Published:Updated:

வகுப்பறையில் பசுமை விகடன்... பள்ளிவளாகத்தில் வயல் காடு..

அசத்தும் மாணவ விவசாயிகள் ! நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: ர. அருண் பாண்டியன்

வகுப்பறையில் பசுமை விகடன்... பள்ளிவளாகத்தில் வயல் காடு..

அசத்தும் மாணவ விவசாயிகள் ! நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: ர. அருண் பாண்டியன்

Published:Updated:

ஆர்வம்

##~##

கரூர், வாங்கல் சாலையில் வள்ளலார் கோட்டத்தில் அமைந்திருக்கும் குருதேவர் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நீங்கள் நுழைந்தால்... 'என்ன இது, பள்ளிக்கூடத்துக்கு நடுவுல வயக்காடு?' என்று ஒரு நிமிடம் தடுமாறாமல் இருக்க மாட்டீர்கள்!

காய்கறிகள், கீரைகள் என்று வரிசையாக அணிவகுக்கும் பயிர்கள்... உங்களை அசரடிக்கும்! அத்தனையும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ விவசாயிகளின் கைவண்ணம்தான்!

'தேர்வில் வெற்றி பெறுவதற்காக பள்ளிப் பாடம், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக பசுமைப் பாடம்’ என்றபடி பள்ளி வளாகத்திலேயே விவசாயம் செய்து அசத்திக் கொண்டிருக்கும் இந்த மாணவர்கள் அனைவருமே 'பசுமை விகடன்' வாசகர்கள் என்பது, ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

இதுபோதாதா, 7ம் ஆண்டு சிறப்பிதழுக்கு இந்த மாணவர்களை சந்திக்க..! அந்த வளாகத்தில் நாம் போய் இறங்கியதுமே.... குஷியோடு நம்மை சூழ்ந்துகொண்ட மாணவர்கள், மடைதிறந்த வெள்ளமெனக் கொட்டத் தொடங்கினார்கள்.

வகுப்பறையில் பசுமை விகடன்... பள்ளிவளாகத்தில் வயல் காடு..

''பள்ளி வளாகம் முழுக்க எங்க பார்த்தாலும் செடி, கொடி, மரங்கள்னு இயற்கை சூழ்ந்து இருக்கறது... எங்க எல்லாருடைய மனசையும் தினம் தினம் இதமாக்கிடுது. இன்னிக்கு எங்க பள்ளிக்கூடம் ஒரு 'பசுமைப் பள்ளி'ங்கற அளவுக்கு புகழ் பெற்றிருக்கறதுக்கு காரணமே... பசுமை விகடனும், நம்மாழ்வார் ஐயாவும்தான். பாடப் புத்தகத்தில வெறும் பாடங்களை மட்டும்தான் படிக்கிறோம். ஆனா, உண்மையான வாழ்க்கைப் பாடங்களை 'பசுமை'யிலதான் படிக்கிறோம்'' எனச் சொல்லி, ஒன்பதாம் வகுப்பு மாணவன் பிரபாகரன் நிறுத்த, தொடர்ந்தார் ஆறாம் வகுப்பு வைரபெருமாள்.

''எங்க பள்ளிக்கூட கட்டடங்களுக்கு நடுவுல காலியா இருக்கற இந்த இடத்துலதான் நாங்க விவசாயம் செய்றோம். வட்டப்பாத்தி அமைச்சு, காய்கறி, கீரைகளை விளைவிக்கிறோம். நாங்க ஒவ்வொருத்தரும் பள்ளிக்கூடத்துக்குள்ள கால் வெச்சா.... இவங்களையெல்லாம் (செடிகள்) பார்த்துட்டேதான் வகுப்புக்குப் போவோம். அன்னிக்குப் பூரா எங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும்'' என்று மலர்ச்சியுடன் சொன்னார் வைரபெருமாள்.

வகுப்பறையில் பசுமை விகடன்... பள்ளிவளாகத்தில் வயல் காடு..

''மூலிகைப் பூச்சிவிரட்டி, பஞ்சகவ்யம், அமுதக்கரைசல் எல்லாத்தையும் நாங்களே தயார் செஞ்சு 15 நாளைக்கு ஒருமுறை காய்கறிச் செடிகளுக்கு தெளிப்போம். பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்துற இயற்கை வழி வேளாண்மை வகுப்பு... ஒவ்வொரு வாரமும் இங்கதான் நடக்கும். அப்ப, பயிற்சி தர்றதுக்காக நம்மாழ்வார் ஐயா, 'மரம்' தங்கசாமி ஐயானு பெரியவங்க பலரும் வருவாங்க. அவங்களோட பேச்சையெல்லாம் கேப்போம். அதிலிருந்தும் எங்களுக்கு நிறைய குறிப்புகள் கிடைக்குமே!'' என்று ஏழாம் வகுப்பு சங்கரி குஷியோடு பகிர...

வகுப்பறையில் பசுமை விகடன்... பள்ளிவளாகத்தில் வயல் காடு..

''பசுமை விகடனைப் பாத்துத்தான் அசோலா வளக்க கத்துகிட்டோம். எங்க ஹாஸ்டல் சாப்பாட்டுல, ரசம், வடைனு அசோலாவுல செஞ்சு கொடுப்பாங்க. ரொம்ப சுவையா இருக்கும். நாங்க அசோலாவை பச்சையாவும் சாப்பிடுவோம். அப்பப்ப இங்க இருக்கற பால் மாடுகளுக்கும் கொடுப்போம்'' என்று அழகாக அடுக்கிய ஆறாம் வகுப்பு சிவதாரணி, அடுத்து எடுத்து வைத்த விஷயங்கள்... ஆச்சரியத்தின் உச்சம்!    

''கோவணாண்டி கடுதாசியைப் படிச்சுத்தான் விவசாயிகளோட கஷ்டங்களைப் புரிஞ்சுக்குறோம். புறா பாண்டி, மண்புழு மன்னாரு, பயனுள்ள கட்டுரைகள் எல்லாத்தையும் தனியா வெட்டி எடுத்து, பசுமை விகடனுக்குனு ஸ்பெஷலா நாங்க வெச்சுருக்கற நோட்ல ஓட்டி வெச்சுப்போம். எங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்ததுனா அதைப் பார்த்து தெரிஞ்சுப்போம்.

எங்க அக்கா (வகுப்பு ஆசிரியரை இப்படித்தான் அழைக்கிறார்கள்), எல்லாரையும் உட்கார வெச்சு பசுமை விகடன்ல இருக்கற விஷயங்கள சொல்லித் தருவாங்க. பாடத்தைப் படிக்கறதவிட, ரொம்ப ஜாலியா படிப்போம். அதுல வர்ற கட்டுரைகள் தொடர்பா டெஸ்ட் வெச்சா... நாங்க எல்லாருமே முதல் மார்க் வாங்குவோம். அந்த அளவுக்குக் கரைச்சு குடிக்கிறோம்ல'' என்று அசரடித்தார் சிவதாரணி.

''கொஞ்ச நாளைக்கு முன்ன வெளிவந்த கால்நடைச் சிறப்பிதழ்ல பல விஷயங்களைப் படிச்சுட்டு, எங்க பள்ளியில இருக்கற கால்நடைகளுக்கு இயற்கை முறையிலதான் வைத்தியம் செய்ய ஆரம்பிச்சுருக்கோம். இதுமாதிரி இன்னும் சொல்லிட்டே போகலாம். அதையெல்லாம் எழுதறதுக்கு பசுமை விகடன்ல பக்கம் போதாது'' என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்தார்... எட்டாம் வகுப்பு பாஸ்கர்!

நிறைவாக பள்ளியின் ஆசிரியர் குமர நித்தியானந்த ஜோதியிடம் பேசியபோது... ''எங்க பள்ளியில் பலப்பல மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு மிகமுக்கிய காரணம்... பசுமை விகடன்தான். நம்மாழ்வார் ஐயாவோட அறிமுகமும் கிடைச்சதும் அதனாலதான். எங்க பள்ளிக்கூடத்துல கல்வியுடன் விவசாயத்தையும் சேர்த்தே கத்துக் கொடுக்குறோம். சரியா படிக்காதவங்கள, 'நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு'னு திட்டுவாங்க. படிக்காதவங்கதான் மாடு மேய்க்கணும்னு சொல்றதே தவறான வாதம். படிச்சவங்களும் அந்த வேலையைச் செய்றதுல என்ன தப்பிருக்கு? இங்க மாடுனு சொல்றது... விவசாயத்தையும் சேர்த்துதான். ரெண்டையும் பிரிச்சறியவே முடியாது. இந்த விஷயத்தை அடுத்தத் தலைமுறைகிட்டயாவது ஆழப் பதிக்கணும்... அவங்களையெல்லாம் விவசாயத்தை நேசிக்க வைக்கணும்கிறதுக்காகத்தான் விவசாயப் பாடங்களை நடத்துறோம். அதையெல்லாம் மிக எளிமையா மாணவர்கள்கிட்ட நாங்க கொண்டு சேர்க்கறதுக்கு 'பசுமை விகடன்'தான் எங்களோட பாடபுத்தகமாவே இருக்கு'' என்றார் பெருமையாக!

தொடர்புக்கு,
குருதேவர் மெட்ரிக்குலேஷன் பள்ளி,
செல்போன்: 92445-52224.