Published:Updated:

விலையில்லை... வெட்டவில்லை...

பொங்கல் கரும்புகளுக்கு ஏன் இந்த கதி ? கரு. முத்து படங்கள்: கே. குணசீலன்

விலையில்லை... வெட்டவில்லை...

பொங்கல் கரும்புகளுக்கு ஏன் இந்த கதி ? கரு. முத்து படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:
##~##

'பொங்கல் திருநாள், கரும்பாய் இனிக்கட்டும்’ என்பது காலங்காலமாக வழக்கில் இருக்கும் வாழ்த்து மொழி. ஆலைக்கரும்பாக இருந்தாலும் சரி, பொங்கல் கரும்பாக இருந்தாலும் சரி... அது உண்பவர்களுக்கு மட்டும்தான் இனிக்கும் போல. விவசாயிகளுக்கு வழக்கம் போல கரும்பு சாகுபடியில் கிடைக்கும் வருமானம் கசப்பாகத்தான் இருக்கிறது. இந்த ஆண்டு, விவசாயிகள், வியாபாரிகள், நுகர்வோர் என அனைத்து தரப்புக்கும் கசப்பான அனுபவத்தைத்தான் தந்திருக்கிறது, பொங்கல் கரும்பு!

அதிகமாகப் பயிரிட்டது, போதிய மழையின்மை, வியாபாரிகளின் பேராசை... என பல சிக்கல்களால், பொங்கல் பண்டிகை முடிந்தும், இன்னும் பல இடங்களில் அறுவடையே செய்யப்படாமல் காய்ந்து கொண்டிருக்கின்றன, செங்கரும்புகள். விற்பனைக்குச் சென்ற இடங்களிலும் சாலையோரங்களில் காய்ந்து கருவாடாகிக் கொண்டிருக்கின்றன. இலவசமாக எடுத்துச் செல்லக்கூட யாரும் முன்வரவில்லை, என்பதுதான் வேதனையான விஷயம்.

இந்த சோகக்கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார், நாகப்பட்டினம் மாவட்டம் அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி. ''எங்க மாவட்டத்துல வழக்கமா, மார்கழி பிறந்து பத்து தேதிக்கெல்லாம் கரும்பு அறுவடை ஆரம்பிச்சுடும். வெளியூர் வியாபாரிகள்ல்லாம் வந்து வாங்கிக்கிட்டே இருப்பாங்க. பொங்கலுக்கு மூணு நாளுக்கு முன்னாடியே கரும்பு முழுக்க வெட்டி முடிச்சுடுவோம். இந்த வருஷம் போதுமான அளவுக்கு தண்ணி கிடைக்கல. அதனால, கரும்பு சரியா வளரல. இன்னும் கொஞ்சம் வளரட்டுமேனு பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னவரைக்கும் வெட்ட ஆரம்பிக்கல. பொங்கல் நெருங்கின சமயத்துல அவ்வளவையும் வெட்ட முடியல. ஏகப்பட்ட கரும்பு அப்படியே கொல்லையிலயேதான் நிக்குது. பொங்கலுக்கு முன்ன வெட்டினவங்களுக்கு ஓரளவுக்கு விலை கிடைச்சுது. ஆனா, எங்க கதியெல்லாம் என்ன ஆகுமோனு தெரியலையே'' என்று நடுக்கத்துடன் சொன்னார் ஆசைத்தம்பி.

விலையில்லை... வெட்டவில்லை...
விலையில்லை... வெட்டவில்லை...

''போன வருஷம், வடமாவட்டங்கள்ல புயல் பாதிப்பால கரும்பு சரியா விளையல. அதனால, எங்க பகுதியில கரும்புக்கு நல்ல விலை கிடைச்சுது. அதை மனசுல வெச்சுதான் இந்த வருஷம், சூரக்கோட்டை, கண்டுதம்பட்டு, நத்தம், திருக்காட்டுப்பள்ளினு நிறைய ஊர்கள்ல போன வருஷத்தைவிட அதிக வயல்ல கரும்பு போட்டிருந்தாங்க. ஆனா, இந்த வருஷம் வடமாவட்டங்கள்லயும் கரும்பு நல்லா விளைஞ்சுடுச்சு. அதனால எங்க பகுதிக்கு வெளியூர் வியாபாரிகள் யாரும் வரலை. அதனால, சரியான விலை கிடைக்காம போயிடுச்சு'' என்று விரக்தியாகச் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், காசாநாடுபுதூர் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி.

ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த கரும்பு வியாபாரி சுந்தர், ''வழக்கமா இந்த நேரத்துல சம்பா விளைஞ்சு விவசாயிகள், தொழிலாளர்கள்னு எல்லார் கையிலயும் காசு புரளும். ஆனா, இந்த வருஷம்தான் எல்லாம் போச்சே. முன்னயெல்லாம் கரும்பைக் கட்டுக்கட்டாதான் வாங்குவாங்க. இந்த வருஷம் சாஸ்திரத்துக்காக ரெண்டு கரும்பை மட்டும்தான் பலரும் வாங்கினாங்க. முப்பதாயிரம் ரூபாய் முதல் போட்டு வாங்கி, வெறும் எட்டாயிரம் ரூபாய்க்குத்தான் விக்க முடிஞ்சது. மீதிக் கரும்பை அப்படியே போட்டுட்டுத்தான் வீட்டுக்கு வந்தேன். அதை, ஒரு ரூபாய்க்குகூட வாங்கறதுக்கு ஆளில்லை'' என்று ஆதங்கப்பட்டார்.    

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரும்பு விளைச்சல் அதிகம் இருந்தது என்பதைவிட, விற்காமல் போனதற்கு நுகர்வோர் சொல்லும் காரணம், 'அதிக விலை’ என்பதுதான். ''இந்த ஆண்டு பொங்கல் கரும்பு விற்பனை துவக்கத்திலேயே, அதிக விலை வைத்து விட்டார்கள், வியாபாரிகள். அதுதான் விற்பனை குறைந்ததற்கு முக்கிய காரணம். ஜனவரியின் துவக்கத்தில் ஒரு கரும்பு 100 ரூபாய் என்கிற விலையில்கூட விற்கப்பட்டது'' என்கிறார்கள், பலரும்.

விலையில்லை... வெட்டவில்லை...

அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டால்தான்... இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். அதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியது தலையாய விஷயம். இல்லாவிடில், எதிர்காலத்தில் கரும்புதான் என்றில்லை... எல்லா விவசாயமும் பேரழிவைத்தான் சந்திக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.