Published:Updated:

வறுமை பீகார்... வழிகாட்டும் பீகார்..!

வறுமை பீகார்... வழிகாட்டும் பீகார்..!

பிரீமியம் ஸ்டோரி
##~##

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

'வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநிலம்; கல்வி அறிவு அதிகம் இல்லாத மாநிலம்...'

-இதுதான் பீகார் பற்றி, பொதுவாக வெளியுலகம் அறிந்து வைத்திருக்கும் சங்கதி.

இதை உறுதிப்படுத்துவது போல, அம்மாநிலத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் கூலிகளாக உழன்று கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் உள்ளூரிலேயே தங்கியிருக்கும் விவசாயிகள், உலக சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

உருளைக்கிழங்கு விவசாயத்தில், நெதர்லாந்து நாட்டு விவசாயிகள் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 45 டன் மகசூல் எடுத்ததுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை உலக சாதனை! இதை, சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், தார்வேஷ்புரா கிராம விவசாயி நிதீஷ்குமார் முறியடித்தார்... இயற்கை உரங்களைப் பயன்படுத்தி! ஆம், ஒரு ஹெக்டேர் நிலத்தில் 72.9 டன் உருளைக்கிழங்கு மகசூல் எடுத்தார்.

அதே நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த சோதிக் கிராம விவசாயி ராகேஷ்குமார், ஒரு ஹெக்டேர் நிலத்தில், 108.8 டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்திருப்பதன் மூலமாக, முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இதில் முக்கியமாகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்... இதைச் சாத்தியமாக்கியிருப்பதும் இயற்கை விவசாயமே!

'இடுபொருட்களுக்கு செலவு இல்லாமல், கடனுக்கு கையேந்தி நிற்காமல்... விவசாயிகளை இயற்கை வழி விவசாயம் மட்டுமே, காப்பாற்றும்' என்கிற உண்மையை உணர்ந்து,  'இயற்கை விவசாய நுட்பங்களைக் கிராமங்கள்தோறும் கொண்டு சேர்ப்பேன்' என்று சில ஆண்டுகளுக்கு முன் சபதம் போட்டார் பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார். அதன் பலன்... தற்போது அறுவடையாகிக் கொண்டிருக்கிறது, ஆச்சரியப்படத்தக்க வகையில்!

'யானை கட்டி போரடித்த' தமிழ்நாட்டில், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை, சாதனையை நோக்கி எகிறிக் கொண்டிருக்கும் நிலையிலாவது... பீகாரின் 'இயற்கைச் சாதனை'யை மனதில் கொள்வார்களா நம்மை ஆள்வோர்?

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு