Published:Updated:

மண்புழு மன்னாரு!

படம்: வீ. சிவக்குமார்

பிரீமியம் ஸ்டோரி

மாத்தி யோசி

##~##

'உலகம் ஒரு வட்டம், சுத்திச்சுத்தி திரிஞ்சாலும்... புறப்பட்ட இடத்துக்குத்தான் வந்து சேரணும்'னு அனுபவசாலிங்க சொல்வாங்க. இது எதுக்கு பொருந்துதோ, இல்லையோ, சாப்பாட்டு விஷயத்துல சரியா இருக்குது. பெரிய, பெரிய படிப்பு படிச்ச விஞ்ஞானிங்க எல்லாம் கூடி, எதிர்காலத்துல எந்த வகையான உணவு, மக்களுக்கு ஏத்ததுனு ஆராய்ச்சி செஞ்சிருக்காங்க. எப்படியும் வாகனப் பெருக்கமும், ஆலை அபிவிருத்தியும் குறையாது. அதனால, பூமியோட வெப்பம் கூடிக்கிட்டேத்தான் போகும். அந்த சமயத்துல, நாம தினமும் சாப்பிடற அரிசியும், கோதுமையும் விளையாது. அப்ப சூழ்நிலையைத் தாக்குப் பிடிச்சி வளர்ற திறன் கம்பு, சோளம், கேழ்வரகு... மாதிரியான சிறுதானியங்களுக்கு மட்டும்தான் இருக்குதுனு கண்டுபிடிச்சிருக்காங்க. ஆக... நம்ம தாத்தா, பாட்டி சாப்பிட்ட... ருசியான, சத்தான சாப்பாடு வருங்கால தலைமுறைக்கு உறுதியாகப் போகுது!

ஆடி மாசம், விதை விதைக்கும்போது காளை மாடு, கறவை மாடு வாங்கறதுதான் நம்ம விவசாயிகளோட பழக்கம். ஆனா, விவரம் தெரிஞ்ச விவசாயிங்க தை, மாசியிலயே மாடுகளை வாங்கிடுவாங்க. ஏன்னா, அந்த சமயத்துல விவசாய வேலைங்க இருக்காது. அதனால, மாடுங்க நிறைய சந்தைக்கு வரும். விலையும் வழக்கத்தைவிட குறைவா கிடைக்கும். ஆடி மாசம் விவசாய வேலை தொடங்கிடறதால மாடுங்களுக்கு கிராக்கி அதிகம். அப்போ, விலையும் கூடுதலா இருக்கும்.

'கரும்பு தின்னக் கூலி கொடுக்கணுமா?’னு சொல்வழக்கு ஒண்ணு இருக்கு.  ஆனா, கரும்பு திங்காததால, நாமெல்லாம் கூலி கொடுத்துட்டிருக்கோம் இந்தக் காலத்துல! அதாவது, நம்மளோட உணவுகள் எல்லாமே, நாக்குக்கு மட்டுமில்லீங்க ஒட்டுமொத்த உடம்புக்கும் ஏத்தமாதிரி அமைச்சு வெச்சுருக்காங்க முன்னோருங்க. ஒவ்வொண்ணுலயும் என்னென்ன சத்து இருக்கு... மருந்து இருக்குனு பார்த்துப் பார்த்து அனுபவத்தால கண்டுபிடிச்சு பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்க. ஆனா, அந்த வரிசையில வர்ற கரும்பை நாமெல்லாம் இப்ப சாப்பிடறதே அபூர்வமா இருக்கு. கரும்பைக் கடிச்சு தின்னக்கூட நேரம் இல்லாம, கரும்புச்சாறு வாங்கி குடிச்சுட்டு பொழப்பை ஓட்டிட்டிருக்கோம். கரும்பு கிடைக்கிற சீசன்ல, கரும்பை வெட்டி நல்லா பல்லால கடிச்சி மென்னு சுவைச்சா... பல்லுங்க பளீர்னு வெள்ளையா இருக்கும். இதனால, பல் சுத்தத்துக்காக டாக்டருங்கிட்ட வருஷத்துக்கு ஒரு தடவையோ... ரெண்டு தடவையோ கொடுக்கற செலவு மிச்சமாகும்தானே!

மண்புழு மன்னாரு!

 ஆடு, மாடுங்களுக்கு இன்ஷூரன்ஸ் பண்ணி வெச்சா, ஆபத்து நேரத்துல அது கைகொடுக்கும். இன்ஷூரன்ஸ் செய்யற ஆடு, மாடுங்க காதுல கட்டாயம், அந்த இன்ஷூரன்ஸ் நம்பர் இருக்கிற தோட்டை மாட்டிவிடுவாங்க. சில ஆடு, மாடுங்க மேய்ச்சலுக்குப் போகும்போது முரட்டுத்தனமா நடந்துக்கற சமயத்துல இந்தத் தோடு கீழே விழறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால, இந்தத் தோட்டை, கழற்றி பத்திரமா வெச்சுடுங்க. நாளைக்கு ஆடு/மாடுங்களுக்கு ஏதாவது ஒண்ணுனா... இந்தத் தோடு இருந்தாத்தான் இன்ஷூரன்ஸ் பணத்தை வாங்க முடியும்.

மீன் பண்ணை வெச்சுருக்கறவங்க, எப்பவும் உஷாரா இருக்கணும். எப்பவும் நம்ம கண் பார்வையில இருக்கற ஆடு, மாடுங்களுக்கு நோய் வந்தாலே... சுலபத்துல நமக்கு தெரிய மாட்டேங்குது. கவனிச்சு பார்த்துத்தான், கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. அப்படியிருக்க... சதாசர்வ காலமும் தண்ணிக்குள்ளயே இருக்கற மீனுங்கள பத்தி கேக்கவே வேணாம். அதனால, மாசம் ஒரு தடவை குளத்துல இருக்கற மீனுங்கள்ல சிலத கையில எடுத்து... நோய், நொடி இருக்குதானு பார்க்கணும். அதாவது, வழக்கமான நடவடிக்கையில இருந்து மாறுபாடா தெரிஞ்சாலே... ஏதோ ஆபத்துனு உணரலாம். உடனே... தகுந்த மருத்துவ உதவிகளை செய்யணும். இல்லைனா, குளத்துலயே அதுங்க ஜல சமாதி ஆயிடும்!

மண்புழு மன்னாரு!

 பயிரு, பச்சைங்க நிறைஞ்சி இருந்தா... அங்க நரி கட்டாயம் இருக்கும். நரி இருந்தா அந்தப் பகுதியில எலித் தொல்லை இருக்காது. ஏன்னா, எலிதான் நரிங்களுக்குப் பிடிச்ச பிரியாணி. அதனால, நரி முகத்துல முழிக்கிறது மட்டுமில்லீங்க, அதோட, காலடி படுற நிலத்துக்கும் ராசிதான் (விளைச்சல்)!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு