Published:Updated:

ஒன்றரை ஏக்கர்... 4 மாதம்... 70 ஆயிரம் ரூபாய்...

அசத்துது அனந்தனூர் சன்னம்... மிரட்டுது முத்தின சன்னம்..! காசி. வேம்பையன். படங்கள்: கா. முரளி

ஒன்றரை ஏக்கர்... 4 மாதம்... 70 ஆயிரம் ரூபாய்...
##~##

'சாப்பாட்டு அரிசி, சன்ன ரகமாக இருக்க வேண்டும்' என்பதுதான் பெரும்பாலானோரின் விருப்பம். காரணம்... அதுதான் மிக உயர்வான ரகம்... சாப்பிடுவதற்கும் எளிதாக இருக்கும். இத்தகைய எண்ணத்தின் காரணமாகத்தான், பெரும்பாலான வீரிய ரகங்கள்... சன்ன ரகங்களாகவே உருவாக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான பாரம்பரிய நெல் ரகங்கள், மோட்டா ரகமாகத்தான் இருக்கின்றன. இந்தச் சூழலில், தேவையைக் கருதி, பாரம்பரிய ரகங்களிலும் சன்ன ரகங்களாகத் தேடிப்பிடித்து பயிர் செய்து வருகிறார்கள் விவசாயிகள். அவர்களில் ஒருவர்... திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி, குறவன்ஓடை கிராமத்தைச் சேர்ந்த மணி!

தூரத்தில் தெரியும் மலை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்து நிற்கும் நெல் வயல்கள்... என பசுமைக் கட்டிக்கிடக்கும் அந்த ஊரில், இறங்கி மணியின் வயல்தேடிச் சென்றோம். ஆளை மறைக்கும் உயரத்தில், கம்பீரமாகத் தலைவணங்கி, வரவேற்கும் நெல் கதிர்களைப் பார்வையிட்டபடி நின்றிருந்தவரிடம் அறிமுகப்படலம் முடித்ததும்... கடகடவென பேச ஆரம்பித்துவிட்டார்.

''சின்ன வயசுலயே அப்பா, அம்மா இறந்துட்டாங்க. அதனால, எஸ்.எஸ்.எல்.சி-க்கு மேல படிக்க முடியாம விவசாயத்துல இறங்கிட்டேன். கல்யாணத்துக்கப்பறம் சொத்து பிரிச்சதுல... எனக்கு 3 ஏக்கர் கிடைச்சுது. அது கரடுமுரடான நிலம். அதை சீர் செஞ்சு, நெல், கடலை, கரும்புனு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச வருமானத்தை வெச்சு கிணறை ஆழப்படுத்தி, இன்னொரு

3 ஏக்கர் நிலம் வாங்கினேன். இப்ப மொத்தம் ஆறு ஏக்கர் நிலமிருக்கு. ஆரம்பத்துல விவசாயம் லாபமாத்தான் இருந்துச்சு. உரத்தை அதிகமா பயன்படுத்துனாத்தான் விவசாயம் செய்ய முடியுங்கிற சூழ்நிலை வந்தவுடனே லாபமும் குறைய ஆரம்பிச்சுடுச்சு.

ஒன்றரை ஏக்கர்... 4 மாதம்... 70 ஆயிரம் ரூபாய்...

காப்பீடு கிடைக்கல... பசுமை விகடன் கிடைச்சுது !

ரெண்டு வருஷத்துக்கு முன்ன வறட்சியால கடலை காஞ்சு போயிடுச்சு. அதுக்கு, 'பயிர் காப்பீடு கிடையாது’னு சொல்லிட்டாங்க. அதுபத்தி விசாரிக்கிறதுக்காக, நானும் என் மச்சானும் சென்னைக்குப் போனோம். அப்போ, ஒரு அதிகாரி மூலமா 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுல ஏராளமான தகவல்கள் இருந்துச்சு. அதனால அதைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்க தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. பயிற்சி முடிஞ்சு வந்ததுமே இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த மணி, தொடர்ந்தார்.

''அடுத்தடுத்து நடந்த நிறைய இயற்கை விவசாயக் கூட்டங்கள்ல கலந்துகிட்டதுல பாரம்பரிய ரகங்களையும் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். செங்கல்பட்டுல இருக்குற இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையத்துல இருந்து, 60 கிலோ கிச்சிலி சம்பா, 2 கிலோ அனந்தனூர் சன்னம், 2 கிலோ முத்தின சன்னம் (கர்நாடகாவில், அனந்தனூர் சன்னா, முத்தின சன்னா என்றே அழைக்கிறார்கள்) விதைகளை வாங்கிட்டு வந்தேன். நான் 20 கிலோ கிச்சிலி விதையை விதைச்சுட்டு, மிச்சத்தை என் மச்சானுக்குக் கொடுத்துட்டேன். 20 கிலோ விதைச்சதுல, முதல் போகத்துல ஏக்கருக்கு 10 மூட்டை (75 கிலோ) கிடைச்சுது. ரெண்டாவது போகத்துல 13 மூட்டை கிடைச்சுது. இப்போ அறுவடை செஞ்சதுல, 20 மூட்டை கிடைச்சது. இயற்கை விவசாயம் செய்தா, படிப்படியா மகசூல் அதிகரிக்கும்கிறதுக்கு நானே உதாரணம்!

ஒன்றரை ஏக்கர்... 4 மாதம்... 70 ஆயிரம் ரூபாய்...

சாயாத முத்தின சன்னா !

இந்த போகத்துல முக்கால் ஏக்கர்ல அனந்தனூர் சன்னம் ரகத்தையும், முக்கால் ஏக்கர்ல முத்தின சன்னம் ரகத்தையும் சாகுபடி செஞ்சிருக்கேன். ரெண்டுமே அறுவடைக்குத் தயாரா நிக்குது. ரெண்டுமே சன்ன ரகம். அனந்தனூர் சன்னம், 3 அடி உயரம்தான் வளருது. முத்தின சன்னம்

6 அடி உயரம் வரைக்கும் வளந்துருக்கு. இதோட தண்டுப்பகுதி கேழ்வரகு நாத்து மாதிரி பட்டையா இருக்கறதால, சாயாம இருக்கு'' என்ற மணி ஒன்றரை ஏக்கர் நிலத்தில் இந்த இரண்டு ரகங்களையும் சாகுபடி செய்யும் முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒன்றரை ஏக்கர்... 4 மாதம்... 70 ஆயிரம் ரூபாய்...

அடியுரத்துக்கு பலதானிய விதைப்பு !

அனந்தனூர் சன்னம் ரகத்தின் வயது 120 நாட்கள். முத்தின சன்னம் ரகத்தின் வயது 140 நாட்கள். இரண்டு ரகங்களுக்கும் சாகுபடிக் காலம் மாறுபட்டாலும், சாகுபடி முறை ஒன்றுதான். இந்த ரகங்களுக்கு ஆடி-ஆவணி பட்டம் ஏற்றது. இவை எல்லா மண்ணிலும் நன்றாக வளரும். நடவு செய்ய தேர்ந்தெடுத்த நிலத்தை, கொக்கிக் கலப்பையால் இரண்டு உழவு செய்து, ஒன்றரை ஏக்கர் நிலத்துக்கு 30 கிலோ பலதானியங்கள் என்ற கணக்கில் விதைக்க வேண்டும். விதைத்த 60-ம் நாளில் அதை மடக்கி, உழுதுவிட வேண்டும். இப்படிச் செய்வதால், அதிக தழைச்சத்து அடியுரமாகக் கிடைக்கும்.

ஒன்றரை ஏக்கருக்கு 4 கிலோ விதை !

ஒன்றரை ஏக்கர் நிலத்துக்கான நாற்றங்காலுக்காக 30 அடி நீளம், 3 அடி அகலம், முக்கால் அடி உயரத்தில் எட்டு மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். 75 சென்ட் நிலத்துக்கு 2 கிலோ விதைநெல் வீதம் இரண்டு ரகங்களிலும் சேர்த்து மொத்தம் நாலு கிலோ விதைநெல் தேவைப்படும். 5 லிட்டர் தண்ணீரில் 4 கிலோ உப்பைக் கரைத்து, விதைகளைக் கொட்டிக் கலக்கி... மேலே மிதக்கும் பதர்களை நீக்கிவிட்டு, மீதி நெல்லை சேகரித்து, நல்ல தண்ணீரில் அலசிக்கொள்ள வேண்டும். பிறகு, அதை சணல் சாக்கில் இட்டுக் கட்டி, 12 மணி நேரம் ஊற வைத்து, பிறகு, 12 மணி நேரம் நிழல் அல்லது இருட்டில் வைத்திருக்க வேண்டும்.

ஒன்றரை ஏக்கர்... 4 மாதம்... 70 ஆயிரம் ரூபாய்...

பிறகு, விதைநெல்லை ஒரு லிட்டர் பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்து நாற்றங்காலில் விதைத்து, லேசாக தொழுவுரத்தைத் தூவி, வைக்கோல் மூடாக்கு போட வேண்டும். முளைப்பு எடுக்கும் வரை, தினம் மூன்று வேளையும் பூவாளியால் தண்ணீர் தெளித்துவர வேண்டும். 4-ம் நாளில் இரண்டு அங்குல உயரத்துக்கு வளர்ந்திருக்கும். பிறகு, மூடாக்கை அகற்றிவிட்டு, நாற்று வதங்காமல் பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

ஒன்றரை ஏக்கர்... 4 மாதம்... 70 ஆயிரம் ரூபாய்...

5, 10 மற்றும் 15-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீரில், ஒரு லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தெளித்து விட வேண்டும். 8-ம் நாள் தலா ஒரு கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு ஆகியவற்றை இடித்து, 10 லிட்டர் தண்ணீரில் ஓர் இரவு முழுக்க ஊற வைத்து, தெளித்துவிட வேண்டும். 15-ம் நாளில் நாற்று தயாராகி விடும்.

காற்றோட்டத்தை அதிகப்படுத்தும் மண்புழுக்கள் !

நாற்று தயாரிக்கும்போதே, நடவு நிலத்தில் உழவு ஓட்டி, ஒரு வாரத்துக்கு தண்ணீர் கட்டி வைக்க வேண்டும். பிறகு, நன்றாக சேறாக மாறும் அளவுக்கு ரோட்டாவேட்டரில் உழவு செய்து, பரம்படித்து, சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, முக்கால் அடி இடைவெளியில் கயிறு பிடித்து, முக்கால் அடிக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். 30-ம் நாள் வரையில், பட்டும் படாமலும் தினம் தண்ணீர் கட்ட வேண்டும். அதற்குமேல், 2 அங்குல உயரத்துக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டலாம். இப்படிச் செய்யும் போது மண்புழுக்கள் நிலத்தின் மேல்பகுதிக்கு வந்து போகின்றன. அதன் மூலம் பயிர்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். 25 மற்றும் 35-ம் நாளில் கோனோ-வீடர் மூலம் களைகளை அழுத்தி விட வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை, 300 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரோடு கலந்து விட வேண்டும். 20 மற்றும் 50-ம் நாட்களில் 150 லிட்டர் தண்ணீருக்கு, 15 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசல் கலந்து தெளித்து விட வேண்டும். 25 மற்றும் 40-ம் நாட்களில் 150 லிட்டருக்கு 5 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளித்து விட வேண்டும்.

குருத்துப்பூச்சிக்கு இஞ்சி-பூண்டுக் கரைசல் !

ஒரு கிலோ பூண்டு, அரை கிலோ இஞ்சி, கால் கிலோ பச்சை மிளகாய் ஆகியவற்றை இடித்து, 300 கிராம் பெருங்காயத்தூள், 250 கிராம் புகையிலை ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து, 24 மணிநேரம் ஊற வைத்தால், இஞ்சி-பூண்டுக் கரைசல் தயாராகி விடும். நடவு செய்த 45-ம் நாளில் 15 லிட்டர் பூண்டுக் கரைசலை, 150

ஒன்றரை ஏக்கர்... 4 மாதம்... 70 ஆயிரம் ரூபாய்...

லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், குருத்துப் பூச்சிகள் தாக்காது.

அனந்தனூர் சன்னம் ரகம் 70-ம் நாளில் கதிர் வாங்க ஆரம்பித்து, 90-ம் நாளில் முற்றத் துவங்கி 120-ம் நாளில் அறுவடைக்கு வந்துவிடும். முத்தின சன்னம் 80-ம் நாள் கதிர் வாங்க ஆரம்பித்து, 110-ம் நாளில் முற்றத் துவங்கி, 140-ம் நாளில் அறுவடைக்கு வந்துவிடும்.

ஒன்றரை ஏக்கரில் 70 ஆயிரம் !

சாகுபடிப் பாடத்தை முடித்த மணி, ''அனந்தனூர் சன்னம் ரகத்துல ஒரு தூருக்கு 20-25 சிம்புகளும், சிம்புக்கு 180-200 நெல்மணிகளும் இருக்கு. அறுவடை செய்றப்போ, இதுல 12 மூட்டை (75 கிலோ) கிடைக்கும். முத்தின சன்னம் ரகத்துல

25-35 சிம்புகளும், சிம்புக்கு 200-250 நெல்மணிகளும் இருக்கு. இதுல 13 மூட்டை கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். அறுவடை செஞ்சு, அரிசியா மாத்திதான் விக்கப் போறேன். ஒரு மூட்டைக்கு 45 கிலோன்ற கணக்குல, ரெண்டு நெல்லுலயும் சேர்த்து மொத்தமுள்ள 25 மூட்டைக்கு... 1,125 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 60 ரூபாய்னு வித்தா, 67 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். தவுடுலயும் ஒரு வருமானம் கிடைக்கும். இதிலிருந்து சாகுபடிச் செலவைக் கழிச்சா, எப்படியும் 50 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கும்'' என்றார் மணி, பூரிப்பாக.!

தொடர்புக்கு, மணி, செல்போன்: 95975-77326.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு