்க. நல்ல செழிப்பா விளைஞ்சுருக்கு. எப்படியும் அரை ஏக்கர்ல 1,400 கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். எப்படிப் பாத்தாலும் 1,200 கட்டுக்குக் குறையாது. 1,200 கட்டுனு வெச்சுக்கிட்டாலே...

1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக எப்படியும் 60 ஆயிரம் ரூபாய் வரை லாபமா கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,

நாகராஜன், செல்போன்: 98407-70965
ஆறுமுகம், செல்போன்: 99769-09634
கலியபெருமாள், செல்போன்: 93447-09631

இப்படித்தான் செய்யணும் இயற்கையில...

விழுப்புரம் மாவட்டம், குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவர், இயற்கை முறையில் ஆலைக்கரும்பு சாகுபடி செய்து வருகிறார். பொங்கல் கரும்பை இயற்கை முறையில் சாகுபடி செய்வது பற்றி கலியபெருமாள் இங்கு விளக்குகிறார்.

வளம் கொடுக்கும் தானிய விதைப்பு !

அரை ஏக்கரில், 1,200 கட்டு... பங்கம் இல்லா வருமானம்...

''நிலத்தை நன்றாக டிராக்டர் மூலம் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, சோளம், கம்பு, தினை, சாமை ஆகிய தானியங்கள் தலா 1 கிலோ; உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை ஆகிய பயறு வகைகள் தலா 1 கிலோ; எள் அரை கிலோ, நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய எண்ணெய்வித்துப் பயிர்கள் தலா 2 கிலோ; தக்கைப்பூண்டு 2 கிலோ, சணப்பு 2 கிலோ,  நரிப்பயறு அரை கிலோ, கொள்ளு ஒரு கிலோ ஆகிய பசுந்தாள் உரப்பயிர்கள்; கடுகு அரை கிலோ, வெந்தயம், சீரகம் தலா கால் கிலோ, கொத்தமல்லி 1 கிலோ ஆகிய நறுமணப்பயிர்கள் என இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து, ஒரு ஏக்கரில் பரவலாகத் தூவி விதைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 45-ம் நாளுக்கு மேல் பூவெடுத்த பிறகு, இவற்றை மடக்கி உழவு செய்ய வேண்டும். தொடர்ந்து, ரோட்டாவேட்டரில் இரண்டு சால் உழவும், பவர் டில்லர் மூலம் ரெண்டு சால் ஆழமான உழவும் செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்க வேண்டும். பிறகு, அவரவர்களுக்கு வசதியான, வழக்கமான முறையில் பார் பிடித்து விதைக்கரணையை விதைக்க வேண்டும்.

20 நாட்களுக்கு ஒரு முறை ஊட்டம் !

மண்ணின் ஈரப்பதம் குறையாத அளவுக்கு தொடர்ந்து தண்ணீர் விட்டு வரவேண்டும். நடவு செய்த 20-ம் நாளிலிருந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 20-ம் நாளுக்கு மேல் 500 கிலோ மண்புழு உரத்தைப் பிரித்து ஒவ்வொரு கரும்புக்கும் ஒரு கை அளவுக்கு வைக்க வேண்டும். தொடர்ந்து, 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி பரப்பி, கரும்பைச் சுற்றி மண் அணைத்துவிட வேண்டும். இருபது நாட்களுக்கு ஒரு முறை... மீன் அமிலம்+பஞ்சகவ்யா கரைசல் (100 லிட்டர் தண்ணீர், 1 லிட்டர் மீன் அமிலம், 3 லிட்டர் பஞ்சகவ்யா); முட்டைக் கரைசல் (100 லிட்டர் தண்ணீர், 2 லிட்டர் முட்டைக் கரைசல்) ஆகிய இந்த இரண்டு கரைசல்களையும் சுழற்சி முறையில் மாற்றி மாற்றி, வயல் முழுவதும் தெளிக்க வேண்டும்.

களைகளைக் கட்டுப்படுத்தும் தோகைகள் !

90-ம் நாளில் ஒரு டன் மண்புழு உரத்தை நிலத்தில் பரப்பி, கரும்புத் தோகைகளை உரித்து மூடாக்கிட வேண்டும். இது மட்கி உரமாவதோடு, களைகளையும் கட்டுப்படுத்தும். இயற்கை முறை சாகுபடியில் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. பூச்சிகள் தென்பட்டால் மட்டும், 100 லிட்டர் தண்ணீருக்கு 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கலாம். இயற்கை முறை சாகுபடியில் கரும்பு நல்ல நிறம், தடிமனுடன் விளையும். சுவையும் அதிகமாக இருக்கும்.'' என்றார், கலியபெருமாள்.

கட்டு 130 ரூபாய்க்குக் குறையாது !

அரை ஏக்கரில், 1,200 கட்டு... பங்கம் இல்லா வருமானம்...

இதேபகுதியில் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருபவர், ஆறுமுகம். அவரிடம் பேசியபோது, ''இந்த ஏரியாவுல விளையுற கரும்புக்கு தனி கலரும் டேஸ்டும் இருக்கும். அதனால வியாபாரிங்க சென்னை வரைக்கும்கூட அனுப்புறாங்க. நான் மூணு ஏக்கர்ல கரும்பு போட்டிருக்கேன். போன வருஷம் கட்டு 100 ரூபாய்ல இருந்து 120 ரூபாய் வரைக்கும் விலை போச்சு. இந்த வருஷம் குறைச்சலான விலையே கட்டுக்கு 120 ரூபாய்னு பேசி இருக்காங்க. மொதல்ல நல்லா செழிப்பா வளந்த கரும்புக்குத்தான் விலை பேசுவாங்க. என் தோட்டத்துல பெரியளவுக்கு விளைச்சல் இல்லை. அதனால, இன்னும் விலை பேசல. நாகராஜனுக்குத்தான் இந்தப் பகுதியிலயே கரும்பு நல்லா விளைஞ்சிருக்கு. எனக்கு ஏக்கருக்கே 1,600 கட்டு வரைக்கும்தான் கிடைக்கும். எப்படியும் கட்டுக்கு 130 ரூபாய்க்குக் குறையாம விலை கிடைக்கும்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு