Published:Updated:

செலவைக் குறைக்குது... வரவைக் கூட்டுது...

தமிழக அரசு வேளாண் அலுவலரின் இயற்கை விவசாய அனுபவம் ! ஆர். குமரேசன் படங்கள்: வீ. சக்தி அருணகிரி

செலவைக் குறைக்குது... வரவைக் கூட்டுது...

தமிழக அரசு வேளாண் அலுவலரின் இயற்கை விவசாய அனுபவம் ! ஆர். குமரேசன் படங்கள்: வீ. சக்தி அருணகிரி

Published:Updated:

கூட்டம்

##~##

'இனியெல்லாம் இயற்கையே’ என்ற தலைப்பில் தேனி மாவட்டம், சின்னமனூரில் டிசம்பர் 30-ம் தேதி, பசுமை விகடன் சார்பில் இயற்கை விவசாய விழிப்பு உணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. அதைப் பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன்  தொடர்ச்சி இதோ..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருத்தரங்கில், தேனி காமாட்சிபுரத்தில் உள்ள சென்ட்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தைச் சேர்ந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாரிமுத்து பேசும்போது, ''நமது பாரம்பரிய அறிவு மகத்தானது. அறிவியல் பூர்வமானது. பருவத்தில் பயிர் செய்வது, செலவில்லாத தற்சார்பு விவசாயம், சுலபமான சேமிப்பு நுட்பங்கள் என அனைத்தையும் பாதுகாக்கத் தவறி விட்டோம்.

ரசாயன உரங்களைக் கொட்டி, மண்ணை மலடாக்கிய பிறகு, தற்போதுதான் இயற்கையைப் பற்றி சிந்திக்கிறோம். வறட்சியில், வெள்ளத்தில், பனிக்காலத்தில் என அனைத்து சீதோஷண நிலைகளையும் தாக்குப்பிடிக்கும் வகையில் விதம்விதமான நெல் ரகங்கள் நம்மிடம் இருந்தன. தற்போது, மீண்டும் உயிர் பெற்றுவரும் அந்த விதைகளைப் பாதுகாக்க வேண்டும். இயற்கை விவசாயம் ஒன்றுதான் நாம் இழந்த ஆரோக்யம், நிலத்தின் வளம், பாரம்பரிய விதைகள் ஆகிய அனைத்தையும் திரும்பக் கொடுக்கும்'' என்று எதார்த்தை எடுத்து வைத்தார்.

செலவைக் குறைக்குது... வரவைக் கூட்டுது...

அவரைத் தொடர்ந்து பேசிய போடிநாயக்கனூர், தமிழக அரசின் வேளாண்மைத் துறை அலுவலர், நாட்ராயன், ''இயற்கை விவசாயம் செலவில்லாதது, சுலபமானது என்பதெல்லாம் உண்மையே! சுபாஷ் பாலேக்கரை சந்தித்த பிறகுதான் எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கை வந்தது. எனது சொந்த கிராமமான எரசப்பநாயக்கனூரில் ஜீரோ பட்ஜெட் முறையில் வாழையை உற்பத்தி செய்து வருகிறேன். குறைந்த செலவில் அருமையாக விளைகிறது. வாழை விவசாயிகள் இயற்கை வழி விவசாயத்தைக் செய்யும் பொழுது பலவகையான செலவுகளை குறைத்து, அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பது என்னுடைய சொந்த அனுபவம். என்னைத் தொடர்ந்து எங்கள் பகுதியில் சில விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறத் தொடங்கியுள்ளார்கள். இந்த மாற்றம் பெரும்பாலான

செலவைக் குறைக்குது... வரவைக் கூட்டுது...

விவசாயிகளிடமும் வரவேண்டும்'' என்று தன்னுடைய எதிர்பார்ப்பை வெளியிட்டார்.

அடுத்ததாக பேசிய ஓய்வுபெற்ற வேளாண் உதவி இயக்குநர் உசேன், ''இயற்கைரசாயனம் எந்த விவசாயத்தைச் செஞ்சாலும் முதல்ல விவசாயத்தைப் பத்தி புரிஞ்சுக்கணும். நம்ம வயல்ல என்னென்ன மாற்றங்கள் நடக்குதுனு தெரிஞ்சுக்கணும். அதை தெரிஞ்சுக்காம என்ன விவசாயம் செஞ்சாலும் கஷ்டம்தான். பூச்சி, நோய் தாக்குதலைத் தடுக்கத்தான் அதிகளவுல ரசாயனத்தை பயன்படுத்துறோம். ஆனா, அது தேவையே இல்லை. இயற்கை விவசாய முறையில பூச்சி, நோய்த் தாக்குதல் ரொம்ப குறைவு. அப்படியே இருந்தாலும் உங்க நிலத்துல விளைஞ்சுருக்கற செடி, கொடிகள்லயே அதுக்கெல்லாம் மருந்து இருக்கு. கசப்பான, ஒடிச்சா பால் வர்ற, மோந்து பார்த்தா வாசனை வரக்கூடியதுனு உங்க நிலத்துல இருக்கற இலை, தழைகளை பறிச்சு, மாட்டுச் சிறுநீர்ல ஊறவெச்சு தெளிச்சா போதும்... பூச்சிக பிரச்னை முடிஞ்சுடும்.

செலவைக் குறைக்குது... வரவைக் கூட்டுது...

அதேபோல, விளக்குப் பொறி, கவர்ச்சிப் பொறிகளை வெச்சும் பூச்சிகளை அழிக்கலாம். ஒரு பச்சை கலர் காலி வாட்டர் பாட்டில்ல கொஞ்சம் கருவாடு துண்டுகளைப் போட்டு, கொஞ்சம் தண்ணி ஊத்தி மூடிடணும். கீழ்பகுதியில சின்னதா நாலஞ்சு ஓட்டை போட்டு வயல்ல அங்கங்க கட்டி தொங்கவிடணும். இப்படி தொங்க விட்டா, பூச்சிக பாட்டிலுக்குள்ள வந்து விழுந்துடும்.

இதுமாதிரி சுலபமான வழிகள் ஏகப்பட்டது நம்ம கைவசமே இருக்கு. செலவில்லாத இந்த நுட்பங்களை விட்டுட்டு, வம்பாடுபட்டு சம்பாதிக்கிற காசை ரசாயன உரத்துக்கும், ரசாயன பூச்சிக்கொல்லிக்கும் எதுக்காக அள்ளி அள்ளி கொடுக்கணும்?'' என்று கேள்வி எழுப்பி, அனைவரையும் நிமிர வைத்தார்!

ஓய்வுபெற்ற நீதிபதி சடையாண்டி பேசும்போது, ''நான் நீதிபதியா இருந்தப்பவும் விவசாயத்தை விடாம செஞ்சுகிட்டு இருந்தவன். ஒரு காலத்துல நம்ம வீடுகள்ல சோளச்சோறு, கம்பங்கஞ்சி, ராகி களிதான் உணவா இருந்தது. அதை சாப்பிடுறது கௌரவக் குறைச்சல்னு நினைச்சு ஓதுக்கிட்டு, நெல்லு சோறு சாப்பிட ஆரம்பிச்சோம். சர்க்கரையில இருந்து அத்தனை வியாதியும் ஓடி வந்து ஒட்டிக்கிச்சு. ஆனா, நாம ஒதுக்குன சிறுதானிய உணவைத்தான் இன்னிக்கு பணக்காரங்க ஆடம்பர விருந்துகளிலும் உணவுத் திருவிழாக்களிலும் வரிசையில நின்னு சாப்பிடறாங்க. தும்பை விட்டுட்டு வாலையும் பிடிக்க வழியில்லாம நிக்கிறோம்.

என் வயல்ல நான் தொடர்ந்து சிறுதானியங்களை விதைச்சுட்டு வர்றேன். இப்ப நெல்லவிட அதிக விலைக்கு அதுதான் விக்குது. அதிக இடுபொருள் தேவைப்படாத, ரசாயனம் கலக்காத, பாடு வெக்காத, அதிகம் தண்ணி தேவைப்படாத, மானாவாரியிலும் மகசூலைக் கொடுக்குற இந்த மண்ணோட பயிர்களான சிறுதானியங்களை எல்லா விவசாயிகளும் சாகுபடி செய்யணும். அப்படி செய்யும்போதுதான் தற்சார்பு வேளாண்மை கை கூடும்'' என்று நெற்றியடியாகப் புரிய வைத்தார்!

இப்போதும் காத்திருக்கிறோம்!

கருத்தரங்கு நடந்துகொண்டிருந்த வேளையில், 'கூடலூர் ஜெகதீசன்' என தன்னை நம்மிடம் அறிமுகம் செய்துகொண்ட ஒருவர், ''இயற்கை விவசாயத்தைப் பற்றி எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி நான் மேடையில் பேச வேண்டும்'' என்று நம்மிடம் கேட்டார்.

''நிகழ்ச்சியின் இறுதியில் விவசாயிகள் மேடையேறுவார்கள். அப்போது, நீங்கள் பேசலாம்'' என்று அவரிடம் சொன்னோம். அதன்படியே கருத்தரங்கு முடிந்ததும் மேடையில் விவசாயிகள் பேசியபோது, அவரை மேடைக்கு வந்து பேசும்படி கேட்டோம். ஆனால், கீழே நின்றபடியே, சத்தம் போட்டு பேசியவர், ''விவசாயம் செய்வதே பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதில் இயற்கை விவசாயம் செய்யச் சொல்கிறீர்களே...'' என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னவர், மேடையேற மறுத்து விட்டார்.

அவரைச் சூழ்ந்து கொண்ட விவசாயிகள், ''மேடையில ஏறி பேசப்பா... அப்பத்தான வந்திருக்கற நிபுணருங்க, நம்மாழ்வார் ஐயாவெல்லாம் உனக்குத் தீர்வு சொல்ல முடியும்'' என்று வலியுறுத்தினர். ஆனால், தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர், ஒருகட்டத்தில் அரங்கை விட்டு சட்டென்று வெளியேறிவிட்டார்.

இப்போதும்கூட அவர் நம்மைத் தொடர்பு கொண்டால், அவருடைய சந்தேகங்களுக்கு உரிய நிபுணர்கள் மற்றும் அனுபவசாலிகளிடமிருந்து விடைபெற்றுத்தர தயாராகவே இருக்கிறோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism