Published:Updated:

ஏக்கருக்கு 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்...

'ஜீரோ பட்ஜெட்'டில் 'ஜிலுஜிலு'க்கும் திசு வாழை! ஆர். குமரேசன், படங்கள்: வீ. சக்திஅருணகிரி

பிரீமியம் ஸ்டோரி

 தொழில்நுட்பம்

சென்ற இதழ் தொடர்ச்சி...

##~##

தொழில்நுட்பங்களைத் துணையாகக் கொண்டு, வாழை சாகுபடியில் சாதனை படைத்து வரும் தேனி மாவட்ட வாழை விவசாயிகளைப் பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதனைத் தொடர்ந்து, ஜீரோ பட்ஜெட் முறையில் 15 ஏக்கர் நிலத்தில் திசு வாழை சாகுபடி செய்து வரும், கோட்டைசாமி தனது அனுபவங்களை இங்கே விவரிக்கிறார்.

''சென்ட்ரல் கெவர்மென்ட்ல வேலை பாத்துட்டு இருந்த நான்... காடு, கழனி மேல இருந்த காதலால வேலைய உதறிட்டு வந்துட்டேன். மொத்தம் 18 ஏக்கர் பூமி இருக்கு. அதுல 15 ஏக்கர்ல ஜி-9 ரக திசு வாழையை நட்டுருக்கேன். மிச்சம் ரெண்டரை ஏக்கர்ல மாடுகளுக்கு தீவனப்புல் இருக்குது. அரை ஏக்கர்ல மாட்டுக்கொட்டகை, மண்புழு உரம் தயாரிக்குற ஷெட், வீடு எல்லாம் இருக்கு. வரப்பு ஓரங்கள்ல தென்னை மரங்கள் இருக்குது. எப்பவும் தோட்டத்துல பத்து பதினைஞ்சாளுக வேலை பாத்துகிட்டுத்தான் இருப்பாங்க. நானும் ஆளோட ஆளா நின்னு வேலைகளைச் செய்வேன்.

என்னையப் பொருத்தவரைக்கும் வளமான நிலம், தேவையான தண்ணி, முறையானத் தொழில்நுட்பம் இருந்தா... விவசாயத்துல நட்டமே வராது. சரியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆரம்பிச்ச பிறகு, 200 பேர் பாத்த வேலைய 80 பேரே செஞ்சு முடிச்சுட முடியுது'' என்று முன்னுரை கொடுத்து அசத்திய கோட்டைசாமி, தொடர்ந்தார்.

ஏக்கருக்கு 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்...

மண் வளத்துக்கேற்ற விளைச்சல் !

''வாழையில மண்ணு எந்தளவுக்கு வளமா இருக்குதோ, அந்தளவுக்கு விளைச்சல் கிடைக்கும். என்னோடது செம்மண் நிலம். பத்து வருஷத்துக்கு முன்ன நான் பொறுப்பு எடுக்குற வரைக்கும், இந்த நிலத்துல ரசாயன விவசாயம்தான். விவசாயத்தை ஆரம்பிக்கறப்பவே 'இயற்கை முறை’தான்னு முடிவு செஞ்சுட்டேன். அந்த சமயத்துல, இப்போ இருக்குற அளவுக்கு இயற்கை விவசாயத்தைப் பத்தின விழிப்பு உணர்வோ, பயிற்சிகளோ இல்லை. இருந்தாலும், இயற்கை விவசாயம் செய்றவங்கள தேடிப்போய் பாத்துட்டு வருவேன்.

படிப்படியா ரசாயனத்தைக் குறைக்கணும் !

'முதல்ல மண்ணை வளமாக்கு, பிறகு சாகுபடி செய்’னுதான் இயற்கை விவசாயம் சொல்லுது. அதைத்தான் நான் செஞ்சேன். அதுக்காக, 'உடனடியா வருமானத்தையும் இழந்துடக்கூடாது’னு முடிவு பண்ணி... ரசாயன உரத்தை கொஞ்சம், கொஞ்சமா குறைச்சுக்கிட்டு இயற்கை உரங்களை அதிகமா கொடுக்க ஆரம்பிச்சேன். கிடை போடுறது, பசுந்தாள் உரச் செடிகளை வளர்த்து நிலத்துல அழுத்தி விடுறதுனு தொடர்ந்து செஞ்சதுல ஒரு கட்டத்துல நிலம் நல்லா வளமாயிடுச்சு. இப்போ சுத்தமா ரசாயனத்தைத் தொடுறதே இல்ல.

100 சதவிகிதம் இயற்கை விவசாயம்தான். எங்க தோண்டினாலும், மண்புழு நெளியறதைப் பாக்கலாம். எந்த இடுபொருளும் இல்லாமலே இதுல சாகுபடி பண்ண முடியும். அந்தளவுக்கு வளமாயிருக்கு. கொஞ்சம் கொஞ்சமா ரசாயனத்தைக் குறைச்சுக்கிட்டு வந்ததால... மகசூல் இழப்பு இல்லை. வருமானமும் பாதிக்கப்படல.

ஏக்கருக்கு 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்...

பொதுவா, 'திசு வளர்ப்பு வாழையை இயற்கை முறையில சாகுபடி செய்ய முடியாது’னு சொல்லுவாங்க. ஆனா, என்னோட தோட்டத்துல இருக்குற எல்லா மரமும் திசு வாழைகள்தான். சொல்லப்போனா... சொட்டுநீர், திசு வளர்ப்பு வாழை, இயற்கை விவசாயம் இந்த மூணும்தான் என்னோட வெற்றிக்கான காரணமே'' என்று சிலாகித்த கோட்டைசாமி, இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்யும் சூத்திரங்களை விவரித்தார். அவை, பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏக்கருக்கு 1,200 கன்றுகள் !

வாழைக்கு செம்மண் நிலம் ஏற்றது. நிலத்தைக் கட்டியில்லாமல் நன்றாக உழவு செய்து, ஏக்கருக்கு 15 டிராக்டர் எரு என்கிற கணக்கில் கொட்டி, உழவு ஓட்ட வேண்டும். கரம்பை மண் கிடைத்தால், 12 டிராக்டர் எரு, 3 டிராக்டர் கரம்பை என கலந்து கொள்ளலாம். பிறகு, 6 அடி இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். திசு வாழைக் கன்றுகள், பிளாஸ்டிக் பைகளில் வைத்துதான் வளர்க்கப்படும். அந்தப் பை உயரத்தைக் கணக்கிட்டு, அது மண்ணுக்குள் மறையும் அளவுக்குக் குழி எடுத்தால் போதுமானது. அதிக ஆழம் தேவையில்லை. சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துக் கொண்டு... ஒவ்வொரு குழியிலும், 250 கிராம் மண்புழு உரம்,

ஏக்கருக்கு 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்...

20 கிராம் வேம், 10 கிராம் வேஸ்டிலோமைசின் ஆகியவற்றைப் போட்டு, மறக்காமல் பிளாஸ்டிக் பையை அகற்றிவிட்டு... கன்றுகளை நட்டு பாசனம் செய்ய வேண்டும். இந்த இடைவெளியில் நடும்போது ஏக்கருக்கு 1,200 கன்றுகள் வரை நடவு செய்ய முடியும். தொடர்ந்து 9-ம் மாதம் வரை,

15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் சொட்டுநீர்க் குழாயில் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும்.

பசுந்தாள் நடவு !

வாழை நடவு செய்த 40-ம் நாள், காலியாக உள்ள நிலம் முழுவதும் சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு விதைகளை நெருக்கமாக விதைக்க வேண்டும். விதைத்த 35-ம் நாள் இவை அரும்பு கட்டி நிற்கும். அந்தத் தருணத்தில், பவர்டில்லர் மூலமாக அவற்றை தூள் தூளாக்கிவிட வேண்டும். பூத்த பிறகு, தூளாக்குவதைவிட, பூக்கும் முன்பாக இப்படிச் செய்யும்போது மண்ணுக்கு அதிகளவில் சத்துக்கள் கிடைக்கும்.

ஏக்கருக்கு 600 கிலோ மண்புழு உரம், தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, பொட்டாசியம் பாக்டீரியா என்கிற கணக்கில் கலந்து வைத்துக் கொண்டு வாழை நடவு செய்த 60-ம் நாள், ஒவ்வொரு கன்றுக்கும் அரை கிலோ அளவுக்கு வைத்து மண் அணைக்க வேண்டும். தொடர்ந்து, மாதம் ஒரு முறை இக்கலவையை இட்டுவர வேண்டும்.

வேர் ஓட்டத்துக்கு ஹுயூமிக் அமிலம் !

80-ம் நாள், ஒவ்வொரு கன்றுக்கும் 100 கிராம் ராக்பாஸ்பேட் (பாறைத் தூள்), 400 கிராம் மண்புழு உரம் இரண்டையும் கலந்து வைக்க வேண்டும். கடலை, வேம்பு, இலுப்பை, ஆமணக்கு, புங்கன் ஆகிய 5 வகை பிண்ணாக்குகளையும் சமஅளவில் கலந்து வைத்துக் கொண்டு... 4-ம் மாதத்தில் ஒவ்வொரு தூருக்கும் 100 கிராம் அளவில் வைக்க வேண்டும். ஐந்தரை மாதத்தில் வாழை குலை தள்ளத் தொடங்கும். அந்த நேரத்தில் வேர் ஓட்டம் நன்றாக இருப்பதற்காக, ஒரு ஏக்கருக்கு, ஒரு லிட்டர் ஹுயூமிக் அமிலத்தை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து, மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

காஞ்சாரை நோய்க்கு ஜீவாமிர்தம் !

முடிக்கொத்து நோய், வெடி நோய், காஞ்சாரை ஆகியவைதான் வாழையைத் தாக்கும் முக்கிய நோய்கள். இயற்கை முறை சாகுபடியில் முடிக்கொத்து நோய், வெடி நோய் இரண்டும் வருவதில்லை. ஆனால், காஞ்சாரை நோய் சில நேரங்களில் தாக்க வாய்ப்பு உண்டு. இது தாக்கினால், இலைகள் பசுமை குன்றி கருகிவிடும். 12 லிட்டர் ஜீவாமிர்தம், தலா 2 கிலோ சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி, ஒரு கிலோ அசிட்டோ ஃபேக்டர் ஆகிவற்றை

200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், இந்நோய் கட்டுப்படும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. விளைச்சலைப் பொறுத்து 9-ம் மாதத்துக்கு மேல் காய்களை அறுவடை செய்யலாம்.

ஏக்கருக்கு 2 லட்சத்து 91 ஆயிரம் !

சாகுபடிப் பாடம் முடித்த கோட்டைசாமி மகசூல் மற்றும் வருமானம் பற்றிச் சொல்லும்போது, ''ஏக்கருக்கு 1,200 வாழைகள் நட்டு அதுல 100 தார் விளையாமப் போனாலும்... கண்டிப்பா 1,100 தார் கிடைச்சுடும். வாழைத்தார் போட்டதுமே வியாபாரிகள் வந்து பாத்துட்டு தரத்தைப் பொறுத்து விலை பேசி அட்வான்ஸ் கொடுத்திடுவாங்க. காய் திரண்டதும், அவங்க செலவுலேயே அறுத்துக்குவாங்க.

என்னோட வாழையை சின்னமனூர்ல இருக்கற 'ஃபிரஷ் பனானா’ கம்பெனிக்காரங்கதான் விலை பேசியிருக்காங்க. ஒரு தார் 315 ரூபாய்னு முடிவாகியிருக்கு. நான் ஜீரோ பட்ஜெட் முறையில விவசாயம் செய்றதால ஒரு வாழைக்கு அதிகபட்ச செலவே 50 ரூபாய்தான். அதைக் கழிச்சுட்டோம்னா... ஒரு தாருக்கு 265 ரூபாய் லாபமா கிடைக்கும். ஏக்கருக்கு ஆயிரத்து நூறு தார்னு வெச்சுகிட்டாலும், 2 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய் லாபம். 15 ஏக்கருக்கும் சேர்த்து 43 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்று கச்சிதமாகக் கணக்குப் போட்டுச் சொன்னார்!

தொடர்புக்கு,
கோட்டைசாமி, செல்போன்: 90034-42027

 குறைவான செலவில் ஜீவாமிர்தம் !

''ஜீரோ பட்ஜெட் முறையே சிக்கனமானதுதான். கொஞ்சம் யோசித்தால், அதை இன்னும்கூட சிக்கனமாக்க முடியும்'' என்று சொல்லி ஆவலைக் கூட்டும் கோட்டைசாமி, அதைப் பற்றி விளக்கமாகவே சொன்னார்.

''வழக்கமா ஜீவாமிர்தம் தயாரிக்கறதுக்கு மண்டை வெல்லத்தைப் பயன்படுத்துவாங்க. அது கிலோ 80 ரூபாய். அதுக்குப் பதிலா நாட்டுக் கருப்பட்டியையும் பயன்படுத்தலாம். எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்கற லட்சுமிபுரம் வெல்லமண்டியில நாட்டுக் கருப்பட்டி, ஒரு கிலோ 30 ரூபாய்னு கிடைக்குது. அதுல எனக்கு கிலோவுக்கு 50 ரூபாய் மிச்சம்.

ஏக்கருக்கு 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்...

அதேபோல தானிய மண்டிகள்ல கீழ சிதறுற பயறுகளைத்தான் (சிந்து மணி) நான் வாங்குறேன். இது நிறைய இடங்கள்ல இலவசமாவே கிடைக்கும். அப்படியே விலை கேட்டாலும், அதிகபட்சம் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு மேல இருக்காது. அதை வாங்கி புடைச்சு அரைச்சுதான், நான் பயறு மாவுக்குப் பதிலா பயன்படுத்துறேன். இதுல கிலோவுக்கு 30 ரூபாய் வரை மிச்சமாகுது. இப்படி சின்னச்சின்னதா ஒவ்வொரு விஷயத்துலயும் யோசிச்சா... மிச்சமோ மிச்சம்தான்'' என்று ரொம்பவே யோசிக்க வைத்தார் கோட்டைசாமி

பாலைவிட, சாணம் முக்கியம் !

இயற்கை விவசாயம் என்பதால், மாடுகளையும் வளர்த்து வருகிறார் கோட்டைசாமி, அதைப் பற்றிபேசும்போது, ''என்கிட்ட ஹெச்.எஃப், ஜெர்சி கலப்பு மாடுகள்ல 40 உருப்படி இருக்கு. வழக்கமா பால் பண்ணை வெச்சுருக்கவங்க, அதிக செலவு செஞ்சு கொட்டகை போடுவாங்க. நான், வெயிலுக்கும், மழைக்கும் பாதிக்காம இருந்தா போதும்னு குறைஞ்ச செலவுல இந்தக் கொட்டகையைப் போட்டிருக்கேன். எனக்குப் பாலைவிட சாணம்தான் முக்கியம். அதை வெச்சு மண்புழு உரம் தயாரிக்கிறேன். மாசத்துக்கு கிட்டதட்ட 20 டன் அளவுக்கு மண்புழு உரம் விற்பனையாகுது. ஏலக்காய் எஸ்டேட்டுக்குத்தான் வாங்கிக்கறாங்க. தினமும் ரெண்டுவேளை பசுந்தீவனம்; ஒருவேளை உலர் தீவனம் (சோளத்தட்டை, வைக்கோல்); ஒருவேளை தண்ணியில கலந்த தவிடுனு கொடுக்கிறேன். அதோட அசோலாவையும் கொடுக்கிறேன்.

மாடுகளுக்கு இதையெல்லாம் கொடுத்தா... அதிக பால் கறக்குது. அதிக மாடுகள் இருக்கறதால, தனியா பசுமை வலை அமைச்சு, 30 தொட்டிகள்ல அசோலாவை வளர்க்குறேன். தினமும் 20 கிலோ அசோலாவை தவிட்டோட கலந்து மாடுகளுக்கு கொடுக்குறேன். இதனால பாலோட அளவு கூடுறது மட்டுமில்லாம, அடர் தீவனச் செலவும் குறையுது. 40 மாடுகள்ல இருந்து, சராசரியா தினமும் 250 லிட்டர் பால் கிடைக்குது'' என்கிறார்.

புள்ளிகளைத் தடுக்கும் பாலிதீன் பை !

வாழைத்தாரில் உள்ள காய்களில் ஒருவித பூச்சி உட்காருவதாலும், காயின் முனையில் இருந்து, ஒழுகும் திரவத்தாலும் காய்களில் கருப்புத் திட்டுகளும், கருப்புப் புள்ளிகளும் தோன்றும். புள்ளிகள் உள்ள காய்களை ஏற்றுமதி செய்ய முடியாது. அதனால், தார் போட்டவுடன், தாரை ஒரு பாலிதீன் பையால் மூடி, கட்டி வைத்து விடுகிறார்கள். இதனால் காய்களில் புள்ளி ஏற்படுவதில்லை. இந்தப் பைகளையும் வியாபாரிகளே வந்து போட்டு விடுவதால், விவசாயிகளுக்குச் செலவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு