Published:Updated:

ஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனம்...

ஜி. பழனிச்சாமி,படங்கள்: தி. விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 தென்னை வனம்... வேளாண் காடுகள்..

ஈரியோபைட் தாக்குதலைக் குறைத்த ஜீவாமிர்தம்...

குறைந்த செலவு... நிறைந்த லாபம்...

##~##

ங்கி உயர்ந்த செழிப்பான மலைத்தொடர்; அதிலிருந்து கசிந்து வரும் சிற்றோடை; நீர் ததும்பும் இரண்டு குளங்கள்; வரிசை கட்டி நிற்கும் புளியமரங்கள்; 'இன்னும் இருக்கிறோம்’ என்று கட்டியம் கூறும் நாட்டுமாடுகள்; அழகிய வீடு! சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துள்ள தென்னை வனம், ஊடுபயிராகவும், தனியாகவும் வளர்ந்துகொண்டிருக்கும் தேக்கு, பாக்கு, மலைவேம்பு உள்ளிட்ட பலவகை மரங்கள். பண்ணையைச் சுற்றிலும் அரணாக சோலார் மின்வேலி...

-இப்படி ஒரு பண்ணைக்குரிய அத்தனை அம்சங்களாலும் நிரம்பி வழிகிறது அந்தப் பண்ணை. இது... கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கோட்டூர், மலையாண்டிப்பட்டணம் அருகே அமைந்திருக்கும் சந்தோஷ் பண்ணை!

முற்பகல் பொழுதில் அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது... தொழுவத்தில் இருந்த நாட்டுமாடுகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்... 'பண்ணையின் உரிமையாளரும்... ஜப்பானிய இயற்கை விவசாய வல்லுநர் மசானபு ஃபுகோகாவிடம் நேரடிப் பயிற்சி பெற்றவருமான இயற்கை விவசாயி மது. ராமகிருஷ்ணன்.

ஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனம்...

''இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானவங்க இங்க வந்து 'ஆக்ஸிஜன்' வாங்கிட்டு போயிருக்காங்க. ஆயுளைக் கூட்டுற ஆரோக்கிய வனமா இதை மாத்திக்கிட்டிருக்கேன். யானை, சிறுத்தை, மான், நரி...  இப்படி பலவிதமான விலங்குகளும்... மயில், குயில், மணிப்புறா, மாடப்புறானு பலவகை பறவைகளும் இங்க அப்பப்ப வந்து, தங்கிட்டுப் போகுதுங்க'' என்று பெருமையோடு சொன்னவர்... பண்ணையைச் சுற்றிக் காட்டியபடியே பேசத் தொடங்கினார்.

''பூர்விகமே இந்த ஊர்தாங்க, இந்தப் பகுதியில தென்மேற்குப் பருவமழை தவறாம பெய்யும். நிலக்கடலை, கேழ்வரகு, சோளம்னு தானிய வெள்ளாமையும், பாசிப்பயறு, கொள்ளு, தட்டை, உளுந்து, துவரைனு பயறு வகைகளும் மானாவாரியில சாகுபடி சக்கை போடு போட்ட ஊரு. ஓவ்வொருத்தரும் நூத்துக்கணக்கான நாட்டுமாடுகளை வெச்சுருந்தாங்க. எல்லா வீட்டுத் தூண்கள்லயும் மோர் சிலுப்பும், மத்து சத்தமும் கேட்டுக்கிட்டே இருக்கும். பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம் வந்து, மானாவாரி நிலங்களையெல்லாம் தென்னந்தோப்பா மாத்திடுச்சு'' என முன்கதைப் பேசி முடித்த ராமகிருஷ்ணன், இயற்கை விவசாயத்தை நாடி வந்த காரணத்தைச் சொல்லத் தொடங்கினார்.

வரவு எட்டணா... செலவு பத்தணா !

''அப்பா, விவசாயத்தைப் பார்த்துகிட்டார். அரசாங்கத்துல பொறியாளர் வேலையில இருந்த நான், அதை உதறிட்டு, ஊர்ல உரக்கடை ஆரம்பிச்சேன். தோட்டத்துப் பக்கமே போகாம, வியாபாரமே முக்கியம்னு இருந்துட்டேன். அப்பா, இறந்த பிறகு விவசாயம் பாக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுச்சு. பண்ணைக்கு வந்ததும், முதல் வேலையா இத்தனை நாளும் அப்பா எழுதி வெச்சிருந்த விவசாய வரவு-செலவு கணக்குகளைக் கையில எடுத்தேன்... அதிர்ந்தேன். இத்தனை வருஷமா விவசாயம் பாத்தும்... வரவைவிட, செலவுதான் அதிகமா இருந்துச்சு. அப்ப, 'இத்தனை வருஷமும் அப்பா விவசாய வேலை பார்த்தது எல்லாமே நஷ்டத்துக்குத்தானா?’னு யோசிச்சேன்.

இயற்கைக்குத் திருப்பிய ஃபுகோகா !

செலவு கணக்குல... ரசாயன இடுபொருள் செலவுகள்தான் அதிகமா இருந்துச்சு. அது சரியான விவசாய முறையா எனக்குத் தோணல. உடனே என் உரக் கடைக்கு பூட்டுப் போட்டுட்டு, ரசாயன விவசாயத்துக்கான மாற்று வழி தேடத் தொடங்கினேன்.

ஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனம்...

அந்த சமயத்துலதான்... நண்பர் மூலமா 'மசானபு ஃபுகோகா’ எழுதின 'ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகம் கிடைச்சுது. முழுசா படிச்சதுல.. ரசாயனத்துக்கு எதிரான மாற்றுவழியை அந்தப் புத்தகம் எனக்குக் கத்துக் கொடுத்துச்சு. 'விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் ஒரே வழி... இயற்கை வேளாண்மைதான்’னு தெரிஞ்சுகிட்டேன். 2002-ம் வருஷம் டேராடூன்ல தங்கியிருந்து, 'மசானபு ஃபுகோகா’ நடத்தின இயற்கை வேளாண்மைப் பயிற்சியில கலந்துக்கிட்டு, ரெண்டு வாரம் அவர்கிட்ட நேரடிப் பயிற்சி எடுத்தேன்.

ஊக்கம் கொடுத்த ஊடுபயிர்கள் !

ஊருக்குத் திரும்பியதும், 'சுலப வேளாண்மைக் குழு’ ஒண்ண ஆரம்பிச்சேன். சுயசார்பு (சு)... லாபம் (ல)... பண்ணையம்(ப)... என்ற முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வேலையை அந்தக் குழு செய்தது. என்னோட பண்ணையை முழுஇயற்கை விவசாயப் பண்ணையா... வேளாண் காடுகள் வளர்ப்பு மையமா மாத்தினேன். தொடர்ந்து... நம்மாழ்வார் போன்றவர்களின் தொடர்பும், ஆலோசனையும் கிடைச்சுது.

தென்னை மட்டுமே தனிப்பயிரா இருந்த பண்ணையில... ஊடுபயிரா, கோக்கோ, பாக்கு, ஜாதிக்காய், கறிப்பலா, சப்போட்டா, கொய்யா, நெல்லி, கிளா போன்ற பயிர்களை நட்டேன். 10 வருஷம் ஆன நிலையில... எல்லாமே வளர்ந்து பலன் கொடுத்துட்டு இருக்குது.

6 ஏக்கர்ல... 20 வயசுள்ள 100 தேக்குமரங்களையும், ஈட்டி, சவுக்கு, யூகலிப்டஸ், வகையில தலா 50 மரங்களை வரப்புப் பயிராகவும் வளர்த்துட்டு வர்றேன்.

750 பாக்கு மரங்களும் ஊடுபயிரா பலன் தந்திட்டிருக்கு.

தீவனச் செலவு இல்லை !

19 நாட்டுமாடுகள வெச்சு பராமரிச்சுட்டு வர்றேன். என்னோட பண்ணையைச் சுற்றிலும் வனப் பரப்போட எல்லை இருக்கறதால... தழை-தாம்பு, புல்-பூண்டுனு மேய்ச்சலுக்குப் பஞ்சமில்லை. காலையில மாடுகள அவுத்து விரட்டினா போதும்... வயிறார மேயும். மத்தியான நேரத்துல உப்பாறு ஓடையில தண்ணிய குடிச்சுட்டு, சாயங்காலம் தொழுவம் வந்துடும்'' என்றபடியே தொழுவத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தொட்டிகளின் அருகே வந்து நின்றார்.

ஜொலிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !

''இதுதாங்க இந்தப் பண்ணையின் உரத் தொழிற்சாலை. 19 நாட்டுமாடுகளோட சாணத்தைப் பயன்படுத்தி ஜீவாமிர்தக் கரைசல் தயாரிச்சு, பாசனத் தண்ணியில கலந்து, வாரம் ஒருமுறை 50 ஏக்கருக்கும் பாய்ச்சுறேன். இதுனால எந்த பங்கமும் இல்லாமல் மரங்கள் நெடுநெடுனு வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்குது.

