Published:Updated:

''பயிரு கருகுது... பச்சப்புள்ளைங்க வாடுது...''

மானாவாரி விவசாயிகள் 'நிவாரண போர்’ இ. கார்த்திகேயன், படங்கள்: ஏ. சிதம்பரம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

கருகியப் பயிர்களைக் காணச் சகியாமல் உயிரை மாய்த்துள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கு 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்திருப்பதோடு, சென்னை தவிர மீதமுள்ள 31 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்கள் என்றும் அறிவித்திருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா.

இந்நிலையில், 'டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது போல, மானாவாரி விவசாயிகளுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும்’ எனக்கேட்டு, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மானாவாரி விவசாயிகள் முதல்வருக்கும், பிரதமருக்கும் தபால் அட்டைகளை அனுப்பியுள்ளனர்.

இதுபற்றி கொதிப்போடு பேசிய ம.தி.மு.க. மாநில விவசாய அணி துணைச்செயலாளரும் மானாவாரி விவசாயியுமான வரதராஜன், ''தூத்துக்குடி மாவட்டத்துல கோவில்பட்டி, எட்டயபுரம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் இந்த நாலு தாலூகாக்கள்ல மட்டும் கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் ஏக்கர்ல மானாவாரியா சாகுபடி செய்றோம். போன வருஷம் வெள்ளத்தால நட்டப்பட்டோம். இந்த வருஷம்... வறட்சி.

தமிழ்நாட்டுல ஏரி, கிணறு, மானாவாரி சாகுபடி மூலமா, காய்கறிகள், உணவு தானியங்கள், எண்ணெய்வித்துக்கள்னு 70% தென் மாவட்டங்கள்லயும், மேற்கு மாவட்டங்கள்லயும்தான் உற்பத்தியாகுது. ஆனா, எங்க பகுதிகள் மேல அரசு அக்கறை காட்டுறதில்ல.

''பயிரு கருகுது... பச்சப்புள்ளைங்க வாடுது...''

டெல்டா பகுதியில, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய், டீசலுக்கு 600 ரூபாய் மானியம், சொட்டுநீர் பாசனத்துக்கு நூறு சதவிகித மானியம்னு கொடுக்கறாங்க. அதெல்லாம் நியாயமா செய்ய வேண்டிய விஷயங்கள்தான்.

அதைப்போலவே வறட்சியால பாதிக்கப்பட்டிருக்கற எங்களுக்கும் கொடுக்கறதுதானே நியாயம். 'மானாவாரி விவசாயிகளோட நிலத்தை, நிதி அமைச்சர் தலைமையிலான உயர் மட்டக்குழு ஆய்வு செஞ்சு, அறிக்கை கொடுத்த பிறகுதான் நஷ்டஈடு'னு சொல்றாங்க. டெல்டா பகுதியில தொடர் விவசாயத் தற்கொலை நடந்துட்டே இருந்ததால, டெல்டா பகுதிகளுக்கு உடனடியா குழு போய், ஆய்வு செய்து, நிவாரணத்தை அறிவிச்சுட்டாங்க.

இங்கயும் ஒண்ணு ரெண்டு பேர் தற்கொலை செய்துக்க ஆரம்பிச்சுருக்காங்க. டெல்டா பகுதி மாதிரியே இங்கயும் தொடர் தற்கொலைகள் நடந்தாத்தான் நஷ்டஈடு பத்தி அரசாங்கம் யோசிக்குமோ...?!'' என்று வருத்தம் காட்டிய வரதராஜன்,

''விவசாய நிலங்களுக்கான தீர்வையை அரசு ரத்து செஞ்சுடுச்சுனு பெருசா தம்பட்டம் அடிச்சுக்குறாங்க. ஆனா, ஒரு ஏக்கருக்கான தீர்வையே... அதிகபட்சம் 5 ரூபாய்தான். ஆனா, ஒரு காபியோட விலை 7 ரூபாய். அப்படியிருக்கறப்ப... 'நிலவரியை ரத்து செய்துட்டோம்னு எதுக்காக வெத்து ஜம்பம் அடிக்கணும்.

எங்க நிலையை விளக்கி முதல்வருக்கும், பிரதமருக்கும் தபால் அட்டையில எழுதி அனுப்பியிருக்கிறோம். மார்ச் மாசக் கடைசிக்குள்ள பதில் தெரியலனா, பிள்ளை குட்டிக பசியைப் போக்கவும், எங்க வயித்தைக் கழுவவும் ஊர்களைவிட்டே காலி செய்துட்டு கிளம்ப முடிவு செஞ்சுருக்கோம்'' என்று வேதனையின் உச்சத்தில் நிற்பவராகச் சொன்னார்.

''பயிரு கருகுது... பச்சப்புள்ளைங்க வாடுது...''

''நஷ்டஈடு வழங்காவிட்டால் தீக்குளிப்பேன்'’ என்று எடுத்ததுமே... அதிர்ச்சியைக் கூட்டிய... வில்லிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி,

''பயிர் வைக்க லோன் கேட்டுப் பாத்தேன், கிடைக்கல. வேற வழியில்லாம, ஆவணி மாச மழைய நம்பி, கழுத்துல கிடந்த தங்கச்சங்கிலிய அடகு வெச்சுத்தான் மக்காச்சோளம் போட்டேன். மழை இல்லாததால, பயிரெல்லாம் கருகிப் போச்சு. நூறு நாள் வேலைக்குப் போய் பொழைச்சுக்கலாம்னு பாத்தா, அதுக்கு தினமும் நாப்பத்தஞ்சு ரூபாய்தான் கூலியா கொடுக்கறாங்க.

இன்னிக்கு இருக்குற விலைவாசியில இதை வெச்சு எப்படி சாப்பிட முடியும்? பச்சபுள்ளைங்கல்லாம் பட்டினியால வாடுதுங்க. இப்படி கொடுமையை அனுபவிக்கறதுக்கு செத்தே போயிடலாம்னுதான் தோணுது. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்காட்டி... சாகறதைத் தவிர வேற வழியே இல்லை'' என்றார் கண்ணீர் ததும்ப.  

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கவனத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்றபோது, ''பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வருமாறு உயர்மட்டக் குழுவை அழைத்திருக்கிறேன்.

விரைவில் குழு வருகை தர இருக்கிறது. விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வழங்கும் நஷ்டஈட்டைப் போலவே, மானாவாரி விவசாயிகளுக்கும் வழங்க பரிந்துரை செய்து, நிவாரணம் கிடைக்க நிச்சயமாக ஏற்பாடு செய்வேன்'' என்று உறுதியளித்தார்.

இந்த நிவாரணம்... வாரிசுகளுக்கானதாக இல்லாமல், விவசாயி தன் வாழ்க்கையைத் தொடர்வதற்கானதாக இருப்பதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு