சிறப்பு கட்டுரை
நாட்டு நடப்பு
Published:Updated:

இலுப்பைப்பூ சம்பா...

வறட்சியிலும் தெம்புகாட்டும் பாரம்பரிய ரகம்..! கு. ராமகிருஷ்ணன் படங்கள்: எஸ். சிவபாலன்

பாரம்பரியம்

##~##

'சவால்களை எதிர்த்து நிற்பவர்கள்தான் சாதிக்க முடியும்’ என்பதற்கு நடைமுறை உதாரணம், திருவாரூர் மாவட்டம், புத்தகளூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார். ஆம், இவரது வயலுக்கு வண்டிப் பாதையே கிடையாது. ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்துக்கு குறுகலான வரப்பில் நடந்தால்தான் வயலையே அடைய முடியும். அத்தகைய நிலையிலும், சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து சாதித்து வருகிறார், உதயகுமார்.

இவரைப் பற்றி கேள்விப்பட்ட நாம்... 'பசுமை விகடன்’ 7-ம் ஆண்டு சிறப்பிதழுக்காக, சந்திப்பதற்கு பயணப்பட்டோம். புத்தகளூரில் இறங்கி வழி கேட்டால்... அப்பகுதி விவசாயிகளே பெருமூச்சு விட்டபடிதான் வழியைக் காட்டினர். பெரும் சிரமத்துக்குப் பிறகு, உதயகுமாரின் வயலை அடைந்தோம்.

பாரம்பரியமான பல ரகங்கள்!

இலுப்பைப்பூ சம்பா...

இன்முகத்துடன் வரவேற்ற உதயகுமார், ''மொத்தம் மூன்றரை ஏக்கர் வயல் இருக்கு. அதுல இயற்கை முறையில பாரம்பரிய நெல்களை சாகுபடி செய்றேன். தங்கச் சம்பா, மஞ்சள் பொன்னி, பூங்கார், சீரகச் சம்பா, வெள்ளை பொன்னி, மாப்பிள்ளைச் சம்பானு ஒவ்வொரு பாரம்பரிய ரகத்தையும் எனக்கு அறிமுகம் செஞ்சு வெச்சது 'பசுமை விகடன்’தான். பாரம்பரிய ரகம் தொடர்பா கட்டுரை வந்தா, படிச்சு முடிச்ச உடனே சம்பந்தப்பட்ட விவசாயிகிட்ட பேசி, விதையை வாங்கிட்டு வந்துடுவேன். இதுவரைக்கும் பலவிதமான பாரம்பரிய ரகங்களை சாகுபடி செஞ்சிருக்கேன். இப்ப ரெண்டு வருஷமா 'இலுப்பைப்பூ சம்பா’ ரகத்தை சாகுபடி செஞ்சுட்டுருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்தவர், தொடர்ந்தார்.

கவலை தீர்த்த உரக்குழி!

''ஆத்துப்பாசனம்தான் பிரதானம். பத்தாததுக்குப் பக்கத்து வயல்காரங்ககிட்ட, போர் தண்ணியை விலைக்கு வாங்கிக்குவேன். உள்ளடங்கி இருக்குறதால, வயலுக்கு இயற்கை இடுபொருட்களை எல்லாம் தயாரிச்சுக் கொண்டு வந்து வயல்ல சேக்குறது ரொம்ப கஷ்டம். அதிக செலவு பிடிக்கிற விஷயமும்கூட. ஆனாலும், இயற்கை விவசாயத்தை செய்யணுங்கிறதுக்காக என் நிலத்துலயே ஒரு உரக்குழியை அமைச்சுருக்கேன். 10 அடி நீளம், 5 அடி அகலம், 3 அடி ஆழத்துக்குக் குழி எடுத்து, அதை

இலுப்பைப்பூ சம்பா...

சுத்திலும் 2 அடி உசரத்துக்கு நல்லா உறுதியா வரப்பு கட்டியிருக்கேன். இந்தக் குழிக்கு தண்ணி வர்றதுக்கு ஒரு வழியும், வெளிய போறதுக்கு ஒரு வழியும் இருக்கு.

இலைகள் சாணம்... பத்து நாட்களில் உரம்!

விதைச்ச 12-ம் நாள், நொச்சி, நுணா, ஆடாதொடை, நெய்வேலி காட்டாமணக்கு, வேம்பு, ஊமத்தை, துளசி, எருக்கன், பீசங்கு, புங்கன், காட்டுக் கத்தாழைனு எல்லா இலைகள்லயும் கலந்து, சுமார் 150 கிலோ அளவுக்குக் குழிக்குள்ள போட்டு... 100 லிட்டர் மாட்டு மூத்திரத்தையும் ஊத்தி, அரை குழி அளவுக்கு தண்ணியை நிரப்பி வெச்சுடுவேன். அதுக்கு மேல இலைதழைகளைப் பரவலா போட்டு விட்டுட்டா கரைசல் ஆவியாகாது. இந்த இலைகள் எல்லாம் பத்து நாள்ல நல்லா அழுகி கருப்பு கலர்ல மாறியிருக்கும். புளிச்ச வாடையும் அடிக்கும். அந்த நேரத்துல பாசனத் தண்ணியை இந்தக் குழிக்குள்ள விட்டுடுவேன். குழி நிறைஞ்சவுடனே தண்ணி வெளியேறி, வயல் முழுக்க பாய்ஞ்சுடும்.

பஞ்சகவ்யாவும் உரக்குழிக்குள்தான் !

அன்னிக்கே திரும்பவும் குழிக்குள்ள... 30 கிலோ சாணம், 30 லிட்டர் மாட்டு மூத்திரம், 10 லிட்டர் பால், 10 லிட்டர் தயிர், 20 கிலோ பழக்கழிவுகள், ஒரு கிலோ வெல்லம் எல்லாத்தையும் கொட்டி... இலை-தழைகளால மூடி வெச்சுடுவேன். அடுத்த 10-ம் நாள் இதையும் பாசனத் தண்ணி மூலமா வயலுக்குச் சேத்துடுவேன். அஞ்சு வருஷமா இப்படித்தான் சாகுபடி பண்ணிக்கிட்டுருக்கேன். மழை பேய்ஞ்சாலும் கூட அந்தத் தண்ணி குழிக்குள்ள விழுந்துதான் வயலுக்குப் போகும். அதனால கவலையில்லை. இயற்கையான சூழல்ல, இதே மண்ல தயார் செய்றதால, நுண்ணுயிரிகளின் பெருக்கம் பல மடங்கு கூடுதலாவும், உயிர்ப்போடும் இருக்கு. அதனால பலனும் அதிகமாக கிடைக்குது'' என்று தொழில்நுட்பங்களை சர்வசாதாரணமாக சொன்ன உதயகுமார் தொடர்ந்தார்.

படிப்படியாகக் கூடிய மகசூல் !

''இயற்கை விவசாயத்துக்கு மாறின முதல் வருஷம், விதைப்புக்கு முன்ன கடுகு, பெருஞ்சீரகம், கம்பு, கேழ்வரகு, கொள்ளு, பச்சைப்பயறு எல்லாத்தையும் கலந்து ஏக்கருக்கு 20 கிலோன்ற அளவுல தெளிச்சு... 45 நாள் வளர்ந்ததும் மடக்கி உழுதேன். அதுக்கப்பறம், ஏக்கருக்கு 12 டன் எரு போட்டுட்டு உரக்குழி மூலமா தண்ணி பாய்ச்சுனேன். அடுத்தடுத்து ரெண்டு வருஷம் எரு கொடுக்கல. பசுந்தாள் உரங்களை மட்டும்தான் கொடுத்தேன். அதுக்கடுத்து இப்போ, ஆட்டுக்கிடை மட்டும் கட்டிட்டு, உரக்குகுழி மூலமா பாசனம் மட்டும்தான் செய்றேன். இப்போ மண் நல்ல வளமாயிடுச்சு. படிப்படியா மகசூலும் கூடிடுச்சு. நவீன ரகம்னா, ஏக்கருக்கு சராசரியா 30 மூட்டை கிடைக்குது. பாரம்பரிய ரகங்கள்னா சராசரியா 26 மூட்டை மகசூல் கிடைக்குது.

வறட்சியிலும் தாங்கிய பாரம்பரியம்!

இலுப்பைப்பூ சம்பா...

இந்த வருஷம் வறட்சி கடுமையா இருந்ததால ரெண்டரை ஏக்கர்ல மட்டும்தான் இலுப்பைப்பூ சம்பா சாகுபடி பண்ணிருக்கேன். ஏக்கருக்கு 25 கிலோ விதைநெல் தெளிச்சேன். விதைச்ச 10-ம் நாளே நல்ல மழை கிடைச்சுது. அதனால, பயிர் நல்லா செழிப்பா வளந்தது. அதுக்கப்பறம், ஒரு மாசத்துக்கு தண்ணி, இடுபொருளெல்லாம் கொடுக்காமலே, ஒன்றரையடி உசரத்துக்கு வளர்ந்துடுச்சு. அதேநேரத்துல ரசாயன உரம் போட்ட விவசாயிங்களோட பயிர்களெல்லாம் வளர்ச்சி இல்லாம போயிடுச்சு. பச்சையும் பிடிக்கல.

விதைச்ச 40-ம் நாள்தான் ஆத்துத் தண்ணி கிடைச்சது. உடனே உரக்குழியைத் தயார் பண்ணி இடுபொருள் கரைசலைப் பாய்ச்சுனேன். திரும்பவும் தண்ணிக்குத் தட்டுப்பாடாயிடுச்சு. ஆனாலும், ஒன்றரை மாசத்துக்கு பயிர் தாக்குப் பிடிச்சுச்சு. அப்பறம் தன்ணியை விலைக்கு வாங்கி பாய்ச்சுனேன். இப்ப பயிருக்கு 130 நாள் வயசாகுது. இந்த நேரத்துல அஞ்சரையடி உயரம் இருக்கணும். வறட்சியினால,

4 அடி உயரம்தான் இருக்கு. அறுவடை செஞ்சா, ஏக்கருக்கு 20 மூட்டை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். முறையா தண்ணி கொடுத்திருந்தா கூடுதல் மகசூல் கிடைச்சுருக்கும். அரிசியா அரைச்சுத்தான் விக்கலாம்னு இருக்கேன்'' என்ற உதயகுமார் நிறைவாக,

''இந்த வறட்சியிலயும் இந்தளவுக்கு பயிர் தேறி வந்து, கை கொடுத்தது பெரிய விஷயம். ரசாயனம் மூலமா சாகுபடி பண்ணின பலருக்கும் பயிர் கருகிப் போற நிலைமைக்குப் போயிடுச்சு. சிலருக்கு எல்லாமே பதரா போயிடுச்சு. இப்படிப்பட்ட நிலையிலயும், வழக்கத்தைவிட ஆறு மூட்டை மட்டுமே மகசூல்ல குறையற மாதிரி இருக்கறது ஆச்சரியம்தானே! இதெல்லாமே... இயற்கை முறை விவசாயம், பாரம்பரிய நெல் ரகம் இது ரெண்டாலதான் சாத்தியம். இதுக்கு எனக்கு வழிகாட்டிய பசுமை விகடனுக்குத்தான் நன்றி சொல்லணும்'' என்று உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகளால் உற்சாகமாகச் சொன்னார்!  

தொடர்புக்கு, உதயகுமார், செல்போன்: 93458-08198