Published:Updated:

செயற்கையில் 4,200... இயற்கையில் 7,500...

பாடு இல்லாமல் பலன் கொடுக்கும் பாக்கு... என். சுவாமிநாதன், படங்கள்: ரா. ராம்குமார்

 தரமான நாற்று ரொம்ப முக்கியம்
பாக்குக்கு ஊடுபயிராக ரஸ்தாளி
நான்காம் ஆண்டு முதல் மகசூல்

##~##

ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள மண் வளம், நீர் வளம், தட்பவெப்ப நிலை... ஆகியவற்றுக்கேற்ற வகையில்தான் அந்தந்தப் பகுதிகளில் விவசாயம் அமையும். இதில், ஊடுபயிர்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கேற்ற பயிர்களில் ஒன்று பாக்கு. இம்மாவட்டத்தில் பலரும், தனிப்பயிராகவும், தென்னைக்கு இடையில் ஊடுபயிராகவும் பாக்கு சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்... வில்சன் ராஜப்பன்.

நாகர்கோவில்-சுருளங்கோடு சாலையில் பதினெட்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, அருமநல்லூர் கிராமம். திரும்பிய பக்கமெல்லாம் காவல் வீரர்கள் போல வரிசை கட்டி நிற்கின்றன, தென்னை மரங்கள். இங்குதான், வில்சன் ராஜப்பனின் பாக்குத் தோட்டம்!

பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வில்சன் ராஜப்பனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள, உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ''எங்க குடும்பத்துக்கு பூர்விகத் தொழில் விவசாயம்தான். முக்கால் ஏக்கர்ல பாக்கும், அதுக்கு ஊடுபயிரா ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கேன். இதுபோக நிறைய தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்தும் வாழை விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். பாக்குக்கு அதிக தண்ணீர் தேவைங்கிறதால... வாய்க்கால் பாசனம்தான்.

செயற்கையில்  4,200... இயற்கையில்  7,500...

இவ்வளவு நாள் ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டுருந்தேன். கொஞ்ச நாளாத்தான் இயற்கை விவசாயத்தைக் கத்துக்க ஆரம்பிச்சுருக்கேன். இன்னும் முழுசா இயற்கைக்கு மாறல. ஆனா, ரசாயனத்தைப் படிப்படியா குறைச்சுட்டு இருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த வில்சன் ராஜப்பன்... பாக்கு சாகுபடி பற்றிய விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

அது... 60 நாள் நாற்று!

'மணல் கலந்த அனைத்து மண் வகையும்... பாக்கு சாகுபடிக்கு ஏற்றவை. ஜாவா, நாடன் ஆகிய இரண்டு ரகங்கள்தான் பெரும்பாலும் இங்கே நடவு செய்யப்படுகின்றன. ஜாவா ரகம்

செயற்கையில்  4,200... இயற்கையில்  7,500...

20 ஆண்டுகளும், நாடன் 50 ஆண்டுகளும் பலன் கொடுக்கின்றன. தரமான நாற்றுகளை உற்பத்தி செய்துதான் நடவு செய்ய வேண்டும். சித்திரை மாதம்தான் நடவுக்கு ஏற்ற மாதம். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நாற்றுத் தயாரிப்பில் இறங்க வேண்டும். நாற்றங்காலுக்காக, பத்து அடி நீளம், பத்து அடி அகலத்தில் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். பழுத்து அழுகாத நிலையில் உள்ள

500 தரமான பாக்குகளை மண்ணில் லேசாகப் புதைத்திருக்குமாறு செங்குத்தாக நட்டுவைத்து, காய்ந்தத் தென்னை ஓலைகளால் மூடி, தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். கிட்டத்தட்ட 60 நாட்களில் முளைத்து வரும் செடி, காகத்தின் அலகு போல இருக்கும். இதை, 'காக்கா மூக்குப் பருவம்’ என்பார்கள். கிட்டத்தட்ட 450 செடிகளுக்குக் குறையாமல் இப்படி முளைத்து வரும். இதுதான் நடவுக்கேற்றப் பருவம்.

4-ம் ஆண்டு முதல் மகசூல்!

நடவு செய்யப்படவேண்டிய நிலத்தில் எட்டு அடி இடைவெளியில், ஒரு கன அடி அளவுக்குக் குழிபறித்து, மையத்தில் நாற்றை வைத்து மண்ணால் மூடி, ஒரு கையளவு தொழுவுரத்தை இட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். முதல் இலை முளைக்கும் வரை ஈரம் காயாத அளவுக்குப் பாசனம் செய்ய வேண்டும்.

நடவு செய்த நாளிலிருந்து ஒரு மாத இடைவெளியில் தொடர்ந்து ஒவ்வொரு செடிக்கும் கையளவு தொழுவுரம் இட்டு வர வேண்டும். இரண்டு வயது ஆன பிறகு மாதத்துக்கு மூன்று கிலோ அளவுக்கு தொழுவுரம் இட வேண்டும். ஓரளவு செடி வளர்ந்த பிறகு, வாழை போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். வளர்ச்சிக்குத் தகுந்த அளவு ஒவ்வோர் ஆண்டும் தேவையான அளவு ரசாயன உரங்களைக் கொடுத்து வரவேண்டும். ஊடுபயிராக இருக்கும்பட்சத்தில் பிரதான பயிருக்கு இடும் உரமே போதுமானதாக இருக்கும் (இவர், வாழைக்கு ரசாயன உரம் இடுகிறார். பாக்குக்கு தனியாக உரமிடுவதில்லை). 4-ம் வருட தொடக்கத்தில் பாக்கு காய்க்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் நோய்கள், பூச்சிகள் தாக்குவதில்லை.''

75 சென்டில் 5 ஆயிரம்!

சாகுபடி பாடம் முடித்த வில்சன் ராஜப்பன், நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றிச் சொன்னார். ''சிலர் வாரம் ஒரு முறை பறிப்பாங்க. நான் மாசத்துக்கு ஒரு முறை பாக்கு பறிக்கிறேன். முக்கால் ஏக்கர்லயும் (75 சென்ட் நிலம்) சேர்த்து, ஒவ்வொரு பறிப்புக்கும், நாலு மூட்டை

(70 கிலோ) அளவுக்கு மகசூல் கிடைக்குது. ஒரு கிலோ 15 ரூபாய்லருந்து 18 ரூபாய் வரைக்கும் விலை போகுது. 15 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே, ஒரு மாசத்துக்கு 280 கிலோ விற்பனை மூலமா... 4 ஆயிரத்து 200 ரூபாய் வருமானம் கிடைக்குது.

ஊடுபயிரா 150 ரஸ்தாளி வாழைகள் இருக்கு. இதுல ஒரு தார் 150 ரூபாய் வரைக்கும் விலை போகும். இதுல கிடைக்கற வருமானம்... பாக்கு, வாழை ரெண்டுக்குமான சாகுபடி செலவுக்கு சரியா இருக்கும். பாக்குல கிடைக்கிற வருமானம் முழுக்கவே லாபம்தான்'' என்று சந்தோஷமாகச் சொன்னார், வில்சன் ராஜப்பன்.

 தொடர்புக்கு,வில்சன் ராஜப்பன்,
செல்போன்: 94863-25832
சிறுமணி, செல்போன்: 94425-30483

இயற்கையிலேயே பெறலாம்...கூடுதல் மகசூல்!

செயற்கையில்  4,200... இயற்கையில்  7,500...

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலானோர் ரசாயன முறையில் பாக்கு சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில், இயற்கை முறையில் பாக்கு சாகுபடி செய்து வருகிறார் வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமணி. இவர், கடந்த 10.11.12-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் வெளியான 'கோகோ, பாக்கு, வாழை, திப்பிலி, மிளகு... தென்னைக்கு நடுவே லாப அணிவகுப்பு’ என்ற செய்தியின் மூலம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.

தென்னைக்கு ஊடுபயிராகவும், 25 சென்ட் நிலத்தில் தனிப்பயிராகவும் பாக்கு சாகுபடி செய்து வரும் சிறுமணி, இயற்கை முறையில் பாக்கு சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி சொன்ன விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

''ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி அகலத்தில் குழி எடுத்து அதில் 2 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ மண்புழு உரம், நிலத்தின் மேல் மண் ஆகியவற்றைப் போட்டு பாக்கை நடவு செய்து, முளைத்து வரும் வரை ஈரம் காயாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்து ஒரு மாதம் கழித்து, ஒவ்வொரு செடியின் அடியிலும், தலா ஒரு கையளவு வேப்பம் பிண்ணாக்கு, சாம்பல், தொழுவுரம் ஆகியவற்றைக் கலந்து வைக்க வேண்டும். தேவைப்பட்டால், அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். 4-ம் மாதம் ஒவ்வொரு மரத்துக்கும் ரெண்டு கையளவு சுண்ணாம்புப் பொடி போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

25 சென்டில் 3 ஆயிரம்!

7-ம் மாத இறுதியில், ஒவ்வொரு மரத்தின் அடியிலும் வேப்பிலையைப் பரப்பி, அதன் இரு கையளவு தொழுவுரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 9-ம் மாதம் இலைக்கழிவுகளைப் பரப்பி இரு கையளவு தொழுவுரம் இட வேண்டும். அதற்குப் பிறகு, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்துக்கும், 5 கிலோ தொழுவுரம் இட வேண்டும். அவ்வப்போது, வேப்பம் பிண்ணாக்கு இட்டு வந்தால், பூச்சிகள் தாக்குவதில்லை. குருத்துப் பூச்சிகள் தாக்கினால், இரண்டு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி புகையிலைக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும் (அரை கிலோ புகையிலையை நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டு, அது ஒரு லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டினால், புகையிலைக் கரைசல் தயார்). பாக்கை நடவு செய்த நான்காவது வருடத்தில் இருந்து பறிக்க ஆரம்பிச்சுடலாம்.

என்னோட 25 சென்ட் தோட்டத்துல வாரத்துக்கு ஒரு பறிப்பு இருக்கும். ஒவ்வொரு பறிப்புக்கும் 1,500 பாக்குக்கு குறையாம மகசூல் கிடைக்கும். பாக்கு ஒண்ணுக்கு குறைந்தபட்சம் 50 காசு விலை கிடைக்கும். இப்படி கிடைச்சாலே... வாரம் 750 ரூபாய் வருமானம் வந்துடும். அந்த மேனிக்கு கணக்கு பார்த்தாலே... மாசம் 3,000 ரூபாய் வருமானம் வந்துடும். பறிப்புக் கூலி, இயற்கை உரச் செலவு போக 2,500 ரூபாய் வரைக்கும் கையில் நிக்கும்'' என்றார் பூரிப்போடு!

செயற்கையை மிஞ்சும் இயற்கை!

வில்சன் ராஜப்பன், செயற்கை மற்றும் இயற்கை வழிமுறைகளைக் கலந்து 75 சென்ட் நிலத்தில் பயிரிட்டிருக்கும் பாக்கு மூலமாக மாதம் 4,200 ரூபாய் லாபம் எடுக்கிறார். சிறுமணியோ... இயற்கை வழி விவசாயம் மூலமாக மட்டுமே 25 சென்ட் நிலத்திலிருந்து 2,500 ரூபாய் லாபம் பார்க்கிறார். இதையே 75 சென்ட் பாக்குக்கு கணக்கிட்டால்... 7,500 ரூபாய் வந்துவிடும். ஆக, செயற்கையை மிஞ்சுகிறது இயற்கை!

அடுத்த கட்டுரைக்கு