இந்தப் பகுதியில இருக்கற தென்னைகள்ல ஈரியோபைட் தாக்குதல் 40% இருக்கு. ஆனா, என்னோட தோப்புல இதோட தாக்குதல் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப

5% அளவுக்குதான் இருக்கு. அதனால, மத்த விவசாயிங்ககிட்ட வாங்குற விலையைவிட, என்னோட தேங்காய்களுக்கு 50 பைசா கூடுதல் விலை கொடுக்கறாங்க வியாபாரிங்க. இதுக்குக் காரணமே... ஜீவாமிர்தம்தான்'' என்று பெருமையோடு சொன்னார்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தன் பண்ணையை நமக்கு சுற்றிக் காட்டியவர் நிறைவாக, ''எதிர்காலத்துல இதை 'ஆயுள் கூட்டும் ஆரோக்கிய வனம்'னு மாத்தப்போறேன். அதுக்கான ஆயத்த வேலைகள துவங்கிட்டேன்.

இந்தப் பண்ணையில ரெண்டு சிறிய குளங்கள் இருக்கு. அதன் கரையில் 'மர வீடு ஒண்ணு அமைக்கப் போறேன். அதில் சோலார் பேனல், சாண எரிவாயு அடுப்பும் அமைக்கப் போறேன். வனத்தை ஒட்டியுள்ள இந்த மர வீட்டில் குடும்பத்தோட தங்கி புத்துணர்வு பெற நினைக்கிறவங்க தாராளமா வந்து போகலாம். மர வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஆழம் குறைவான குளத்துல படகு சவாரியும் செய்யலாம்'' என்றார் மகிழ்ச்சியாக.

 தொடர்புக்கு, மது.ராமகிருஷ்ணன்,
செல்போன்: 94424-16543, 98658-57134

ஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனம்...

இயற்கைச் சாயம் கொடுக்கும் தேக்கு இலை!

இந்தப் பண்ணையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே சோப் தயாரிக்கத் தொடங்கியிருக்கும் ராமகிருஷ்ணன், ''இங்க, கிடைக்கற பொருட்களை வெச்சே மூலிகை சோப் தயாரிக்கிறேன். மஞ்சள் கிழங்கு, நொச்சி இலை, துளசி, வெட்டிவேர், இளநீர், வேப்பிலைகளை மூலப்பொருளா பயன்படுத்தி குளியல் சோப்புக் கட்டிகள் தயாரிக்கிறேன். கலருக்காக தேக்குமர இலையின் செந்நிற சாறை பயன்படுத்துறேன். பண்ணைக்கு வரும் பார்வையாளர்களுக்கு இதை இலவசமாக கொடுக்கப் போறேன்'' என்று சொன்னார்.

மூலிகைச் சிற்றருவி !

ஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனம்...

அடர்ந்த நிசப்தமான அவரது பண்ணயின் ஓரிடத்தில் 10 அடி உயரத்தில் இருந்து, தடதட என சத்தத்துடன் ஒரு செயற்கை அருவியை உருவாக்கியுள்ளார். அதைப் பற்றி பேசிய ராமகிருஷ்ணன், ''வனத்தில் இருந்து ஓடிவரும் தண்ணி, என் பண்ணை வழியாகத்தான் வெளிய போகும். அப்படி பாய்ந்து ஓடி வர்ற தண்ணியை மறிச்சு, செயற்கையா அருவியை உருவாக்கியிருக்கேன். அருவி மாதிரி கீழே விழும் தன்ணி வாய்க்கால் வழியா வெளிய ஓடிடும். வனத்திலிருந்து எந்தக் கழிவுகளும் கலக்காம சுத்தமா வர்றதால இந்த தண்ணியில மூலிகைகள் கலந்து இருக்குது. இந்த அருவியில குளிச்சா கொஞ்ச நேரத்துலயே உடம்புக்குப் புத்துணர்வு கிடைச்சுடும்'' என்கிறார்.

புத்துணர்வுப் பூங்கா !

ஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனம்...

இவரது பண்ணையில் மரங்கள் சூழ்ந்து குளுமை தருகின்ற இடத்தில் கல் மேசைகள், கல் நாற்காலிகளால் உருவாக்கப்பட்ட பூங்கா ஒன்றை அமைத்துள்ளார். அதன் ஓரத்தில் கால்களை நனைத்து செல்லும்படியாக சிற்றோடை ஊர்ந்து செல்கிறது. பண்ணையின் வரைபடம், மரங்களின் விவரம் ஆகியவை அடங்கிய பலகை, பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. நடுநாயகமாக பெரிய சிமெண்ட் களமும், அதை ஒட்டி சாண எரிவாயு அடுப்புடன் கூடிய, அழகிய சிறு வீடும் அழகு சேர்க்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு