Published:Updated:

இணையற்ற இருங்கு சோளம் !

பராமரிப்பும் வேணாம்... தண்ணீரும் வேணாம்...மானாவாரி மகசூல்! ஆர். குமரேசன்,படங்கள்: வீ. சிவக்குமார்

இணையற்ற இருங்கு சோளம் !

பராமரிப்பும் வேணாம்... தண்ணீரும் வேணாம்...மானாவாரி மகசூல்! ஆர். குமரேசன்,படங்கள்: வீ. சிவக்குமார்

Published:Updated:
 ##~##

பொய்த்துப்போன பருவமழை, கானல் நீரான காவிரி, மின்னலாய் வந்து மறையும் மின்சாரம்... என பலமுனைத் தாக்குதலில் சிக்கித் தவிக்கிறது தமிழக விவசாயம். இவ்வளவு இன்னலுக்கு இடையிலும் தண்ணீரையும், உரங்களையும் கொட்டி விளைய வைக்கப்படும் நெல்லுக்கு... கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளைக்கூட, கிலோ 40 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், கிட்டத்தட்ட ஐந்து மாத உழைப்பையும், சில ஆயிரங்களையும் கொட்டி விளையவைக்கும் நெல்லுக்கு அதிகபட்சமாக கிலோவுக்கு 11 ரூபாய்தான் கிடைக்கிறது. முதலுக்கே மோசமாகி, கடைசியில் தற்கொலையை நோக்கித் துரத்துகிறது!

''இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம் நாம்தான். விதைப்புக்கும், அறுவடைக்கும் இடையே வேலையே வைக்காத சிறுதானியங்களையும், மண்ணுக்கேற்ற ரகங்கள்... மழையை அதிகம் எதிர்பார்க்காத ரகங்கள், மானவாரி ரகங்கள் என பாரம்பரியம் மிக்க ரகங்களையெல்லாம் மறந்து... பசுமைப் புரட்சியின் பின்னால் ஓடியதன் விளைவுதான் இத்தனைச் சீரழிவுக்கும் காரணம். எந்த இடுபொருளையும் இடாமல், மானாவாரியில் விளையும் சோளம், கம்பு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற தானியங்களுக்கு இன்னமும் சந்தையில் மவுசு இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், நாம்தான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை...'' என்கிற குற்றச்சாட்டு சில பல ஆண்டுகளாகவே இங்கே சுழன்று கொண்டிருக்கிறது.

இணையற்ற இருங்கு சோளம் !

இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில், மானாவாரியின் மன்னனாக விளங்கும் 'இருங்கு சோளம்’ எனப்படும் கருப்பு சோளத்தை விளைவித்து, நம்பிக்கையோடு பீடு நடைபோட்டு அசத்திக் கொண்டுள்ளனர்... தென்மாவட்ட விவசாயிகள். குறிப்பாக, பாசன வசதிஇல்லாத ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்றைக்கும் இருங்கு சோளத்தைத்தான் பயிர் செய்து வருகிறார்கள்! அவர்களில் ஒருவராக ஆண்டுதோறும் இருங்கு சோளம் பயிர் செய்து வருகிறார்... திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, மேலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி.

இரவெல்லாம் பயிர்களுடன் உறவாடிக் கொண்டிருந்த பனித்துளிகளை, பகலவன் விலக்கி விட்டுக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில், தனது வயலில் அறுவடைப் பணியை ஆரம்பித்திருந்த வேலுச்சாமியைச் சந்தித்தபோது...

''எனக்குச் சொந்தமா நிலமில்ல. இந்த 60 சென்ட் இடத்துல குத்தகைக்குத்தான் வெள்ளாமை போடுறேன். இந்தப் பக்கத்துல மானாவாரி விவசாயம் செய்றவங்க வருஷம் தவறாம ஆடிப்பட்டத்துல சோளத்தை விதைச்சிருவாங்க. இன்னிக்குத்தான அரிசியில பொங்கி சாப்பிடுறோம். அப்பல்லாம் சோளம் மட்டும்தான். இப்ப மாதிரி கலப்பு மாடுக யார்கிட்டயும் இருக்காது. எல்லார்கிட்டயும் நாட்டு மாடுகதான் இருக்கும். பாலையும் விக்க மாட்டாங்க.

அந்த மாடுகளை வெச்சே நிலத்தை உழுது சோளத்தை வெதச்சிருவோம். சோளத்துக்கு இடையில வீட்டுக்குத் தேவையான மொச்சை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, கல்லுப்பயறுனு விதைச்சிருவோம். சோளம் அறுவடையானதும் மொத்தமா கொட்டி வெச்சி, மாட்டை விட்டு தாம்பு ஓட்டி (மிதிக்க வைத்து) சோளம் தனியா, சக்கை தனியா பிரிச்சுக்குவோம். சோளத்தட்டை, சோளத்தை அரைச்ச தவிடு எல்லாத்தையும் மாட்டுக்குக் கொடுத்துடுவோம். சோள அரிசியையும், பயறு பட்டைகளையும் அடுத்த வருஷம் வரைக்கும் வீட்டுத் தேவைக்கு வெச்சுக்குவோம். சோளத்தை உரல்ல போட்டு இடிச்சு, தவிட்டைப் பொடைச்சிட்டு, கஞ்சியா வெப்பாங்க. அதுல... தயிர், மோர்னு கலந்து குடிப்போம். கருவாடு, பச்சை மிளகாய், வெங்காயம்னு எது கிடைக்குதோ, அதை கடிச்சுக்கிட்டு ஒரு கும்பா சோளக்கஞ்சியைக் குடிச்சுட்டு நிலத்துல இறங்குனா... அசராம வேலை பாப்போம். காட்டுல பண்ணைக்கீரை, அரைக்கீரை...னு பிடுங்கி, கடைஞ்சு சாப்பிட்டுக்குவோம். எதுக்காகவும், யார்கிட்டயும் கையேந்தாத பொழப்புங்க அது..!'' பழைய நினைவுகளில் மூழ்கிய வேலுச்சாமி, மீண்டும் இருங்கு சோளத்துக்கு வந்தார்.

60 சென்டில் 20 மூட்டை!

''அந்தக் காலத்துல மொறையா மழை மாரி பெய்யும். நிலமும் சொன்னபடி வெளையும். இப்ப அப்படியா இருக்கு சம்சாரி பொழப்பு. அப்பயெல்லாம் ஒவ்வொரு சோளத்தட்டையும் சும்மா கரும்பு கணக்கா திடமா இருக்கும். ஏழை வீட்டுப் பிள்ளைக இதைத்தான் கரும்புனு கடிச்சு திம்பாங்க. விதைச்சதிலிருந்து மூணு, நாலு மழை கிடைச்சா... கிட்டத்தட்ட பத்தடி உசரத்துக்கு வேல் கம்பு மாதிரி கம்பீரமா நிக்கும் கதிரு. 60 சென்ட் நிலத்துல 20 மூட்டை (50 கிலோ) விளையும். பயறு வகைகள விதைச்சாலும்... ஒவ்வொண்ணும் 50 கிலோவுக்குக் குறையாம விளைஞ்சுடும்.

சோளம் கிலோ 25 ரூபாய்... அரிசி 50 ரூபாய்!

இணையற்ற இருங்கு சோளம் !

இருங்கு சோளத்தை சாகுபடி செய்ய பெருசா செலவாகாது. விதையை வீட்டுலயே வெச்சிருப்போம். டிராக்டர்ல உழவு, களைனு அதிகபட்சமா மூவாயிரம் ரூபா செலவாகும். நல்லா வெளைஞ்சா... ஆள் வெச்சு அறுக்கலாம். விளைச்சல் சுமாரா இருந்தா, சொந்த ஆளே அறுத்துக்க வேண்டியதுதான். இந்த வருஷம் சரியா மழையில்லாததால, விளைச்சல் சுகப்படல. நாலு, அஞ்சு மூட்டைதான் (50 கிலோ மூட்டை) தேறும்.

'அறுக்க ஆள் கூப்பிட்டா கூலிக்குக்கூட கட்டாது’னு நானே அறுப்புல இறங்கிட்டேன். இந்த வருஷம் மாட்டுக்கு தட்டை கிடைச்சதுதான் மிச்சம். இப்ப சோளம் கிலோ 25 ரூபாய்க்கு மேல விக்குது. சோள அரிசி 50 ரூபாய்க்கு மேல விக்குது. அஞ்சு மூட்டை விளையும்னு வெச்சுக்கிட்டாலும், மொத்தம் 250 கிலோ. ஒரு கிலோ

25 ரூபாய் வீதம் விலைபோட்டா... 6,250 ரூபாய் வரும். செலவு போக... மூவாயிரம் ரூபா கையில நிக்கும். விதைச்சதைத் தவிர வேற பராமரிப்பே பார்க்காம... இந்தத் தொகைங்கறது... சந்தோஷமான சங்கதிதானே'' என்ற வேலுச்சாமி நிறைவாக,

''ஆனா... நான் எப்பவுமே சோளத்தை விலைக்குக் கொடுத்ததில்ல. விதைக்கு எடுத்து வெச்சது போக, மிச்சத்தை அரைச்சு சோறாக்க வெச்சுக்குவோம். இந்த வருஷம் சோத்துக்குப் பத்தாது. ரேஷன் அரிசியை வெச்சுத்தான் சமாளிக்கணும். என்ன பண்றது? சம்சாரி பொழப்பு சூதாட்டம் மாதிரிதானே. ஒரு வருஷம் விளையும், ஒரு வருஷம் விளையாது. சோளத்தைப் பொறுத்தவரை பாடு இல்லாத வெள்ளாமை. விதைக்கறதோட சரி... அடுத்த வேலை அறுப்புலதான். இயற்கை உரம், ரசாயன உரம்னு எதுவுமே தேவையில்லை. அதனால, என் ஆயுசு இருக்கற வரைக்கும் சோளத்தை விளைய வெச்சுகிட்டுத்தான் இருப்பேன். ஏன்னா, இந்த உசுரை வளத்ததே இந்தச் சோளக்கஞ்சிதான்'' என்றார் உணர்ச்சி பொங்க!

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

 இருங்கு சோள சாகுபடி முறை பற்றி வேலுச்சாமி சொல்லும் ஆலோசனைகள்- 'இருங்கு சோளத்தை ஆண்டுக்கு ஒரு முறை ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம். மானாவாரி நிலங்களில் சித்திரை மாதம் ஒரு உழவு செய்து மண்ணை ஆறப்போட வேண்டும். ஆடி மாதத்தில், ஒரு மழை கிடைத்தவுடன், சோளத்தை விதைத்து, நிலத்தை உழவு செய்ய வேண்டும். ஆறடிக்கு ஒரு சால் போட்டு, அதில் இரண்டடி இடைவெளியில் தட்டை, பாசிப்பயறு, கல்லுப்பயறு விதைகளை விதைக்க வேண்டும். ஆவணி மாதத்தில் களை எடுக்க வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. சோளம் அறுவடையாவதற்கு முன்பே மொச்சை, தட்டை, பாசிப்பயறு ஆகியவற்றில் மகசூல் கிடைக்கத் தொடங்கி விடும். அதை அவ்வப்போது சேகரித்துக் கொள்ள வேண்டும். தவறினால், காய் வெடித்துச் சிதறி வீணாகி விடும்.

சோள விளைச்சலைப் பொறுத்து, மார்கழி மாதக் கடைசிக்குள் அறுவடை செய்து விட வேண்டும். நன்றாக விளைந்த சோளம், முற்றி, சிறிய அளவில் வெடித்து, அரிசி வெள்ளையாக வெளியே தெரியும். அந்த நிலையில் அறுவடை செய்யலாம். நிலத்தில் இருந்து அரையடி விட்டு, தட்டையை அறுத்தெடுத்து, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். கதிர்களை அறுவடை செய்த பிறகு, தட்டைகளை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.இரண்டு, மூன்று நாட்களுக்கு தட்டையை நிலத்தில் போட்டு காய வைத்து, பிறகு சிறுசிறு கட்டுகளாகக் கட்டி, அம்பாரமாக நிறுத்தி வைக்க வேண்டும். நீண்ட நாள் சேமிக்க நினைப்பவர்கள் வைக்கோலை சேமிப்பதுப் போல போர் அமைத்தும் சேமிக்கலாம்.'  

சிட்டுக்குருவியின் வீடு!

சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள்தான் காரணம் என்கிற கருத்து நிலவி வருகிறது. காணாமல் போன சிறுதானிய வயல்கள்தான் மிகமுக்கியக் காரணம். கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானிய சாகுபடி வயல்களில் உள்ள தட்டைகளில் கூடு கட்டி வாழும் இயல்பு கொண்டவை சிட்டுக்குருவி, தேன்சிட்டு போன்றவை. தட்டையில் கூடு கட்டி, கதிரில் அமர்ந்து மணிகளை உண்ணும் இயல்புடையவை. வேலுச்சாமியின் சோளக்காட்டில் நம் முன் குறுக்கும் நெடுக்குமாக பறந்தபடியே இருந்தன தேன்சிட்டுகள்.

''மனுஷனுக்காக மட்டுமில்ல... பறவைகளையும் வாழ வைக்குறதுக்காக சிறுதானியங்களை நாம பயிரிடணும்...'' என்கிறார் வேலுச்சாமி வேண்டுகோளாக!

 ''பார்லிக்கு நிகரானது!''

இணையற்ற இருங்கு சோளம் !

இருங்கு சோளத்தின் சிறப்புகளைப் பற்றி பேசும் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் ஸ்ரீராம், ''இருங்கு சோளம் மிக அருமையான உணவுப் பொருள். பார்லி அரிசிக்கு நிகரான சத்துக்கள் இதில் உள்ளன. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது. கோதுமையில் உள்ள புரதச் சத்துக்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. அனைத்து வயதினரும் உண்ண ஏற்றது. சுலபமாக செரிக்கக் கூடியது. தொடர்ந்து இதுபோன்ற சிறுதானியங்களை மட்டும் உண்டு வந்தால்... நோயற்ற பெருவாழ்வு வாழலாம்'' என்று உத்தரவாதம் தருகிறார்.