Published:Updated:

கல்லணை சரி... கதவணை?

மணிமண்டபம் கட்டும் முதல்வருக்கு டெல்டா விவசாயிகளின் நன்றியும் அதிருப்தியும்! கு. ராமகிருஷ்ணன்,படங்கள்: கே. குணசீலன்

கல்லணை சரி... கதவணை?

மணிமண்டபம் கட்டும் முதல்வருக்கு டெல்டா விவசாயிகளின் நன்றியும் அதிருப்தியும்! கு. ராமகிருஷ்ணன்,படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:
##~##

''கொள்ளிடம் ஆற்றின் மீது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, இப்போதும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கிறது. கரிகால் சோழனைப் போற்றும் வகையில் கல்லணையில் மணிமண்டபம் அமைக்கப்படும்''

-ஜனவரி 15-ம் தேதி தேனி மாவட்டத்தில், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய, ஜான் பென்னி குக் நினைவு மண்டபத் திறப்பு விழா நிகழ்ச்சியில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்... தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இதற்காக முதல்வரைப் பாராட்டும் காவிரி, கொள்ளிடப் பாசன விவசாயிகள், கூடவே தங்களின் அதிருப்தியையும் பதிவு செய்கிறார்கள்.

''அந்தக் காலத்திலேயே காவிரிப் பாசன மக்களைக் காக்க கல்லணை அமைத்த கரிகாலனுக்கு இப்பகுதி மக்கள் காலத்துக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். அதனால்தான், எங்கள் பகுதியில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் 'கரிகாலனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்' என்கிற கோரிக்கையைத் தொடர்ந்து நாங்கள் பதிவு செய்துவருகிறோம். இதை அன்புள்ளத்தோடு ஏற்று நிறைவேற்ற முன்வந்திருக்கும் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேசமயம், குறைதீர் கூட்டங்களில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கும் கதவணைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஆண்டாண்டு காலமாக கண்டுகொள்ளாமல் இருப்பது, எங்களை வதைக்கும் விஷயமாகவே இருக்கிறது.

கல்லணை சரி... கதவணை?

அறிவியல் முன்னேற்றங்கள் எட்டிப்பார்க்காத காலத்திலேயே, மக்களின் நலன்தான் முக்கியம் என்று திட்டமிட்டு, காவிரியிலிருந்து வீணாக கொள்ளிடத்தில் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரைத் தடுக்க, கல்லணையைக் கட்டினான் கரிகாலன். அவனைப் போற்றி மணிமண்டபம் கட்டுவதால் மட்டும்... விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடாது... அந்த கரிகாலனுக்கும் புகழ் வந்துவிடாது. அவனைப் போலவே திட்டமிட்டு, இப்போது இருக்கும் விவசாயிகளையும் காப்பாற்றும் வகையில் உரிய திட்டங்களையும் செயல்படுத்துவதுதான் கரிகாலனுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும். இதை முதல்வர் உணரவேண்டும்... உடனடியாக கதவணைகள் விஷயத்தில் கவனத்தைத் திருப்பவேண்டும். கரிகாலனின் மணிமண்டபத்தோடு... கதவணைகளையும் கட்டிமுடிக்க வேண்டும்'' என்று சொன்னார் திருவையாறு வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் சுகுமாறன்.

'அதென்ன கதவணைகள்...' என்கிறீர்களா...?

மழைக்காலத்தில் அதிக அளவில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீர், வீணாகக் கடலில்தான் கலக்கிறது. அந்த நீரைச் சேமிக்க காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கே சிறுசிறு அணைகள் கட்டுவதுதான் கதவணை. இப்படி கதவணைகள் கட்டினால், பருவமழை பொய்த்தாலும், தேங்கிக் கிடக்கும் நீர் மற்றும் அதன் காரணமாகப் பெருகும் நிலத்தடி நீரை வைத்து சமாளித்து விட முடியும். இப்படிப்பட்ட தொலைநோக்குப் பார்வையில்தான் கதவணைகள் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி நீண்ட காலமாகப் போராடி வருகிறார்கள், விவசாயிகள்.

கல்லணை சரி... கதவணை?

இத்திட்டம் பற்றி, 'கடலுக்குத் தாரை வார்க்கப்பட்ட 100 டி.எம்.சி. தண்ணீர். சேமிக்க வழியில்லையா... மனமில்லையா..?’ என்ற தலைப்பில் 10.09.2007 தேதியிட்ட இதழில் ஏற்கெனவே விரிவாகப் பதிவு செய்திருக்கிறது, 'பசுமை விகடன்’. காவிரிப் பாசனப் பகுதிகளில் மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற பொறியாளர் நடராஜன், கதவணைகள் திட்டத்தைப் பற்றி அதில் மிகத்தெளிவாக விளக்கியிருந்தார்.

ஐந்தாண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி, கதவணைத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி, கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் வினாயகமூர்த்தி தலைமையில், கல்லணையில் இருந்து, சிதம்பரம் வரை கோரிக்கை பேரணி நடத்தப்பட்டது. இதைப் பற்றி, 'டெல்டாவை வாழ வைக்கும் கதவணைகள் திட்டம், கண்டுகொள்ளாத அரசு... கவலையில் விவசாயிகள்’ என்ற தலைப்பில் 10.09.12 தேதியிட்ட இதழிலும் செய்தி வெளியாகியிருக்கிறது!

மீண்டும், இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பொறியாளர் நடராஜன், ''காவிரி மற்றும் கொள்ளிடத்தில் பரவலாகப் பல இடங்களில் கதவணைகள் அமைப்பதன் மூலம் வெள்ளம், வறட்சி போன்றவற்றிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க முடியும். நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, தமிழக மின் துறைதான் 1986-ம் ஆண்டு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கான எல்லா செலவுகளுமே அத்துறையினுடைதுதான். கதவணைகளில் வெள்ள நீரைச் சேகரித்து, பாசனத்துக்கு திறந்துவிட்டு அதன் மூலமாக, மின்சாரம் உற்பத்தி செய்வார்கள்.

நான் பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளராக இருந்தபோது, காவிரியில் 16 கதவணைகளும், கொள்ளிடத்தில் 7 கதவணைகளும் அமைக்க, முறையான ஆய்வுகள் செய்து, இடங்களையும் தேர்வு செய்தோம். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆன நிலையில் கொள்ளிடத்தில் இதுவரையும் ஒரு கதவணை கூட கட்டப்படவில்லை. காவிரியில் 1990-ம் ஆண்டுக்குள்

4 கதவணைகள் கட்டப்பட்டன. அடுத்த 23 ஆண்டுகளில் 4 கதவணைகள்தான் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 15 கதவணைகள் பாக்கியுள்ளன. முன்பே கட்டியிருந்தால் ஒரு கதவணைக்கு 15 கோடி ரூபாய்தான் செலவாகியிருக்கும். தற்போது ஒரு கதவணை கட்ட சுமார் 100 கோடி ரூபாய் செலவாகும்.

கல்லணை சரி... கதவணை?

மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, அது நாகப்பட்டினம் போய் சேரும் வரை, ஆறுகளில் 7 நாட்கள் தண்ணீர் இருக்கும். அந்த சமயத்தில் கண்டிப்பாக மழை பொழியும். அந்த மழை நீரே பயிர்களுக்குப் போதுமானதாக இருக்கும். ஆறுகளில் ஓடும் தண்ணீரை கதவணைகளில் சேமித்து வைத்து, பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம். மேட்டூர் அணை நிரம்பிய பிறகு, வழிந்தோடும் வெள்ளநீரையும் இதில் சேமிக்கலாம். இந்த வகையில் பார்த்தால், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மொத்தம் மூன்று முறை இந்த கதவணைகளில் தண்ணீர் சேகரிக்க முடியும்.

இந்த 23 கதவணைகள் மூலம் ஆண்டுக்கு மொத்தமாக, 60 டி.எம்.சி தண்ணீர் பெற முடியும். காவிரி மற்றும் கொள்ளிடப் பாசனத்துக்கும் குடிநீருக்கும் சேர்த்து ஆண்டுக்கு 500 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 12 சதவிகிதத் தேவையை, 23 கதவணைகள் மூலம் பெறமுடியும். அதனால், வெள்ள பாதிப்பும் தடுக்கப்படும். தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்று மீண்டும் தன் கோரிக்கையை வலியுறுத்தினார் பெரியவரான நடராஜன்!

இதற்கு முன்பிருந்த தி.மு.க அரசோ... தற்போதைய அ.தி.மு.க அரசோ... இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத நிலையில்... வாழ்வா... சாவா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், கதவணைத் திட்டம் பற்றிய கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்தும் முனைப்புகளில் இறங்கியுள்ளனர்!

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் வினாயகமூர்த்தி, ''வாட்டி எடுக்கும் வறட்சியால், தற்கொலை செய்து கொண்டு சாகும் நிலையில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். இதற்காக தொடர் போராட்டங்களை நடத்தி கொண்டுதான் இருக்கிறோம். ஆட்சியாளர்கள், ஏனோ பாராமுகமாகவே இருக்கிறார்கள். தற்போது தடுப்பணைகளுக்காக நிதி ஒதுக்கியிருக்கும் முதல்வர், கதவணைத் திட்டத்தையும் நிறைவேற்றினால்... டெல்டா மாவட்டங்களில் எதிர்காலங்களில் நிச்சயமாக தற்கொலைகள் தடுக்கப்படும்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

கதவணைகள் வருமா... காலனிடமிருந்து காவிரி விவசாயிகளைக் காப்பாற்றுமா?