தொடர்

##~##

தமிழக விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்வது... நெல் சாகுபடி! வறட்சி அல்லது வெள்ளம், வேலையாட்கள் பற்றாக்குறை, பூச்சி, நோய்த் தாக்குதல்... எனப் பல்வேறு சோதனைகளுக்கு நடுவேதான் நெல்லை அறுவடை செய்ய முடிகிறது. அப்படியே அறுவடை முடிந்தாலும், சோதனை முடிவதில்லை. கடைசியாக ஈரப்பதம் என்கிற வில்லனையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. வழக்கமாக குறுவை அறுவடையின்போது (மழைக்காலமான அக்டோபர்-நவம்பர்) 18-21 சதவிகிதமாக இருக்கக்கூடிய ஈரப்பதம், அடுத்த சில வாரங்களிலேயே 25 சதவிகிதமாக அதிகரித்து, நெல்லின் தரத்தைக் குறைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு!  

சிறிது காலம் காத்திருந்தால்... நிச்சயம் அதிக விலை கிடைக்கும் என்பது கண்கூடாகத் தெரிந்தாலுமே, உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். நெல் உலர்த்தும் நவீனக் கருவிகள் நம்மிடம் இல்லை. இதனால், சாலையிலும் வீட்டின் முற்றத்திலும் கொட்டிதான் நெல்லைக் காய வைக்கிறார்கள். இது பெரியளவில் பலன் தராது. நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், பூஞ்சணம் படர்ந்துவிடும். இதனால் அரிசி, பழுப்பு மற்றும் கருப்பு நிறத்துக்கு மாறும். இதுவும் விலையைக் குறைக்க, ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

ஈரப்பதத்தை விரட்டும் உமி-உப்பு !

நெல்லில் வளரும் பூஞ்சணத்தைக் கட்டுப்படுத்தவும், ஈரப்பதத்தை வெளியேற்றவும் மிக எளிய தொழில்நுட்பத்தை எங்களுடைய இந்திய பயிர்பதன தொழில்நுட்பக்கழகம் கண்டுபிடித்துள்ளது. இதற்குக் கண்கூடாக பலன் தெரிவதாக பயன் அடைந்த விவசாயிகள் சொல்கிறார்கள்.

மதிப்புக்கூட்டும் மந்திரம் !

ஈரப்பதமான நெல்லில் 100 கிலோவுக்கு 5 கிலோ வீதம் உப்பு, 5 கிலோ உமி அல்லது தவிடு கலந்து நிழல் உள்ள தரையில் குவித்து, பாலிதீன் சாக்கு அல்லது தார்பாய் போட்டு மூடி வைக்க வேண்டும். இதனால் பூஞ்சணம் வளர்வது தவிர்க்கப்படுவதோடு, நெல்லில் உள்ள ஈரப்பதம் தண்ணீராக வெளியேறி விடும். இந்த தண்ணீரை உறிஞ்சுவதற்காகத்தான், உமி அல்லது தவிடு கலந்து வைக்கிறோம்.   விற்பனையின் போது, நெல்லை சல்லடையில் சலித்து, சாக்கு பைகளில் அள்ளி வைக்க வேண்டும்.

சணல் சாக்கு உஷார் !

நமது விவசாயிகள் சணல் சாக்கில் நெல்லை சேமித்து வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது சரியான முறையல்ல. இதில் மழைக்காலங்களில் ஈரப்பதம் ஊடுருவும். எலிகளால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலான விவசாயிகள், பயன்படுத்திய பழைய சணல் சாக்கைத்தான் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சாக்குப் பைகளில் நுண்ணிய பூச்சிகளின் முட்டைகள் தங்கியிருக்கக் கூடும். இவைகள் எளிதில் நம் கண்ணுக்குத் தெரியாது. நெல்லை சேமித்ததும், இந்த மூட்டைகளில் இருந்து பூச்சிகள் உருவாகி, நெல்லுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே நெல் சேமிப்புக்கு சணல் சாக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

சேமிப்புக்கலன்கள்தான் பல வகைகளிலும் சிறப்பானது. நெல்லின் ஈரப்பதம் 14 சதவிகிதத்துக்கும் கீழ் குறையுமளவுக்கு வெயிலில் உலர்த்திய பிறகு, சேமிப்புக் கலன்களில் சேமித்தால், பல மாதங்கள் வரை நெல்லின் தரம் குறையாமல் இருக்கும். கலன்களில் சேமிக்கும்போது, உப்பு சேர்க்கக் கூடாது. சேர்த்தால், ஈரப்பதம் தண்ணீராக அடியிலேயே தங்கி விடும்.

கைகொடுக்கும் கலன்கள் !

சேமிப்புக் கலன்கள் மேடானப் பகுதியில் அமைக்கப்பட வேண்டும். தரையின் ஈரப்பதம் சேமிப்புக்கலனில் ஊடுருவாமல் இருக்க, சுமார் இரண்டு அடி உயரத்துக்கு உலோகத்தாலான ஸ்டாண்ட் அமைத்து, அதன் மீது சேமிப்புக்கலனை வைக்க வேண்டும். சேமிப்புக்கலன் வைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பூச்சிகள் வராத அளவுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். சேமிப்புக்கலனின் உள்ளே எலி, பல்லி, கரப்பான் பூச்சி உள்ளிட்டவை புகாத அளவுக்கு எப்போதும் மூடி வைக்க வேண்டும்.

பூச்சிகளைப் பிடிக்கும் புனல்கள் !

நெல்லில் உருவாகும் பூச்சிகளைப் பிடிப்பதற்கென புனல் வடிவ பிரத்யேகமான ஒரு பொறியை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. சுமார் 2 அடி நீளமும், ஒன்றரை இஞ்ச் சுற்றளவும் கொண்ட இப்பொறியின் மேற்பகுதியில் சிறுசிறு துளைகள் இருக்கும். சேமிப்புக் கலனில் இருக்கும் நெல்லில் இதைச் செருகி வைத்தால், இதனுள்ளே பூச்சிகள் சென்று சிக்கிக் கொள்ளும். வெளியேற முடியாது.

சேமிப்புக்கலனுக்குள் கொஞ்சம்கூட காற்று புகக்கூடாது. ஏதேனும் துளைகள் உருவாகி இருக்கிறதா என அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். விவசாயிகள், மிகக்குறைவான செலவில் எளிய முறையில் சேமிப்புக்கலன்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

தார் டிரம் சேமிப்புக்கலன் !

சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தார் டிரம்களை சுத்தப்படுத்தி, சேமிப்புகலன்களாக பயன்படுத்தலாம். ஒரு டிரம்முக்கு 150 முதல் 200 கிலோ நெல் வரை சேமிக்கலாம். இது பல வகைகளிலும் பாதுகாப்பானது.

மதிப்புக்கூட்டும் மந்திரம் !

டிரம்மிலிருந்து தாரை எடுத்த பிறகு, அந்த காலி டிரம்மை தீயில் வைத்து சூடாக்கினால், அதில் ஒட்டியிருக்கும் தார் முழுமையாக வெளியேறிவிடும். பிறகு, முழுமையாக சுத்தப்படுத்தி, நன்கு வெயிலில் உலர்த்திய பிறகு, நெல்லை சேமிக்கலாம். காற்றுப் புகாத வண்ணம் மூடுவதற்கான வசதியும், நீண்டகாலம் உழைக்கக்கூடிய உறுதித் தன்மையோடும் இது அமைந்திருக்கிறது. இது 500 ரூபாய் விலையிலேயே கிடைக்கும்.

ஹாப்பூர் நெற்குதிர்கள் !

இந்திய தானிய பாதுகாப்புக் கழகத்தால் வடிவமைக்கப்பட்ட, ஹாப்பூர் குதிர்கள் மிகவும் மெல்லிய இரும்புத் தகடுகளால் ஆனவை. விவசாயிகள், தங்கள் தேவைக்கு ஏற்ப, மிக எளிதாக இதனை உருவாக்கிக் கொள்ள முடியும். தற்போது 200 கிலோ முதல் 1 டன் நெல் வரைச் சேமிக்கக் கூடிய வகையில் ஹாப்பூர் குதிர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் விலை 1,500 முதல் 4,000 ரூபாய் வரை.

பாலிதீன் பையோடு கூடிய மூங்கில் குதிர்கள் !

கிராமப்புறங்களில் மூங்கில் குதிர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் சேமிக்கப்படும் நெல்லை, பூச்சிகள் எளிதில் தாக்குகின்றன. இதைத் தவிர்க்க, குதிர்களின் உள்ளே பாலீதின் உறையை அமைத்து, நெல்லை சேமிக்கலாம். அகோலாவில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரியால் உருவாக்கப்பட்ட இந்தக் குதிர், வடஇந்தியாவில் மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் அரை டன் நெல் வரை சேமிக்கலாம்.

இந்தக் குதிரின் மீது எலி ஏறாத அளவுக்கு... இரண்டு அடி உயரத்துக்கு உலோகத்தால் ஆன ஸ்டாண்டும்... மூன்று உலோகக் கூம்புகளும் உள்ளன. இதன் வழியாக எலிகள் ஏற முயன்று தோற்றுப் போகும். இந்த ஸ்டாண்டில் உள்ள இன்னொரு வசதி, ஈரப்பதம் தாக்குவதில்லை. இதன் விலை ஆயிரம் ரூபாய்.

பூசா குதிர்கள் !

இந்திய வேளாண் அறிவியல் கழகத்தால் பூசா குதிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 1 டன் முதல் 4 டன் நெல் வரை சேமிக்கலாம். தேவைக்கு ஏற்ப இதன் உயரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். இது செங்கல்லால் கட்டப்பட்டு, வெளிப்புறம் களிமண்ணால் பூசப்பட்டிருக்கும். இதனுள்ளே நெல்லைக் கொட்டுவதற்கு, துளையுடன் கூடிய திறந்து மூடும் அமைப்பிருக்கும். நெல்லை வெளியில் எடுக்க, குதிரின் அடிப்பகுதியிலும் துளையுடன் கூடிய திறந்து மூடும் அமைப்பு இருக்கும். சிறு-குறு, பெரு விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருமே மிக எளிதாக இதனை உருவாக்கிக் கொள்ள முடியும். விலை 4 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரை!

-மதிப்புக் கூடும்...