Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

உழைப்பைச் சுரண்டிய மடம்... விழித்தெழ வைத்த தோழர்கள்..! நம்மாழ்வார்,ஓவியம்: ஹரன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

உழைப்பைச் சுரண்டிய மடம்... விழித்தெழ வைத்த தோழர்கள்..! நம்மாழ்வார்,ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

##~##

மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவில் அமைந்த அழகிய ஊர்... திருக்குறுங்குடி. இதன் அருகே இருக்கிறது 'கட்டளை’ எனப்படும் கிராமம். கட்டளை கிராம மக்கள் குடியிருந்த பகுதியை உள்ளடக்கிய சாகுபடி நிலங்கள் முழுவதும் திருச்செந்தூர் மடத்துக்குச் சொந்தமானவை. அவற்றை குத்தகைக்குப் பேசி, தலித் மக்கள் சாகுபடி செய்து வந்தனர். குத்தகைத் தொகையை பணமாக மடம் வாங்காது. அறுவடையின்போது மடத்தின் சார்பில் ஒருவரை அனுப்புவார்கள். அவருக்கு 'பேஸ்கார்’ என்று பெயர். அவர், மடத்துக்காக எடுத்துக் கொண்டதுபோக, மீதி நெல்தான் விவசாயிகளுக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புரட்சி பற்றிய சிந்தனை, இளைஞர்களைக் கவர்ந்து கொண்டிருந்த நேரம் அது. ஆங்காங்கே இளைஞர்கள் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு கிராமங்களுக்குச் சென்று மக்களைத் தட்டியெழுப்பினார்கள். கட்டளை கிராமத்துக்கும் அப்படி ஓர் இளைஞர் வந்தார். அவர்தான், இன்றைக்கு கட்சி எல்லைகளைக் கடந்து, பெரும்பாலானவர்களால் மதிக்கப்படுகிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணு!

'கல்லூரிக்கு போகிறேன்’ என்று வீட்டில் சொல்லிவிட்டு கட்டளை கிராமத்துக்கு வந்தார். 'எந்த விவசாயி எவ்வளவு நிலம் உழுகிறார்... அவர் எவ்வளவு குத்தகை கொடுக்க வேண்டும்.?’ என்கிற விவரமே தெரியாத மக்களை, மடம் சுரண்டிக் கொண்டிருந்ததைக் கண்டு, கடும்கோபம் அடைந்தார். அந்த ஊரில் ஆசிரியராகப் பணியாற்றிய சண்முகம் என்ற இளைஞரை சந்தித்து இதைப்பற்றி விவாதித்தார், நல்லக்கண்ணு. அதைத் தொடர்ந்து விவசாயிகளை சங்கமாக்கும் பணியில் ஈடுபட்டார், சண்முகம். பிறகுதான் மக்களுக்கு உண்மை எல்லாம் விளங்கிற்று.

அவரவர் பயிரிடுகிற நிலம் அளக்கப்பட்டது. 'சட்டப்படி ஒவ்வொரு உழவரும் மடத்துக்கு எவ்வளவு நெல் கொடுக்கவேண்டும்?’ என்பது கணக்கிடப்பட்டது. இதெல்லாம் மடத்துக்குத் தெரியாது. அந்த வருடமும் வழக்கம்போல 'பேஸ்கார்' வந்து நின்றார். அவரிடம், 'ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு நிலம் பயிர் செய்கிறார், எவ்வளவு நெல் அளக்க வேண்டும் என்கிற கணக்கு வேண்டும்’ என்று கேட்டார், சண்முகம். உடனே, பேஸ்காருக்கு கண் சிவந்தது. ஆனாலும், வேறு வழியில்லாமல், ஒவ்வொருவரும் அளக்க வேண்டிய நெல்லின் அளவைக் கணக்கிட்டு முடித்தார்கள்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

முதல் தடவையாக ஒவ்வொரு உழவர் வீட்டிலும் கணிசமான நெல் மீதமிருந்தது. ஆனால், சண்முகத்தின் ஆசிரியர் வேலை பறிபோனது. என்றாலும், 'வாத்தியார் சண்முகம்’ என்கிற அவருடைய பெயரை மட்டும் கடைசிவரை யாராலும் பறிக்க முடியவில்லை!

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

முதலில் குத்தகையை ஓர் ஒழுங்குக்குக் கொண்டு வந்தவர்கள், அடுத்தக் கட்டமாக இன்னொரு சுரண்டலைத் தடுக்க நினைத்தார்கள். பேஸ்கார் முன்னிலையில் நெல்லை அளக்கப் பயன்படுத்தும் மரக்கால், முத்திரையிடப்பட்ட மரக்கால் அல்ல. அது பொட்டை மரக்கால். உரிய அளவைவிட கூடுதலாக நெல்லை அளக்கும் வகையில் தந்திரமாக உருவாக்கப்பட்ட மரக்கால். அதனால், 'அடுத்த பருவத்தில் முத்திரை மரக்கால் கொண்டு அளக்க வேண்டும்' என்று முடிவு செய்தனர்.

அந்தநேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த பாலதண்டாயுதமும் கட்டளை கிராமத்துக்கு வந்து, நல்லகண்ணுவுடன் இணைந்தார். முத்திரை மரக்கால் கொண்டு அளப்பதற்கு பேஸ்கார் மறுத்தால், அந்த பொட்டை மரக்காலைப் பறித்து உடைத்து விடுவது என்ற முடிவுடன் இருந்தார்கள்.

அடுத்த போகத்தில் நெல் அளவைத் தொடங்கியபோது, 'குத்தகை நெல் அளக்கிறோம். சட்டப்படியான முத்திரை மரக்கால் கொண்டு வாருங்கள்’ என்று பேஸ்காரிடம் சொன்னார் சண்முகம்.

அதைக் கேட்டு கோபமான பேஸ்கார், 'என்னடா உங்க ஊர் நெல்லை திருடிக்கிட்டா போறேன்’ என்று ஆத்திரத்துடன் கேட்டவர், 'நீ அளடா உன் பாட்டுக்கு’ என்று நெல் அளப்பவரிடம் சொன்னார். அதன்படியே அவரும் அளக்க ஆரம்பிக்க... நான்கைந்து பேர் சேர்ந்து மரக்காலைப் பிடுங்கி, அடித்து

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நொறுக்கினார்கள். பேஸ்கார் கோபமாக வெளியேறினார்.

திருக்குறுங்குடி சென்ற பேஸ்கார், மேல்சாதிக்காரர்களைத் திரட்டி நிறைய சாராயம் வாங்கிக் கொடுத்து ஈட்டி, கம்புகளுடன் அனுப்பி வைத்தார். கூச்சலும், கொலைவெறியுமாக கட்டளை கிராமத்துக்குள் புகுந்தனர். வீடுகளில் இருந்த உழவர்கள் வெளியேறி ஓட்டம் பிடிக்கத் தயாரானார்கள். அதைப் பார்த்த பாலதண்டாயுதம், 'எல்லாம் இங்க வா, உட்காரு எங்க ஓடுறே... ஓடுனா, உன் மனைவி, மக்களெல்லாம் என்ன ஆவாங்க... போராடி, சேமிச்ச நெல் பறிபோகும்... அயலான் அரிவாள், கோடாரியோடு வரட்டும். உன் வீட்டு நாய் ஓடுதா? நீ சாப்பிட்ட எச்சிலையில் இருக்கற மிச்சத்தைத் தின்கிற நாய்க்கு அவ்வளவு வீரம் இருந்தா, உனக்கு எவ்வளவு வீரம் இருக்கணும்?'' என்று உணர்ச்சிப்பூர்வமாகத் தூண்டிவிட்டார்.

பாலதண்டாயுதத்தின் பேச்சு.. 'சுருக்’கென்று தைக்கவும், வீட்டுக்குள் புகுந்து கையில் கிடைத்த ஆயுதங்களோடு வெளியே வந்தனர், விவசாயிகள். குடிபோதையிலிருந்த அடியாட்களுக்குக் கூட்டத்தைப் பார்த்துமே போதை தெளிந்துவிட்டது. 'இன்றைக்கு நாள் சரியில்லை, இன்னொரு நாள் திரும்பவும் வருவோம்’ என்றபடியே ஓடி விட்டனர். இப்படியாக, உரிமைக்குப் போராடுவதில் முதல் அடியை எடுத்து வைத்தது கட்டளை கிராமம். இதன் தொடர் விளைவுகளாக அந்தக் கட்டளை கிராமமும்... தோழர் நல்லகண்ணுவும் சந்தித்த பிரச்னைகள் சொல்லில் வடிக்க முடியாதவை.

-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism