Published:Updated:

வருங்காலம்... விவசாயத்துக்கு வருமானம் தரும் காலம் !

ஒரு பேராசிரியரின் பெருமித விவசாயம் ! ஜி. பழனிச்சாமி, படங்கள்: க. ரமேஷ்

வருங்காலம்... விவசாயத்துக்கு வருமானம் தரும் காலம் !

ஒரு பேராசிரியரின் பெருமித விவசாயம் ! ஜி. பழனிச்சாமி, படங்கள்: க. ரமேஷ்

Published:Updated:

தொழில்நுட்பம்

##~##

''காவிரிப் பாசன விவசாயிகள், கர்நாடகத்தை நம்ப வேண்டிய நிலை. கிணற்றுப் பாசன விவசாயிகளுக்கோ... கரன்டை நம்ப வேண்டிய நிலை. கர்நாடகமும் 'கரன்ட்'டும் காலை வாரிவிட்டுக் கொண்டே இருப்பதால், அந்த விவசாயிகள் கலங்கிக் கிடக்கிறார்கள். ஆனால், நான் சூரியனை நம்பி விவசாயம் செய்வதால்... கலக்கம் தீர்ந்து, கலகலப்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறேன்'’ என்று நாட்டு நடப்பை, தன்னுடைய வயல் வாழ்க்கையோடு இணைத்து அழகாகப் பேசுகிறார்... ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில் உள்ள எ. செட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் வைரமணி.

அக்கம்பக்கத்து விவசாயிகள் மின்சாரத்தை எதிர்பார்த்து, பம்ப்செட் அறையிலேயே தவம் கிடக்க, இவருடைய பம்ப்செட்டில் அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது நீர். அதைப் பெருமையாகப் பார்த்தவரே நம்மிடம் பேசத் தொடங்கினார். ''நான்

32 வருஷமா கல்லூரியில வணிகவியல் பேராசிரியராக வேலை பார்த்துட்டு, போன வருஷம்தான் ஓய்வுபெற்றேன். வீட்ல சும்மா இருக்க முடியாம, விவசாயத்துல இறங்கிட்டேன்.

வருங்காலம்... விவசாயத்துக்கு வருமானம் தரும் காலம் !

எங்க குடும்பத்துக்கு 75 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. எங்க ஊரை ஒட்டி, கீழ்பவானி வாய்க்கால் போறதால, கிணறுகள்ல தளும்பத் தளும்ப  தண்ணி கிடக்கும். ஆனா, என்னதான் தண்ணி கிடைச்சாலும்... அதை இறைச்சு பாசனம் செய்ய கரன்ட் வேணுமே? ஏற்கெனவே இருக்கிற மின் இணைப்பு மூலமா 5 ஹெச்.பி. மோட்டாரை வெச்சு தண்ணி இறைக்கிறேன். ஆனா, அதை வெச்சு, 75 ஏக்கர் பாசனம் செய்ய முடியாது. மேற்கொண்டு மோட்டார் போடணும்னா... புது மின் இணைப்பு வேணும். அது வந்து சேர 15 வருஷமாகும். அப்படியே கிடைச்சாலும், மின்தடையால முழுமையா பாசனம் செய்ய முடியாது. இதற்கு மாற்று வழியை யோசிச்சுகிட்டு இருந்தப்பதான், 'களத்துமேட்டிலும் கரன்ட் உற்பத்தி செய்யலாம்’ங்கிற தலைப்புல 'பசுமை விகடன்'ல ஒரு கட்டுரை வெளியாச்சு. சூரிய ஆற்றல் மின்சாரத்தைப் பயன்படுத்தி 500 அடி ஆழமுள்ள போர்வெல்லுல இருந்தும் தண்ணியை இறைச்சு பாசனம் செய்ய முடியும்னு படிச்சதும்... ஆர்வம் அதிகமாகிடுச்சு. அந்தக் கட்டுரையில இடம் பிடிச்சுருந்த கோயம்புத்தூர், எட்டிமடை விஜயகுமாரோட தோட்டத்துக்கு நேர்ல போயிட்டேன். மொத்தத்தையும் பார்த்துட்டு, அவர்கிட்ட எல்லாத்தையும் தெளிவா கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வந்தேன்.

ஏழு மணி நேர மின்சாரம் !

அதுக்குப் பிறகு, என் கிணத்துக்கும் சோலார் மின்மோட்டாரைப் பொருத்தினேன். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் மோட்டார் ஓடுது. 60 அடி ஆழமுள்ள திறந்த வெளிக்கிணற்றில்

40 அடி தண்ணி இருக்கு. அந்தத் தண்ணியை இறைச்சு, கிணத்துமேட்டில் இருந்து 1,100 அடி தூரத்தில் இருக்கற மானாவாரி நிலத்துக்கு குழாய் மூலமா கொண்டு போறேன். தண்ணி வசதி கிடைச்சதால அந்த நிலத்துல, புகையிலை, வாழைனு பணப்பயிர்களை சாகுபடி செய்ய ஆரம்பிச்சுருக்கேன். கிணறு ஆழம் குறைவாக இருக்கறதால, சோலார் மோட்டார் வெளியேற்றும் தண்ணீர் அதிகமாகவே கொட்டுது. அதனால சொட்டுநீர் அமைக்காம, நேரடிப் பாசனம்தான் செய்றேன்.

வருங்காலம்... விவசாயத்துக்கு வருமானம் தரும் காலம் !

எல்லா விவசாயிகளுக்கும் சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்த அரசாங்கம் உதவணும். இப்ப, ஒரு குதிரைத் திறன் மோட்டாரை இயக்க ஒரு லட்ச ரூபா செலவாகுது. இந்த முதலீட்டைக் குறைச்சு, மானியத்தை அதிகப்படுத்தினா... நிறைய விவசாயிங்க இதுல பயனடைவாங்க. குறிப்பா மானாவாரி விவசாயிங்களுக்குப் பயன்படும்.

ஐ.டி பார்க் போல... அக்ரி பார்க் உருவாகும்..!

அதேசமயம்... பத்து லட்ச ரூபாய் கொடுத்து, சொகுசு கார் வாங்கி வாசல்ல நிறுத்துறதைப் பெருமையா நினைக்குற பெரிய விவசாயிங்ககூட, 5 லட்ச ரூபாய் செலவு செஞ்சு சோலார் பேனல் அமைக்க யோசிக்கறாங்க. கார் வாங்குறதுக்கு கூவிக்கூவிக் கடன் கொடுக்குற வங்கிகள்... சோலார் பேனல் போன்ற விவசாயத் தொழில்நுட்பக் கருவிகளை வாங்கறதுக்கு கடன் தர யோசிக்குதுங்க.

32 வருஷமா வணிகவியல் பேராசிரியர் பணியில இருந்த அனுபவத்தில் சொல்றேன்... வருங்காலம் விவசாயத்துக்கு வருமானம் கொடுக்குற காலமா இருக்கப் போகுது. படிச்ச இளைஞர்கள் விவசாயத்துக்கு நிறைய வருவாங்க. ஐ.டி. பார்க் போல, அக்ரி-பார்க் நாடு முழுக்க உருவாகும்'' என்று அழுத்தம் கொடுத்து சொன்ன வைரமணி,

''மின்தட்டுப்பாடு காரணமா விவசாயத்தை விட்டுடலாம்ங்கற மனநிலையில் இருந்த எனக்கு பசுமை விகடன்தான் புதிய உத்வேகத்தைக் கொடுத்துச்சு. அதுக்காக என மனமார்ந்த நன்றிகள்'' என்றபடி விடை கொடுத்தார்.

அதை ஆமோதித்தன... பாசனக் குழாயின் வழியே தடதடவென கொட்டிய தண்ணீர் துளிகள்.

தொடர்புக்கு, பேராசிரியர். வைரமணி, செல்போன்: 99658-23482.