Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - வலிமை பெற்ற வடகரை !

நம்மாழ்வார், ஓவியம்: ஹரன், படங்கள்: ரா. ராம்குமார்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - வலிமை பெற்ற வடகரை !

நம்மாழ்வார், ஓவியம்: ஹரன், படங்கள்: ரா. ராம்குமார்

Published:Updated:
##~##

'ஜெகன்’ - ஜெகன்னாதனை இப்படித்தான் அந்த ஊர் மக்கள் அழைப்பார்கள். வடகரை கிராமத்தை முன்னேற்றும் முயற்சியில் அவர் மேற்கொண்டிருந்த பணி, ஊர் தலைப்பில் இருந்த ஏரி சீரமைப்பு. ஒரு வெள்ளத்தின்போது உடைப்பெடுத்து, விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி ஊரைக் கடந்திருக்கிறது, மழை நீர். 'அதை யார் சரி செய்வது?’ என்ற எண்ணத்திலேயே சில ஆண்டுகள் உருண்டோடிவிட, அதைக் கையிலெடுத்தார், ஜெகன்.

'ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரிலுள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பொது வேலை செய்வது’ என அனைவரும் முடிவெடுத்தனர். நானும் அதில் பங்கு பெற்றேன். ஏரியின் உட்பகுதியில் பள்ளம் தோண்டி மண்ணை எடுத்து, கரையில் இட்டோம். ஏரியின் கரை உயர்ந்து, அடுத்த மழையிலேயே ஏரி நிறைந்தது. மக்களின் மனங்கள் மகிழ்ச்சியால் நிறைந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஏரியில் மீன் குஞ்சு வாங்கிவிடவேண்டும்’ என களக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் விண்ணப்பித்தனர். ஆனால், பொறுப்பில் இருந்த ஊழியர் மீன் குஞ்சுகளைக் கொடுக்காமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார். பொறுமையிழந்த நிலையில், நானும் ஓர் இளைஞனும் மோட்டார் சைக்கிளில் மணிமுத்தாறு அணைக்குச் சென்று, மீன் குஞ்சுகளை வாங்கி வந்து ஏரியில் விட்டோம். குளத்தில் மீன்கள் பெருகின. தண்ணீர் இருந்ததால் நிலத்தில் நெற்பயிர்கள் வளர்ந்தன. ஊர் மக்களின் உணவில், அடிக்கடி மீன் இடம் பெற்றது. வாழ்க்கை சுகமாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், திடீரென ஓர் அதிர்ச்சி... 'குளத்தில் வளரும் மீன்களை அரசாங்கம் ஏலம் விட இருக்கிறது. இதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து ஒரு அதிகாரி வருவார்’ என்று தேதி குறிக்கப்பட்ட தகவல் வந்தது!

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - வலிமை பெற்ற வடகரை !

'ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா...

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்' என்று ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, நம் மக்கள் பாடிய பாடல்தான் இப்போதும் நெஞ்சை அறைந்தது!

'என்ன செய்வது?' என்று யோசித்த ஊர் மக்கள்... ஒரு முடிவெடுத்து, அதை செயல்படுத்தியும் விட்டனர். இரவு வேளைகளில் குளத்தில் இருந்த பெரிய மீன்களையெல்லாம் பிடித்து... நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவருக்கும் கொடுத்து விட்டனர்.

ஏலம் விடுவதற்காக குறிப்பிட்ட நாளில்... பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம், வடகரை மக்கள் 'இந்தக் குளக்கரை உடைப்பெடுத்தபோது பழுது பார்க்க வட்டார வளர்ச்சி அலுவலர் வரவில்லை. எந்தக் கூலியும் இல்லாமல் நாங்களாக மண் சுமந்து சரி செய்தோம். மீன் குஞ்சுகளைக்கூட கிராம நல ஊழியர் வாங்கித் தரவில்லை. நாங்களே மீன் குஞ்சு வாங்கி குளத்தில் விட்டிருக்கிறோம். இதை ஏலம் விடுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு எந்த விதத்தில் உரிமை இருக்கிறது. வெளியூர்காரர்கள் ஏலம் எடுத்து லாபம் ஈட்ட நினைப்பது முறையா?’ என்று கேட்டனர்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - வலிமை பெற்ற வடகரை !

வடகரையின் ஒற்றுமை, வலிமை, அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்... ஆகியவற்றை உணர்ந்த வெளியூர்காரர்கள் மறுப்பு சொல்லாமல் வெளியேறினர். பிறகு, குளத்து மீன்களை ஏலம் விட்டார், அதிகாரி. ஒன்றரை ரூபாயில் ஆரம்பித்து... அதிகபட்சமாக ஏழு ரூபாய் ஐம்பது காசு வரை ஏலம் விடப்பட்டது. உள்ளூர் மக்கள் சார்பாகவே ஏலம் எடுக்கப்பட்டது. அதிகாரிக்கு வேலைப்பளுவும் குறைந்திருந்தது.

ஊரில் நடந்தேறியுள்ள முன்னேற்றத்தை வெளியூர் மக்களுக்கு அறிவிக்கும் வகையில், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைத்து, வடகரை கிராமத்தில் மே தினத்தைக் கொண்டாட ஜெகன் ஏற்பாடு செய்தார். குத்தகை நிலங்களில் குடியேறியுள்ள உழவுத்தொழில் செய்யும் மக்கள் கொண்டாடும் மே தினக் கொண்டாட்டம் இதுவாகத்தான் இருக்கும். எழுத்தாளரும் கல்வியாளருமான பொன்னீலனை... இந்தக் கொண்டாட்டங்கள் ஈர்த்தன.  

ஊர் மக்கள் சேர்ந்து ஜெகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். கிராமத்தில் விளைந்த பொருட்களை ஒன்று சேர்த்து, தூரத்து ஊர்களுக்குக் கொண்டு சென்று விற்று, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தினர் மக்கள். கிராமத்து இளைஞர்கள் பலரின் பெயர்கள் இன்னும்கூட என் மண்டையில் அச்சாகியுள்ளன. சின்ன பால்ராஜ், பெரிய பால்ராஜ், இரண்டு சுப்பையா, பெருமாள், அனந்த நம்பியார், பாலதண்டாயுதம், கருப்பையா... போன்றவர்கள் மறக்க முடியாதவர்கள்!

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - வலிமை பெற்ற வடகரை !

1979-ம் ஆண்டில் நான் களக்காட்டை விட்டு நகர்ந்த பிறகு, கொஞ்ச நாட்களில் ஜெகனும் வெளியேற வேண்டி வந்தது. ஆனாலும் வடகரையின் வளர்ச்சி தடையில்லாமல் முன் நோக்கிப் பாய்ந்தது.

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு 'பாரம்பரிய விதைகளைக் காப்போம்’ என்கிற பயணம் மேற்கொண்டபோது... வடகரை மக்கள் மேள-தாளம், தாரை-தப்பட்டையோடு முக்கிய சாலைகளிலிருந்து ஊர் வரை எங்களை அழைத்துச் சென்று, ஊர் அடைந்திருக்கும் வளர்ச்சிகளைக் காட்டினார்கள். நரைத்த தாடி மீசையுடன் இருந்தாலும், என்னை அடையாளம் காண்பதில் அவர்களுக்கு சிக்கல் இருக்கவில்லை. 'எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறோம்!’ என்று ஒருவர் தன் வியப்பை வாய்விட்டு வெளிப்படுத்தினார். பக்கத்திலிருந்த ஒரு தாய், '17 ஆண்டுகளுக்கு பிறகு’ என்றார்.

'எப்படி சொல்கிறீர்கள்.?’ என்றேன்.

'சொக்குப் பையன் பிறந்திருந்தபோது நீங்கள்தான் பாலன்னு பேர் வெச்சீங்க. இப்ப அவனுக்கு 17 வயசாகுது’ என்று சொன்னார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை கருத்தரங்கத்துக்குச் சென்றபோது  பொது தொண்டு செய்துவரும் கருணாகரன் தலைமையில் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. மீண்டும் வடகரை தோழர்களைச் சந்தித்து உறவாடுகிற வாய்ப்பு கிடைத்தது. வடகரையைப் போன்றே என்னைக் கவர்ந்த மற்றொரு ஊர்... கட்டளை! அந்த ஊருக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் பக்கம் என் கவனத்தை ஈர்த்தவர், வாத்தியார் சண்முகம்!

 -இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism