Published:Updated:

பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!

மாபெரும் எழுச்சியை ஏற்படுத்திய மரம் வளர்ப்பு கருத்தரங்கு... காசி. வேம்பையன்,படங்கள்: வீ. நாகமணி.

பிரீமியம் ஸ்டோரி

கூட்டம்

##~##

'பசுமை விகடன்' மற்றும் 'எழில்சோலை அறக்கட்டளை’ ஆகியவை இணைந்து, ஜனவரி 27 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தில் 'மாபெரும் மரம் வளர்ப்பு’ கருத்தரங்கை நடத்தின. சுமார் ஆயிரம் விவசாயிகள் ஆர்வத்தோடு பங்கேற்ற இந்நிகழ்வில்... 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் மற்றும் தொழில்சார்ந்த வல்லுநர்கள் பலரும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பலவிதமான கருத்துகளை எடுத்துரைத்தனர். கடந்த இதழில், நிகழ்ச்சி பற்றிய அறிமுகம் இடம்பெற்றிருந்தது. இந்த இதழில் நிபுணர்களின் தொழில்நுட்ப ஆலோசனைகள் உள்ளிட்ட அனைத்தும் இடம்பிடிக்கின்றன.

கலகலப்பாக பேச்சைத் துவக்கிய நம்மாழ்வார், தொடர்ந்து மரம் வளர்ப்பு தொழில்நுட்பங்களை எளிமையாக அனைவரின் மனதிலும் பதியம் போட்டார்.

''இன்னிக்கு பல்வேறு பிரச்னைகளுக்கும் அடிப்படையா இருக்கறது... பருவநிலை மாற்றம்தான். அதைச் சரி செய்யணும்னா, கண்டிப்பா காடுகளை வளர்க்கணும். அப்பதான் வருமானத்தோட, பல்லுயிர்ப் பெருக்கத்தையும் நிலை நிறுத்த முடியும். அந்தக் காடுகள் மேகக் கூட்டங்களை இழுத்து, மழையைப் பொழிய வைக்கும். மழைத் தண்ணியை மண்ணும், மரங்களோட வேரும் சேர்ந்து புவி ஈர்ப்பு விசை மூலமா பூமிக்கு அடியில சேமிச்சு வெச்சுக்கும். மரங்களுக்கு தண்ணி தேவைப்படுறப்ப வேர் மூலம் இலைகளுக்குப் போயிடும். 3 மாச பயிரும், 6 மாச பயிரும் தண்ணி இல்லாம காயும்போதுகூட, மரங்க மட்டும் வாடாம இருக்கறதுக்கு இதுதான் காரணம். தென்னை மரத்தோட 'சல்லிவேர்’ தண்ணியை அதிகமா உறிஞ்சி எடுத்துக்குற குணமுடையது. அதனால, மத்த மரங்களுக்கு தண்ணி பத்தாம போயிடும். ஆக, தென்னையைத் தேவைக்கு மட்டும் வெச்சு வளர்த்தா போதும்.

பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!

சமவெளியிலும் வளரும் ரோஸ்வுட்!

விவசாயிக்கு மரம் வளர்ப்பு மட்டும்தான் நிரந்தரமான வருமானத்தைக் கொடுக்கும். வீட்டைச் சுத்தி இருக்கற இடங்கள்ல, வேம்பு, நெல்லி, கொய்யா, பப்பாளி, முருங்கை வைக்கலாம். குளியல், பாத்திரம் கழுவும் தண்ணீர் போகுற இடங்கள்ல வாழை, தென்னை வைக்கலாம். வேலியில் சவண்டல், சீத்தானு வெயில்படும் இடங்கள்ல எல்லாம் தேவையான மரங்களை நட்டு வளர்க்கலாம். நிழல் பகுதியில கறிவேப்பிலை வளர்க்கலாம். தேக்கு, வருமானம் கொடுக்கறதுக்கு நீண்ட காலமாகும். ஆனா, வேப்ப மரம் 5 வருஷத்துல வருமானம் கொடுத்துடும். இதுவரைக்கும் மலைப் பகுதிகள்ல மட்டும் வளந்த ரோஸ்வுட், செஞ்சந்தனம் மரங்கள் எல்லாம் இப்போ சமவெளியிலயும் நல்லா வளருது.

பென்ஷன் கொடுக்கும் மரங்கள் !

ஒரே வகையான மரங்களை மட்டும் வளர்க்காம, பல அடுக்கு முறையில... பழங்கள் கொடுக்கும் மரம், தீவன மரம், உரங்களைக் கொடுக்கும் மரம், எரிவாயு கொடுக்குற மரம், வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்திக்கு உதவுற மரம், நார் மரம், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரம், வேலிக்கு உதவுற மரம், மருத்துவ குணமுடைய மரம், இறுதிச் சடங்குகளுக்கு தேவையான மரம்னு 10 வகையான மரங்களை நட்டு தோட்டத்தைக் காடாக்கிட்டா போதும்... நமக்குத் தேவையான எல்லாத்தையும் அது கொடுத்துடும். அரசாங்க வேலை பார்க்கறவங்களுக்குக் கிடைக்குற பென்ஷன் மாதிரி... மரங்கள் வளர்ந்து நம்மோட கடைசி காலத்துக்கு பென்ஷன் கொடுக்கும்'' என்று அழகாக அடுக்கிய நம்மாழ்வார்,

''இதையெல்லாம் சாத்தியமாக்கறதுக்குத் தேவையான யோசனைகளையும், தொழில்நுட்பங்களையும் 'பசுமை விகடன்’ல தொடர்ந்து எழுதுறாங்க. ஒவ்வொரு ஊர்லயும் ஒரு 'பசுமை விகடன் வாசகர் வட்ட’த்தை உருவாக்குங்க. அதுல 'பசுமை விகடன்’ல வர்ற கட்டுரைகளைப் படிச்சு விவாதம் செய்யுங்க. நிச்சயமா உங்களுக்குத் தேவையான விஷயங்கள் எல்லாம் கிடைச்சுடும்'' என்று வழிகாட்டவும் செய்தார்!

மரங்களுக்கும் வருகிறது இன்ஷூரன்ஸ் !

யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் என்.கே. புத்தன் தன்னுடைய பேச்சில், ''எங்களுடைய நிறுவனத்தில், தனி நபர், வாகனம், கம்பெனிகள், உணவு தானியம், பணப்பயிர், கால்நடைகள்... என அனைத்துக்கும் காப்பீடு வசதி உள்ளது. இதுவரையில் மரப்பயிர்களுக்கு அந்த வசதி இல்லாமலிருந்தது. தற்போது, அவற்றுக்கும் காப்பீடு செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் இத்திட்டம் செயல்முறைக்கு வந்துவிடும். விபத்துகள், நோய் தாக்குதல், இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், இவற்றால் பாதிக்கப்படும்போது, விவசாயிகளுக்கு நஷ்டஈடு கிடைக்க வழி உள்ளது.  

பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!

விவசாயம் சார்ந்த காப்பீடு செய்பவர்களுக்கு புயல், வெள்ளம், தீ, மின்னல், கலவரம் ஏற்படும்போது எதிரிகளால் அழிக்கப்படுவது, பூச்சி-நோய் தாக்குதல், வனவிலங்குகளின் தாக்குதல் போன்றவற்றுக்கு நஷ்டஈடு கிடைக்கிறது. நிலத்தின் உரிமையாளர் தவிர குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களும் காப்பீடு வசதியைப் பெறமுடியும். தனி நபர் காப்பீடு செய்ய வேண்டும் என்றால், அவர் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் அளவு நிலத்திலாவது சாகுபடி செய்ய வேண்டும். விவசாய சங்கங்கள், நபார்டு உழவர் மன்றம், கம்பெனிகள்... என்று குழுவாக காப்பீடு செய்வதற்கு நிலத்தின் பரப்பளவு கணக்கில்லை. காப்பீடு செய்யும்போது, ஆவணங்கள் தரத் தேவையில்லை. முன்மொழிவுப் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதி, தேவையான தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. இழப்பீடு கோரும்போதுதான் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். சாகுபடிச் செலவில், 80% தொகை நஷ்டஈடாகக் கிடைக்கும்'' என்று சொன்ன புத்தன்,

''இன்ஷூரன்ஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு எங்கள் அலுவலர்கள் பதில் தர காத்திருக்கிறார்கள். சம்பந்தபட்ட பகுதியிலிருக்கும் எங்களின் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டால், தகுந்த வழிகாட்டல் கிடைக்கும்'' என்று சொன்னார்.

உதவிக்கு வரும் நபார்டு !

அடுத்ததாக பேசிய 'நபார்டு' வங்கி மேலாளர் புவனேஸ்வரி, ''நபார்டு வங்கி, கிராமங்களில் உழவர் மன்றங்களை அமைத்து பராமரித்தல், தொழில்நுட்பப் பயிற்சிகளைக் கொடுத்தல் போன்ற விஷயங்களுக்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு கொடுத்து வருகிறது. உழவர் மன்றங்களுக்கு குறைந்த வட்டியில் தேவையான வங்கிக்கடன், மானியங்கள் போன்றவற்றுக்கும் நாங்கள் வழிகாட்டி வருகிறோம். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயம் சார்ந்த கடனை வாய்மொழியாகக் கேட்பதைவிட, தேவையான ஆவணங்களையும், திட்ட அறிக்கையும்

பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!

தயார் செய்து கொடுத்தால், விரைவாக கடன் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத பட்சத்தில் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் நபார்டு வங்கி அதிகாரிகளை அணுகினால், தேவையான நடவடிக்கைகளை எடுத்து உதவுவார்கள். தனிநபராக இல்லாமல், குழுவாக கடன் கேட்டால், எளிதாக கிடைக்கும். குறிப்பாக, மரம் வளர்க்கும் குழுக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவியோடு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும், வங்கிக் கடன் போன்றவற்றையும் நபார்டு ஏற்பாடு செய்துகொடுக்கிறது.

தண்ணீரை சேமிப்பதற்காக நபார்டு வங்கி, 'வாட்டர் ஷெட்’ திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தண்ணீரை சேமிப்பதுடன், அந்தந்தப் பகுதிகளுக்கான மரங்களை வளர்ப்பதற்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். உணவு தானியங்களை சேமித்து வைக்க, 'குடோன்’ கட்டுவதற்கும் உதவிகள் உண்டு. எங்களைத் தொடர்பு கொண்டால், தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறோம்'' என்று தங்களுடைய பணிகளைப் பட்டியலிட்டார்.

செஞ்சந்தனம் ஏமாத்தினாலும், மலைவேம்பு காப்பாத்தும் !

அவரைத் தொடர்ந்து பேசிய முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமி: ''33% காடுகள் இருந்தாத்தான், நாடு சிறப்பா இருக்கும். ஆனா, 17% காடுகள்தான் நம்மகிட்ட இருக்கறதா புள்ளிவிவரக் கணக்கு சொல்லுது. 33% அளவுக்குக் காட்டைப் பெருக்கணும்னா எல்லாரும் மரம் வளப்புல இறக்கணும். அதனால, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுறதோட, நமக்கும் வருமானம் கிடைக்கும்.

பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!

மரங்களுக்கு மண்ணு வாகு முக்கியம். அதனால, அந்த மண்ணுல வளரக்கூடிய மரங்களா பார்த்துதான் நடவு செய்யணும். உங்க மண்ணுக்கு ஏத்த மாதிரியான இரண்டு மூன்று வகையான நாற்றுகளை நடவு செய்யுங்க. எது நல்லா வளருதோ, அதை மட்டும் வச்சுகிட்டு, மீதி மரங்களை வெட்டி எடுத்திடுங்க. அப்பதான் மரம் வளர்ப்பு லாபமா இருக்கும்.

சரளை மண்ணும், பாறையும் இருக்குற 200 ஏக்கர் பூமியில நான் எலுமிச்சை, மகோகனி போன்ற மரங்களை வளர்க்கிறேன். எங்க பகுதி முழுக்கவே தண்ணீர் பற்றாக்குறை உண்டு. அதனால, நிலத்துல சின்னச்சின்னக் குட்டைகள் வெட்டி வெச்சுருக்கேன். இந்த குட்டை மூலமா, மழைத் தண்ணி சேகரிப்பு செய்றதால, இப்போ 10 அடி அளவுக்கு தண்ணீர் மட்டம் அதிகரிச்சிருக்கு. என்னோட மரங்கள் செழிப்பா இருக்கறது மட்டுமில்லாம... என்னோட நிலத்தைச் சுற்றி இருக்குற விவசாயிகள் நிலமும் செழிப்பா இருக்கு. சரளை பூமியில செஞ்சந்தனம் மாதிரியான நீண்ட காலம் வளரக்கூடிய மர வகைகளை நடுறப்போ, வைரம் பாய ரொம்ப நாள் பிடிக்கும். வைரம் பாயாமலேகூட போயிடும். அதனால, செஞ்சந்தனம் நடுறப்போ... தேக்கு, வேம்பு, மலைவேம்பு மாதிரியான மரங்களையும் நடவு செஞ்சுட்டா செஞ்சந்தனம் ஏமாத்துனாலும் தப்பிச்சுக்கலாம்'' என்று போகிறப்போக்கில் தொழில்நுட்பங்களை அள்ளிச் செருகினார் அந்தோணிசாமி!

வாரி வழங்கும் வனத்துறை !

தமிழ்நாடு கூடுதல் தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் இருளாண்டி ஐ.எஃப்.எஸ். தன்பேச்சில், ''இன்றைக்கு விவசாயிகளுக்கு இருக்கும் பல பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு மரம் வளர்ப்புதான். மரம் வளர்ப்பில் கவனமாகத் திட்டமிட்டு செயல்பட்டால், வருமானத்துக்குப் பஞ்சமே இருக்காது. மரங்களை நடவு செய்யும் முன்பு, நம்முடைய மண்ணுக்கும், தட்பவெட்பநிலைக்கும் ஏற்ற வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரே வகையான மரங்களை நடவு செய்து நீண்ட காலம் காத்துக் கொண்டிருக்காமல், 20 ஆண்டுகளில் பலன் கொடுக்கும் மரம், 10 ஆண்டுகளில் பலன் கொடுக்கும் மரம், 5 ஆண்டுகளில் பலன் கொடுக்கும் மரம், பழங்கள் கொடுக்கும் மரம் என்று கலந்து நடவு செய்யும்போது, குறுகிய காலத்திலேயே வருமானம் பார்க்கலாம்.  

தற்போது, ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன், தமிழ்நாடு உயிர்-பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் 10 கோடி மரங்களை 5 ஆயிரம் கிராமங்களில் 5 ஆண்டுகளில் நடவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ஆயிரம் கிராமங்களைத் தேர்வு செய்து விவசாயிகளை குழுக்களாக ஒருங்கிணைக்கிறோம். தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளின் நிலங்களை ஆய்வு செய்து, அந்த மண்ணில் வளரக்கூடிய மர வகைகளை பரிந்துரை செய்கிறோம். அதில் விவசாயிகள் தேர்வு செய்யும் மர வகை நாற்றுகளை வனத்துறை மூலமாக நடவு செய்து கொடுக்கிறோம்.

குமிழ், தேக்கு, மலைவேம்பு போன்ற வேலைகளுக்குத் தேவைப்படும் மர வகைகளாக இருந்தால்... ஏக்கருக்கு 200 நாற்றுகளும்; சவுக்கு, யூகலிப்டஸ் போன்ற நெருக்கமாக நடவு செய்யும் மர வகைகளாக இருந்தால், ஏக்கருக்கு 4 ஆயிரம் நாற்றுகளும் வழங்கப்படும். சிறு-குறு விவசாயிகள் முழுமையான அளவிலும், பெரிய விவசாயிகள் அதிகபட்சமாக 12.5 ஏக்கர் வரையும், இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!

நடவு செய்த நாற்றுகளை மூன்று ஆண்டுகள் சரியாக பராமரித்தால், உயிருடன் இருக்கும் குமிழ் போன்ற மரங்களுக்கு தலா 5 ரூபாயும், சவுக்கு, யூகலிப்டஸ் போன்ற மரங்களுக்கு தலா 25 பைசாவும் ஊக்கத்தொகையாக வழங்குகிறோம். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகில் இருக்கும் வனவிரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று அழைப்பு வைத்தார்!

ஓராண்டுக்கு முன்பே உஷாராகுங்கள் !

மரம் வளர்ப்பதற்குத் தேவையான சட்டப்பூர்வ விஷயங்கள், விற்பனை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றைப் பற்றி பேசிய கோயம்புத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் பிரசாரப் பிரிவுத் தலைவர் நாராயணசாமி, ''ஒவ்வொரு விவசாயியும் மரம் வைக்கும்போதே வி.ஏ.ஓ.விடம் இருக்கும் சிட்டா-அடங்கலில், மரங்களைப் பற்றி பதிவு செய்யுங்கள். அப்போதுதான் வெட்டும்போது, பிரச்னைகள் இல்லாமல் இருக்கும். சிலர், 'தேக்கு மரங்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை’ என்கிறார்கள். மரம், பத்தடி உயரத்துக்கு வருகிற வரை, பக்கக்கிளைகளைக் கவாத்து செய்து வரவேண்டும். அப்போதுதான் நன்கு வளர்ந்து உரிய விலை கிடைக்கும். மரங்களை வெட்டுவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே, தேவையான ஆவணங்கள், அதிகபட்சமான விலை கிடைக்கும் இடங்கள் போன்றவற்றை சேகரித்துவிட வேண்டும். அப்போதுதான், நிதானமாக வெட்டி, சட்ட சிக்கல்கள் இல்லாமல் நல்ல விலைக்கு விற்க முடியும்.

ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் மரங்களை விற்பனை செய்வதற்காக 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ உள்ளது. அதைப்போல அமைப்பை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும். இந்த நிறுவனங்களை உருவாக்க நபார்டு வங்கி உதவி செய்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம் எல்லா விவசாயிகளும் கூட்டாக சேர்ந்து, மரங்களை விற்பனை செய்யும்போது நல்ல விலை கிடைக்கும். அதற்கு முதலில் விவசாயிகள் குழுக்களாக ஒன்றிணைய வேண்டும்'' என்று முக்கியமான விஷயங்களைத் தொட்டவர், மரம் வளர்ப்புக்கு உண்டான அரசு மானியங்கள், கார்பன் டிரேடிங், விற்பனை வாய்ப்புகள்... போன்ற விவசாயிகளின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான பதில்களையும் தந்தார்.

நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்த விவசாயிகள், நிறைவாக... ''திருமண மண்டபங்கள், பெரிய அரங்குகள் என்றே விவசாயக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. அதைவிட, இப்படி பசுமை சூழ்ந்த வயல்வெளிகளில் நடத்துவது பொருத்தமாக இருக்கிறது. எங்கள் பகுதிகளிலும் இப்படிப்பட்ட கருத்தரங்குகளை நடத்துங்கள்'’ என்று அன்புடன் அழைப்பு வைத்து கலைந்தனர்!

 நான் காடு வளர்க்கப் போறேன்!

நிகழ்ச்சி பற்றி, அதில் பங்கேற்றவர்களில் இருவர் இங்கே தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள்.

பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!

பிச்சைக்கனி (ஒய்வுபெற்ற கல்வி அலுவலர், கட்டமல்லூரணி, தூத்துக்குடி மாவட்டம்; ''மரம் வளர்க்கும் யோசனையோட வந்த எனக்குள்ள, 'மரம் வளர்க்கக் கூடாது. காடுதான் வளர்க்கணும்’கிற எண்ணத்தை நம்மாழ்வார் விதைச்சுட்டார். கண்டிப்பா, இன்னும் 10 வருஷத்துக்குள்ள என்னோட 5 ஏக்கர்ல ஒரு காட்டை நீங்க பார்க்கலாம். இந்தக் காடு... பலருக்கும் பயனுள்ளதா இருக்கும். இந்நிகழ்ச்சி மூலமா, எனக்கு நல்ல வழிகாட்டின 'பசுமை விகடன்’ இதழுக்கு கோடான கோடி நன்றிகள்!’'

சுதாகர் (மேல்பள்ளிப்பட்டு, வேலூர் மாவட்டம்); ''என்னோட பணிச்சூழல் காரணமா... என்னால விவசாயத்தைப் பார்க்க முடியலை. சும்மா இருக்கற நிலத்துல மரம் வளர்க்கலாமேங்குற யோசனையோடதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். எல்லா தகவலும் பயனுள்ளதா இருந்துச்சு. இன்னும் ஒரு வருஷத்துல என்னோட நிலத்துல மரங்களை நடவு செஞ்சுடுவேன்.''

உதவிய உள்ளங்கள்...! உற்சாகமூட்டிய சொய்ங்.. சொய்ங்..!

சென்னையைச் சேர்ந்த 'சென்லாஜிக் ஆட்டோமேஷன்’ நிறுவனம், உணவு உபசரிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. செங்கல்பட்டு 'வித்யாசாகர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நெல்வாய் கூட்டுரோடு முதல் கைத்தண்டலம் கிராமம் வரை விவசாயிகளை அழைத்து வர வாகனங்களை வழங்கியதோடு, தங்களின் மாணவர்களை தன்னார்வத் தொண்டர்களாக சேவை செய்யவும் அனுப்பி வைத்தது. யுனைடெட் இந்தியா இன்ஷ§ரன்ஸ் நிறுவனமும், வந்தவாசியைச் சேர்ந்த சாய்ராம் கார்டனும், நிகழ்ச்சிக்குக் கைகொடுத்தன.

பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!

கருத்தரங்கின் ஒரு பகுதியாக, 'கும்கி’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'சொய்ங்.. சொய்ங்..’ பாடலைப் பாடிய மகிழினி மணிமாறன் கலைக்குழுவின் தப்பாட்ட கலை நிகழ்ச்சி விவசாயிகளுக்கு உற்சாகமூட்டியது. மரங்கள் நடுவதையே கொள்கையாகக் கொண்டுள்ள, 'மரம் கருணாநிதி’க்கு, எழில்சோலை அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு