Published:Updated:

வறட்சியைச் சமாளிக்கும் வாய்க்கால்கள்... ஆட்கள் பிரச்னைக்கு அருமையான தீர்வு...

ஒரு வழக்கறிஞரின், வியக்க வைக்கும் விவசாயம்..! கு.ராமகிருஷ்ணன் படங்கள் : கே.குணசீலன்

வறட்சியைச் சமாளிக்கும் வாய்க்கால்கள்... ஆட்கள் பிரச்னைக்கு அருமையான தீர்வு...

ஒரு வழக்கறிஞரின், வியக்க வைக்கும் விவசாயம்..! கு.ராமகிருஷ்ணன் படங்கள் : கே.குணசீலன்

Published:Updated:
 ##~##

''ஒரு சிறு விதைதான்... மிகப்பெரிய விருட்சமாக வளர்கிறது. இயற்கை விவசாயம் என்கிற விதையை, விவசாயிகளின் மனங்களில் பசுமை விகடன் பரவலாகத் தூவியதால்தான்... இன்றைக்கு பல விவசாயிகள் செலவுகளைக் குறைத்து, நஷ்டத்தைத் தவிர்த்து நல்ல வருமானத்தோடு வாழ்கிறார்கள். அதற்கு நானே ஓர் உதாரணம்''

-இது, தஞ்சாவூர் மாவட்டம், மூத்தாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் வாக்குமூலம். பட்டுக்கோட்டை, மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் மற்றும் வழக்கறிஞர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டே... விவசாயத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து வருபவர்!

இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன்!

7ம் ஆண்டு சிறப்பிதழுக்காக ராஜேந்திரனைச் சந்தித்தபோது...

''இது வண்டலும் மணலும் கலந்த பூமி. எங்க குடும்பத்துக்குச் சொந்தமான இந்த பதினெட்டரை ஏக்கர் தென்னந்தோப்புல 25 அடி இடைவெளியில நடப்பட்ட 1,250 தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே 25 வயசுக்கு மேலான மரங்கள். ரசாயன விவசாயம் பண்ணிட்டு இருந்தப்ப, காண்டாமிருக வண்டு, கூன்வண்டு தாக்குதலால மரத்துல சாறு வடிஞ்சு, வருஷத்துக்கு 15 மரங்களுக்கு மேல பாதிப்பாயிடும். அதை கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில மோனோகுரோட்டோபாஸ் கட்டுவோம்.

வறட்சியைச் சமாளிக்கும் வாய்க்கால்கள்... ஆட்கள் பிரச்னைக்கு அருமையான தீர்வு...

ஆனா, எந்தப் பலனும் இருக்காது. இதுபோக, சூப்பர்-பாஸ்பேட், யூரியா, பொட்டாஷ், ஜிப்சம்னு வருஷத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவு பண்ணிக்கிட்டு இருந்தோம். பணம்தான் விரயமாச்சு... பலன் கிடைக்கல.

விரக்தியா இருந்த நேரத்துலதான் பசுமை விகடன் அறிமுகமாச்சு. அதுல வரக்கூடிய கட்டுரைகளைத் தொடர்ந்து படிச்சதுனால, இயற்கை விவசாயத்து மேல நம்பிக்கை வந்துச்சு. இதுமட்டுமில்லாம, நம்ம விவசாயிகளே, விஞ்ஞானிகளா மாறி, புதுசு புதுசா அறிமுகப்படுத்துற தொழில்நுட்பங்கள் என்னை ஆச்சரியப்படுத்தினதோட, ஒரு உத்வேகத்தையும் உருவாக்கிச்சு.

பசுமை விகடனை பாடப் புத்தகமாகவும், நம்மாழ்வாரை வகுப்பாசிரியராவும் நினைச்சுக்கிட்டு... இயற்கை விவசாயத்துல துணிச்சலோட இறங்கினேன். ரெண்டு வருஷமா ரசாயன உரங்களை முழுமையா தவிர்த்துட்டு, மாட்டு எரு மட்டும் கொடுத்தேன். வண்டு தாக்குதல் படிப்படியா குறைஞ்சு, இப்ப முழுமையா சரியாயிடுச்சு'' என்று சொல்லி அதிசயித்தவர், தன்னுடய தனித்துவமான நீர்ப்பாசன முறை குறித்து பேசத் தொடங்கினார்.

செலவை கூட்டிய ரசாயனம்!

''தென்னைக்கு நிலம் முழுக்க தண்ணீர் பாய்ச்சுறதுதான் பொதுவான வழக்கம். ஒரு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் நானும் அப்படித்தான் பண்ணிகிட்டு இருந்தேன். தொடர்ச்சியா 12 மணி நேரம் தண்ணி பாய்ச்சினாதான், ஒரு ஏக்கருக்கு முழுசா பாயும். வாரம் ஒரு முறை இது மாதிரி பாய்ச்சியாகணும். பதினெட்டரை ஏக்கருக்கு தண்ணி பாய்ச்சுறதுங்கறது லேசுபட்ட வேலை இல்ல.

வறட்சியைச் சமாளிக்கும் வாய்க்கால்கள்... ஆட்கள் பிரச்னைக்கு அருமையான தீர்வு...

மோட்டார் தேய்மானம், தண்ணி விரயம், ஆள் செலவுனு நிறைய பிரச்னை. இதையெல்லாம்விட நிலம் முழுக்க தண்ணி பாயுறதுனால, மண்ணு இறுகிப் போயி, கெட்டியாகி, காற்றோட்டம் தடைபடும். களைகளும் அதிகமா மண்டும். இதனால வருஷத்துக்கு நாலுமுறை உழவு ஓட்டியாகணும். இதுக்கு ஏக்கருக்கு 1,800 ரூபாய்னு மொத்தம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவாகும்.

செலவைக் குறைக்கும் வாய்க்கால் பாசனம்!

இதையெல்லாம் தவிர்க்கத்தான், ரெண்டு தென்னை வரிசைக்கு நடுவே கிழக்குமேற்காகவும், வடக்குதெற்காகவும் 3 அடி அகலத்துக்கு வாய்க்கால் அமைச்சேன். கால் அடி ஆழத்துக்கு மண்ணை எடுத்து, அதை பக்கவாட்டுல போட்டதுனால, வாய்க்காலோட மொத்த உயரம் அரையடியா அமைஞ்சது. இங்க உள்ள வாய்க்கால்கள் அனைத்துமே ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்புல இருக்கு. எங்கயாவது ஒரு இடத்துல திறந்தாலே எல்லா வாய்க்கால்லயும் தண்ணி பாயும். உணவு மற்றும் தண்ணி சேகரிக்கும் நுனிவேர்கள் இந்த பகுதியிலதான் இருக்கும். தென்னையை பொறுத்தவரை அடித்தூருக்கு தண்ணித் தேவையில்லை... வேருக்குதான் தேவை. தண்ணி இருக்கும் இடத்தை நோக்கி வேர்கள் ஓடி வர்றதுனால, இதோட நீளம் அதிகமாகி, மரம் நல்லா செழிப்பாகும். இதனால மட்டைகளோட நீளமும் அதிகரிச்சு, மகசூல் கூடுது.

எரு, தென்னைமட்டைனு அனைத்தையும் வாய்க்கால்லயே போட்டு தண்ணி பாய்ச்சுறதுனால, நல்லா மக்கி உரமாயிடுது. இதனால மரத்துக்கு மரம் உரம் வைக்குற ஆள் செலவு மிச்சமாகுது. வருசத்துக்கு ஒரு தடவை, குறிப்பா, மழைக்காலம் தொடங்கறதுக்கு முன்ன... 500 ஆடுகளை வெச்சு ஏக்கருக்கு ரெண்டு நாள் கணக்குல கிடை போடுவோம். இதைத் தவிர வேற எந்த பராமரிப்பும் செய்றதில்ல. இப்ப எந்த பிரச்னையுமில்லாம மரங்கள் அருமையா காய்ச்சுகிட்டு இருக்கு.

12 ஆயிரம் காய்கள் அதிகம்!

ரசாயன விவசாயம் செஞ்சப்ப வருஷத்துக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் காய்கள்தான் கிடைக்கும். இயற்கைக்கு மாறின பிறகு, கூடுதலா 12 ஆயிரம் காய்கள் கிடைச்சிருக்கு. காய்களும் நல்ல திரட்சியா இருக்கு. ரசாயன விவசாயத்தால நஷ்டத்தையும், மனக்கஷ்டத்தையும் அனுபவிச்சுகிட்டு இருந்த என்னை இன்னிக்கு லாபகரமான விவசாயியா மாத்தின பசுமை விகடனை என்னிக்கும் மறக்க மாட்டேன்'' என நன்றியோடு விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,  
ராஜேந்திரன்,  செல்போன்: 94435-49056.