Published:Updated:

குலதெய்வம்... பசுமை விகடன்...!

சட்டமன்ற உறுப்பினரின் உணர்ச்சிகர வெள்ளாமை வீ.கே. ரமேஷ் படங்கள்: க. தனசேகரன்

குலதெய்வம்... பசுமை விகடன்...!

சட்டமன்ற உறுப்பினரின் உணர்ச்சிகர வெள்ளாமை வீ.கே. ரமேஷ் படங்கள்: க. தனசேகரன்

Published:Updated:

அனுபவம்

##~##

''வழக்கறிஞர், பரபரப்பான அரசியல்வாதி, சட்டமன்ற உறுப்பினர்... என்பவற்றைஎல்லாம் தாண்டி, 'சிறந்த விவசாயி’ என்று சொல்லிக் கொள்வதைத்தான் பெருமையாக நினைக்கிறேன்''

-இப்படி உருகி உருகிப் பேசுகிறார்... மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் (தே.மு.தி.க.). அரசியல் பிரச்னைகள், நீதிமன்ற விவகாரங்கள் என எத்தனை அவசரப் பணிகள் இருந்தாலும்... உள்ளூரில் இருக்கும்போது, கண்டிப்பாக தோட்டத்தில் கால் வைத்த பிறகுதான் மற்ற வேலைகள் என்பது... பார்த்திபன் வகுத்துக் கொண்டிருக்கும் விதிமுறை. விவசாயத்தைத் தான் கையில் எடுத்ததைப் பற்றி அவர் விவரித்தபோது... ஒவ்வொரு வார்த்தையிலும் இயற்கை மீதான பாசமும்... விவசாயத்தின் மீதான நேசமும் பொங்கி வழிந்தது!

''குடும்பத் தொழிலே விவசாயம்தான். அப்பா ராஜமாணிக்கம், அம்மா சரஸ்வதி. கூடப் பிறந்தவர்கள் அஞ்சு பேரு. எடப்பாடி பக்கத்துல காவிரிக் கரையோரம் இருக்கற செட்டிப்பட்டிதான் சொந்த ஊரு. அப்பவெல்லாம் காவிரியில வருஷம் முழுக்க தண்ணி போயிட்டே இருக்கும். முப்போகம் விளைஞ்சதால... எங்க தோட்டம் எப்பவுமே 'பச்சை பசேல்’னு இருக்கும். எங்களோட படிப்புக்காக விவசாயத்தை விட்டுட்டு சேலம், அழகாபுரம்புதூர் பகுதிக்கு குடும்பத்தோட வந்துட்டோம். சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் படிச்சு வழக்கறிஞராகி, 'கோர்ட்’, 'கேஸ்’னு வாழ்க்கையை மாத்திக்கிட்டேன். அரசியல்லயும் நுழைஞ்சுட்டதால சுத்தமா விவசாயத்தை மறந்தே போயிட்டேன். விவசாயக் குடும்பத்துல பிறந்த நான், மண்ணோட துளிகூட தொடர்பில்லாதவனா துண்டிக்கப்பட்டேன். அதைப் பத்தின நினைவும் எனக்கு இல்ல!

'ஜூனியர் விகடன்' இதழை தொடர்ந்து படிக்கறவன் நான். அதுல ஒரு நாள் 'பசுமை விகடன்’னு புதுசா ஒரு புத்தகம் வரப்போறதா விளம்பரம் பண்ணியிருந்ததைப் பார்த்தேன். 'விவசாயமே அழிஞ்சுட்டு இருக்கு. இந்த லட்சணத்துல விவசாயத்தைப் பத்தி இவங்க என்ன பெருசா எழுதிடப் போறாங்க?’னு நினைச்ச நான்... அந்தப் புத்தகத்தோட முதல் இதழை வாங்கிப் படிச்சேன். விவசாயத்தைப் பத்தின புதுப்புதுத் தகவல்கள், விவசாயத்தோட பெருமைகள்னு அதுல இடம்பிடிச்சுருந்த விஷயங்கள் ஒவ்வொண்ணும்... என்னை ரொம்பவே ஈர்த்துடுச்சு.

குலதெய்வம்... பசுமை விகடன்...!

அடுத்தடுத்த இதழ்களையும் தொடர்ந்து வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். அஞ்சாவது இதழ் வந்த சமயத்துல... என்னையும் அறியாமலேயே விவசாயத்து மேல ஈடுபாடு வந்துடுச்சு. உடனடியா, சேலம் உடையாப்பட்டி, தேங்கல்காடு பகுதியில ஏழரை ஏக்கர் காட்டை வாங்கினேன். கரடுமுரடா இருந்த இடத்தை சமன்படுத்தி விவசாயத்தை ஆரம்பிச்சுட்டேன். இப்போ... 322 மா, 175 நெல்லி,

150 தென்னைனு மரங்கள் தழைச்சு நிக்குது. தோட்டத்துக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தையும்... 'பசுமை விகடன்' இதழ்களைப் பார்த்து, படிச்சு அதுல சொல்லி இருக்கறது மாதிரிதான் செஞ்சுட்டு இருக்கேன்.

ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளையோ இதுவரை பயன்படுத்தினதேயில்லை. நம்மாழ்வார் ஐயா சொல்ற மாதிரி இயற்கை உரங்களை நானே தயார் செஞ்சுதான் பயன்படுத்துறேன். எல்லா மரங்களுக்கும் சொட்டுநீர் அமைச்சிருக்கேன். தோட்டத்தைப் பார்க்க வர்றவங்க, இந்த மரங்களுக்கு நாலு வயசுனு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க. அந்த அளவுக்கு நல்லா வளர்ந்திருக்கு. நாலாவது வருஷத்துல அறுவடை செஞ்சப்போ, மூணரை டன் மாங்காய் கிடைச்சுது. முதல் காயை அறுத்ததும் யாருக்கு படைச்சேன் தெரியுமா?'' என்று கேட்டு நிறுத்திய பார்த்திபன்,

''எங்க குலதெய்வத்துக்கும், பசுமை விகடனுக்கும்தான்!'' என்று சொல்லி சிலிர்ப்பூட்டினார்!

தொடர்ந்தவர், ''இயற்கையில விளைஞ்ச அந்த மாம்பழத்தை எங்க கேப்டன் சாப்பிட்டு பார்த்துட்டு 'சூப்பரா இருக்கு’னு பாராட்டினாரு. 'என்னைப் பாராட்டாதீங்க கேப்டன். பசுமை விகடனைத்தான் பாராட்டணும்’னு நான் விஷயத்தைச் சொன்னதும்... ரொம்பவே சந்தோஷப்பட்டார். போடியைச் சேர்ந்த என் நண்பர் லட்சுமணப்பெருமாளும் என்னைப் போலவே 'பசுமை விகடன்' படிச்சுட்டு, நிலத்தை வாங்கி விவசாயம் செய்றாரு. பலருக்கும் உணவு வழங்கும் உழவனா என்னை மாத்தின பசுமை விகடன்... நான் படிச்ச சட்டப் புத்தகங்களுக்கும் மேன்மையானது'' என்றபடியே கைதொழுதார் பார்த்திபன்!

தொடர்புக்கு, பார்த்திபன்,
செல்போன்: 94439-06806.