Published:Updated:

லாபத்தைப் பெருக்கும் லட்டுத் தொடர்...

மதிப்புக்கூட்டும் மந்திரம் !முனைவர். க. அழகுசுந்தரம்,படங்கள்: கே. குணசீலன்

லாபத்தைப் பெருக்கும் லட்டுத் தொடர்...

மதிப்புக்கூட்டும் மந்திரம் !முனைவர். க. அழகுசுந்தரம்,படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:

புதிய பகுதி

##~##

அவர் சாப்பிட உட்கார்ந்தால்... தட்டுக்கு அருகிலேயே ஒரு நத்தைக் கூட்டில் தண்ணீரும், அதனுள் சிறு ஊசியும் வைக்கப்படும். எதற்காக...? சாப்பிடும்போது ஒன்றிரண்டு பருக்கைகள் கீழே சிந்திவிட்டால்... அதை ஊசியால் குத்தி எடுத்து, அந்தத் தண்ணீரில் அலசி, சாப்பிடுவதற்காக. ஆனால், அப்படியரு நிலையை ஒரு நாளும் அவர் ஏற்படுத்தியதில்லை. ஆம், அவர் சாப்பிட அமர்ந்தால்... ஒரு பருக்கை உணவுகூட கீழே சிந்தாது. அவர்... உலகமே வியந்து போற்றும் திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர்!

இதை உங்களில் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தாத்தா, பேரன் என்று வழி வழியாகக் கடத்தி வரப்பட்டிருக்கும் இந்தத் தகவல், நமக்கெல்லாம் சொல்லும் உண்மை என்ன?

ஒருதுளி உணவு கூட வீணடிக்கப்படக் கூடாது என்பதுதானே!

இப்படியெல்லாம் உணவை நேசித்ததால்தான், நம் முன்னோர்கள் அதை தெய்வமாகவே பார்த்தனர். நெற்குதிர்களுக்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கினார்கள். உண்ணும் உணவின் மீது சத்தியம் செய்து, உண்மையை நிரூபிக்கும் உயரியப் பழக்கமும் வழக்கத்தில் இருப்பது... இதன் எதிரொலியே!

லாபத்தைப் பெருக்கும் லட்டுத் தொடர்...

உணவுப் பொருட்கள் எதுவாக இருந்தாலும், துளிகூட வீணடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த அந்தக் காலம் தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய நிலை, அதற்கு நேர் எதிராக இருக்கிறது. ஆண்டுதோறும் நம்நாட்டில் வீணாகும் உணவுப் பொருட்களின் மதிப்பு... கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி ரூபாய்!

தானியங்கள், நறுமணப் பொருட்கள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துமே இதில் அடக்கம். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, உடனடியாக விற்பனை செய்ய முடியாத இக்கட்டானச் சூழல்; முறையாகக் கையாள முடியாத நிலை, போக்குவரத்துப் பிரச்னைகள்... என இழப்புகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள், உண்ணப்படாமல் வெறும் குப்பையாகப் போவதால் நாம் இழப்பது வருமானத்தை மட்டுமல்ல... விவசாயிகளின் உழைப்பு, நேரம், முதலீடு, விதை, உரம்... என பட்டியல் நீளும்! கண்ணுக்குத் தெரியும் இந்த இழப்புகளுக்கெல்லாம் மேலானது... நம் நாட்டுக்கும் எதிர்கால சந்ததியினருக்குமான மறைமுக இழப்புகள். மண்ணில் இருக்கும் சத்துக்கள் மற்றும் தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் கொண்டிருப்பதைத்தான் சொல்கிறேன்!

இவற்றைச் சரிக்கட்டுவதற்கு... ஒவ்வொரு மனிதனுக்குமே அந்த உணர்வு மேலிட வேண்டும். 'தனியருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்!' என்றுதான் பாடி வைத்திருக்கிறார் பாரதியார். ஆக, தனிமனிதன் ஒவ்வொருவருக்குமே, உணவு பற்றிய எச்சரிக்கை உணர்வு தேவை!

இதைச் சாதிப்பதற்கு... மக்களுடைய மனப்பான்மையிலும், அரசாங்கத்தின் கொள்கைகளிலும் பலவிதமான மாற்றங்கள் வந்தாக வேண்டும். அதெல்லாம் விவசாயிகளான நம்முடைய கையில் இல்லை. அதேசமயம், விளைவிக்கும் பொருட்கள் வீணாகாமல் காப்பாற்ற நம்மால் மட்டுமே முடியும். ஆம், அதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கத்தான் வருகிறது... இந்த 'மதிப்புக் கூட்டும் மந்திரம்' இதை மட்டும் சரியாகத் தெரிந்துகொண்டால், நஷ்டம் உங்களை என்றைக்கும் நாடவே நாடாது. இதற்கு அரசாங்கம் பல வகையிலும் உதவிகளைச் செய்து வருகிறது!

லாபத்தைப் பெருக்கும் லட்டுத் தொடர்...

உணவுப்பொருட்களை உரிய முறையில் பாதுகாப்பதும் பதப்படுத்துவதும், மதிப்புக்கூட்டுவதும் காலத்தின் கட்டாயம். இனிவரும் காலங்களில் இதற்கான அவசியம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்.

பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதால்... வறட்சி, வெள்ளம் போன்றவற்றால், ஏற்கெனவே உணவு உற்பத்தி குறையத் தொடங்கி விட்டது. எரிபொருள் பற்றாக்குறையின் காரணமாக டிராக்டர் போன்ற வேளாண் கருவிகளைத் தேவைக்கு ஏற்ப இயக்குவதிலும் பெரும் சிரமம் உருவாகியுள்ளது.

மின்சாரப் பற்றாக்குறையினாலும் உணவு உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் நகர்ப்புறமயமாதல் போன்ற காரணங்களால், வீட்டுமனைகளுக்கான தேவை அதிகரித்து, விவசாய நிலங்களின் பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. அதேசமயம்... மக்கள்தொகை பெருகி, உணவுத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இத்தகைய இக்கட்டான தருணத்தில்... உற்பத்தியாகும் உணவுப்பொருள் கொஞ்சம்கூட, சேதாரம் இல்லாமல், முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால்தான், எல்லோருக்கும் வளமான உணவு கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயிகள் தங்களைத் தற்காத்துக் கொண்டு தழைத்தோங்க முடியும்.

'விளைபொருட்களைப் பத்திரப்படுத்தி, பதப்படுத்தி, மதிப்புக் கூட்டி விற்பனை செய்யலாம் என்பதெல்லாம் சரிதான். ஆனால், நடைமுறையில் இது எந்தளவு சாத்தியம்? இதற்குத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது அத்தனை எளிதான காரியமா? இயந்திரங்கள் வாங்கி இதில் ஈடுபட வேண்டுமென்றால், எக்கச்சக்கமான பணம் தேவைப்படுமே? எல்லா விவசாயிகளுக்குமே இது எப்படி சாத்தியமாகும்?’

-இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நீங்கள் வீசுவது என் காதில் விழுகிறது.

கவலையேபடாதீர்கள். மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் செய்யும் அற்புதங்களை முழுவதுமாகக் கற்றுத்தரும் வகையில் உங்கள் கரம் பிடித்து அழைத்துச் செல்லக் காத்திருக்கிறது, தஞ்சாவூரில் இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனமான இந்திய பயிர்பதனத் தொழில்நுட்பக் கழகம்!

மதிப்புக் கூட்டும் மந்திரங்களை, இதழ்தோறும் எடுத்துச் சொல்ல இருக்கிறேன். எங்களுடன் இணைந்து இன்னும் பல அரசு நிறுவனங்களும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராக இருக்கின்றன. விவசாயிகள் உற்பத்தியாளராக மட்டும் நின்று விடாமல், வணிகராகவும் மாறினால்தான் மாற்றம் பிறக்கும். வாழ்க்கைச் செழிக்கும். உங்களில் சிலர் ஏற்கெனவே இதில் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தொடர் மூலம், இதில் இன்னும் கால்பதிக்காத விவசாயிகளுக்கும்... கால் பதித்திருக்கும் விவசாயிகளுக்கும் இடையே பாலம் அமைக்கப் போகிறேன். அறுவடை பின்சார் தொழில்நுட்பத்தையும், மேலாண்மையையும் நீங்கள் கற்றுக் கொள்ள, உங்களது உற்றத் தோழனாக துணை நிற்கப் போகிறேன்.

தேடலுடன் காத்திருங்கள்...

-மதிப்புக் கூடும்...

இவரைப்பற்றி...

முனைவர் க. அழகுசுந்தரம், கடந்த ஐந்தாண்டுகளாக, தஞ்சாவூரில் உள்ள இந்திய பயிர்பதனத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கீழச்சேவல்பட்டி.

லாபத்தைப் பெருக்கும் லட்டுத் தொடர்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண் பொறியியல் படிப்பையும், தாய்லாந்து நாட்டில் உள்ள ஆசிய தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலை உணவுப் பதனீட்டுப் பொறியியல் படிப்பையும் பயின்றவர். கனடாவில் இருக்கும் மானிடோபா பல்கலைக்கழகத்தில் உணவுப் பதனீட்டு பொறியியல் துறையில் ஆராய்ச்சிகள் செய்து, முனைவர் பட்டம் பெற்றதோடு, அங்கு பல ஆண்டுகள் பணியும் புரிந்திருக்கிறார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இவரது பங்களிப்பைப் பாராட்டி, தேசிய சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது.