Published:Updated:

அமைதித் தீவைக் காப்பாற்றிய ஓர் ஆயுதம் !

ஓவியம்: ஹரன்

அமைதித் தீவைக் காப்பாற்றிய ஓர் ஆயுதம் !

ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

##~##

வடகரை கிராமத்தில் இருந்த பேதமில்லாத சமூக வாழ்க்கை முறை, பலரையும் கவரக் கூடியதாக இருந்தது. வழக்கமாக கிராமங்களில் இருப்பது போல் உழுவோர், உழுவித்து உண்போர் என இரு பிரிவுகள் இல்லாமல், 'உழுது-விதைத்து-அறுவடை செய்து உண்போர்' என்கிற ஒரே பிரிவினர் மட்டுமே இருந்தனர். இது, 'தேடல்’ (Search) என்ற அமைப்பிலிருந்து வந்திருந்த இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தேடல்’ அமைப்பின் இயக்குநர் ஜான் ஸ்டான்லி, ஸ்காட்லாந்து நாட்டுக்காரர். அவர், 'ஆக்ஸ்ஃபேம்' (Oxfam) நிறுவனத்தின் பெங்களூர் மையத்தில் இயக்குநராக பணியாற்றியபோது, 'மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியும், அதற்காகப் பணிபுரிவதற்கு தனிப்பட்ட பயிற்சியும் தேவைப்படுகிறது’ என்பதை உணர்ந்தார். பதவியிலிருந்து விலகி, 'தேடல்’ அமைப்பை உருவாக்கினார். கல்லூரிப் படிப்பில், வெற்றிபெறாத இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அறிமுகப் பயிற்சிக்குப் பிறகு, சேவை நிறுவனங்களுக்கு அனுப்புவார்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒன்றுகூடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அப்படி முதன்முதலாக 'அமைதித் தீவு'க்கு வந்த இளைஞர்... சி.டி.ஜோசப்!

அமைதித் தீவின் பழக்க வழக்கம் வித்தியாசமாக இருந்தது. அதன் இயக்குநர் வான் கம்ஃபோர்ட், திருநெல்வேலிக்குப் புறப்படுவதாக இருந்தால், மட்டுமே முழுக்கால் சட்டை அணிவார். களக்காடு வட்டாரத்தில் இருக்கும்போது... முழங்காலுக்கு மேலாக ஓர் அரைக்கால் சட்டையும், மேலுக்கு ஓர் அரைக்கைச் சட்டையும் மட்டுமே அணிந்திருப்பார். தன்னால் செய்யக்கூடிய பணிக்கு, அடுத்தவரை அழைக்க மாட்டார். அதேசமயம், அடுத்தவர் செய்கின்ற வேலையில் தானும் ஒரு கை கொடுப்பார். மாலைவேளைகளில் பிறரோடு சேர்ந்து விளையாட்டுகளில் பங்கெடுப்பார். என்னைவிட ஐந்து வயது மூத்தவர், என்றாலும், அவரை அனைவருமே 'லீடர்’ என்றே அழைப்போம்! இந்தப் போக்கு 'அமைதித்’ தீவில் ஒரு குடும்ப உறவை ஏற்படுத்தியிருந்தது. இது, 'தேடல்’ அமைப்பில் இருந்து வந்திருந்த ஜோசப்புக்கு மிகவும் பிடித்திருந்தது.

அமைதித் தீவைக் காப்பாற்றிய ஓர் ஆயுதம் !

ஊர் திரும்பிய ஜோசப், தன்னையத்த மற்ற இளைஞர்களுடன் இதுபற்றி கருத்துப் பரிமாற... அதிக இளைஞர்கள் அமைதித் தீவு நோக்கி வந்தார்கள். அதிலொருவர்... திருச்சி, தண்ணீர்ப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கே. லோகநாதன். இளமையிலேயே தந்தையை இழந்தவர். இவரையும் வடகரை கிராமம் கவர்ந்து கொண்டது. வசதி வாய்ப்பு குறைந்த குடும்பத்தினர் மெய்வருத்தி பாடுபடுவதைக் கண்ட அவர், வடகரை கிராமத்தில் தொடர்ந்து தங்கி பணியாற்ற முடிவு செய்தார். ஆனால், ஒரு சமயம் தன்னுடைய ஊருக்கு அவர் சென்றபோது, 'இவர் தண்ணீர்பள்ளிக்குத் தேவை' என்று சொல்லி, அங்கிருந்த அருள்தந்தை தக்க வைத்துக் கொண்டார்!

அமைதித் தீவைக் காப்பாற்றிய ஓர் ஆயுதம் !

அடுத்தபடியாக வடகரைக்கு வந்து சேர்ந்த இளைஞர் சி. சுப்பிரமணியம், லோகநாதன் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்தார். அவர் ஒரு நாள் ஜெகன்னாதன் என்பவரை அழைத்து வந்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாதன், பார்வையற்றவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவர். அவர், அமைதித் தீவு பற்றி கேள்விப்பட்டு, அதைப் பார்க்கும் ஆர்வத்தோடு களக்காடு வந்து சேர்ந்தார். ஒரு வாரமே தங்கியிருந்த அவரையும், வடகரை கிராமம் கவர்ந்துவிட்டது. தொடர்ந்து, இங்கேயே நிரந்தரமாக அவர் பணியாற்ற முடிவு செய்ததன் விளைவாக, அங்கு மாலை நேரக் கல்வி ஆரம்பமானது.

ஜெகன்னாதனுடைய பள்ளி சாரா கல்வி முறை, முற்றிலும் வித்தியாசமானது. ஆண், பெண், இளைஞர், முதியவர் அனைவரையும் ஒரு வளையத்தில் உட்கார வைப்பார். ஒன்றிரண்டு பாடல்களை எல்லோரும் பாடுவார்கள். பிறகு, ஓர் எழுத்தைச் சொல்லச் சொல்வார். அந்த எழுத்தை முதலாவதாகக் கொண்டு தொடங்கும் வார்த்தைகளைச் சொல்லச் சொல்வார். அதில் ஒரு வார்த்தை, அன்றைய பாடத் தலைப்பாக மாறும். எடுத்துக்காட்டாக அரிசி, சாராயம், குடும்பம், கூட்டுறவு, கடை, நடவு, அறுவடை, உழைப்பு, இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பில் ஒவ்வொருவரையும் பேச வைப்பார். இதன் மூலம் ஊரில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொன்றைப் பற்றிய அறிவு சமமட்டத்தை எட்டும். மாலைநேரக் கல்வியை ஒட்டி, கலைக்குழு ஒன்றும் உருவானது.

ஜெகன்னாதன் கையிலெடுத்த அடுத்த நடவடிக்கை... சிறுசேமிப்பு. ஒவ்வொரு குடும்பமும் வாரத்துக்கு ஒரு ரூபாய் சேமிக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து ஊருக்குள் ஒரு கடை திறக்கப்பட்டது. இந்தக் கடை மிகப்பெரிய வேலை செய்தது. இரண்டு இளைஞர்கள் சைக்கிள்களில் களக்காடு வரை சென்று ஊருக்குத் தேவையானவற்றை மொத்தமாக வாங்கி வந்தபோது, பொருள்கள் தரமானவையாகவும் மலிவானவையாகவும் இருந்தன. இதற்கு முன்பு பக்கத்து ஊரில் இருந்த கடையில், ஓரமாக ஒதுங்கி நின்று, கால் கடுக்க காத்து நின்று... அதிகவிலை கொடுத்து பண்டங்களை வாங்கி வந்த இழிவு நீங்கியதால், மக்களிடம் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.

ஆனால், கூட்டுமுயற்சியால் உருவான ஊர்க் கடை... ஒரு தொல்லையையும் கொண்டு வந்து சேர்த்தது. பக்கத்து ஊர்க் கடைக்காரரின் வருவாய் இழப்பு, அவர் மனதில் பொறாமையையும் நயவஞ்சகத்தையும் தோற்றுவிக்க... வடகரையில் ஊருக்குத் தலைவராக இருந்த ஒருவருக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, ஊருக்குள் கலகத்தை ஏற்படுத்தினார். பெண்கள் பிரச்னை காரணமாக... ஊர்க்கூடி அந்தத் தலைவருக்கு தண்டனை விதித்தது. அந்தக் கோபத்திலிருந்த தலைவர், பக்கத்து ஊர் கடையருகில் ஒரு குடிசையைப் போட்டுக் கொண்டு, வழியில் சந்தித்த சொந்த ஊர்க்காரர்களை வம்புக்கு இழுத்தார். அது மோதலாக வலுத்து அடிதடி, காயம் என மாறி, காவல்துறை வரை போனது. வழக்குப் பதிவாகி, விசாரணைகள் எல்லாம் நீண்டன. ஆனால், அத்தனைச் சோதனைகளையும் ஒற்றுமை என்கிற ஒரே ஆயுதத்தால் தகர்த்தெறிந்த வடகரை, தன்னுடைய தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டது... கடந்த நூற்றாண்டின் ஆச்சரியங்களில் ஒன்றே!

-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism