Published:Updated:

அரசிதழில் இறுதித் தீர்ப்பு... இனி, பொங்கிப் பாயுமா காவிரி ?

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி

பிரச்னை

##~##

நீண்ட... நெடியப் போராட்டத்துக்குப் பிறகு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது. தமிழக அரசின் பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவுகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்தும் கொண்டாடிக் கொண்டுள்ளனர். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக 'காவிரித் தாய்' விளம்பரங்கள் பளபளக்கின்றன. வீதிகள் தோறும் ஃபிளக்ஸ் பேனர்களில் பச்சை நிற பின்னணியில் அழகழகாக சிரித்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!

இதற்கு நடுவே, 'எங்கள் ஆட்சியில்தான் காவிரி நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது' என்று சொல்லி, இதில் தன் பங்கை நிலைநாட்டிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி!

காவிரி பிரச்னைக்காக ஆரம்பத்தில் நீதிமன்ற படியேறியது; நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது; அது முதன்முதலாக விசாரணையைத் துவக்கியது; இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது; அது அரசிதழில் ஏற்றப்பட்டது; அடுத்தக்கட்டமாக இறுதித் தீர்ப்பு வந்தது; இதை அமல்படுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது; இறுதித் தீர்ப்பு அரசிதழில் ஏற்றப்பட்டது... என்று காவிரி விஷயத்தில் ஒவ்வொரு முயற்சியுமே இந்த அரசியல்வாதிகளுக்கு விழாதான். உண்மையில், இதையெல்லாம் செய்ய வேண்டியது இவர்களுடைய கடமை. ஆனால், கடமையைச் செய்ததற்கே... இங்கே ஆரவாரக் கூச்சல்கள் கேட்பது வாடிக்கையே!

அரசிதழில் இறுதித் தீர்ப்பு... இனி, பொங்கிப் பாயுமா காவிரி ?

ஆனால், ''அரசிதழில் ஏற்றப்பட்டுவிட்டதாலேயே காவிரி தண்ணீர் வந்துவிடுமா?'' என்று கேட்டால்,

''நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகி இருப்பது... நாம் எடுத்து வைத்திருக்கும் முதல் படி... இன்னும் சவாலான பல நூறு படிகளைக் கடந்தால்தான், விவசாயிகளின் வாழ்க்கையில் நன்மை நிகழும். ஆனால், இப்பொழுதே காவிரி பிரச்னை முடிவுக்கு வந்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது போல... தற்பெருமை அடித்துக் கொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் அரசியல்வாதிகள். ஏற்கெனவே இதே அரசிதழில் ஏற்றப்பட்ட இடைக்காலத் தீர்ப்பின் கதி என்னவென்று தெரிந்திருந்தும் இப்படி கூத்தடிப்பதுதான் வேதனையாக இருக்கிறது'' என்கிறார்கள் விஷயமறிந்த காவிரி பகுதி விவசாயப் பிரமுகர்கள்!

இதைப் பற்றி நம்மிடம் பேசிய டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம், ''முதலில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பே தமிழகத்துக்கு பாதகமான ஒன்றுதான். 1924-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை கர்நாடாகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வந்த காவிரி நீரின் அளவு, ஆண்டுக்கு சராசரியாக 378 டி.எம்.சி. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில், இது 205 டி.எம்.சி. எனக் குறைந்து போனது. இதற்கு எதிராக நாம் குரல் கொடுத்தபோதும், இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. என்று மேலும் குறைந்துவிட்டனர். இதில் 7 டி.எம்.சி. பாண்டிச்சேரிக்கு, 10 டி.எம்.சி. சுற்றுச்சூழலுக்கு ஒதுக்கப்பட... மீதியுள்ள 175 டி.எம்.சி. தண்ணீர்தான் விவசாயத்துக்கு. இது, போதுமான அளவு தண்ணீர் அல்ல என்றபோதும்... இதுவும்கூட நமக்கு கிடைக்கமாலே இருப்பதுதான் துரதிர்ஷ்டம்.

அரசிதழில் இறுதித் தீர்ப்பு... இனி, பொங்கிப் பாயுமா காவிரி ?

இந்தச்சூழலில், 'நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகிவிட்டது. இனி, காவிரி பிரச்னை பற்றி கவலையே இல்லை. கர்நாடாகாவை கேட்காமலே, அந்த மாநிலத்திலிருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணையை நாம் போய் திறந்து கொள்ளலாம்' என்ற அளவுக்கு இங்கே இந்த விஷயத்தை பெரிதுபடுத்திக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள ஆட்சியாளர்களுக்கும், மற்றமற்ற அரசியல் கட்சிகளுக்கும் இப்படிப்பட்ட எண்ணம் உருவாகியிருப்பதே... நம் விவசாயிகளுக்கு ஆபத்தான விஷயமே! உண்மையில், காவிரியில் தமிழகத்தின் உரிமையான ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 325 டி.எம்.சி தண்ணீர் என்பதை பெறுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இவர்கள் இறங்க வேண்டும். அதற்கு முன்னதாக... தற்போது அரசிதழில் வெளியாகியிருக்கும் 192 டி.எம்.சி தண்ணீரையாவது இவர்கள் பெற்றுத் தரவேண்டும். இதெல்லாம் நடந்தால்தான் காவிரி பிரச்னையில் தீர்வு வந்ததாக அர்த்தம்'' என்று சூடாகச் சொன்னார்!

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான பெ. மணியரசன், ''அரசிதழில் வெளியிடப்பட்டதன் காரணமாகவே காவிரி நீர் வந்துவிடும் என்று நம்புபவது முட்டாள்தனமானது. ஏற்கெனவே 1991-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், கடைசிவரை கர்நாடகா அதை செயல்படுத்தவே இல்லை.

இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து, தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத் தந்திருக்க வேண்டிய மத்திய அரசும், கடைசிவரை கண்டுகொள்ளாமல்தான் இருந்தது. அதேபோல, அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்ட காவிரி ஆணையத்தை, 7 ஆண்டுகள், காலம் தாழ்த்திய பிறகே மத்திய அரசு அமைத்தது. அப்படியிருக்க, இப்போது மட்டும் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதான் காரணமாக தண்ணீர் வந்துவிடும் என்கிற கொண்டாட்டங்கள் எதற்காக. இதெல்லாம் நமக்கு எதிரான செயல்களை செய்து கொண்டிருக்கும் கர்நாடகாவை மேலும் மேலும் உசுப்பேற்றும் வேலைகளே!

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள மிகமிக முக்கியமான... முதன்மையான... உயிர்நாடியான அம்சம், 'தன்னாட்சிப் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம்' என்பதுதான். 'இப்படியரு வாரியம் அமைக்கப்பட்டு, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி, தமிழகத்தில் உள்ள மேட்டூர், கீழ்பவானி, அமராவதி, கேரளாவில் உள்ள பானாசர சாகர் ஆகிய அனைத்து அணைகளும் அந்த வாரியத்தின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். மழை மற்றும் அணையில் உள்ள நீர் இருப்புக்கு ஏற்ப, இந்த வாரியம்தான் சட்டப்படி தண்ணீரைப் பகிர்ந்தளிக்கும். இப்படிப்பட்ட மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால், இந்தத் தீர்ப்பு ஏட்டளவில்தான் இருக்கும். செயல்பாட்டுக்கு வரவே வராது’ என மிகத்தெளிவாக இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட வாரியத்தை அமைப்பதற்கான அரசாணை அல்லது அவசரச் சட்டத்தை கொண்டு வந்து, அதையும் சேர்த்தே இந்த அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இறுதித் தீர்ப்பை வெளியிடுவதற்கே இத்தனை ஆண்டு காலத்தை இழுத்தடித்த மத்திய அரசு, தற்போது நரித்தனமாக செயல்பட்டு, மேலாண்மை வாரியம் என்கிற விஷயத்தையே கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது.

உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தமிழக ஆட்சியாளர்களும், இங்குள்ள அரசியல் கட்சிகளும் நேர்மையாகக் களம் இறங்க வேண்டும். இதன் மூலமே, காவிரி பிரச்னையில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். அதன் பிறகு வைத்துக் கொள்ளலாம் வெற்றிக் கொண்டாட்டங்களை'' என்று விஷயத்தை தெள்ளத் தெளிவாக புரிய வைத்தார்!

இந்நிலையில், 'காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். அதுதான் காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்' என்பதை வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதியிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!

 'கம்பர் அல்ல கவிராயர்!' ஒரு சுவராஸ்ய தவறு

பசுமை விகடன் 25.02.13 இதழின் தலையங்கத்தில், 'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது கம்பரின் காவிய வாக்கு' என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், 'கம்ப ராமாயணத்தில் அப்படி ஒரு வாக்கியமே இல்லை' என்று  உடனடியாக தன் கருத்தை தொலைபேசி மூலமாகப் பதிவு செய்திருந்தார் அதிராம்பட்டினம் வாசகர் அகமது மஹ்தும்.

இதையடுத்து, பலரிடமும் நாம் பேசியபோது... 'கம்பர்' என்றே பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டனர். வெகுசிலர் மட்டுமே அது, 'அருணாச்சல கவிராயரின் ராமநாடக கீர்த்தனை எனும் நூலில்  இடம்பெற்றிருக்கிறது' என்று சரியாகச் சுட்டிக் காட்டினார்கள்.  ஆக, பெரும்பாலானவர்களின் மனதிலும் 'கம்பர்' என்றே பதிவாகியிருக்கிறது. இதைப் பற்றி இணையத்தில் பெரிய விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.

எப்படியிருந்தாலும்... தவறு தவறுதான். அதற்காக வருந்துகிறோம். சுட்டிக் காட்டிய வாசகருக்கு நன்றி!

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு