Published:Updated:

உப்பு மண்ணிலும் ஓஹோ !

அசத்தல் விளைச்சல் தரும் ஐந்து ரகங்கள்! கு. ராமகிருஷ்ணன் படங்கள்: ர. அருண்பாண்டியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குறைந்த அளவு கருக்காய்...

அதிகரிக்கும் விதை நெல்லின் ஆயுள்..

ஏக்கருக்கு

உப்பு மண்ணிலும் ஓஹோ !

20 ஆயிரம் லாபம்!

##~##

ரந்து விரிந்த நெல் வயலில்... தங்கத் துகள்களைத் தூவியது போல் ஜொலிக்கின்றன நெற்கதிர்கள். சேலம் சென்னா, சிவப்புக் குருவிக்கார், சிவப்புக் கவுனி, வெள்ளை பொன்னி, மாப்பிள்ளைச் சம்பா என ஐந்து வகையான பாரம்பரிய நெற்பயிர்கள் அழகாக அணி வகுத்து... ஆளுயரத்துக்கு நிற்கின்ற இந்தக் கண்கொள்ளா காட்சியைப் பார்த்துவிட்டால்... நிச்சயம் உங்களுக்கும் இயற்கை விவசாயத்தின் மீதும், பாரம்பரிய ரகங்களின் மீதும் காதல் உருவாகும்!

திருச்சி மாவட்டம், முசிறியில்தான் இந்தக் காட்சி! அதிகாலைவேளையில் வயல் தேடி சென்ற நம்மை மலர்ந்த முகத்தோடு வரவேற்றார், உரிமையாளர் சுப்ரமணியசிவா. பி.காம் பட்டதாரியான இவர், இயற்கை விவசாயத்தை தீவிரமாக மேற்கொண்டிருக்கும் அதேவேளையில்... கட்டுமானப் பொருட்கள் விற்பனை நிலையத்தையும் நடத்தி வருகிறார்!

''நானும் ஒரு காலத்துல ரசாயன விவசாயிதான். ஆனா, அதுல கிடைச்ச கசப்பான அனுபவத்துக்குப் பிறகு, இயற்கைக்கு மாறி 6 வருஷமாச்சு. உப்புத் தன்மை கலந்த களிமண் நிலமான இதுல... இந்த அளவுக்கு பயிர்கள் விளையுறதப் பார்த்து, எங்க பகுதி விவசாயிங்க ஆச்சரியப்பட்டு போறாங்க. பத்து நாளைக்கு மேல தண்ணி இல்லாம இருந்தாலும்கூட, பயிர்கள் நல்லா தாக்குப் புடிக்குது. இதையெல்லாம் சாத்தியமாக்குனது இயற்கை விவசாயம்தான்!

உப்பு மண்ணிலும் ஓஹோ !

ரசாயன விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப, அதிகபட்சம் 5 நாளுக்குத்தான் நிலத்துல ஈரம் இருக்கும். மண்ல உப்புத் தன்மை வாய்ந்த ரசாயனம் படியறதால... தண்ணி சீக்கிரத்துலயே ஆவியாயிடும். வழக்கமா கொடுக்குற உரங்களோட... உப்புத் தன்மையைக் குறைக்கறதுக்காக ஜிப்சம், ஜிங்சல்ஃபைடுனு தொடர்ச்சியா கொடுத்தும்கூட, எந்த மாற்றமும் ஏற்படாமத்தான் இருந்துச்சு'' என்று தண்ணீரின் தேவையைக் குறைக்கும் பாரம்பரிய ரகங்களின் ரகசியம் சொன்ன சுப்பிரமணிய சிவா, தொடர்ந்தார்.

கண்கூடா பலன் தெரியுது !

''இந்தப் பகுதியில கருவண்டு தாக்குதல் அதிகம். கதிர் பிடிச்சு வர்ற நேரத்துல, வேர்ப்பகுதியில ஏராளமான கருவண்டுங்க சூழ்ந்து... பயிரை நாசம் பண்ணிடும். கதிர்நாவாய், செஞ்சூரைப் பூச்சிகளாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டுச்சு. பலவிதமான பூச்சிக்கொல்லியைத் தெளிச்சும் கட்டுப்படல. செலவுதான் பல மடங்கு அதிகமாயிட்டே இருந்துச்சு. இந்தச் சூழ்நிலையில இயற்கை விவசாயத்துக்கு மாறினதோட, பாரம்பரிய நெல் ரகங்களையும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். கண்கூடா பல வகைகள்லயும் பலன் கிடைச்சதால, நிறைஞ்ச மனசோடு இதை தொடர்ந்துட்டே இருக்கேன்.

உப்பு மண்ணிலும் ஓஹோ !

குறைவான செலவு, சிக்கனமான தண்ணியிலயே பயிர்கள் செழிப்பா இருக்கு. தண்ணி இல்லாத நாள்லயும்கூட, பசுமை குறையாமலே இருக்கு. பறவைகள் அதிகமா வருது. குறிப்பா, மயிலுங்க வந்து, பயிரை சேதப்படுத்தாம இருக்கறதுக்காக, வயலைச் சுத்தி, பிளாஸ்டிக் டேப் கட்டியிருக்கேன். இது, 'தன்னை புடிக்குறதுக்கான வலை’னு நினைச்சு, வெளியிலயே மயிலுங்க நின்னுடுதுங்க.

கருக்காவை குறைத்த இயற்கை !

எங்ககிட்ட 10 மாடுகள் இருக்கு. இதுல ஏதாவது 4 மாடுகள் எப்பவும் பால் கறக்கும். நாங்க கூட்டுக் குடும்பமா இருக்கறதுனால, எங்க வீட்டுத் தேவைக்கே பாலை பயன்படுத்திக்குவோம். பால், தயிர்னு மிச்சப்பட்டா... வயல்ல ஊத்திடுவோம். சமையலுக்குப் பயன்படுத்தின எண்ணெயையும் வயல்லதான் ஊத்துவோம். இதெல்லாம் ஊத்தப்பட்ட இடங்கள்ல பயிர்களோட வளர்ச்சி கொஞ்சம் கூடுதலாவே இருக்கு. மூணு வருஷத்துக்கு ஒரு முறை... இந்த 6 ஏக்கருக்கும் ஒட்டுமொத்தமா 60 டன் மாட்டு எரு போடுவோம். வருஷத்துக்கு ரெண்டு முறை நெல் சாகுபடி செய்வோம். இதுமாதிரி இன்னும் பலவிதமான இயற்கை இடுபொருட்கள் கொடுக்கறதுனால, பயிரோட வளர்ச்சி அபரிமிதமா இருக்கு. அதிக எண்ணிக்கையில தூர் வெடிக்குது. தண்டுப்பகுதி நல்லா திடகாத்திரமாவும், நெல்மணிகள் நல்லா திரட்சியாவும் இருக்கு. ரசாயன உரஙகள் பயன்படுத்தினப்பல்லாம்... எட்டு சதவிகிதத்துக்கு மேல கருக்கா இருக்கும். இப்ப, அது ரெண்டு சதவிகிதமா குறைஞ்சுபோச்சு'' என்று குஷியோடு சொன்னவர்,

ஏக்கருக்கு 41 ஆயிரம் ரூபாய் !

''இயற்கையில விளைஞ்ச நெல், நல்லா கெட்டியா இருக்கு. ரெண்டு மூணு வருஷம் வெச்சிருந்தும்கூட விதைநெல்லா பயன்படுத்தலாம். முளைப்புத்திறன் குறையாமலே இருக்கு. மாடுகளும், இந்த வைக்கோலை விரும்பிச் சாப்பிடுது.

ஏக்கருக்கு சராசரியா 25 (60 கிலோ) மூட்டை மகசூல் கிடைக்குது. இதை அப்படியே நெல்லாவே விற்பனை செஞ்சா, லாபம் கிடைக்காதுங்கறதனால, அரிசியா மாத்தித்தான் விற்பனை செய்றோம்.

1,500 கிலோ நெல்லை அரைச்சா, 825 கிலோ அரிசி கிடைக்குது. ஒரு கிலோ... குறைந்தபட்சம் 50 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா, 41,250 ரூபாய் வருவாய் கிடைக்கும்.

உப்பு மண்ணிலும் ஓஹோ !

எல்லா செலவும் போக, நிகர லாபமா 20 ஆயிரம் ரூபாய் கையில மிஞ்சும். இதோட எங்க மாடுகளுக்கு சத்தான தவிடும் கிடைச்சுடுது'' என வழக்கமாக தான் மேற்கொள்ளும் சாகுபடி அனுபவங்களைச் சொன்ன சுப்பிரமணியசிவா, நடப்பு சாகுபடியைப் பற்றியும் பகிர்ந்தார்.

''இந்த முறை ஒண்ணரை ஏக்கர்ல சேலம் சென்னா, தலா 2 ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா, வெள்ளை பொன்னி, தலா கால் ஏக்கர்ல சிவப்புக் கவுனி, சிவப்புக் குருவிக்கார் ரக நெல்லுங்கள சாகுபடி செஞ்சுருக்கேன். இது எல்லாத்துக்குமே நடவிலிருந்து ஏறக்குறைய 130 நாள் வயசாகுது. 145-ம் நாள் அறுவடை செய்துடலாம். இப்பவே கதிர் முத்தி, கிட்டத்தட்ட எல்லா ரகங்களுமே அறுவடைக்குத் தயாராகிடுச்சு.

இன்னும் 10, 15 நாட்களுக்குள்ளயே ஒட்டுமொத்த அறுவடையும் முடிஞ்சுடும்'' என்றவர், இந்த ரக நெற்பயிர்களின் சிறப்பு குணங்கள் குறித்து தனித்தனியாக விவரித்ததோடு... சாகுபடி அனுபவத்தைப் பாடமாகவும் தொகுத்து வழங்கினார்.

நிறைவாக, ''இயற்கை விவசாயத்தால, மாடுகளுக்குத் தேவையான வைக்கோல், தவிடு... எங்களுக்கும் நஞ்சில்லாத அரிசி கிடைக்கறதோட, ரசாயன விவசாயத்தைவிட கூடுதல் வருவாயும் கிடைக்குது. இதைவிட வேற என்ன வேணும்?'' என்று கேள்வி எழுப்பி முடித்தார் சுப்பிரமணியசிவா!

 தொடர்புக்கு, சுப்ரமணியசிவா,
செல்போன்: 77081-57057

 நவீன நாற்றங்கால்!

ஒரு ஏக்கரில் ஒற்றை நாற்று முறையில் நெல் சாகுபடி செய்ய, 5 கிலோ விதைநெல் தேவைப்படும். 2 அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்ட சுருட்டும் தன்மையுள்ள பிளாஸ்டிக் டிரே 25 தேவைப்படும் (ஒரு டிரே... 15-25 ரூபாய் விலையில் கிடைக்கும்). டிரேயில் அரை இஞ்ச் உயரத்துக்கு சேற்றைப் பரப்பி, ஒவ்வொரு டிரேயிலும் தலா 200 கிராம் விதையைத் தூவி, வைக்கோல் போட்டு மூடவேண்டும். தினமும் 56 முறை பூவாளியால் தண்ணீர் தெளிக்கவேண்டும். 3-ம் நாள் வைக்கோலை எடுத்துவிட்டு, அதன்பிறகு தேவைக்கு ஏற்ப தண்ணீர் தெளிக்க வேண்டும். 12-ம் நாள் 200 மில்லி பஞ்சகவ்யாவை, 10 லிட்டர் தண்ணீர் கலந்து, அனைத்து டிரேயிலும் பகிர்ந்து தெளிக்கவேண்டும். 15-ம் நாள் நாற்று பறிப்புக்குத் தயாராகிவிடும். இதுபோல் டிரேயில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் தரமானதாகவும், நடவு வயலுக்கு எடுத்துச் செல்ல எளிதாகவும் இருக்கும்.

இலை, தழைகளை மண்ணில் அழுத்த வேண்டும்!

நாற்று தயாராவதற்கு 45 நாட்கள் முன்னதாகவே, நடவு வயலைத் தயாரிக்க வேண்டும். ஏக்கருக்கு

15 கிலோ தக்கைப்பூண்டு தெளித்து, 60-ம் நாள் (நாற்று தயாராக இருக்கும்போது) மடக்கி உழுது, 4 சால் உழவு ஓட்ட வேண்டும். மண்ணை சமப்படுத்திய பிறகு, தலா 5 கிலோ சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை பரவலாக எல்லா இடங்களிலும் தூவவேண்டும். வேப்பிலை, புங்கன் இலை, வாதாநாராயண இலைகளை குச்சியோடு தலா 300 கிலோ அளவுக்கு போட்டு, பவர் டில்லரால் மண்ணுக்குள் லேசாக அழுத்த வேண்டும்.

இப்படி நிலத்தைத் தயாரித்து, ஒற்றை நாற்று முறையில் முக்கால் அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவிலிருந்து 10, 25, 45ம் நாட்கள் தலா 10 லிட்டர் பஞ்சகவ்யாவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15, 35, 55ம் நாட்களில் தலா 10 லிட்டர் அமிர்தக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். தேவைக்கு ஏற்ப, களையெடுக்க வேண்டும்.

 ஐந்து ரக நெற்களின் குணங்கள்!

சேலம் சென்னா; 5 அடி உயரம் வரை வளரும். இந்த நெல், பொன் நிறத்திலும்... அரிசியானது தும்பைப் பூ போல வெள்ளை நிறத்திலும் அதி சன்னமாக இருக்கும். இது சாப்பாட்டுக்குச் சிறப்பானது. சமைக்கும்போது அதிகமாகக் குழையவிட்டாலும், பிறகு விரைத்துக் கொள்ளும். பழைய சோறு மணம் வீசும்!

மாப்பிள்ளைச் சம்பா; 6 அடி உயரத்துக்கு மேலும் பயிர் வளர்ச்சி இருக்கும். மோட்டா ரகமான இதன் நெல், அரிசி இரண்டுமே சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியைக் களைந்த தண்ணீரைக் குடித்தால், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். இது விரைவில் செரிமானம் ஆகக்கூடியது.

சிவப்புக் குருவிக்கார், சிவப்புக் கவுனி; மோட்டா ரகமான இந்த இரண்டு ரகங்களுமே 6 அடி உயரம் வரை வளரும். நெல், அரிசி இரண்டுமே சிவப்பு நிறத்தில் இருக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்தது.

வெள்ளை பொன்னி; நான்கரையடி உயரம் வளரும். நெல், அரிசி இரண்டுமே வெண்மை நிறத்தில் இருக்கும். இதில் அதிரசம், முறுக்கு செய்தால் அற்புதமாக இருக்கும். பழைய சோற்றுக்கும் அருமையாக இருக்கும். இதில் பொங்கல் செய்து சாப்பிட்டால், ரொம்பவே சுவையா இருக்கும்.

 பூச்சியை அழிக்கும் பூண்டுக் கரைசல்!

கருவண்டு, கதிர்நாவாய், செஞ்சூரை உள்ளிட்ட எந்தவிதமான பூச்சித் தாக்குதல்கள் ஏற்பட்டாலும்... தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், அரை கிலோ வசம்பு ஆகியவற்றை தனித்தனியாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு, அனைத்தையும் ஒன்றாக்கி, அரை லிட்டர் மண்ணெண்ணெய் கலந்து வைத்துவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, நன்கு வடிகட்டி, ஒரு லிட்டர் சாறுக்கு, 100 லிட்டர் தண்ணீர் என்கிற விகிதத்தில் கலந்து, ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். இதனால் பூச்சிகளுக்குக் கடுமையான அரிப்பு உண்டாகி, தம்மைத்தாமே கடித்துக் கொண்டு, அழிந்துபோகும். இக்கரைசலைத் தெளிக்கும்போது, தெளிப்பவர் மீது பட்டால், எரிச்சல் உண்டாகும். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தோலில் பட்டால் எரிச்சலை ஏற்படுத்தும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு