Published:Updated:

''நம்மாழ்வார்தான் எங்க சாமி...'' நெகிழும் வடகரை மக்கள்

படங்கள்: ரா. ராம்குமார்

''நம்மாழ்வார்தான் எங்க சாமி...'' நெகிழும் வடகரை மக்கள்

படங்கள்: ரா. ராம்குமார்

Published:Updated:
''நம்மாழ்வார்தான் எங்க சாமி...''  நெகிழும் வடகரை மக்கள்

நம்மாழ்வார்

வரலாறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

வடகரை கிராமத்தைப் பற்றி தொடர்ந்து நான் சிலாகித்துச் சொன்ன விஷயங்கள், வாசகர்களை ஆச்சர்யப்படுத்த... அந்த கிராமத்தைப் பற்றி பலரும் என்னைத் தொடர்பு கொண்டு விசாரிக்க... 'இப்போது வடகரை எப்படி இருக்கிறது?' என்று பார்த்து வந்து சொல்லுங்கள் என்று 'பசுமை விகடன்' நிருபரிடம் (என்.சுவாமிநாதன்) கேட்டுக்கொண்டேன்.

''திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து சேரன்மகாதேவி போற பாதையில பத்மநேரினு ஒரு ஊரு வரும்ய்யா. அதை ஒட்டியே பச்சையாறு ஓடும். அதுக்கு மேல ஒரு பாலம் இருக்கும். அந்தப் பாலத்துக்குப் பக்கத்துல கீழ இறங்கி, மேற்குப் பக்கமா போனா... வடகரை'' என்று வழி சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்!

அங்கே சென்ற நிருபர், ஆச்சரியத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார் என்பதை, திரும்பவந்து அனைத்தையும் அவர் விவரித்தபோது என்னால் உணர முடிந்தது. அவருடைய அனுபவத்தை இங்கே அப்படியே பதிவிடுகிறேன்...

அமைதியின் சொரூபமாய் விவசாயம் செய்து, தலை நிமிர்ந்து வாழுகிற மக்களைக் கொண்டிருக்கும் கம்பீரமான கிராமமாக இருக்கிறது அந்த ஊர். கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களிடம், இந்தத் தொடரில் நம்மாழ்வார் குறிப்பிட்டிருந்த நபர்களின் பெயர்களைச் சொல்லி விசாரித்ததும், ''நீங்க இனி எங்க ஊரு விருந்தாளிங்க. ஏன்னா நம்மாழ்வார் பேரைச் சொல்லிட்டீங்கள்ல!'' என்று உற்சாகத் துள்ளல் போட்டனர், அந்த வெள்ளந்தி மனிதர்கள்.

''நம்மாழ்வார்தான் எங்க சாமி...''  நெகிழும் வடகரை மக்கள்

கையைப் பிடிச்சு கத்துக் கொடுத்தது அய்யாதான் !

''நீங்க சொல்ற ஆளுங்கள்ல பெருமாளும், சுப்பையாவும் இறந்துட்டாங்க. அனந்த நம்பியாரும், இரண்டு சுப்பையாவும் இப்ப வெளியூர் போயிருக்காங்க. இதோ இவன்தான் சின்ன பால்ராஜ். இவன் பாலதண்டாயுதம். நான் ராமகிருஷ்ணன். நம்மாழ்வார் என்னை 'பெரிய பால்ராஜ்’னுதான் கூப்பிடுவாரு'' என்று அறிமுகப் படலத்தை முடித்த பெரிய பால்ராஜ் (ராமகிருஷ்ணன்), தொடர்ந்தார்.

''அய்யா, அமைதித் தீவுல வேலை பார்த்தப்ப தினமும் எங்க ஊருக்கு வந்திடுவாங்க. இதுதான் விவசாயம்னு எங்க கை புடிச்சு கத்துக் கொடுத்த சாமியே அவுங்கதான். அதுக்கு முன்ன வரை கண்டதை விதைச்சுட்டு இருந்தோம். இந்தப் பயிரை இப்படி வெள்ளாமை செஞ்சாத்தான் லாபம் கிடைக்கும்னு எங்க மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து, எங்க மகிழ்ச்சியில முகம் மலந்தவரு.

அவர்தான் எங்களுக்கு பட்டுப்புழு வளர்ப்பையும் அறிமுகப்படுத்துனாரு. தொடக்கத்தில், எங்களுக்கு பட்டுப்புழுனா என்னனுகூடத் தெரியாது. அது கடிக்கும்னு பயந்து சுணக்கமா இருந்தோம். ஒரு நாள் எங்க ஊருக்கு வந்தவரு, 'பெரிய பால்ராஜ், என் சட்டை பாக்கெட்ல என்ன இருக்குனு பாரு?’னு பாக்கெட்டில் இருந்து ஒரு பட்டுப்புழுவை எடுத்துக் காட்டுனாரு. மூணு மணி நேரமா என் பாக்கெட்ல இருக்கு. என்னை கடிக்கவா செஞ்சுச்சு. தைரியமா இதை வளருங்க. இது ஒண்ணும் பண்ணாதுனு ஊக்கம் கொடுத்தார். இன்னிக்கு எங்க கிராமமே பொருளாதார ரீதியா இவ்வளவு முன்னேறியிருக்குனா... அதுக்குக் காரணம் அய்யாதான்'' என்றபோது பெரிய பால்ராஜின் கண்களில் ஆனந்தமாக வழிந்தோடியது நீர்!        

''நம்மாழ்வார்தான் எங்க சாமி...''  நெகிழும் வடகரை மக்கள்

கூலி ஆட்களுக்கு கூட்டுப்பண்ணை !

அவரைத் தொடர்ந்த சின்ன பால்ராஜ், ''எங்க ஊருல எல்லாருமே கம்யூனிஸ்ட் கட்சிதான். இங்க மத்தக் கட்சிகளுக்கோ, சாதி அமைப்புகளுக்கோ இடம் கிடையாது. அந்த நேரத்துலதான் அமைதித்தீவுக்கு நம்மாழ்வார் வந்தாங்க. எங்க கிராமத்தோட பழக்க வழக்கத்தைப் பார்த்தவரு, எங்க கிராமத்தை தத்தெடுத்துக்கிட்டாரு. எங்க ஊருல பாலர் பள்ளி வர்றதுக்கு முயற்சி எடுத்ததும் அவர்தான். அது, வரலைனா கல்வி நிலையில் எங்க கிராமம் ரொம்ப பின்னாடி இருந்திருக்கும். அதேமாதிரி, ஒரு முதியோர் பள்ளியும் தொடங்கி வெச்சார்.

எங்க ஊருக்கு மத்தியில் கிணறு வெட்டி வெளிநாட்டு நிறுவனங்களோட ஒத்துழைப்போட கூட்டுப்பண்ணை இயக்கத்தை அவர் தொடங்கி வெச்சாரு. ஆம்பிளை, பொம்பிளைனு எல்லாரும் அதுல வேலை பார்த்தாங்க. அதுக்கான இடத்தை நம்மாழ்வாரே தேர்ந்தெடுத்து தொழில்நுட்பங்களையும் கத்துக் கொடுத்தாரு. தினமும் அந்தப் பகுதியில் இருந்த ஒரு பாறை மேல நின்னு வகுப்பு எடுப்பாரு. கூட்டுப்பண்ணை இயக்கத்தின் செயலாளர் ஜெகனும் எங்க ஊர்லயே தங்கியிருந்தாரு. நாங்க, அவங்க ரெண்டு பேரோட சேந்து பகல் நேரத்துல வயல்ல வேலை பார்ப்போம். வானம் இருட்டிட்டா... அவங்க ரெண்டு பேரும் பொது அறிவு, விவசாயம்னு நிறைய விசயங்களைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க.

''நம்மாழ்வார்தான் எங்க சாமி...''  நெகிழும் வடகரை மக்கள்

அந்தக் காலத்துல நாங்க டி.வி, செய்தித்தாளையெல்லாம் பாத்ததே இல்லை. ஆனா, ஊர்ல எல்லாருக்கும் அன்னன்னிக்கு நடக்குற வெளிமாநில விஷயங்கள் கூட தெரிஞ்சிருக்கும். அதை எங்களுக்குச் சொல்றது, நம்மாழ்வார்தான். நிலம் இல்லாத விவசாயிகளுக்கும், வேலை இல்லாமல் இருந்த விவசாயக் கூலியாட்களுக்கும் வாழ்வாதாரப் பிரச்னையைத் தீர்த்து வைச்சதே, அந்தக் கூட்டுப்பண்ணைதான். அது மூலமாகக் கிடைச்ச பணத்தை வெச்சுதான் கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தினோம்'' என்றவர், இன்னொரு விஷயத்தையும் நினைவு கூர்ந்தார்.

'அய்யாவால எங்க வாழ்க்கையில வசந்தம் வீசிட்டு இருந்தப்ப அமைதித்தீவுல ஒரு பிரச்னை. குடியரசு தினத்தன்னிக்கு ஒரு துப்பரவுத் தொழிலாளியைக் கூப்பிட்டு கொடி ஏத்த வெச்சுட்டாரு அய்யா. இதைப் பிடிக்காத சில அதிகாரிக, அதை சாதீய மோதலா தூண்டி விட்டுட்டாங்க. விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் போயிடுச்சு. அந்த நேரத்தில் நம்மாழ்வாருக்கு எங்க ஊர்க்காரங்க விடிய, விடிய காவலுக்கு நின்னு பாதுகாப்பு கொடுத்தோம். இப்போ, அவரைப் பார்த்து பல வருஷம் ஓடிடுச்சு. திருநெல்வேலிப் பக்கம் வந்துருக்காருனு தகவல் தெரிஞ்சாலே, வண்டி கட்டி போய் பார்த்துடுவோம்'' என்றார், சின்ன

''நம்மாழ்வார்தான் எங்க சாமி...''  நெகிழும் வடகரை மக்கள்

பால்ராஜ் கண்களில் ஆவலைத் தேக்கியபடி!      

''நான் கனரா வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவன். இப்ப ஜனசக்தி பத்திரிக்கையில் மேனேஜரா இருக்கேன். எங்க ஊர்ல நான் டிகிரி முடிச்சுட்டு சுத்திட்டு இருந்தப்ப, எனக்கு போட்டித் தேர்வுக்கு வழிகாட்டியது நம்மாழ்வார்தான். தினமும் எங்க ஊருக்கு வருவாரு. மாலை நேரங்களில் வாலிபால், கபடினு எங்க கூட இருந்து விளையாடுவார். இன்னிக்கு உலகம் முழுசுக்கும் அவரைத் தெரிஞ்சிருந்தாலும் வடகரையை மறக்காம இருக்கறதுதான் அவரோட பெருந்தன்மை'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார், அந்த ஊரைச் சேர்ந்த மகாலிங்கம்.        

அலைபேசி வழியாக வழிந்த ஆனந்தக் கண்ணீர் !

ஊர்க்காரர்கள் அனைவருமே என்னைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போக... அங்கிருந்தே என்னைத் தொடர்பு கொண்ட பசுமை நிருபர், மொத்த விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார். எனக்குள் உற்சாகம் மிகுதியாக... ''அவுங்ககிட்ட போனைக் கொடுங்கய்யா'' என்று சொன்னதுதான் தாமதம்... நான், நீ என்று ஊரிலுள்ள பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு என்னிடம் பேசித் தீர்த்தனர்.

''அய்யா, நான் பாலா... பாலதண்டாயுதம் பேசுதேன். இந்தப் பேரை எனக்கு நீங்கதான் வெச்சீக. 'விமான விபத்துல காலமான கம்யூனிஸ்ட் தலைவரோட பேர். அதேமாதிரி வீரமுள்ள போராளியா வானு சொன்னீக’னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாக'' என்றவரின் குரல் மேற்கொண்டு பேச முடியாமல் நெகிழ்ச்சியால் உடைந்தது!

நம்பிக்கை தந்த நல்லகண்ணு !

''நம்மாழ்வார்தான் எங்க சாமி...''  நெகிழும் வடகரை மக்கள்

வடகரை கிராமம் முழுவதும் கம்யூனிசம் விதைக்கப்பட காரணமாக இருந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு. இந்த கிராம மக்கள் முன்பு விவசாயம் செய்த நிலங்கள் அனைத்தும் திருவாடுதுறை ஆதீன மடத்துக்குச் சொந்தமானவை. அப்போது இவர்களது உழைப்பில் பெரும் பகுதியை வரியாக வசூலித்திருக்கிறார்கள் ஒரு பிரிவினர். அந்த நேரத்தில் கிராமத்துக்கு வந்த நல்லகண்ணு, 'யாரும் யாருக்கும் அடிமையல்ல. அனைவரும் சமம்’ என்று இந்த கிராம மக்களுக்கு விழிப்பு உணர்வை ஊட்டியிருக்கிறார். அதே காலக்கட்டத்தில் நம்மாழ்வாரும் இந்த கிராமத்துக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்... அதன் பிறகு வடகரையின் முன்னேற்றம் உயர ஆரம்பித்திருக்கிறது.

 -இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism