Published:Updated:

மண்புழு மன்னாரு !

படம்: ஆ. முத்துகுமார்

பிரீமியம் ஸ்டோரி

மாத்தி யோசி 

##~##

'உணவே மருந்து, மருந்தே உணவு’னு வாழ்ந்த சமூகம் நம்மளோடது. இப்ப, 'மருந்தே உணவு'னு மட்டுமே வாழ்ந்துட்டு இருக்கோம். ஆயிரக்கணக்கான வருஷமா, எந்தெந்த உணவுகளைச் சாப்பிடணும்; எப்படியெப்படி சாப்பிடணும்னு பலவிதத்துலயும் அனுபவிச்சி, ஆராய்ஞ்சி சொல்லி வெச்சுருக்காங்க. ஆனா, அதையெல்லாம் விட்டுப்போட்டு... பீட்சா, பர்கர்னு இப்ப உணவு முறைகளையே மாத்திக்கிட்டிருக்கோம். ஊருக்கெல்லாம், சோறு போடற விவசாயிகளுக்கு... எந்தெந்த உணவுல என்னென்ன சத்து இருக்குனு தெரியல. நாம உற்பத்தி செய்யற பொருளோட மகத்துவம் நமக்கு தெரிஞ்சாதான்... அது மேல நமக்கெல்லாம் ஒரு ஈர்ப்பு வரும்.

'அஞ்சறைப் பெட்டியில இருக்கற பொருளும்... வைத்தியர் பெட்டியில இருக்கிற மருந்தும் ஒண்ணு'னு நம்ம ஊர்ல சொல்லக் கேட்டிருப்பீங்க. ஆனா, கண்ட கண்ட ரசாயனத்தைத்தான் இப்போவெல்லாம் மருந்துங்கற பேர்ல நம்ம தலையில கட்டுறாங்க. இப்படி மருந்தெல்லாம் ரசாயனத்துக்கு மாறினதுமே... உணவுகளும் மாறிப்போச்சுது. உப்பு தொடங்கி... பாயசம் செய்யுற இனிப்பு வரைக்கும் ரசாயனம் வந்தாச்சு. நிஜத்துல... வெள்ளைச் சர்க்கரையைவிட, வெல்லம்தான் நல்லது. இந்தியாவுல இருக்கற பாதிக்கும் மேலான பொண்ணுங்க, ரத்தசோகையில... சோர்ந்து போறாங்க. இதைத் தீர்த்து வைக்கறதுக்கு எந்த மருந்து, மாத்திரையும் தேவையே இல்லை. உணவே போதும். அதாவது, தினமும் உணவுல சுத்தமான வெல்லம் இருக்கற மாதிரி பார்த்துகிட்டாலே போதும்.

அந்த காலத்துல திருவிழா, பண்டிகைனா... முதல் நாள் ராத்திரியில ஆம்பள, பொம்பள, சின்னஞ்சிறுசுகனு அத்தனைபேரும் கையில மருதாணி வெச்சுக்குவாங்க. இது, கையில வண்ணம் பூசி அழகு பார்க்கறதுக்காக மட்டுமில்ல. இதுலயும் பலவிதமான மருத்துவ ரகசியங்கள் அடங்கியிருக்கு. உதாரணமா... உடம்புக்குக் குளிர்ச்சி தரக்கூடியது மருதாணி. குழப்பமான மனநிலையைப் போக்குற சக்தியும் மருதாணிக்கு உண்டு. அதனாலதான்... கல்யாணப் பொண்ணுக்கு மருதாணி போட்டுவிடறத வழக்கமாக்கினாங்க முன்னோருங்க. புது இடம், புது மனுஷங்கனு பார்த்து, மிரண்டு போய் மனக்குழப்பம் அடைஞ்சு, அதனால வேற மாதிரியான பிரச்னைகள் வராம இருக்கறதுக்கு.... கையிலயும் கால்லயும் போட்டுக்கற மருதாணிக் கோலங்கள் புதுப்பொண்ணுக்கு உதவுமாம்!

மண்புழு மன்னாரு !

'காளான் உடம்புக்கு நல்லது'னு எல்லாருக்குமே, தெரியும். ஆனா, பால் ஊட்டுற தாய்மாருங்க காளானை அதிகமா சாப்பிடக் கூடாது. ஏன்னா, தாய்ப்பால் சுரப்பை தடுக்கறத் தன்மை காளான்கிட்ட உண்டு. மலைப்பிரதேசம், காட்டுப்பிரதேசம்னு வாழற நம்ம ஆட்கள், அங்கங்க முளைச்சுக் கிடக்கிற காளானைச் சாப்பிடுவாங்க. இந்த விஷயத்துல ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். எல்லா காளானும் நல்ல காளான் இல்ல. நல்லா வெள்ளை நிறமா, துர்நாற்றம் இல்லாம இருந்தாதான்... அது உணவுக்கு ஏத்த காளான். சிகப்பு, மஞ்சள்னு கலர், கலரா இருக்கற காளானுக்குள்ள எமன் ஒளிஞ்சிருக்கான்... உஷாரா இருங்க!

ஊர்ப்பக்கம், கருவாட்டுக் குழம்பு வைக்கும்போது... சுரைக்காயையும் வெட்டிப் போடுவாங்க. ஏன்னா, கருவாட்டுல கொஞ்சமா, விஷத்தன்மை இருக்குமாம். அதை முறிக்குறத் தன்மை சுரைக்காய்க்கு

மண்புழு மன்னாரு !

உண்டுங்கறதுதான். இந்த 'விஷ’யம் தெரியாததால... கருவாட்டுக் குழம்புல சுரைக்காய் போடற வழக்கமே கொஞ்சம் கொஞ்சமா காணா போயிட்டிருக்கு. 'நேத்து கருவாட்டுக் குழம்பு சாப்பிட்டேன், உடம்பு ஒரு மாதிரியா’ இருக்குனு சொல்றவங்கள்லாம், இனி ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க... உண்மை உறைக்கும்!

கல்யாணம், விருந்துனு தடபுடலான விஷயத்துக்கு மட்டும்தான், வாழை இலைபோட்டு சாப்பிடுவாங்க. ஆனா, வாழை இலையில சாப்பிடறத மூணுவேளையும் கடைபிடிச்சாகூட தப்பில்ல. இப்படி சாப்பிட்டா... உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உடம்பு சுறுசுறுப்பா இருக்கும்; தலைமுடி கொட்டாம இருக்கும்னு பலவித நன்மைகளை அடுக்கலாம். தினமும் வாழை இலை கிடைக்காட்டியும் பரவாயில்ல... அத்தி, முறுக்கன்னு அந்தந்தப் பகுதிகள்ல கிடைக்கற இலைகள்லயும் சாப்பிடலாம். அத்தி, முறுக்கன் மாதிரியான இலைங்களும் மருத்துவ குணம் கொண்டதுதான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல இப்படிப்பட்ட இலைகள்ல சாப்பிடற வழக்கம் இருக்கு.

சாப்பிடுறப்ப, இடையில தண்ணி குடிக்க கூடாதுங்கிறது... உணவு ரகசியங்கள்ல முக்கியமான ஒண்ணு. இந்த நுணுக்கம் தெரியாம, ஒரு வாய் சோத்துக்கு, ஒரு வாய் தண்ணினு குடிக்கற ஆளுங்க நிறையவே உண்டு. இது, செரிமானக் கோளாறுகளுக்குத்தான் வழி வகுக்கும். பச்சடி, பொரியல், மசியல், சாம்பார், குழம்பு, ரசம், மோர்னு... திரவப் பொருளைக் கலந்து சாப்பிடுறோம். ஏன்னா, சாதத்துல்ல இருக்கிற சத்துக்களை... சாம்பார், குழம்பு மாதிரியான. சமாச்சாரங்கதான், செரிமானம் பண்ண வெச்சு... உடலுக்கு வலு சேர்க்குது. அதனால இடையிடையில தண்ணி குடிச்சா... சாதத்துல ஒட்டிட்டிருக்கற குழம்பு, சாம்பார் எல்லாத்தையும் இந்தத் தண்ணி கழுவிவிட்டுடும். இதனால, செரிமானக் கோளாறு வரும். பாரம்பரியமா, விருந்துகள்ல கடைசியாதான் தண்ணி கொடுப்பாங்க. அதுக்கு காரணம் இதுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு