Published:Updated:

நீர் மேலாண்மை : பெய்யெனப் பெய்யும் மழைத்தூவி...

தோட்டத்து விவசாயியாக மாறிய... மானாவாரி விவசாயி!ஜி. பழனிச்சாமி,படங்கள்: க. ரமேஷ்

நீர் மேலாண்மை : பெய்யெனப் பெய்யும் மழைத்தூவி...

தோட்டத்து விவசாயியாக மாறிய... மானாவாரி விவசாயி!ஜி. பழனிச்சாமி,படங்கள்: க. ரமேஷ்

Published:Updated:
##~##

 'தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும்’-

கவிஞர் வைரமுத்து, ஒரு திரைப்படத்துக்காக எழுதியிருக்கும் இந்தப் பாடல் வரிகள், வாழ்க்கையின் எதார்த்தப் பதிவு. 'நமக்கு வாய்த்தது இவ்வளவுதான்’ என மூலையில் முடங்கி விடாமல், அதற்கேற்றவாறு சூழலையும், பணிகளையும் மாற்றி அமைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது, வெற்றி. அந்த வகையில், தனது தேடலின் மூலமாக மானாவாரி நிலத்தை, காய்கறித் தோட்டமாக மாற்றி இருக்கிறார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிட்டுசாமி.

திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லைகள் கை குலுக்கும் பகுதியில் இருக்கிறது, குமாரசாமிகவுண்டன் வலசு கிராமம். இங்கேதான் இருக்கிறது கிட்டுசாமியின் தோட்டம். ஆகா... அது வெறும் தோட்டமல்ல, பாரம்பரியம் பேசும் உயிரியல் பூங்கா. ஆம்... முயல் குட்டிகூட நுழைய முடியாதபடி உயிர் வேலியால் சூழப்பட்ட செம்மண் நிலம். மூங்கில் கதவுடன் கூடிய வழித்தடம், மேய்ந்து கொண்டிருக்கும் நாட்டு மாடுகள், கழுத்தில் கிட்டி மாட்டிய வெள்ளாடுகள், வண்டிச்சக்கரத்தில் கட்டப்பட்ட கட்டுச்சேவல்கள், இளம் குஞ்சுகளுடன் பவனி வரும் தாய்க்கோழி, கருவேல மரத்தில் கட்டியிருந்த கோம்பை நாய்கள், அம்பாரமிடப்பட்டிருக்கும் கடலைக்கொடிப் போர், மரத்தடியில் ஓய்வெடுக்கும் வில் வண்டி... எனப் பழமை மாறாத விஷயங்களை உள்ளடக்கி, பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கிறது தோட்டம்!

நீர் மேலாண்மை : பெய்யெனப் பெய்யும் மழைத்தூவி...

அன்று புஞ்சை... இன்று நஞ்சை!

கடலைக்கொடிகளைப் பறித்து நாட்டு மாடுகளுக்குப் போட்டுக் கொண்டிருந்த கிட்டுசாமி, நம்மை உற்சாகமாக வரவேற்றார். ''இந்த நிலம் மொத்தம் மூணு ஏக்கர். கொஞ்ச நாள் முன்ன வரைக்கும் சோளம், கம்புனு வானம் பார்த்த வெள்ளாமை மட்டும் செஞ்ச பூமி. ஆனா, இப்ப அப்படியில்ல...

நீர் மேலாண்மை : பெய்யெனப் பெய்யும் மழைத்தூவி...

வெங்காயம், வெண்டை, மிளகாய்னு சாகுபடி பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்குக் காரணம், 'பசுமை விகடன்’தாங்க'' என்ற கிட்டுசாமி,

''என்னை இப்படி மாத்தினவர் இந்த, சேதுபதி தம்பிதான்'' என்றபடி அருகில் இருந்த இளைஞரை அறிமுகப்படுத்தினார்.

நம்மிடம் பேசிய சேதுபதி, 'எங்க ரெண்டு பேரு நிலமும் பக்கம்பக்கமா இருக்கு. முதல் 'பசுமை விகடன்’ புத்தகத்துல இருந்து இப்போ வரைக்கும் அத்தனையையும் பத்திரமா பாதுகாத்து வெச்சுருக்கேன். ஒவ்வொரு புத்தகத்துலயும் ஏராளமான புதுப்புது தகவல்கள் எங்களுக்குக் கிடைக்குது. அந்த மாதிரி விஷயங்களை நான் உடனே நடைமுறைப்படுத்திடுவேன். அதோட மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுப்பேன். இவர், (கிட்டுசாமி) மானாவாரி நிலத்தை, தோட்ட வெள்ளாமைக்கு மாத்துறதுக்காக,

500 அடிக்கு 'போர்’ போட்டு 2 ஹெச்.பி மோட்டார் மாட்டுனாரு. ஆனாலும், தண்ணி போதல. 'எப்படியாவது காய்கறி சாகுபடி பண்ணிப்புடலாம்’னு ஆர்வமா இருந்தவர், ரொம்பவே விசனப்பட்டுட்டார். அந்த சமயத்துலதான், 'பசுமை விகடன்’ல வந்த 'தெளிப்பு நீர்ப் பாசன முறை’ பத்தின செய்தியைப் படிச்சுட்டு இவர்கிட்ட சொன்னேன்'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்த கிட்டுசாமி,  

நீர் மேலாண்மை : பெய்யெனப் பெய்யும் மழைத்தூவி...

''சொட்டுநீர்ப் பாசனம் (டிரிப்) அல்லது தெளிப்பு நீர்ப் பாசனம் (ஸ்பிரிங்லர்) அமைச்சா, குறைவான தண்ணி இருந்தாகூட அதிக பரப்புல விவசாயம் செய்யலாம்னு தெரிஞ்சுக்கிட்டதுமே, அது ரெண்டுல ஏதாவது ஒண்ணை அமைச்சுடணும்னு முடிவு செஞ்சுட்டேன். அதுக்காக ஒரு கம்பெனிகாரங்ககிட்ட பேசினப்போ.. அவங்க வந்து பாத்துட்டு, 'கரண்ட் பிரச்னையை சமாளிக்கணும்னா, டீசல்ல ஓடுற ஜெனரேட்டர் பொருத்தி மோட்டாரை ஓட்டுன்னாத்தான் சரியா இருக்கும்’னு சொன்னாங்க. உடனே, அதுக்கான வேலைகள்ல இறங்கினா, அக்கம் பக்கத்து விவசாயிகள் எல்லாம், 'இது வெட்டிவேலை’னு சந்தேகம் கிளப்பினாங்க. ஆனா, நான் கவலையேபடல. நம்பிக்கையோட, 70 ஆயிரம் ரூபாய்க்கு புது ஜெனரேட்டர் வாங்கி, 3 ஹெச்.பி மோட்டாரைப் பொருத்தி ஓட்டிப் பார்த்தேன், தண்ணி நல்லா கொட்ட ஆரம்பிச்சுடிச்சு.

செயற்கை மழைத்தூவி !

அந்த சமயத்துலதான், 'புறா பாண்டி’ பகுதியில 'ரெயின் கன்’ பாசன முறை (மழைத்தூவிப் பாசனம்) பத்தி ஒரு கேள்விக்கு பதில் வந்துருந்துச்சு. அதையே தோட்டத்துல அமைச்சுட்டேன். கிட்டத்தட்ட மூணு வருஷமா மேய்ச்சல் நிலத்துல புல், பூண்டுகூட முளைக்காமக் கிடந்துச்சு. ஆடு, மாடுகளுக்குக் காசு கொடுத்துத்தான் தீவனம் வாங்கிப் போட்டுக்கிட்டு இருந்தேன். 'ஒரே ஒரு மழை கிடைக்காதா’னு ஏங்கிக்கிட்டு இருந்தேன். ரெயின் கன் போட்டதும் அந்தக் கவலை தீந்துடுச்சு. 6 அடி உசரத்துல சுத்தி

நீர் மேலாண்மை : பெய்யெனப் பெய்யும் மழைத்தூவி...

சுத்தி மழை மாதிரி தண்ணி பீச்சி அடிச்சதுல, பத்தே நாள்ல மேய்சசல் நிலம் முச்சூடும் 'பச்சைப்பசேல்’னு ஆயிடுச்சு. ஆடு, மாடுக கொளுத்துற வெயில்லயும் நின்னு வயிறார மேயுதுக'' என்று பெருமிதத்தோடு சொன்ன கிட்டுசாமி, நிறைவாகச் சொன்னது-

''சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம்னா... அந்தக் கருவிகளை ஒரே இடத்துலதான் பொருத்த முடியும். ஆனால், ரெயின் கன்னை தேவையான இடத்துக்கு மாத்திக்க முடியுது. செலவும் அதிகமில்லை. அதை வெச்சுத்தான், வெங்காயம், நிலக்கடலை, பாசிப்பயறு, வெண்டை, சோளம்னு சாகுபடி செய்றேன். ஒரு ஏக்கர் வெள்ளாமைனா பாத்தி, வரப்பு, வாய்க்கால்னு 15 சென்ட் போயிடும். ஆனா, ரெயின் கன் போட்டா வாய்க்கால், பாத்தியெல்லாம் தேவையே இல்லை. அதனால, 15 சென்ட் நிலத்துல கூடுதல் மகசூல் கிடைக்கும். வாரம் ரெண்டு முறை மட்டும் தண்ணி விட்டா போதும். டீசல் ஜெனரேட்டர் வெச்சு விவசாயம் செய்றதால செலவு கொஞ்சம் கூடுதல்தான், ஆனாலும், குறைவாப் பயன்படுத்துறதால ஓரளவுக்கு கட்டுபடியாகுது. மண்ணு மனசு வெச்சு விளையுதே... அது போதாதா? மானாவாரி விவசாயியா இருந்த என்னை தோட்ட விவசாயியா மாத்தின பசுமை விகடனுக்கு காலத்துக்கும் நான் கடமைப் பட்டிருக்கேன்.''  

தொடர்புக்கு, சேதுபதி, செல்போன்: 96261-50332.

 ''அரசு மானியம் உண்டு!''

நீர் மேலாண்மை : பெய்யெனப் பெய்யும் மழைத்தூவி...

ரெயின் கன் பாசனக்கருவிகள் பற்றிப் பேசிய பொறியாளர் ராஜாமணி, ''ஒரு ஏக்கருக்கு நான்கு ரெயின்கன்கள் தேவை. சில விவசாயிகள், 'இரண்டே போதும்’ என்கிறார்கள். அதில் தவறில்லை. இரண்டு கருவிகள் மட்டும் வைத்துள்ளவர்கள் அடுத்த இடத்துக்கு எடுத்துச் சென்று மாற்றி மாற்றி வைக்க வேண்டியிருக்கும். 30 மீட்டர் விட்டம், 15 மீட்டர் ஆரம் என்கிற சுற்றளவில் பாசன நீரைப் பீய்ச்சி அடிப்பதால், 15 நிமிடங்களில் பயிருக்கான முழு தண்ணீரும் கிடைத்துவிடும்.

3 ஹெச்.பி முதல் 5 ஹெச்.பி திறன் கொண்ட பம்ப் செட் மோட்டார்கள், இதற்குப் போதுமானது. ரெயின் கன் ஸ்டேன்டின் அமைப்பு விரித்து, உயர்த்திக் கொள்ளும்படி இருப்பதால்... கருவியின் அருகில் உள்ள பயிருக்கும் பாசன நீர் கிடைக்கும். மானாவாரி பயிர்கள், காய்கறிகள், பயறு வகைகள், நிலக்கடலை என அனைத்துப் பயிர்களுக்கும் மிகச்சிறந்தது, ரெயின் கன் பாசனம். இதற்கு அரசு மானியமும் உண்டு'' என்றார்.

 ஆள் இல்லை, செலவு இல்லை, சேதாரம் இல்லை!

தனது அரை ஏக்கர் கொத்தமல்லி வயலில் தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்துள்ளார், சேதுபதி. 3 அடி உயரம், அரை அங்குலம் சுற்றளவு கொண்ட பி.வி.சி. குழாயின் முனையில் இணைக்கப்பட்டிருக்கும் சுழலும் பட்டாம்பூச்சி வடிவத் துளையில் இருந்து, பீய்ச்சி அடிக்கும் பாசனநீர் 25 நாள் வயதான கொத்தமல்லிச் செடிகளை நனைத்துக் கொண்டிருந்தது.

நீர் மேலாண்மை : பெய்யெனப் பெய்யும் மழைத்தூவி...

''எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு, அதுல ஒரு ஏக்கர்ல புடலைப்பந்தல் அமைச்சு சொட்டுநீர் போட்டிருக்கேன். மீதி ஒரு ஏக்கர்ல 'ஸ்பிரிங்லர்’ போட்டு... அரை ஏக்கர்ல தீவனப்புல்லும், அரை ஏக்கர்ல கொத்தமல்லியும் போட்டிருக்கேன். 6 அடி நீளம், 3 அடி அகலத்துக்கு பாத்தி எடுத்து, ரெண்டு முனையிலும் ஸ்பிரிங்லர் கருவியை அமைச்சுக்கணும். வாய்க்கால் பாசனத்துல, ஒரு மணி நேரம் ஓடுனா, இதுல அரை மணி நேரம் ஓடுனாலே போதுமானதா இருக்கும். தண்ணியோட தேவை குறையுறதோட, தண்ணி கட்ட ஆளுங்களும் தேவையில்லை. ஒரே ஆளே பத்து ஏக்கர் நிலத்துக்கும் பாசனம் செஞ்சுடலாம். ஸ்பிரிங்லர் பத்தி, 'பசுமைவிகடன்’ மூலம்தான் தெரிஞ்சுக்கிட்டேன். அதில் பேட்டி கொடுத்திருந்த சொட்டுநீர்ப் பாசன அமைப்புப் பொறியாளர் ராஜாமணிகிட்ட போன்ல ஆலோசனை கேட்டுக்கிட்டுத்தான் ஸ்பிரிங்லரை பொருத்தினேன். இப்ப, அருமையா பயிர் விளைஞ்சுருக்கு'' என்று சொன்னார் சேதுபதி.