Published:Updated:

ஜெயிலில் தள்ளும் 'கெயில்’!

ஜி. பழனிச்சாமி, படங்கள்: க. ரமேஷ்

பிரீமியம் ஸ்டோரி

பிரச்னை

##~##

கிட்டத்தட்ட மேற்கு வங்கத்தின் நந்திகிராம் போலவே மாறி வருகிறது, தமிழகத்தின் கொங்கு மண்டலம். அரசு பயங்கரவாதத்தின் கோர முகம் கண்டு நடுநடுங்கிக் கொண்டுள்ளனர், விவசாயிகள். எரிவாயுக் குழாய்களைப் பதிப்பதற்காக விவசாயிகளின் நிலங்களில் அத்துமீறி நுழைந்து... அறுவடைக்குத் தயாராக இருக்கும் பருத்தி, வாழை என அனைத்தையும் இயந்திரங்களால் சூறையாடி, நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறார்கள், அதிகாரிகள். தட்டிக் கேட்கும் விவசாயிகள் மீது காவல்துறையை ஏவிவிட்டு, அடித்து நொறுக்கிக் கொண்டுள்ளனர்.

பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறையின் கீழ் செயல்படும் 'கெயில் (இந்தியா) லிமிடெட்’ எனும் பொதுத்துறை நிறுவனம், கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு கோயம்புத்தூர் வழியாக குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதற்காக... கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 136 கிராமங்களில், நிலங்களைத் தேர்வு செய்து மஞ்சள் வண்ணக் கற்களை நடவு செய்தது. அப்போதே விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு காட்ட... திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக, 'குழாய் ரூபத்தில் ஒரு குடைச்சல்’ என்ற தலைப்பில் 10.07.2012 தேதியிட்ட இதழில் எழுதியிருந்தோம்.

இந்நிலையில், பிப்ரவரி 9 அன்று திடீரென போலீஸ் படையுடன் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அதிரடியாக நிலங்களை சமன்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளனர், கெயில் நிறுவனத்தினர். பாடுபட்டு பண்டுதம் பார்த்த பயிர்கள் பாழாவதைக் கண்டு துடித்து, எதிர்ப்பு தெரிவித்தவர்களைத்தான் கைது செய்து வருகிறது, காவல்துறை.

ஜெயிலில் தள்ளும் 'கெயில்’!

இதுபற்றி பேசிய 'விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புக் குழு'வைச் சேர்ந்த ஜி.கே. நாகராஜ், ''இரண்டு அடி விட்டமுள்ள எரிவாயுக் குழாய் அமைக்க, 20 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை எடுக்கிறார்கள். நிலத்துக்கு குறுக்கே குழாய்களைப் பதித்தால் விவசாயமே செய்ய முடியாத சூழ்நிலை வந்துவிடும். அதனால்தான் சாலையோரங்களில் பதிக்கச் சொல்கிறோம். அதைக் கண்டுகொள்ளாமல், நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து வருகிறார்கள்'' என்றார்.

இந்நிலையில், 'விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புக்குழு’ சார்பில் கெயில் நிறுவனத்துக்கு எதிராக பிப்ரவரி 17-ம் தேதி ஈரோட்டில் கூட்டம் நடத்தப்பட்டது. ஆளும் அ.தி.மு.க. தவிர, அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஜெயிலில் தள்ளும் 'கெயில்’!

''குழு சார்பில் தொடுத்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'விவசாயிகளைக் கலந்து ஆலோசித்து, அவர்களின் ஒப்புதலுடன்தான் விளைநிலங்களில் குழாய்கள் அமைக்கும் பணியைத் துவங்க வேண்டும். மாறாக, காவல்துறையினரைப் பயன்படுத்தி அத்துமீறி, அவர்கள் நிலத்தில் குழாய்களைப் பதிக்கக் கூடாது’ என ஆணையிட்டுள்ளது. இங்கே நீதிமன்ற ஆணையை மதிக்காமல், அத்துமீறி வருகிறது கெயில். இதைக் கண்டித்து, வரும் 26-ம் தேதி சேலத்தில் உள்ள கெயில் நிறுவனத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் சென்று முற்றுகையிடப் போகிறோம்'' என்றார் கணேசமூர்த்தி.

கெயில் நிறுவன அதிகாரிகள் தரப்பில் பேசியபோது, ''இந்தியா முழுவதும் 17 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு இதுவரை எரிவாயுக் குழாய் பதித்துள்ளோம். எந்த பாதிப்பும் வரவில்லை. குழாய்கள் பதிக்கப்படும் பாதையில் உள்ள பயிர்களை தோட்டக்கலைத்துறை, வனத்துறை, பனைவாரியம் மற்றும் வருவாய்துறை ஊழியர்களைக் கொண்டு கணக்கிட்டு தகுந்த இழப்பீடும் வழங்கி வருகிறோம். இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 43 விவசாயிகளுக்கு 14 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது'' என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள்.

பொதுவாகவே, இந்த அரசு 'எந்திரன்'கள்.. 'அரசாங்கம் வைத்ததுதான் சட்டம்... அதை எதிர்க்க, யாருக்கும் அதிகாரம் இல்லை' என்கிற மனோபாவத்தில்தான், ராஜாக்கள் காலத்திலிருந்தே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளனர். அதையேதான், இன்றைய மக்களாட்சி காலத்திலும் கடைபிடிக்கிறார்கள்.

நிலத்துக்குச் சொந்தக்காரன் விவசாயி என்பதை உணர்ந்து, தேவையைக் கருதி அவர்களின் சம்மதத்தோடுதான் எதையுமே செய்ய வேண்டும். மீறினால்... 'நந்திகிராம்'கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு